ஜூன்-25 மான்ட்டேவெர்ஜின் நகர் புனித வில்லியம்


பிறப்பு:

1085, வெர்செல்லி, இத்தாலி.

இறப்பு:

ஜூன் 25, 1142, சாண்ட்' ஏஞ்சலோ டெய் லோம்பார்டி, இத்தாலி.

பாதுகாவல்:

ஈர்பினியா, இத்தாலி.

சித்தரிப்பு:

பொதுவாகச் சாண்டியாகோ டி காம்போஸ்டெலா, ஸ்பெயின் செல்லும் யாத்திரிகர்; சேணம் அணிந்த ஓநாய் அருகே மடாதிபதி; காட்சிதரும் கிறிஸ்துவை காண்பவராய்; கழுதையைக் கொன்றச் சேணம் அணிந்த ஓநாய்; ஓநாய்; ஆயருக்குரிய கோல்.

வடமேற்கு இத்தாலியின் வெர்செல்லி நகரில், கி.பி. 1085ம் ஆண்டுப் பிறந்த புனித வில்லியம், மான்ட்டேவெர்ஜின், தமது பெற்றோரின் மரணத்தின், பின்னர் உறவினர் ஒருவரால் வளர்க்கப்பட்டார்.

இவர், கொல்லர் பணிப் புரியும் ஒருவரிடம், தமது உடலைச் சுற்றி இருக்குமாறு ஓர் இரும்பு வளையம் செய்து தரச் சொன்னார். அந்த இரும்பு வளையத்தைத் தமது உடலைச் சுற்றி அணிந்தபடியே, ஸ்பெயின் நாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள 'சாண்டியாகோ டி கம்போஸ்டெலா' எனுமிடத்திலுள்ள 'செபதேயுவின் மகனான புனித யாக்கோபு' திருத்தலத்திற்குத் திருயாத்திரைச் சென்று வந்தார்.

சொந்த ஊருக்குத் திரும்பி வந்ததும், எருசலேம் செல்லத் தீர்மானித்தார். பின்னர் அங்கிருந்துக் கிளம்பி, வழியில் தென் இத்தாலி வந்தடைந்தார். அங்கே, கொள்ளைக்காரர்கள் அவரை அடித்து, அவரிடமிருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதுவே இறைவனின் சித்தம் என்றுணர்ந்த வில்லியம், தென் இத்தாலியிலேயே தங்கிக் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்பத் தொடங்கினார். இதன் காரணமாக, எருசலேம் செல்வதில்லை எனத் தீர்மானித்து, தென் இத்தாலியின் 'நோலா' மற்றும் 'பெனவென்டோ' ஆகியவற்றுக்கு இடையிலுள்ள பகுதியில் ஒரு துறவியாகத் தங்கினார். இங்கே அவர் எண்ணற்றச் சீடர்களை ஈர்த்தார். அத்துடன், 'மான்ட்டேவெர்ஜின்' எனும் துறவு மடத்தினை நிறுவினார்.

'மான்ட்டேவெர்ஜின்' துறவு மடத்தில் புனித வில்லியம் அற்புதங்கள் செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சிசிலி தீவில் ஆண்களுக்கும், பெண்களுக்குமாக எண்ணற்றத் துறவு மடங்களை நிறுவிய சிசிலியின் அரசனான 'இரண்டாம் ரோகர்' வில்லியமின் பாதுகாவலராக இருந்தார். 'கத்தோலிக்கக் கலைக் களஞ்சியத்தின்' கூற்றின்படி, புனித வில்லியமை தமது அருகிலேயே வைத்திருக்கும் நோக்கத்தில், 'சலேர்னோ' நகரிலுள்ள தமது அரண்மனையின் எதிரிலேயே ஒரு துறவு மடம் கட்டினார்.

அவரைப் பின்பற்றித் துறவு மடத்திற்கு வரும் விசுவாசிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. துறவு மடத்தில் துறவியரின் கடின வாழ்க்கை முறையைப் பொறுத்துக்கொள்ள இயலாத உடனிருப்பவர்களால் பூசல்களும் அதிகரித்தன. அதனால் கி.பி. 1128ம் ஆண்டு, 'மான்ட்டேவெர்ஜின்' துறவு மடத்தை விட்டு வெளியேறியப் புனித வில்லியம், 'காம்பானியா' மற்றும் 'பசிலிக்காடா' ஆகியவற்றிற்கு இடையேயுள்ள 'கொலேட்டோ' என்னுமிடத்தின் சமவெளிகளில் தங்கினார். அங்கே, ஓர் இரட்டைத் துறவு மடத்தினைப் பெண்களைக் கொண்டே கட்டினார். தொடர்ந்து எண்ணற்றத் துறவு மடங்களைக் கட்டிய வில்லியம், கி.பி. 1142ம் ஆண்டு, ஜூன் மாதம், 25ம் தேதியன்று மரித்தார்.