ஜூன் 21 : நற்செய்தி வாசகம்


முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-5

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.

உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம், ‘உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக் கட்டை இருக்கிறதே! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------------------------

பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் திங்கட்கிழமை

I தொடக்க நூல் 12: 1-9

II மத்தேயு 7: 1-5

“தீர்ப்பு அளிக்காதீர்கள்”

உண்மையை அறியாமல் தீர்ப்பிடல்:

பிரான்ஸ் நாட்டில் பணக்கார மூதாட்டி ஒருத்தி இருந்தாள். இவளிடம் ஆன் என்றோர் இளம்பெண் பணிப்பெண்ணாக வேலை செய்துவந்தாள். ஒருநாள் இந்த மூதாட்டி தனது சாவு நெருங்கி வருவதை உணர்ந்தாள். அதனால் இவள் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் உறவினர்களை அழைத்து, அவர்களிடம் தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் பிரித்துக் கொடுத்தாள். இறுதியாக இவள் தன்னிடம் வேலை பார்த்து வந்த ஆனை அழைத்து, ஒரு சிலுவையைக் கொடுத்து, “இதை வைத்துக்கொள்; என்னால் முடிந்த ஒரு சிறு உதவி” என்றாள். மூதாட்டி கொடுத்த சிலுவையை வாங்கிக்கொண்ட ஆனிற்குக் கடுஞ்சினம் வந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், ‘இத்தனை ஆண்டுகள் இவரிடம் வேலை பார்த்திர்க்கின்றேன்! கடைசியில் ஒரு சிலுவையைக் கொடுத்துவிட்டு ஒப்பேற்றுகின்றாரே!’ என்று மனத்திற்குள்ளே திட்டித் தீர்த்தாள்.

இதன்பிறகு ஆன் மூதாட்டியின் வீட்டிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த தன் வீட்டிற்கு வந்தாள். வீட்டிற்கு வந்த நாள் முதல் அவள், மூதாட்டியை மனத்தில் நினைத்துக்கொண்டு ‘தனது பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்தவள், இத்தனை ஆண்டுகள் உண்மையாய் வேலை பார்த்த எனக்கு ஒரு சாதாரண சிலுவையைத் தந்துவிட்டாளே! ‘இரக்கமில்லாதவள்’ என்று திட்டித் தீர்ந்தாள். ஒருநாள் அவள் சினத்தின் உச்சிக்கே சென்று, மூதாட்டி கொடுத்த சிலுவையைச் சுவரில் வீசி எறிந்தாள். அப்பொழுது அவளுடைய கண்களை அவளாலேயே நம்ப முடியாத வண்ணம் அதிலிருந்து நிறைய வைரக்கற்கள் விழுந்தன. அப்பொழுது ஆனிற்கு மூதாட்டியின் அன்பு புரிந்தது. ‘பணமாகக் கொடுத்தால் எல்லாருக்கும் தெரிந்திடுவிடும் என்பதற்காகத்தான் மூதாட்டி வைரக் கற்களைச் சிலுவையில் வைத்துக் கொடுத்திருக்கின்றாள்’ என்று நினைத்த ஆன், மூதாட்டிக்கு நன்றி சொல்ல, அவளுடைய வீட்டிற்குப் போனாள். ஆனால், அவள் ஏற்கெனவே இறந்துவிட்டாள் என்றும், இறக்கும்பொழுது ஆன் மிகவும் பொறுப்பானவள் என்று எல்லாரிடமும் பெருமையாகப் பேசினாள் என்றும் கேள்விப்பட்டுப் பெரிதும் வருந்தினாள்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற ஆன் மூதாட்டியைக் குறித்த முழு உண்மையையும் அறியாமல், அவளை இரக்கமில்லாதவள் என்று தீர்ப்பிட்டது போன்று, இன்றும் பலர் மற்றவரைத் தீர்ப்பிடுகின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில், இன்றைய நற்செய்தியில் இயேசு, “தீர்ப்பு அளிக்காதீர்கள்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை அநியாயமாகத் தீர்ப்பிட்டு கொண்டிருக்கின்றோம். வேதனை என்னவென்றால், நாம் யாரைத் தீர்ப்பிடுகின்றோமோ அவரைப் பற்றி நமக்கு முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை. மேலும் அடுத்தவரைத் தீர்ப்பிடும் அளவுக்கு நாம் ஒன்றும் தவறே செய்யாதவர்கள் இல்லை. இதை விடவும் தீர்ப்பிடும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே உள்ளது. அப்படியிருந்தும் நாம் அடுத்தவரைத் தீர்ப்பிடுகின்றோம். எனவேதான் இயேசு இன்றைய நற்செய்தியில், நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள் என்கிறார். ஆதலால் நாம் தீர்ப்பிடாது வாழ்வோம்.

சிந்தனைக்கு:

 ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார் (உரோ 2: 6)

 நானும் தீர்ப்பு அளிக்கவில்லை நீர் போகலாம் (யோவா 8: 11)

 எவரையாவது நாம் அநியாயமாகத் தீர்ப்பிட்டிருக்கின்றோமா? சிந்தித்துப் பார்த்து, இனினும் அப்படிச் செய்யாதிருப்போம்.

ஆன்றோர் வாக்கு:

‘என்றைக்கு நாம் மற்றவரையும் நம்மையும் குறைகளோடு ஏற்றுக்கொள்கின்றோமோ, அன்றைக்கு வளர்ச்சி ஏற்படுகின்றது’ என்பார் ஜீன் வேனியர். ஆதலால், நாம் மற்றவரைத் தீர்ப்பிடாமல், குறைகளோடு ஏற்று அன்புசெய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.