ஜூன்-15 புனித ஜெர்மைன் கஸின்


பிறப்பு: 1579, பிப்ரேக், டூலூஸ், பிரான்ஸ்.

இறப்பு: ஜூன் 15, 1601, கி.பி. 1601, பிப்ரேக், டூலூஸ், பிரான்ஸ். இயற்கை மரணம்.

பிப்ரேக் நகர் ஆலயம், டூலூஸ், பிரான்ஸில் மீபொருட்கள் வைக்கப்பட்டன.

அருளாளர் பட்டம்: மே 7, 1864, போப் 9ம் பயஸ்.

புனிதர் பட்டம்: ஜூன் 29, 1867, போப் 9ம் பயஸ்.

முக்கிய திருத்தலம்:

புனித ஜெர்மைன் திருத்தலம், பிப்ரேக், பிரான்ஸ்.

பாதுகாவல்:

கைவிடப்பட்ட மக்கள்; துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டோர்; உடல் குறைபாடு; நோய்; செல்வம் இழந்தோர்; வறுமை; ஏழை மக்கள்; மாற்றுத் திறனாளிகள்; விவசாயி மற்றும் கிராமப்புறப் பெண்கள்; பெற்றோரை இழந்தோர்; மேய்ப்பர்கள்; அழகிழந்த மக்கள்; உடல் சிகிச்சையாளர்கள்.

சித்தரிப்பு:

மேய்ப்பனின் குச்சி, செம்மறியாடு, இடையனின் துரடு, பாதுகாக்கும் நாய், பூக்கள் நிறைந்த மேலாடையுடன் இருக்கும் இளம்பெண்; வறுமையில் இறந்து கொண்டிருக்கும் பெண்; ஆடுகளை வளர்க்கும் பெண்; விவசாயப் பெண்ணைச் சுற்றிக் குளிர்காலப் பூக்கள் தூவியதுபோல்.

புனித ஜெர்மைன் கஸின், 1579 ஆம் ஆண்டுப் பிரான்ஸ் நாட்டில் உள்ள டூலூஸ் நகருக்கு அருகில் இருக்கும் பிப்ரேக் என்னும் இடத்திலிருந்த ஓர் ஏழைக் குடும்பத்தில், ஒரு கைச் சிதைந்த நிலையில் பிறந்தார். இவர் கழுத்தின் சுரப்பிகளைப் பாதிக்கும் ஒரு விதமான காசநோயால் பாதிக்கப்பட்டார். இவர் பிறந்த சில மாதங்களிலே இவருடைய தாயார் இறந்துபோனார். இதனால் இவரது தந்தை வேறொரு பெண்ணை மணந்துகொண்டார்.

புனித ஜெர்மைன் கஸினுடைய சிற்றன்னை, இவரைப் பலவாறாகக் கொடுமைப்படுத்தினார். ஏற்கனவே கைச் சிதைந்த நிலையிலும், காசநோயினாலும் பீடிக்கப்பட்டவரை வீட்டுக்குள் சேர்த்தால், அவளிடமிருக்கின்ற நோய் எல்லாருக்கும் பரவும் என்று அஞ்சி, இவளது சிற்றன்னை அவரை வீட்டுக்குள் விடாமல், ஆட்டுப்பட்டியிலே தூங்கும்படி செய்தாள். இதனால் புனித ஜெர்மைன் கஸின் உடலளவிலும், உள்ளத்தளவிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்.

புனித ஜெர்மைன் கஸினின் சிற்றன்னை அவரைப் படிக்க அனுப்பாமல், ஆடு மேய்க்க அனுப்பி வைத்தாள். தொடக்கத்தில் இதை நினைத்துப் பெரிதும் வருந்தியப் புனித ஜெர்மைன் கஸின், நாட்கள் செல்லச் செல்ல ஆடு மேய்க்கச் செல்வதைக் கூடச் சந்தோசமான ஒரு காரியமாக எடுத்துக்கொண்டார். ஆடுமேய்க்கும் தருணங்களில் செபமாலையைக் கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டே இருந்தார். பக்கத்திலிருந்த ஆலயத்தில் மூவேளை ஜெபம் சொல்லப்படுகின்ற தருணங்களில், அப்படியே முழந்தாள் படியிட்டு இறைவனைத் தொழுது வந்தாள். இதனால் அவர் தான் தனியாய் இருக்கின்றோம் என்று நினைக்காமல், இறைவன் தன்னோடு இருக்கின்றார் என்ற உணர்வோடு வாழ்ந்து வந்தார்.

கிராமத்தில் ஒரு சிறிய நீரோடைக்கு அப்பால் ஆலயம் இருந்தது. அந்தச் சிறிய நீரோடையைக் கடந்து சென்று, தினமும் காலைத் திருப்பலியில் பங்குகொண்டு, அதன்பின் அன்னை மரியாயின் சன்னிதியில் மண்டியிட்டுச் செபிப்பார். ஞாயிறுத் திருப்பலிக்குப் பின் நடக்கும் மறைக்கல்வி வகுப்புக்களில் மகிழ்வோடு பங்குகொள்வார். கன மழைப் பெய்யும் நாட்களில் நீரோடை அதிகமாய் நீர்ப் பெருக்கெடுத்து ஓடும். அந்த நேரங்களில், புனித ஜெர்மைன் கஸின் ஆலயம் செல்வதற்கு நீரோடையைக் கடந்தது செல்லும்போது, நீர் விலகிக் காய்ந்த நிலம்போல் காட்சியளிப்பதைக் கிராம மக்கள் வியந்துப் பார்த்ததுண்டாம்!

சில நாட்கள் ஆலயத்தில் பகல் வேளையில் திருப்பலி நடைபெறும். புனித ஜெர்மைன் கஸின் ஆடு மேய்க்கும் குச்சியைத் தரையில் நட்டு வைத்து, இறைவனின் பராமரிப்பில் ஆடுகளை விட்டுவிட்டுத் திருப்பலிக் காணச் செல்வார். ஆடுகளோ அந்தக் குச்சியைத் தாண்டி எங்கும் செல்லாது. அவர் திருப்பலிக்குப்பின் திரும்பிவந்து பார்க்கும்போது, அவரின் ஆடுகளுக்குக் காட்டில் வசிக்கும் ஓநாயினால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படாமல் இறைவனால் காப்பாற்றப்பட்டிருக்கும். அதற்காக அவர் இறைவனுக்கு நன்றி செலுத்துவார்.

புனித ஜெர்மைன் கஸினுக்கு ரொட்டி மட்டுமே உணவாகக் கிடைத்தபோதும், அதனைத் தன்னிலும் வறியவர்களுக்குப் பகிர்ந்துக் கொடுத்து உண்டு மகிழ்ந்தார். மேலும் அவர் ஆட்டுமந்தையை மேய்த்து, காத்துக்கொண்டிருக்கும்போது கடவுளின் நன்மைத்தனம் மற்றும் அன்பைப் பற்றிப் பேசுவார். இதனால் எல்லாருடைய அன்பும் இவருக்குக் கிடைத்தது.

ஒருநாள், ஆடு மேய்க்கச் சென்ற புனித ஜெர்மைன் கஸினை, அவரின் சிற்றன்னை பின் தொடர்ந்து சென்று, ரொட்டிகளைத் திருடி மேலாடையை மறைத்து எடுத்து வந்திருப்பதாய்க் குற்றம் சாட்டினார். அப்போது, புனித ஜெர்மைன் கஸின் தன் மேலாடையை உதறிக்காட்டியபோது, அக்கிராமத்திலேயே காணக்கிடைக்காத பல நறுமணம் கொண்ட பூக்கள் அந்த ஆடையிலிருந்து தரையில் விழுந்தன.

நாட்கள் செல்லச் செல்லப் புனித ஜெர்மைன் கஸினின் தந்தை, அவரை முழுமையாகப் புரிந்துகொண்டு, வீட்டிற்குள் வந்து தங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் புனித ஜெர்மைன் கஸினோ தனக்கு ஆட்டுப்பட்டியே போதும் என்று சொல்லிக் கடைசி வரைக்கும் ஆட்டுப்பட்டியிலே இருந்து, மிகவும் எளிய மற்றும் தாழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துவந்தார்.

புனித ஜெர்மைன் கஸினிடமிருந்த நோய் நாட்கள் ஆக, முற்றி 1601 ஆம் ஆண்டு இறந்து, அக்கால வழக்கப்படிக் கிராமத்தின் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். சுமார் நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவரின் உறவினரை அவருக்கு அருகில் அடக்கம் செய்வதற்காகக் கல்லறையின் கற்கள் அகற்றப்பட்டன. அப்போது அவரின் உடல் சிதைவுறாமல் அழகுறக் காணப்பட்டது. தோண்டும்போது அவரின் மூக்கில் காயம்பட்டு இரத்தம் வழிந்தது. கிராமத்தைச் சேர்த்தச் சில முதியவர்கள் அது புனித ஜெர்மைன் கஸினின் உடல்தான் என்று அடையாளம் காட்டினர்.

இவருடைய கல்லறையில் ஏராளமான புதுமைகள் நடைபெற்றன. இவற்றை அடிப்படியாகக் கொண்டு 1867 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஒன்பதாம் பத்திநாதர் இவருக்குப் புனிதர் பட்டம் கொடுத்தார்.