ஜூன் 8 புனிதர் மரியம் திரேசியா சிரமெல் St. Mariam Thresia Chiramel


அருட்சகோதரி, தூய திருக்குடும்ப சபை நிறுவனர்: (Religious; Mystic, and Foundress of Congregation of the Holy Family)

பிறப்பு: ஏப்ரல் 26, 1876 புத்தேஞ்சிரா, திருச்சூர் மாவட்டம், கேரளா, இந்தியா (Puthenchira, Thrissur District, Kerala, India)

இறப்பு: ஜூன் 8, 1926 (வயது 50) குஜிகட்டுசேரி, திருச்சூர் மாவட்டம், இந்தியா (Kuzhikattussery, Thrissur District, India)

ஏற்கும் சமயம்:

கத்தோலிக்க திருச்சபை (Catholic Church)

சிரோ-மலபார் திருச்சபை (Syro-Malabar Church)

சிரியாக் கத்தோலிக்க திருச்சபை (Syriac Catholic Church)

லத்தீன் கத்தோலிக்க திருச்சபை (Latin Catholic Church)

முக்திப்பேறு பட்டம்: ஏப்ரல் 9, 2000 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II)

புனிதர் பட்டம்: அக்டோபர் 13, 2019 திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis)

முக்கிய திருத்தலம்:

புத்தன்சிரா, இந்தியா (Puthenchira, India)

நினைவுத் திருநாள்: ஜூன் 8

பாதுகாவல்:

தூய திருக்குடும்ப சபை

(Congregation of the Holy Family)

"திரேசியா சிரமெல் மன்கிடியன்" (Thresia Chiramel Mankidiyan) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் மரியம் திரேசியா சிரமெல், ஒரு இந்திய சிரோ-மலபார் கத்தோலிக்க அருட்சகோதரியும் (Indian Syro-Malabar Catholic Professed Religious), "பரிசுத்த திருக்குடும்ப சபையின்" (Congregation of the Holy Family) நிறுவனரும் ஆவார். தனது சக அருட்சகோதரியரிடையே, தனது சபை விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய இவர், தனது வாழ்நாள் முழுவதும் திருத்தூதுப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

1999ம் ஆண்டு, ஜூன் மாதம் 28ம் தேதி இவருக்கு "வணக்கத்துக்குரியவர்" என்ற பட்டமும், 2000ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 9ம் தேதி, முக்திப்பேறு பட்டமும் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் வழங்கினார்.

2019ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 13ம் தேதி, திருத்தந்தை ஃபிரான்சிஸ் இவரை புனிதராக அருட்பொழிவு செய்வித்தார்.

கி.பி. 1876ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 26ம் தேதி, கேரள மாநிலம், திருச்சூர் (Thrissur) மாவட்டத்தின், "புத்தேஞ்சிரா" (Puthenchira) எனும் கிராமத்தில், பணக்காரக் குடும்பத்தில் பிறந்த திரேசியாவின் தந்தை பெயர், "தோமா" (Thoma), தாயார் பெயர், "தாந்தா" (Thanda) ஆகும். இவரது பெற்றோருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில், இவர் மூன்றாவது குழந்தை ஆவார்.

செல்வச் செழிப்புடன் இருந்த இவர்களுடைய குடும்பம் ஏழ்மையில் வாடியது. இதனால் மனம் உடைந்த இவரது தந்தை தோமா, குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். ஆனால், இவரது தாய் தாந்தா மிகுந்த பக்தியுள்ளவர் என்பதால், திரேசியா உள்பட எல்லா குழந்தைகளையும் பக்தி மார்க்கத்தில் வளர்த்தார்.

அம்மாவைப்போலவே திரேசியா பக்தியில் அதிக ஈடுபாட்டுடன், தினமும் தவறாமல் ஜெபம் செய்வார். அவருக்கு 12 வயதாகும்போது அவரது தாய் தாந்தா இறந்துவிட்டதால், பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். ஆனாலும், ஜெபம் செய்வதை மட்டும் விடவில்லை. ஒருநாள் ஜெபம் செய்துகொண்டிருக்கும்போது தன்னைக் கடவுள் அழைப்பதை உணர்ந்தார்.

அன்னை மரியின் மீதான அன்பின் காரணமாகத் தன் பெயருடன் 'மரியம்' என்று சேர்த்துக் கொண்டார். அதேபோல் புனிதர் "அவிலாவின் தெரசா" (St. Teresa of Ávila) மீது கொண்ட பற்றின் காரணமாகத் 'திரேசா' என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டார். இவரது பெயர் பிற்காலத்தில் "மரியம் திரேசியா சிரமெல்" என்று அழைக்கப்பட்டது.

திரேசியா சிரமெல்லுக்கு மூன்று தோழிகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து "திருக்குடும்பச் சபை" என்ற பெயரில் கத்தோலிக்க சபை தொடங்கும் ஆர்வத்தில், அப்போதைய ஆயரிடம் அனுமதி வேண்டி விண்ணப்பித்தனர். தோழியர் அனைவருக்கும் 13 அல்லது 14 வயதே ஆகியிருந்தது என்பதால், "கார்மெல்" (Carmelite) என்ற பெயரில் இயங்கிவரும் அருட்கன்னியர்களுக்கான சபையில் சேர்ந்து செயல்படுங்கள்' என்று பதில் கிடைத்தது. மேலும் 'சிறு வயது என்பதால், முதிர்ச்சி இருக்காது' என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டிச் 'சபை தொடங்கும் திட்டம் வேண்டாம்' என்றார் ஆயர். ஆனால், திரேசியா சிரமெல் உறுதியாக இருப்பதைப் பார்த்த ஆயர், பின்புச் சபை தொடங்க அனுமதி வழங்கினார்.

'திருக்குடும்பச் சபை' என்ற பெயரில் அருட்கன்னியர்களுக்கான சபையைத் தொடங்கிய திரேசியா சிரமெல், மூன்று முக்கியப் பணிகளைக் கையில் எடுத்துச் சிறப்பாகப் பணியாற்றினார்.

குடிக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும்விதமாக அவர்களுக்குக் கவுன்சலிங் கொடுப்பதை முதன்மைப் பணியாகச் செய்தார்.

அடுத்துக் குடும்பப் பிரச்சினைகளைக் கையில் எடுத்தார். அதாவது, பல்வேறு காரணங்களால் பிரிந்துபோன குடும்பங்களை ஒன்று சேர்த்து வைத்தார்.

மூன்றாவதாக, நோய்களால் அவதிப்படுபவர்களைச் சந்தித்து அவர்களது தனிமைத் துயரைப் போக்கியதுடன் சிகிச்சைப் பெறவும் உதவினார்.

அன்றைய காலகட்டத்தில், பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், அவை அனைத்தையும் மீறி இந்தப் பணிகள் அனைத்தையும் அவர் சிறப்பாகச் செய்தார். மேலும் இந்தப் பணிகளின்போது இவரது அளவுகடந்த பக்தி, ஜெபம், ஒறுத்தல் முயற்சிகள் போன்றவை மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இவரை, நீரிழிவு நோய் பீடித்தது. அதுபற்றி பற்றிக் கவனம் செலுத்தாத காரணத்தால், ஒருநாள், காலில் மரக்கட்டை ஒன்று விழுந்தபோது ஏற்பட்ட புண்ணைக் குணப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக, தமது 50வது வயதில், 1926ம் ஆண்டு, ஜூன் மாதம், 8ம் தேதி, திரேசியா சிரமெல் மரணமடைந்தார்.