ஜூன் 29 : நற்செய்தி வாசகம்


உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19.

அக்காலத்தில்

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.

அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------

நம்பிக்கை குன்றியவர்களே!”

பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை

I தொடக்க நூல் 19: 15-29

II மத்தேயு 8: 23-27

“நம்பிக்கை குன்றியவர்களே!”

அவ நம்பிக்கையிலிருந்து விலகி, நம்பிக்கை கொள்வோம்:

மழைக்காலம், குளிர்காலம் வந்துவிட்டாலே போதும், தாமஸ் ஒரு மாதிரி ஆகிவிடுவார். தேவையில்லாத நோய்கள் வந்து அவருக்கு மருத்துவச் செலவை எகிற வைத்து வைத்துவிடும். இது பல ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருந்தது. ஒருமுறை அவர் ஒரு புத்தகத்தில், பனிக்காலத்திலும் பனியை உடைத்துக்கொண்டு ஒரு செடியில் பூக்கள் பூப்பதைக் குறித்து வாசித்தார். அப்பொழுது அவருக்குள், ‘சாதாரண ஒரு செடியே பனியை உடைத்துக்கொண்டு பூக்கள் பூக்கும்பொழுது, என்னால் பனியையும் மழையையும் தாங்கிக் கொள்ள முடியாதா?’ என்ற எண்ணமானது ஏற்பட்டது. இதன்பிறகு இவர் தன்னிடம் இருந்த அவநம்பிக்கையைக் களைந்துவிட்டு, நம்பிக்கையோடு மழைக்காலத்தையும் குளிர்காலத்தையும் எதிர்கொண்டார்.

மனித வாழ்விற்கு நம்பிக்கையானது மிகவும் இன்றியமையாத ஒன்று. அது மட்டும் நம்மிடம் இருக்கும்பொழுது, நாம் எவ்வளவு பெரிய சவாலையும் எதிர்கொள்ளலாம். இந்த உண்மையைத்தான் இந்த நிகழ்வும், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

கடல் மட்டத்திலிருந்து 690 அடி ஆழம் என்பதாலும், அருகில் 9200 அடி உயரமான ஹெர்மன் மலை (Mt.Hermon) இருந்ததாலும், கலிலேயாக் கடலில் கொந்தளிப்பிற்குப் பஞ்சமில்லை. அதிலும் மே மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை அதில் கொந்தளிப்பு மிகுதியாகவே இருக்கும். இயேசு தன் சீடர்களோடு இந்தக் கலிலேயாக் கடலில் பயணப்படுகின்றபொழுது, தூங்கிக்கொண்டிருக்கின்றார். உண்மையில் அவர் ஓய்வில்லாமல் பணி செய்தததால், ஏற்பட்ட களைப்பினால் தூங்கிக்கொண்டிருக்க வேண்டும். இத்தனைக்கும் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, அலைகள் மேலே எழுகின்றபோதும்!; ஆனால், சீடர்கள் பெருங் கொந்தளிப்பையும், அலைகள் எழுவதையும் பார்த்துவிட்டு, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி இயேசுவை எழுப்புகின்றார்கள்.

இயேசுவின் சீடர்கள் அவரோடு இருந்து, அவர் செய்த வல்ல செயல்களைப் பார்த்திருப்பார்கள். அப்படியிருந்தும் அவர்கள் இயேசு தங்களோடு இருக்கின்றார்... அவர் இந்த அலைகளையெல்லாம் அடக்கித் தங்களைக் காப்பாற்றுவார்’ என்று நம்பாமல், அவ நம்பிக்கையோடு இருக்கின்றார்கள். அப்பொழுதுதான் இயேசு அவர்களிடம், “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று சொல்லிக் காற்றையும் கடலையும் கடிந்து கொள்கின்றார். உடனே அங்கு அமைதி உண்டாகின்றது. நற்செய்தியில் இயேசு அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘நம்பிக்கை குன்றியவர்களே!’ (மத் 6: 30, 16:8) என்பதாகும். மக்களும் சரி, சீடர்களும் சரி, நம்பிக்கை இல்லாமல் இருந்தார்கள். அதனாலேயே இயேசு அந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். இன்றைய முதல்வாசகத்தில் வானதூதர்கள் சொன்னதை நம்பாமல் திரும்பிப் பார்த்து உப்புத் தூணாகின்றார் லோத்தின் மனைவி. ஆகையால், புயற்காற்றையும் பூந்தென்றலாக மாற்றும் (திபா 107: 29), ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்பதில் நம்பிக்கை கொண்டு, மன உறுதியோடு நாம் வாழ்வோம்.

சிந்தனைக்கு:

 நம்பிக்கையிலான்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது (எபி 11: 6)

 அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும் (உரோ 10: 17)

 நாம் துன்பங்களைக் கண்டு துவண்டு போகின்றவர்களா அல்லது துன்பங்களுக்கு நடுவிலும் ஆண்டவரில் உறுதியான நம்பிக்கை கொண்டு வாழ்கின்றவர்களா?

இறைவாக்கு:

நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்’ (மாற் 9: 23) என்பார் இயேசு. ஆகவே, நாம் நம்மிடம் உள்ள அவநம்பிக்கையைக் களைந்து, ஆண்டவரில் உறுதியான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.