ஜூன் 24 புனிதர் திருமுழுக்கு யோவானின் பிறப்பு Nativity of Saint John the Baptist


இறைவாக்கினர், போதகர், கிறிஸ்துவின் முன்னோடி, மறைசாட்சி: 

பிறப்பு: கி.மு. முதல் நூற்றாண்டின் இறுதி (Late 1st century BC)

இறப்பு: கி.பி. 31 – 32

மச்சேரஸ், பெரியா, லெவன்ட் (Machaerus, Perea, the Levant)

ஏற்கும் சமயம்: 

கிறிஸ்தவம் (Christianity)

இஸ்லாம் (Islam)

முக்கிய திருத்தலங்கள்:

புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், எருசலேம்,

நபி யமியாவின் கல்லறை, உமய்யாத் மசூதி, டமாஸ்கஸ், சிரியா (Church of St John the Baptist, Jerusalem, Tomb of Prophet Yahya, Umayyad Mosque, Damascus, Syria)

நினைவுத் திருவிழா: 

ஜூன் 24 (பிறப்பு), 

ஆகஸ்ட் 29 (இறப்பு)

இவர், கிறிஸ்துவின் முன்னோடியாக வந்த இறைவாக்கினரும், கிறிஸ்தவ சமயத்தின் பிரபலஸ்தரும் ஆவார். இறைமகன் இயேசுவின் உறவினரான இவர், யோர்தான் நதியில் திருமுழுக்கு கொடுத்து வந்தார். எனவே, மற்ற 'யோவான்'களிடம் இருந்து, இவரைப் பிரித்து அடையாளப்படுத்தும் விதமாக 'திருமுழுக்கு' என்ற அடைமொழி இவரது பெயரோடு இணைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமில் இவர் “யஹ்யா” என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

யோவானின் பிறப்பு:

திருமுழுக்கு யோவானின் பிறப்பு பற்றிய செய்தி, லூக்கா நற்செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது :

யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர்; அவர் பெயர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.

ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் செக்கரியா தூபம் காட்டுகிற வேளையில், அங்குத் தோன்றிய வானதூதர் அவரை நோக்கி, "செக்கரியா, உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார்; தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார். அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார். வானதூதரின் வார்த்தைகளை நம்ப செக்கரியா தயங்கியதால், அவர் யோவான் பிறக்கும் வரை பேச்சற்றவராய் இருப்பார் என்று வானதூதர் கண்டிப்பாக கூறினார்.

அதன் விளைவாக, செக்கரியா பேச்சற்றவராய் ஆனார்.

எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார். அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி, "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

குழந்தைப் பருவம்:

திருமுழுக்கு யோவானைப் பற்றி அவரது தந்தை செக்கரியா, "குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்" என்று இறைவாக்கு உரைத்தார்.

லூக்கா நற்செய்தியின் குறிப்புகள், இயேசுவின் தாய் மரியாவும், யோவானின் தாய் எலிசபெத்தும் உறவினர்கள் என்று குறிப்பிடுவதால், இயேசுவும் யோவானும் சிறுவயதில் சேர்ந்து விளையாடி இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் பல கிறிஸ்தவ ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் இயேசு சாதாரண உடையுடனும், யோவான் ஒட்டக முடியாலான ஆடையுடனும் காணப்படுகின்றனர்.

பழங்கால கிறிஸ்தவ மரபுகளின்படி, யோவானின் பெற்றோர் அவரது சிறு வயதிலேயே இறந்து விட்டதாகவும், யோவான் பாலை நிலத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இயேசுவை சுட்டிக்காட்டும் காலம் வரும் வரை, யோவான் பாலை நிலத்திலேயே வாழ்ந்து வந்தார். தற்கால அறிஞர்கள், பாலைநிலத் துறவிகளாக வாழ்ந்த எஸ்சேனியர்களில் ஒருவராக யோவானும் இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். இயேசு பிறப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இந்த பாலைவனத் துறவிகள், தனிமையில் கடவுளை தியானித்து வந்ததோடு இஸ்ரயேலரின் மனமாற்றத்துக்கும் அழைப்பு விடுத்தனர். மனமாற்றத்திற்கு அடையாளமாக திருமுழுக்கு பெறும் சடங்கைத் தொடங்கி வைத்தவர்கள் இவர்களே என்று நம்பப்படுகிறது.