ஜூன் 23 : நற்செய்தி வாசகம்


போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்து கொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.

நல்ல கனி கொடாத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

--------------------------------------------------

“ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்”

பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் புதன்கிழமை

I தொடக்க நூல் 15: 1-12, 17-18

II மத்தேயு 7: 15-20

“ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்”

ஆண்டவரில் நம்பிக்கை கொண்ட கல்லூரி மாணவி:

நகரில் இருந்த ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தாள் ஜெசி. நன்றாகப் படிக்கக்கூடிய அவள் எழுதிய ஆறாம் பருவத்தேர்வு முடிவுகள் வெளியானபொழுது, ஒரு குறிப்பிட்ட பாடத்தில் அவள் தேர்ச்சி பெறாதது தெரிய வந்தது. இத்தனைக்கும் ஜெசி அந்தப் பாடத்தில் எழுபது சதவீதத்திற்கும் மதிப்பெண்கள் வரும் என எதிர்பார்த்திருந்தாள். இதனால் அவள் அந்த விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவேண்டும் என்று விண்ணப்பித்தாள்

இதற்கு நடுவில் அவளுடைய கல்லூரிக்கு இரண்டு பெரிய நிறுவனங்களிலிருந்து தங்களுடைய நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு ஆள் எடுப்பதற்காக நேர்முகத் தேர்வு நடத்த வந்தார்கள். ஜெசி ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாததால், அவளால் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை. இது நடந்து சில நாள்கள் கழித்து, மறுமதிப்பீடு செய்வதற்காக ஜெசி விண்ணப்பித்திருந்த குறிப்பிட்ட பாடத்தின் தேர்வு முடிவு வந்தது. அதில் அவள் எழுபத்தைந்து சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தாள். இதையறிந்த ஜெசியின் தோழிகள் அவளிடம், “அநியாயமாக இரண்டு பெரிய நிறுவனங்களிலிருந்து வந்த வேலைவாய்ப்பை நழுவவிட்டுவிட்டாயே!” என்று வேதனைப்பட்டார்கள். அப்பொழுது ஜெசி அவர்களிடம், “இந்த இரண்டு நிறுவனங்களைவிடவும் பெரிய ஒரு நிறுவத்தில் எனக்கு வேலை கிடைக்கப் போகுகின்றது. அதற்காகத்தான் எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கின்றது. எனக்கு என் ஆண்டவர் இயேசுவின்மேல் நம்பிக்கை இருக்கின்றது. நிச்சயம் அவர் என்னை ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்துவார்” என்று உற்சாகத்தோடு சொன்னாள். அவள் நம்பியது போன்றே சில மாதங்கள் கழித்து, ஒரு பெரிய நிறுவனம் அவளை வேலைக்குத் தேர்ந்தெடுத்தது.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற ஜெசி போராட்டங்களுக்கு நடுவிலும் ஆண்டவரிடம் நமபிக்கையோடு இருந்து, உரிய பலனைப் பெற்றார். இன்றைய முதல்வாசகத்தில், ஆண்டவரிடம் நம்பிக்கையோடு இருந்த ஆபிராமைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

கால்நடைகள், வெள்ளி, தங்கம் ஆகியவற்றை மிகுதியாகக் கொண்டிருந்த பெரிய செல்வராக இருந்தார் ஆபிராம் (தொநூ 13: 2); ஆனால், குழந்தையில்லாமல் இருந்தார். இத்தகைய சூழ்நிலையில் ஆண்டவர் அவரிடம், “ஆபிராம்! அஞ்சாதே...” என்று சொல்கின்றபொழுது, “எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை!” என்கிறார் ஆபிராம். ஆண்டவரிடம் ஆபிராம் சொல்லும் வார்த்தைகளில், எனக்கு நீர் ஒன்றுமே தரவில்லையே என்ற வேதனை வெளிப்படுகின்றது.

அப்பொழுதுதான் ஆண்டவர் ஆபிராமிடம், “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்’ என்கிறார். உடனே ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். ஆண்டவரும் ஆபிரகாம் நம்பியது போன்றே, தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார். “ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்” என்ற இறைவார்த்தை புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் மேற்கோள்காட்டப்படுகின்றது (உரோ 4: 3-9, 22; கலா 3: 6; யாக் 2: 23). அப்படியெனில், ஆபிரகாமின் நம்பிக்கை எத்துணை உயர்வானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். எனவே, நாமும் ஆபிராமைப் போன்று, ஆண்டவரில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.

சிந்தனைக்கு:

 உங்கள் நம்பிக்கை மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள் (1 பேது 1: 7)

 நம்பிக்கையிலான்றி எவரும் கடவுளுக்கு உகந்தவயிருக்கமுடியாது (எபி 11: 6)

 எத்தகைய இடர்கள்வரினும் ஆண்டவர்மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை உறுதியாக இருக்கின்றதா? சிந்திப்போம்.

இறைவாக்கு:

‘உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே’ (யாக் 2: 26) என்பார் யாக்கோபு. எனவே, நாம் ஆண்டவரிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.