ஜூன் 23 புனிதர் ஜோசஃப் கஃபஸ்ஸோ St. Joseph Cafasso


குரு: (Priest)

பிறப்பு: ஜனவரி 15, 1811 காஸ்டல்னுவோ டி அஸ்டி, சர்டீனியா அரசு (Castelnuovo d'Asti, Asti, Kingdom of Sardinia)

இறப்பு: ஜூன் 23, 1860 (வயது 49) டுரின், சர்டீனியா அரசு (Turin, Kingdom of Sardinia)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 3, 1925 திருத்தந்தை பதினோராம் பயஸ் (Pope Pius XI)

புனிதர் பட்டம்: ஜூன் 22, 1947 திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் (Pope Pius XII)

முக்கிய திருத்தலம்:

சென்சூரியோ டெல்லா கொன்சோல்டா, டுரின், இத்தாலி (Santuario della Consolata, Turin, Italy)

நினைவுத் திருநாள்: ஜூன் 23

பாதுகாவல்:

இத்தாலிய சிறைச்சாலைகள் (Italian prisons)

சிறைச்சாலை சிற்றாலய குருக்கள் (Prison chaplains)

கைதிகள் (Prisoners)

மரண தண்டனை கைதிகள் (Those condemned to death)

புனிதர் ஜோசஃப் கஃபஸ்ஸோ, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க குரு (Italian Roman Catholic Priest) ஆவார். இவர், வடக்கு இத்தாலியின் (Northern Italy) “பியேட்மோன்ட்” (Piedmont Region) பிராந்தியத்திலுள்ள “டுரின்” (Turin) நகரின் குறிப்பிடத்தக்க சமூக சீர்திருத்தவாதி ஆவார். அவர், அந்த குறிப்பிட்ட சகாப்தத்தின் "சமூக புனிதர்கள்" (Social Saints) என அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஆவார். மரண தண்டனைக்கு உள்ளான அந்த கைதிகளுடனான அவரது விரிவான பணிகள் காரணமாக அவர் "தூக்கு மேடைக்கான குரு" (Priest of the Gallows) என்றும் அறியப்படுகிறார்.

சார்டீனியா அரசின் கீழுள்ள “காஸ்டல்னுவோ டி அஸ்டி” (Castelnuovo d'Asti) நகரிலுள்ள விவசாயின் நான்கு குழந்தைகளுள் மூன்றாவதாகப் பிறந்த இவரது இயற்பெயர், “ஜியூசெஃப் கஃபஸ்ஸோ” (Giuseppe Cafasso) ஆகும். இவரது கடைசித் தங்கையான “மரியான்னா” (Marianna) பிற்காலத்தில் “அருளாளர் ஜியூசெஃப் அல்லமனோ” (Blessed Giuseppe Allamano) ஆவார். இவர் பிறக்கும்போதே சிதைந்த முதுகெலும்புடன் பிறந்த காரணத்தால், இவர் குள்ளமானவாராகவும் பலவீன உடல்நலன் கொண்டவராயும் இருந்தார்.

கஃபஸ்ஸோவை குழந்தைப் பருவத்திலிருந்து பார்த்தவர்களும், அவரை ஒரு உதாரண புருஷராகப் பார்த்தவர்களும் பாவம் செய்வதை ஒருபோதும் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்பார்கள். குழந்தைப் பருவத்திலிருந்து, தாம் ஒரு குரு ஆகவே அழைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்த இவர், திருச்சபை கல்வியை “டுரின்” (Turin) நகரிலும் “சியேறி” (Chieri) நகரிலும் கற்க ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில், அவர் நகரின் மற்றொரு முக்கிய நபரான “ஜியோவானி போஸ்கோ” (Giovanni Bosco) என்றழைக்கப்படும் புனிதர் “ஜான் போஸ்கோவையும்” அறிந்திருந்தார். அவர் பின்னர், டுரின் நகரிலுள்ள தெரு சிறுவர்களுக்கு பல்வேறு பணிகளில் பயிற்சியளிப்பதையும், கவனிப்பதையும் ஊக்கப்படுத்தி ஆதரவளித்தார். கஃபஸ்ஸோ பன்னிரண்டு வயதாக இருந்தபோது இருவரும் முதலில் சந்தித்தனர். ஆனால் இருவருமே விரைவில் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக ஆனார்கள். கஃபஸ்ஸோ, கி.பி. 1833ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 21ம் தேதி, மறைமாவட்ட தேவாலயத்தில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

அவர் - சில சமயங்களில் - புனிதர் ஃபிரான்ஸிஸின் மூன்றாம் நிலை சபையின் (Third Order of Saint Francis) உறுப்பினராக ஆனார். ஒரு ஆசிரியராக அவர் வகித்த பாத்திரத்தில், ஒரு மதகுருவாக தனது கடமைகளை ஒருபோதும் அவர் புறக்கணித்ததில்லை. ஏழ்மையான சூழ்நிலைகளில் தேவைப்படும் மாணவர்களுக்கு புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ய அவர் மறுத்ததேயில்லை.

கி.பி. 1836ம் ஆண்டிலிருந்து, தத்துவார்த்த இறையியல் பாடங்களில் ஒரு குறிப்பிடத்தக்க விரிவுரையாளரானார். அவர் உயர் கல்வி, எளிய மதிப்புகள் மற்றும் அறநெறிகளை வழங்க முயன்ற அதே சமயத்தில், கல்வியின் கடின உழைப்புக்காக “புனிதர் அல்போன்சஸ் லிகோரி” (Saint Alphonsus Liguori) மற்றும் “புனிதர் ஃபிரான்சிஸ் டி சலேஸ்” (Saint Francis de Sales) ஆகியோரின் போதனைகளைப் பயன்படுத்தினார். அதேபோல, திருச்சபை விவகாரங்களில் அரசு ஊடுருவல்களுக்கு எதிராகவும் அவர் போராடினார்.

அவர் திருச்சபையின் முழு உலகின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவும் புதிய மத நிறுவனங்கள் அல்லது சபைகளை நிறுவுபவர்களை வழிநடத்தும் ஆன்மீக இயக்குனரும், பிரபலமான ஒப்புரவாளருமாவார்.

நிமோனியா (Pneumonia), வயிற்று இரத்தக் கசிவு (Stomach Hemorrhage) மற்றும் பல்வேறு மருத்துவ சிக்கல்களினால் அவதியுற்றிருந்த கஃபஸ்ஸோ, கி.பி. 1860ம் ஆண்டு, ஜூன் மாதம், 23ம் தேதி, மரித்தார்.