ஜூன் 15 : நற்செய்தி வாசகம்


உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “ ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர் களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

------------------------------------------------------

“உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்”

பொதுக்காலம் பதினொன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை

I 2 கொரிந்தியர் 8: 1-9

II மத்தேயு 5: 43-48

“உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்”

அருள்பணியாளரின் அன்பு:

இரவு ஒன்பது மணி இருக்கும். ஒரு நகர்ப்புறப் பங்கில் பங்குப்பணியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அருள்பணியாளரின் அலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அவர் அதை எடுத்துப் பேசியபொழுது, மறுமுனையிலிருந்து பேசியவர், நகரில் இருந்த ஒரு பெரிய மருத்துவமனையின் பெயரைச் சொல்லி, இங்கிருந்து பேசுகின்றோம். இங்கொரு முதியவர் ஒப்புரவு அருளடையாளம் செய்யவேண்டுமாம். தயவு செய்து வரமுடியுமா? என்றார். மறுவினாடி அருள்பணியாளர் குறிப்பிட்ட மருத்துவமனைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அருள்பணியாளர் மருத்துவமனைக்குச் சென்றபொழுது, அவரோடு பேசியவர் அவரை ஓர் அறைக்கு அழைத்துக்கொண்டு போனார். அந்த அறையில் எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் படுக்கையில் படுத்திருந்தார். அவர் அருள்பணியாளரிடம், “இது நடந்து நாற்பது ஆண்டுகள் இருக்கும். அப்பொழுது நான் இரயில்வேயில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட நிறுத்தத்தில், கதவைத் திறந்து அடைக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்த நான் (Gate Keeper), ஒருநாள் இரவில் குடித்துவிட்டு அயர்ந்து தூங்கிவிட்டேன். எப்போதாவதுதான் குடிக்கக்கூடிய நான், அன்றைய நாள் இரவில் குடித்துவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கும்பொழுது, ஒரு பயங்கர சத்தம் கேட்டு விழித்தெழுந்தான். காரணம் பாதையைக் கடக்க நேர்ந்த ஒரு மகிழுந்தின்மீது இரயில் மோதியது. அந்த விபத்தில் ஒரு குடும்பத்தைச் சார்ந்த கணவனும் மனைவியும் அந்த இடத்திலேயே இறந்தார்கள். அவர்களுடைய எட்டு வயது மகன்தான் சிறு காயங்களுடன் தப்பித்தான். என்னுடைய கவனக்குறைவால் நடந்த இந்தத் தவற்றிற்கு மன்னிப்பு வேண்டும்” என்று கண்ணீர் மல்கக் கேட்டார்.

அருள்பணியாளர் அவரை ஒருவினாடி பார்த்தார். பின்னர் அவர் அந்த முதியவரின் விரலில் அணிந்திருந்த மோதிரத்தைப் பார்த்துவிட்டு, “இது யாருடைய மோதிரம்?” என்றார். “இது அன்றைக்கு விபத்தில் சிக்கி உயிரிழந்த கணவரின் மோதிரம்” என்று முதியவர் சொன்னதும், “அவர் வேறு யாருமல்லர்; என்னுடைய தந்தைதான்” என்று அருள்பணியாளர் சொன்னதும், முதியவர் எதுவும் பேசமுடியாமல் அமைதியாக இருந்தார். “கவலைப்படாதீர்கள்; என்னுடைய பெற்றோரின் இறப்புக் காரணமாக இருந்த உங்களை நான் மனதார மன்னிக்கின்றேன்” என்று சொல்லி, அவருக்கு ஆசி வழங்கினார் அருள்பணியாளர்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற அருள்பணியாளர் தன் பெற்றோரின் இறப்புக்குக் காரணமாக இருந்த முதியவரை மன்னித்து அன்புசெய்து, வாழும் நற்செய்தியானார். இன்றைய நற்செய்தி வாசகம், பகைவர்களிடம் அன்பு கூருங்கள் என்கிறது. அதுகுறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

யூதர்கள், ‘அடுத்திருப்பவரிடம் அன்பு’ (லேவி 19: 18), ‘பகைவரிடம் வெறுப்பு’ என்றிருந்தார்கள். இந்நிலையில் இயேசு, “உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்” என்கிறார். பகைவரிடம் அன்பு கூர்வது கடினமாக இருந்தாலும், இயலாத செயலல்ல. ஏனெனில், விண்ணகத் தந்தை தன்னைச் சபிப்போரையும் வெறுப்போரையும் அன்பு செய்கின்றார். இவ்வாறு நாம் பகைவர்களிடம் அன்பு கூறுகின்றபொழுது நாம் நம் விண்ணகத் தந்தையைப் போன்று நிறைவுள்ளவர்களாக இருப்போம். நாம் நம் பகைவர்கள்மீது அன்புகூர்ந்து, நிறைவுள்ளவர்களாக இருக்கத் தயாரா?

சிந்தனைக்கு:

 எதிரிகளிடம் அன்பு கூருங்கள்; ஏனெனில், அவர்களே உங்கள் தவற்றைச் சுட்டிக்காட்டுவார்கள்.

 எதிரியோடு வாக்குவாதம் செய்ய நேரிட்டால், அன்பால் அவனை வெற்றி கொள்ளுங்கள் – காந்தியடிகள்

 நான் என்னுடைய எதிரிகளை இரண்டு காரணங்களுக்காக அன்பு செய்கின்றேன். ஒன்று, அவர்கள் என்னுடைய குறைகளைச் சுட்டிக்காட்டுகின்றார்கள். இரண்டு, என்னுடைய குறைகளை நிறைகளாக்கக் காரணமாக இருக்கின்றார்கள். –ஸ்ரீ சின்மயி

ஆன்றோர் வாக்கு:

‘எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குவதுதான்’ என்பார் ஆபிரகாம் லிங்கன். எனவே, நாம் நம் பகைவர்களிடம் அன்பு கூர்ந்து, விண்ணகத் தந்தையைப் போன்று நிறைவுள்ளவர்களாகி இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.