ஜூன் 28 : நற்செய்தி வாசகம்


என்னைப் பின்பற்றி வாரும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 18-22

அக்காலத்தில்

இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார். அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, “போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, “ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு

---------------------------------------------------

உண்மையான துறவறம் என்பது யாது?

இப்ராகிம் ஆடம் என்றொரு பிரபு இருந்தார். அவர் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார். அவரது கூடாரத்தின் கயிறுகளைக் கட்ட அடித்திருக்கும் முளையாணிகள்கூடத் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. அந்தளவுக்கு அவர் மிகவும் செல்வச் செழிப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்படியிருந்தும் அவர் தன்னைத் துறவி என்றே அழைத்து வந்தார்.

ஒருநாள் அவருடைய இல்லத்திற்கு முன்பாக வந்த இஸ்லாமியத் துறவி இப்ராகிம் ஆடமின் ஆடம்பர வாழ்க்கையைக் கண்டு வியந்தார். அது மட்டுமல்லாமல் கையில் பிச்சைக் கோப்பையுடன் உள்ளே நுழைந்தார். துறவியைப் பார்த்ததும் இப்ராகிம் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினார். பின்னர் அவருக்கு உரிய இருக்கையைக் கொடுத்துவிட்டு தானும் அமர்ந்தார். அப்போது துறவி அவரிடம், “இப்ராகிம் இவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறீர்கள்... உங்களைத் துறவி என்றும் சொல்லிக் கொள்வதாக அறிகின்றேன். அது எப்படி?” என்று கேட்டார். இப்ராகிம் அதற்கு ஒன்றும் சொல்லாமல் இருந்தார்.

சிறுது நேரம் கழித்து, இப்ராகிம் துறவியிடம், “நான் மெக்காவுக்கு யாத்திரை செல்கிறேன். நீங்களும் வருகிறீர்களா?” என்று கேட்டார். துறவி அதற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, மகிழ்ச்சியோடு அவரோடு புறப்பட்டார். இப்ராகிம் யாத்திரிகைக்காக புறப்படும்போது தன்னுடைய கூடாரத்தையும் அதில் இருந்த அத்தனை விலையுயர்ந்த பொருட்களையும் அப்படியே விட்டுவிட்டுப் புறப்பட்டார். அவர்கள் இருவரும் அப்படியாக போய்க்கொண்டிருக்கும்போது துறவிக்கு தன்னுடைய பிச்சைப் பாத்திரம் கூடாரத்திலேயே இருப்பது நினைவுக்கு வந்தது. உடனே அவர் அதை எடுத்துவர எத்தனித்தார்.

அப்போது இப்ராகிம் புன்னைத்தபடி துறவியைப் பார்த்துச் சொன்னார், “நான் என் செல்வமனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு, அதைக் குறித்து சிறிதளவும் கவலைப்படாமல் வந்துகொண்டிருக்கிறேன். ஆனால் உங்களால் ஒரு பிச்சைக் கோப்பையைக்கூட விட முடியவில்லையே! இந்நிலையில் மெக்கா யாத்திரைக்கு நீங்கள் தகுதியானவர் என்று நினைக்கிறீர்களா, நான் தங்க ஆணிகளை அறைந்தது என் கூடாரத்து மண்ணில்தான்; என் நெஞ்சில் அல்ல” என்றார். அவருடைய வார்த்தைகள் துறவியின் செவிகளில் நன்றாக அறைந்தது போன்று இருந்தன. அப்போதுதான் அந்த துறவி, துறவறம் என்றால் எல்லாவற்றையும் துறப்பது என்ற உண்மையை உணர்ந்துகொண்டார்.

நற்செய்தி வாசகத்தில் மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம், “போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்கிறார். அவர் நினைத்திருக்கலாம் இயேசுவைப் பின்பற்றுவது என்பது மிகவும் இலகுவான காரியம் என்று. ஆனால் ஆண்டவர் இயேசுவோ அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்று சீடத்துவ வாழ்வில் – துறவற வாழ்வில் - இருக்கும் சவால்களை அவருக்கு எடுத்துச் சொல்கிறார். இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டபின்பு, அவரைப் பின்தொடர்கின்ற எண்ணத்தை மறைநூல் அறிஞர் அடியோடு விட்டிருப்பார் என்றே தோன்றுகின்றது. காரணம் இயேசுவின் போதனையை வைத்துப் பார்க்கும்போது சீடத்துவ வாழ்க்கை என்பது சவாலானது. அத்தகைய வாழ்க்கை வாழ ஒவ்வொரு நாளும் சிலுவைகளைச் சுமக்கவேண்டும் (மத் 10:38); எல்லா உறவுகளையும் ஏன் எல்லாவற்றையும் இயேசுவுக்காக இழக்கவேண்டும் (லூக் 14:46). அதுதான் உண்மையான சீடத்துவ வாழ்க்கையாக இருக்கும்.

மறைநூல் அறிஞர் சென்றபிறகு இயேசுவின் சீடருள் ஒருவர் அவரிடம், “ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்கிறார். இயேசு அவரிடம், நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்கிறார். இயேசுவின் வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்க்கும்போது சற்று கடினமாகவே தோன்றலாம். ஏன் இறந்த தந்தையைக்கூட இயேசு அடக்கம் செய்ய விடமாட்டாரா?” என்று நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவன்று. யூத சமூகத்தில் இறந்தோரை அடக்கம் செய்வதற்கென்றே ஒருசிலர் இருந்தார்கள் (எசே 39: 15). அதனால்தான் இயேசு அவரிடம் அப்படிச் சொல்கின்றார். அது மட்டுமல்ல, விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி, இயேசுவிடம் இப்படிக் கேட்டவருடைய தந்தை அப்போது உயிரோடுதான் இருந்தார். அவர் இறந்தபிறகு, இயேசுவைப் பின்பற்றுவேன் என்ன எண்ணத்தோடு அவர் பேசியதால்தான் இயேசு அவரிடம், முதலில் நீர் என்னைப் பின்பற்றி வாரும்” என்கிறார்.

இங்கே அவரிடம், என்னைப் பின்பற்றுவதாக இருந்தால் உடனே பின்பற்று” என்கிறார் இயேசு. சீடத்துவ வாழ்க்கையில் பிறகு ஈடுபட்டுக் கொள்ளலாம், நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இருப்போரைப் பார்த்து இயேசு சொல்லக்கூடிய செய்தி, இன்றே, இப்போதே என்னைப் பின்பற்று என்பதுதான்.

ஆகவே, இயேசுவின் சீடராக இருப்பது என்றால் எல்லாவற்றையும், எல்லாரையும் துறந்து வாழ்வது என்பதை உணர்வோம், இயேசுவின் சீடராய் இருப்பதில் உள்ள சவால்களை உணர்ந்து அவருக்கு ஏற்ற சீடர்களாய் வாழ்வோம், அதன்வழியாய் இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj