ஜூன் 7 : நற்செய்தி வாசகம்


ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------++++

“இரக்கமுடையோர் பேறுபெற்றோர்”

பொதுக்காலம் பத்தாம் வாரம் திங்கட்கிழமை

I 2 கொரிந்தியர் 1: 1-7

II மத்தேயு 5: 1-12

“இரக்கமுடையோர் பேறுபெற்றோர்”

இரக்கமற்றோர் இருந்தும் இறந்தவருக்குச் சமம்:

பேரனும் தாத்தாவும் பக்கத்து ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். வழியில் குதிரை வண்டியில் வந்துகொண்டிருந்த ஒருவர், வண்டியிலிருந்து சரிந்து பள்ளத்தில் விழுந்ததால், அவர்மீது இரக்கப்பட்ட பேரன் ஓடிச்சென்று அவருக்கு உதவி செய்தான். அவ்வாறு அவன் உதவும்பொழுது, அவனது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை அவன் பொருட்படுத்தாமல், தன் தாத்தாவோடு நடையைக் கட்டினான்.

போகும்போது தாத்தா அவனிடம், “என்னைப் போன்று நீயும் கீழே விழுந்து கிடந்தவரைக் கண்டுகொள்ளாமல் வந்திருந்தால், உனக்கு இப்படிக் கையில் காயம் ஏற்பட்டிருக்காதே!” என்றார். இதற்குப் பேரன் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான். சிறிதுதூரம் கழித்து, அவர்கள் இருவரும் போன பாதையில் இரண்டு வாத்துகள் முன்னே போய்க்கொண்டிருந்தன. உடனே தாத்தா கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து, அவற்றைச் சுட்டார். அவர் சுட்டதில், ஒரு வாத்து அந்த இடத்திலேயே இறந்தது. இன்னொரு வாத்தின்மீது குறி சரியாகப் படாதால், அது தப்பித்து அங்கிருந்து ஓடியது. இதைப் பார்த்ததும் தாத்தா பேரனிடம் ஓடிப்போய் வாத்தைப் பிடிக்கச் சொன்னார். அவனோ அந்த வாத்தைப் பிடிப்பதற்கு ஏதுவான சூழல் இருந்தும், அதைப் பிடிக்காமல் விட்டுவிட்டான்.

இதனால் இரண்டு வாத்துகளில் ஒன்று தப்பித்துப் போய்விட்டதை நினைத்துத் தாத்தா வருத்தத்தோடு இருந்தார். அப்பொழுது பேரன் தாத்தாவிடம், “தாத்தா! உங்களிடம் நான் ஒன்றைச் சொல்லட்டுமா?” என்றான். அவர், “சொல்” என்றதும், அவன், “யாரிடமும் இரக்கம் காட்டாத நீங்கள், செத்துக்கிடக்கும் இந்த வாத்தைப் போன்றவர்கள். அடுத்தவர்மீது இரக்கம் இருக்கும் நான் தப்பிப்போன வாத்தைப் போன்றவன். இரக்கமே காட்டாத நீங்கள் இறந்தவருக்குச் சமமானவர் ஆனீர்கள். இரக்கம் காட்டிய நான் துன்பம் வந்தாலும் உயிரோடு இருப்பதற்குச் சமமானவன் ஆனேன்” என்றான். இதற்குத் தாத்தாவால் பதில்சொல்ல முடியவில்லை.

ஆம், அடுத்தவரிடம் இரக்கம் காட்டாதவர் இறந்தவருக்குச் சமமானவர்; இரக்கம் காட்டுபவரே உயிரோடு இருப்பவருக்குச் சமமானவர். நற்செய்தியில் இயேசு, “இரக்கமுடையோர் பேறுபெற்றோர்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

ஆண்டவராகிய கடவுளிடமிருந்து சீனாய் மலையில் மோசே பத்துக் கட்டளைகளைப் பெற்றுத் தந்தார். புதிய மோசேயாம் இயேசு மலைமீது ஏறி அமர்ந்து, திருவாய் மலர்பவைதான் இன்று நாம் வாசிக்கேட்ட மலைப்பொழிவாகும்.

இயேசுவின் மலைப்பொழிவு இவ்வுலகம் போதிக்கும் போதனைக்கும் நெறிகளுக்கும் முற்றிலும் நேர் எதிரானவை. இவ்வுலகம் பகைமையையும் வெறுப்பையும் கற்பிக்கும்பொழுது ஆண்டவர் இயேசு கனிவையும் இரக்கத்தையும் அமைதியும் அன்பையும் போதிக்கின்றார். அதிலும் குறிப்பாக அவர், “இரக்கமுடையோர் இரக்கத்தைப் பெறுவர்” என்கிறார். ஆகையால், நாம் இயேசுவின் மலைப்பொழிவை வாழ்வாக்கி, மறுகிறிஸ்துவாக வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனைக்கு:

 இயேசுவின் தன்னிலை விளக்கமே மலைப்பொழிவு – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்.

 அணுவைப் பிளந்து ஆராய்ந்த நாம், இயேசுவின் மலைப்பொழிவைப் புறக்கணித்து விட்டோம் – ஓமர் என். ப்ராட்லே

 இயேசுவின் போதனைகளில் மணிமகுடமாக விளங்கும் மலைப்பொழிவின்படி நாம் வாழ முயற்சி செய்வோம்.

இறைவாக்கு:

‘இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும்’ (யாக் 2: 13) என்பார் யாக்கோபு. ஆகையால் நாம் விண்ணகத் தந்தையைப் போன்று இரக்கமுடையவர்களாய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.