ஜூன் 3 : நற்செய்தி வாசகம்


நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34

அக்காலத்தில்

மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார். அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, ‘கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது” என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------------------------------

“நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை”

பொதுக்காலம் ஒன்பதாம் வாரம் 

வியாழக்கிழமை

I தோபித்து 6: 10; 7: 1, 9-14; 8: 4-8

II மாற்கு 12: 28b-34

“நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை”

முதியவரிடம் அன்புகாட்டிய தாமஸ் ஜெபர்சன்:

அமெரிக்காவில் ஒரு குளிர்காலத்தில், முதியவர் ஒருவர் ஓர் ஆற்றைக் கடப்பதற்கு ஆற்றங்கரையோராமாய் நின்றுகொண்டிருந்தார். ஆற்றைக் கடப்பதற்குப் படகோ, பாலமோ இல்லாததால்தான் அவர் அவ்வாறு நிற்க வேண்டியிருந்தது. அவர் இவ்வாறு நின்றுகொண்டிருக்கையில், ஐந்துபேர் ஐந்து குதிரைகளில் அங்கு வந்தார்கள். அவர்களில் யாராவது ஒருவரிடம் உதவிகேட்டு ஆற்றைக் கடக்கலாம் என்று அவர் தன் மனத்தில் நினைத்துக்கொண்டார். ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒவ்வொருவராகக் குதிரையில் ஆற்றில் இறங்கிக் கடந்துபோனார்கள்; ஆனால், யாரிடமும் அவருக்கு உதவி கேட்கத் தோன்றவில்லை. ஐந்தாவதாகக் குதிரையில் வந்தவரிடமே அவருக்கு உதவி கேட்கத் தோன்றியது. முதியவர் ஐந்தாவதாகக் குதிரையில் வந்தவரிடம் உதவி கேட்டபொழுது, அவர் முதியவரை மகிழ்ச்சியோடு குதிரையில் ஏற்றிக்கொண்டு, மறுகரையில் இறக்கி விட்டார்.

முதியவரைக் குதிரையிலிருந்து இறக்கிவிட்டதும், அவர், “ஐயா! எனக்கு முன்பாக நான்கு பேர் குதிரையில் சென்றார்களே! அவர்களிடமெல்லாம் உதவி கேட்கத் தோன்றாமல், என்னிடம் உதவி கேட்கத்தோன்றியதே, அது ஏன்?” என்று கேட்டபொழுது, முதியவர் அவர்களிடம், “உங்களுடைய கண்களில் அன்பும் கருணையும் தெரிந்தன. இப்படிப்பட்ட உங்களிடம் உதவி கேட்டால், நிச்சயம் கிடைக்கும் என்றுதான் உதவி கேட்டேன்” என்றார்.

ஆம். ஆற்றைக் கடக்க நினைத்த முதியவருக்கு உதவி... அன்போடும் கருணையோடும் திகழ்ந்தவர் வேறு யாருமல்லர் முன்னாள் அமெரிக்க அதிபரான தாமஸ் ஜெபர்சனே ஆவார். இவர் அன்பிற்கும் கருணைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்ததால்தான் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை அன்போடு இருந்தால் இறையாட்சியில் நுழையலாம் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

கடைப்பிடிக்கவேண்டிய கட்டளைகள் அல்லது சட்டங்கள் 248, கடைப்பிடிக்கக்கூடாத சட்டங்கள் 365 என்று, 613 பரிசேயச் சட்டங்கள் இருந்தன. இவற்றில் எது முதன்மையான கட்டளை என்ற விவாதம் அவர்கள் நடுவில் எழுந்துகொண்டே இருந்தது. இது பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்திய பின்பு, அவரைப் பேச்சில் சிக்கவேண்டும் என்று ஏரோதியர், சதுசேயர்கள் என ஒருவர் மாற்றி ஒருவர் அவரிடம் வந்தனர். அந்த வரிசையில் வரும் மறைநூல் அறிஞர் இயேசுவிடம், “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று இயேசுவிடம் கேட்கிறார்.

மறைநூல் அறிஞர் தன்னிடம் கேட்ட கேள்விக்கு இயேசு இணைச்சட்ட நூல் 6: 4,5 மற்றும் லேவியர் 19: 18 ஆகிய இரண்டு இறைவார்த்தைப் பகுதிகளை இணைத்து, இறையன்பும் பிறரன்புமே முதன்மையான கட்டளைகள். இக்கட்டளைகளைக் கடைப்பிடித்தால், இறையாட்சியில் நுழையலாம் என்கிறார்.

சிந்தனைக்கு:

 அன்பே திருச்சட்டத்தின் நிறைவு (உரோ 13: 10)

 நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் (ஓசே 6: 6)

 நாம் இறையாட்சியின்றி தொலையில் இருக்கின்றோமா? இறையாட்சில் இருக்கின்றோமா?

இறைவாக்கு:

‘நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்’ (1 யோவா 3: 18) என்பார் யோவான். எனவே, நாம் செயலில் உண்மையான அன்பை வெளிப்படுத்தி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.