ஜூன் 18 : முதல் வாசகம்


எல்லாத் திருச்சபைகளைப் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 18, 21b-30

சகோதரர் சகோதரிகளே,

பலர் உலகு சார்ந்த முறையில் பெருமையடித்துக் கொள்வதால் நானும் அவ்வாறே செய்கிறேன். அவர்கள் எதில் பெருமை பாராட்டத் துணிகிறார்களோ அதில் நானும் பெருமை பாராட்டத் துணிந்து நிற்கிறேன். இப்போதும் ஓர் அறிவிலியைப் போன்றே பேசுகிறேன்.

அவர்கள் எபிரேயரா? நானும்தான்; அவர்கள் இஸ்ரயேலரா? நானும்தான்; அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினரா? நானும்தான். அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களா? நான் அவர்களை விடச் சிறந்த பணியாளனே. இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன். நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்து முறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்று முறை தடியால் அடிபட்டேன்; ஒரு முறை கல்லெறி பட்டேன்; மூன்று முறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில் ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர் களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண் விழித்தேன்; பசி தாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன்.

இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது. யாராவது வலுவற்றிருந்தால் நானும் அவரைப் போல் ஆவதில்லையா? யாராவது பாவத்தில் விழ நேர்ந்தால் என்உள்ளம் கொதிப்பதில்லையா? நான் பெருமை பாராட்ட வேண்டும் என்றால் என் வலுவின்மையைப் பற்றியேதான் நான் பெருமை பாராட்ட வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.