ஜூன்-18 புனித மார்கஸ் மற்றும் புனித மார்செலியனஸ்


பிறப்பு:

ரோம், இத்தாலி.

இறப்பு:

வேதசாட்சி கி.பி 286, ரோம், இத்தாலி.

ஏற்கும் சபை/சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை,

கிழக்கு மரபுவழி திருச்சபை.

மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் உரோமையில் வாழ்ந்து வந்த தம்பதியர் ட்ராங்குளினஸ் மற்றும் மார்சியாவுக்கு மார்கஸ் மற்றும் மார்செலியனஸ் என்ற இரட்டைப் புதல்வர்கள் இருந்தார்கள். இவர்கள் இருவரும் கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி இருந்தார்கள்.

இரட்டையர்கள் இருவரும் கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி இருக்கின்ற செய்தி, அப்போது உரோமையின் அரசனாக இருந்த டையோகிளசியனுக்குத் தெரியவந்தது. அவன் இவர்கள் இருவரையும் பிடித்துச் சிறையில் அடைத்து வைத்துச் சித்ரவதைச் செய்யத் தொடங்கினான். தங்களுடைய இரு பிள்ளைகளுக்கும் இவ்வாறு நேர்ந்துவிட்டதை அறிந்த ட்ராங்குளினஸ் மற்றும் மார்சியா சிறையிலிருந்த தங்களுடைய இரு மகன்களிடம் சென்று, “எதற்காக நீங்கள் இருவரும் இப்படிக் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். பேசாமல் உரோமைக் கடவுளை வழிபட்டுவிட்டு உங்களுடைய உயிரைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள்.

அதற்கு மார்கஸும், மார்செலியனஸும், “எங்களுடைய உயிர் போனாலும் பரவாயில்லை, நாங்கள் ஒருபோதும் கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்திலிருந்து விலகமாட்டோம்” என்று மிக உறுதியாகச் சொன்னார்கள். இதனால் அவர்களுடைய பெற்றோர் ஏமாற்றத்தோடும், மிகுந்த வருத்தத்தோடும் சென்றார்கள்.

இச்செய்தி உரோமை அரசாங்கத்தில் படைத்தளபதியாகச் செபஸ்தியாருடைய காதுகளைச் சென்றடைந்தது. அவர் கொடுங்கோலன் டயோக்ளசியனின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, கிறிஸ்தவ விசுவாசத்திலிருந்து பின்வாங்கிய பலரை விசுவாசத்தில் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். மார்கஸும், மார்செயலியனும் இப்படிக் கிறிஸ்தவ விசுவாசத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுச் சித்ரவதைச் செய்யப்படுவதை அறிந்து, அவர்களிடத்தில் சென்று அவர்களை நம்பிக்கையில் இன்னும் உறுதிப்படுத்தினார். அதனால் அவர்கள் நம்பிக்கையில் இன்னும் வலுப்பெற்றார்கள்.

இது நடந்து முப்பது நாட்களுக்குப் பின் மார்கஸ் மற்றும் மார்செலியனஸ் இருவரும் கொடுங்கோலனுக்கு முன்பாக நிறுத்தப்பட்டார்கள். அவன் அவர்களிடம், “நீங்கள் இருவரும் உரோமைக் கடவுளை வழிபட்டுவிட்டு, கிறிஸ்துவை மறுதலித்தீர்கள் என்று சொன்னால், நீங்கள் வாழ்வது உறுதி. அப்படியில்லாமல் கிறிஸ்துவின் மீது கொண்ட விசுவாசத்தில் உறுதியாக இருந்தால், நீங்கள் சாவது உறுதி” என்றான்.

அவர்கள் கிறிஸ்துவின் மீது கொண்ட விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்ததால், அவன் அவர்களைத் தலைவெட்டிக் கொன்றுபோட்டான். மார்கஸ் மற்றும் மார்செலியனஸ் கிறிஸ்துவுக்காகத் தங்களுடைய இன்னுயிரைத் துறந்து மறைசாட்சிகள் ஆனார்கள்.