ஜூன் 16 புனிதர் ஜான் ஃபிரான்சிஸ் ரெஜிஸ் St. John Francis Regis


ஃபிரெஞ்ச் குரு, ஒப்புரவாளர்: (French Priest, Confessor)

பிறப்பு: ஜனவரி 31, 1597 ஃபோன்ட்கௌவர்ட், ஔட், ஃபிரான்ஸ் (Fontcouverte, Aude, France)

இறப்பு: டிசம்பர் 31, 1640 (வயது 43) லலௌவேஸ்க், அர்டேச், ஃபிரான்ஸ் (Lalouvesc, Ardèche, France)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 18, 1716  திருத்தந்தை பதினோராம் கிளமென்ட் (Pope Clement XI)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 5, 1737  திருத்தந்தை பன்னிரெண்டாம் கிளமென்ட் (Pope Clement XII)

முக்கிய திருத்தலம்:

லலௌவேஸ்க், ஃபிரான்ஸ் (Lalouvesc, France)

நினைவுத் திருநாள்: ஜூன் 16

பாதுகாவல்:

ரெஜிஸ் பல்கலைகழகம் (Regis University), ரெஜிஸ் உயர்நிலை பள்ளி (Regis High School), நியு யார்க் நகரம் (New York City), ரெஜிஸ் இயேசுசபை உயர்நிலை பள்ளி (Regis Jesuit High School), ஔரோரா (Aurora), கொலோரோடோ (Colorodo), பின்னலாடை தயாரிப்பாளர் (Lacemakers)

புனிதர் ஜான் ஃபிரான்சிஸ் ரெஜிஸ், ஓரு ஃபிரெஞ்ச் இயேசுசபையைச் சேர்ந்த கத்தோலிக்க குருவும், ஒப்புரவாளருமாவார்.

“ஜீன்-ஃபிரான்காய்ஸ் ரெஜிஸ்” (Jean-François Régis) எனும் இயற்பெயர் கொண்ட இப்புனிதர், கி.பி. 1597ம் ஆண்டு, ஜனவரி மாதம், 31ம் தேதி, தென் ஃபிரான்ஸ் (Southern France) நாட்டின் “லாங்கிடோக்” (Languedoc) எனும் முன்னாள் பிராந்தியத்தின் “ஃபோன்ட்கௌவர்ட்” (Fontcouverte) எனுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தையார், “ஜீன் ரெஜிஸ்” (Jean Régis) ஆவார். தாயார், பிரபுக்கள் குடியைச் சேர்ந்த “மார்கரெட் டி குகுன்ஹன்” (Marguerite de Cugunhan) ஆவார். இவர், “பெசியர்ஸ்” (Beziers) நகரிலுள்ள இயேசுசபை (Jesuit College) கல்லூரியில் கல்வி பயின்றார். கி.பி. 1616ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதியன்று, “டௌலோஸ்” (Toulouse) எனும் நகரிலுள்ள இயேசுசபையின் புகுமுக (Jesuit novitiate) பயிற்சியில் இணைந்தார். இரண்டு வருடங்களின் பிறகு, தமது உறுதிப் பாடுகளை ஏற்றார்.

தென்மேற்கு ஃபிரான்சின் “கஹோர்ஸ்” (Cahors) எனும் நகரில் “சொல்லாட்சி அணியிலக்கணம்” (Rhetoric) பயின்ற இவர், கி.பி. 1619ம் ஆண்டு முதல் கி.பி. 1628ம் ஆண்டு வரை, பல்வேறு கல்லூரிகளில் இலக்கணம் கற்பிக்க அனுப்பப்பட்டார். அதேவேளையில், தாமும் “டோர்னானில்” (Tournon) உள்ள “பல்லுயிரியத்தில்” (Scholasticate) தத்துவ பாடங்களில் (Philosophy) படிப்பைத் தொடர்ந்தார். விசுவாசத்தை பிரசங்கிக்கும் போதனைக்கும், ஆழ்ந்த அன்பின் காரணமாகவும், ஆன்மாக்களை காப்பாற்றும் தமது பேரார்வத்தாலும், ரெஜிஸ் 1628ம் ஆண்டு, “டௌலோஸ்” (Toulouse) நகரில் இறையியல் கற்க தொடங்கினார். இரண்டு வருடங்களுக்குள்ளே, கி.பி. 1630ம் ஆண்டு, இவர் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். அடுத்த ஆண்டு, தமது படிப்புகளை முடித்த ரெஜிஸ், தனது மூன்றாவது உறுதிப்பாடுகளை ஏற்றார்.

ரெஜிஸ் இப்போது தனது வாழ்வாதாரத்திற்காக முழுமையாக தயார்படுத்தப்பட்டு, கி.பி. 1631ம் ஆண்டு கோடையில் தமது அப்போஸ்தல வாழ்க்கையில் நுழைந்தார். ஒரு சளைக்காத பணியாளரான இவர், தமது வாழ்நாளின் பெரும்பகுதியை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவதில் செலவிட்டார். புதிதாய் குருத்துவம் பெற்றிருந்த இவர், “டௌலோஸ்” (Toulouse) நகரில், கொடூரமான பிளேக் (Bubonic Plague) நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்தார். கி.பி. 1632ம் ஆண்டு, மே மாதம் முதல், 1634ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வரை, “மான்ட்பெல்லியரின்” இயேசுசபை கல்லூரியை (Jesuit College of Montepellier) தமது தலைமையகமாகக் கொண்டு பணியாற்றினார். இங்கே அவர் “ஹுகெனோட்ஸ்” (Huguenots) இன மக்களின் மன மாற்றத்திற்காக உழைத்தார். மருத்துவமனைகளுக்கு வருகை தந்தார். அவசியத்திலுள்ள மக்களுக்கு உதவிகள் செய்தார். களங்கப்பட்ட, ஏறுமாறான பாதைகளிலுள்ள பெண்களை நல்வழிப்படுத்தினார். ஏழைகளுக்கும் சிறுவர்களுக்கும் கத்தோலிக்க கோட்பாடுகளை உற்சாகமாகவும், ஆர்வத்துடன் பிரசங்கித்தார். ரெஜிஸ், அபாயகரமான பெண்கள் மற்றும் அனாதைகளுடன் பணிபுரிவதில் பிரசித்தி பெற்றவர். அவர்களுக்கு பாதுகாப்பான இல்லங்களை நிறுவியதுடன், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் ஏற்பாடு செய்து தந்தார். அடிக்கடி நற்கருணை அருட்சாதன ஸ்தாபன ஏற்பாடு செய்து, பணக்காரர்களிடமிருந்து ஏழை மக்களுக்கு வேண்டிய உணவு, உடைகள் மற்றும் பணம் வசூலிப்பதற்கான ஏற்பாடுகள் செய்தார்.

அவர் விபச்சாரிகளுக்கு பல விடுதிகளை நிறுவினார். அப்பெண்களுக்கு பின்னலாடைகள் தயாரிக்கும் பணிகளை பயிற்சியளித்தார். இது அவர்களுக்கு நிலையான வருமானத்தை தந்தது. பிறரின் சுரண்டல் மற்றும் அச்சுறுத்தல்களிலிருந்து தங்கள் குல பெண்களை பராமரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இது இருந்தது.

கி.பி. 1633ம் ஆண்டு, உள்ளூர் ஆயர் “மோன்சிக்னோர்” (Monsignor Louis II de la Baume de Suze) என்பவரது அழைப்பின் பேரில், ரெஜிஸ் “விவியர்ஸ் மறைமாவட்டத்திற்கு” (Diocese of Viviers) சென்றார். மறைமாவட்டம் முழுதும் பரவலாக மறைப்பணியாற்ற அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். கி.பி. 1633-40 ஆண்டுகளில், தென் கிழக்கு ஃபிரான்சின் (South-East of France) “விவாரிஸ்” (Vivaris) பிராந்தியம், ஃபிரான்சின் முன்னாள் பிராந்தியமான “ஃபோரேஸ்” (Forez) மற்றும் கிழக்கு ஃபிரான்சின் “வேலே” (Velay) ஆகிய பிராந்தியங்களிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மறைப் பணியாற்றினார். ரெஜிஸ், குருவாகவும் பொதுநிலையினராகவும் உழைத்தார். அவரது பிரசங்க முறைகள், எளிமையாகவும் மற்றும் நேரடியானதாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. கல்வியறிவற்ற விவசாயிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக, எண்ணற்ற மக்கள் கிறிஸ்தவர்களாக மனம் மாறினார்கள். ரெஜிசின் உழைப்பு முழுதும் கிறிஸ்தவ மனமாற்றங்களாக அருவடையாயின.

எனினும், அவரது தைரியம் - சில சந்தர்ப்பங்களில் கர்வம் என கருதப்பட்டது – வேறு சில குருக்களுடன் மோதலுக்கு வழிவகுத்தது. உள்ளூர் ஆயருடன் பதட்டமான ஒரு காலமும் உருவாகியிருந்தது. அவரால் கண்டிக்கப்பட்ட பலரால் வன்முறை அச்சுறுத்தல்களும் நேரிட்டிருந்தன. அவர் கனடா நாட்டின் ஆதிவாசி மக்களை மனமாற்றம் செய்வதற்கான மறைப்பணிகளுக்காக ஏங்கிக்கொண்டிருந்தாலும், அவர் தமது வாழ்நாள் முழுதும் ஃபிரான்ஸ் நாட்டிலேயே இருந்தார்.

பயணங்கள் கடினமாக இருந்த கடினமான மலைப்பகுதிகளில் - குறிப்பாக குளிர்காலத்தில் கூட, அவர் ஒரு நகரிலிருந்து வேறொரு நகருக்கு வெறும் கால்களுடன் நடந்தே சென்றார்.

கி.பி. 1640ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 31ம் தேதி, நாற்பத்துமூன்று வயதான ரெஜிஸ், நிமோனியா (Pneumonia) நோயால் மரித்தார்.