ஜூன் -11 சேசுவின் திரு இருதய பெருவிழா


சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமாகிய சேசுவின் திரு இருதயம்!

யாக்கோபு ஓர் ஏணியின் மீது சம்மனசுக்கள் ஏறுவதையும், இறங்குவதையும் கண்டு, “உன் தந்தையாகிய ஆபிரகாமின் தேவனாகிய ஆண்டவர் நாமே!” என்ற சர்வேசுரனுடைய வார்த்தையைக் கேட்ட போது, அவர் தம் கனவிலிருந்து விழித்தெழுந்து, “ஆண்டவர் மெய்யாகவே இந்த இடத்தில் இருக்கிறார். நானோ இதை அறியாதிருந்தேன். இந்த இடம் சர்வேசுரனுடைய வீடும், மோட்சத்தின் வாசலுமேயன்றி வேறெதுவுமில்லை” என்று அலறினார் (ஆதி. 28:12). கடவுளின் பிரசன்னமும், சம்மனசுக்களின் பணிவிடையும், அந்த இடம் பரிசுத்தமானது என்று யாக்கோபு தீர்மானிக்கும்படி செய்தன. சேசுவின் திரு இருதயத்தையும், அங்கு பிரசன்னமாயிருந்து, சம்மனசுக்களால் ஆராதிக்கப்படுகிற பரிசுத்த தமத்திரித்துவத்தையும் நாம் காண முடிந்தால், நாமும் கூட, “மெய்யாகவே இது பரிசுத்த ஸ்தலமாக இருக்கிறது. இது கடவுளின் வீடும், மோட்சத்தின் வாசலுமாயிருக்கிறது” என்று கூக்குரலிடுவோம்.

சேசுவின் திரு இருதயம் மெய்யாகவே கடவுளின் வீடாக, அல்லது அதைவிட மேலான முறையில், கடவுளின் இல்லமாக இருக்கிறது. ஒரு தேவாலயமோ, அல்லது ஒரு கூடாரமோ, சர்வேசுரனுடைய தற்காலிக வசிப்பிடமாக மட்டுமே இருக்கிறது. ஏனெனில் ஒரு தேவாலயத்தை இடித்து அகற்றி விட்டு, வேறோர் இடத்தில் அதை நாம் கட்ட முடியும். ஆனால் கடவுளின் இல்லம் அவருடைய நித்திய வாசஸ்தலமாக இருக்கிறது. சேசுவின் திரு இருதயமே கடவுளின் நித்திய வாசஸ்தலமாகவும், மெய்யான இல்லமாகவும் இருக்கிறது. எங்கே ஆண்டவர் வாசம் செய்கிறாரோ, அங்கே பலி இருக்கிறது. 

கடவுளின் வீட்டில் எப்போதும் ஒரு பலிபீடம் காணப்பட வேண்டும். கடவுளின் இந்த வீட்டில் பிரதான குருவாக இருப்பவர் யார்? “மெல்க்கிசெதேக்கின் முறைமையின்படி நீர் என்றென்றைக்கும் குருவாயிருக்கிறீர்” என்று யாரைப் பற்றி சொல்லப்பட்டதோ, அவரே அந்தப் பிரதான குருவாக இருக்கிறார். “அவர் (அங்கே) வாசமாயிருந்து, நமக்காகப் பரிந்து பேசுகிறார்” என்று அர்ச். சின்னப்பர் கூறினார். அதாவது அவர் உலக முழுவதும், தீர்வையின் நாள் வரைக்கும், திவ்ய பலி பூசையின் மூலமாக, நமக்காக இடையறாத பலியை நிறைவேற்றி வருகிறார். கடவுளின் வீட்டில், அவருடைய பத்திராசனத்திற்கு தூபவர்க்கத்தைப் போல ஏறிப் போகிற ஸ்துதி புகழ்ச்சியும், நன்றியறிதலும் எப்போதும் உள்ளன.

கடவுள் இரக்கம் மற்றும் அவருடைய அற்புதமான வரப்பிரசாதம் இவைகளின் வழியாக, நம் இருதயங்கள், கடவுள் தங்கி வாழும் அவருடைய தேவாலயங்களாக மாறுகின்றன. நாம் உண்மைக் கிறீஸ்தவர்களாக இருந்தால், நம் இருதயங்களில் எப்போதும் ஒரு பலிபீடத்தைக் கொண்டிருப்போம். அந்தப் பலிபீடத்தின்மீது எப்போதும் ஒரு பலியை, ஒரு பலிப்பொருளைக் கொண்டிருப்போம். சிறிய, பலமான அடிகள், பெற்றுக்கொள்ளப் பட்ட ஒரு கடுமையான வார்த்தை, தவறாகப் புரிந்து கொள்ளப்படுதல், பந்தியில் நம்மையே மறுதலிக்க நமக்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பு, ஏதாவது ஒரு வேடிக்கையான சந்தோஷத்தை விலக்குதல், தெருவில் இருக்கும்போது, கண்களுக்கு விழிப்போடு காவல் புரிதல், இவையும், இவை போன்ற இன்னும் பல காரியங்களுமே நாம் நம் இருதயங்களில் உள்ள பலிபீடத்தின்மீது நாம் செலுத்துகிற சிறு சிறு பலிகளாக இருக்கின்றன. வெறுமனே, “சேசுவே, என் நேசரே, என் தேவனே, இந்த சிறு பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்” என்று சொல். அல்லது, “எல்லாம் உமக்காக, ஓ சேசுவே!” என்ற எளிய மனவல்லய ஜெபத்தை நீ சொல்லலாம். 

இந்தச் சிறு காரியங்கள் மிக அதீத அளவில் விலையேறப் பெற்றவை. இவற்றை சேசு, மரியாயின் திருப் பாதங்களில் நாம் வைக்கிற சிறு ரோஜா மலர் வளையங்களோடு ஒப்பிடலாம். நீ இவற்றை மாமரியிடம் தந்தால், அவர்கள் அவற்றைத் தனக்கென வைத்துக் கொள்ளாமல், அவற்றைத் தன் திவ்ய குமாரனாகிய சேசுநாதரின் திருச்சிரசில் முடியாக சூட்டுகிறார்கள். இந்தப் பரித்தியாக ஜீவியம் எவ்வளவு அழகானது, எவ்வளவு மகிழ்ச்சியானது என்பதை உலகிலுள்ள ஒவ்வொரு ஆத்துமமும் அறிய வருமென்றால், இத்தகைய பரித்தியாகங்களைச் செய்வதற்கான வாய்ப்புகளை அவை ஆவலோடு தேடும். கடினமாயிருக்கிற எதையும் ஏற்றுக் கொண்டு, அதை சேசுவின் திருப்பாதங்களில் காணிக்கையாக வைத்து விடும் இரகசியத்தைக் கற்றுக் கொள்கிற ஆத்துமம் மெய்யாகவே பாக்கியம் பெற்றது! எந்த வியாதியும், கவலையும், இழப்பும், சோதனையும் அந்த ஆத்துமத்தின் மகிழ்ச்சியைப் பறித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தக் காரியங்கள், ஆத்துமத்தின் நேசராகிய சேசுவுக்கு அழகிய பலிகளாக மாற்றப்பட முடியும். 

சேசுவின் சிறிய புஷ்பம்(குழந்தை சேசுவின் தெரசா) இந்த மாபெரும் இரகசியத்தைக் கற்றுக் கொண்டிருந்தார்கள். தன் ரோஜாக்களை சேகரிக்கும்போது, முட்களை சந்திப்பது அவர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது, ஏனென்றால் அது சேசுவுக்கான மற்றொரு பரிசு மட்டுமே என்று அவர்கள் கூறினார்கள். கடவுளுக்காக நாம் வேதனையையும், துன்பங்களையும் பெற்றுக்கொள்ள இன்னும் சற்று அதிக ஆவலுள்ளவர்களாக இருப்போமென்றால், நிச்சயமாக நாம் மகிழ்ச்சியான ஆத்துமங்களாகவும், கடவுளுக்குப் பிரியமானவர்களாகவும் இருப்போம்.

 உலகத் தன்மையான உல்லாசங்களில் ஒரு நாள் முழுவதையும் சந்தோஷமாகப் போக்குவதை விட, ஒரு மணி நேர வேதனை அதிக மகிழ்ச்சியைக் கொண்டிருக்கிறது என்பதை சிலரால் நம்ப முடியாது. இதெல்லாம் வெறும் கற்பனை என்று அவர்கள் நினைக்கிறார்கள். கடவுளுக்காகத் துன்பப்படுவதன் மூலம் ஆத்துமம் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும் என்பதைப் புரிந்து கொள்ள அவர்களால் முடிவதில்லை. ஆனால் நேசம் எல்லாக் காரியங்களையும் இனிமையாக மாற்றுகிறது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நேசம் என்றால் என்ன என்பதை அவர்கள் அறிவதில்லை, ஏனென்றால் சுயநலமுள்ள இருதயத்தில், நேசம் ஜீவித்திருக்க முடியாது.

நம் இருதயம் சர்வேசுரனுடைய வீடாக இருந்தால், நாம் ஒரு பலிபீடத்தையும், ஓர் அன்றாடப் பலியையும், அல்லது இன்னும் மேலாக, ஒரு தொடர்ச்சியான பலியையும் கொண்டிருக்க வேண்டும். ஒரு தொழுவமாகவோ, அல்லது ஒரு நடன அரங்கமாகவோ மாற்றப்பட்டு விட்ட, அல்லது விக்கிரக வழிபாட்டுக்கென்று வழங்கப்பட்டு விட்ட ஒரு தேவாலயம் எத்தகைய பயங்கரத்துக்குரிய காட்சியாக இருக்கிறது! இருந்தாலும், நம் இருதயங்களாகிய பலிபீடத்தின் மீது நம் சர்வேசுரனுக்கு நாம் பலிசெலுத்தாமல் இருக்கும்போது, பசாசு வந்து, குதிரைகளுக்கு அல்ல, மாறாக பசாசுக்களுக்குரிய தொழுவமாக நம் ஆத்துமத்தை மாற்றிவிடுகிறது. அல்லது அது நம் இருதயத்தை ஒரு நடன அரங்கமாக, அதாவது, கேளிக்கைகள் நடக்கும் இடமாக மாற்றுகிறது. ஓர் “உல்லாசமான நேரத்தைப்” பற்றிய சிந்தனைகள் மட்டுமே நம் சிந்தனைகளாக ஆகிவிடுகின்றன. வருடத்துக்கு வருடம் இந்த உல்லாச நேரம் அதிக அசுத்தமுள்ளதாக மாறுகிறது. இறுதியில் அந்த ஆத்துமம் அந்த அசுத்தத்தால் எவ்வளவு கறைபட்டதாகவும், மூச்சுத் திணறடிக்கப் பட்டதாகவும் ஆகிவிடுகிறது என்றால், தன் சொந்த சீர்கேட்டின் பயங்கரத்திற்குரிய துர்நாற்றங்களைக் காணவோ, முகரவோ கூட முடியாததாகிறது.

 வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனசாட்சியின் குரல் நெறிக்கப்படுகிறது. அந்த ஆத்துமம் பசாசுக்கு விற்கப்பட்டு விடுகிறது. இன்றைய நாளில், தங்கள் சொந்த சீர்கேட்டினால் நெறிக்கப்பட்டவர்களாக, ஆயிரக்கணக்கானோர், கோடிக்கணக்கானோர் நரகத்துக்குச் செல்கிறார்கள். அவர்கள் பாவத்தை ஒரு தீங்கற்ற இயற்கையான செயல் என்கிறார்கள். “நரகத்துக்குச் செல்லும் வழி அகன்றது, பாதையும் விசாலமானது. அதைக் கண்டடைகிறவர்கள் அநேகம் பேர்.” உன் இருதயத்தின் நேசராகிய கடவுளுக்கென உன் இருதயத்தில் ஒரு பலிபீடத்தையும், ஓர் அன்றாடப் பலியையும் கொண்டிரு. அப்போது உன் இருதயம் எப்போதும் கடவுளின் ஓர் அழகிய வீடாக நிலைத்திருக்கும்.

சேசுவின் திரு இருதயம் இந்த பூமியின் மீது கடவுளின் வாசஸ்தலமாக இருக்கிறது. பழைய சட்டத்தில், கடவுள் உலகத்தில் ஒரேயொரு வாசஸ்தலத்தை, பலிகள் செலுத்தப்பட வேண்டுமென்று தான் விரும்பிய ஒரேயொரு இடத்தைக் கொண்டிருந்தார். ஜெருசலேமிலிருந்த தேவாலயம்தான் அந்த இடமாக இருந்தது. புதிய திருச்சட்டத்தில், கடவுள் சாலமோனின் தேவாலயத்தைவிட எவ்வளவோ அதிக அழகான ஒரு புதிய வாசஸ்தலத்தைக் கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் நாம் நம் பலிகளைச் செலுத்த வேண்டுமென்று அவர் விரும்புகிறார். சேசுவின் திவ்ய இருதயமே இந்த இடமாக இருக்கிறது. சேசுவின் இருதயத்தில் நாம் எப்படி பலி செலுத்துவது? எல்லாவற்றிற்கும் முதலில், நாம் சேசுவிடம் வர வேண்டும். நாம் அவரை எப்படிக் கண்டுபிடிப்பது? ஜெபத்தினாலும், தேவத் திரவிய அனுமானங்களினாலும் - அதாவது, விசுவாசத்தாலும், திவ்ய நன்மை உட்கொள்வதினாலும். நம் விசுவாசம், நம் இரட்சகருடைய தெய்வீகத்தைப் பற்றிய அறிவாக எப்படி உயர்த்தப்படுகிறது? ஒரு வழி - மாமரியின் மீதான பக்தியின் மூலமாக. அவர்களுடைய ஜீவியத்தைக் கண்ணுங் கருத்துமாக ஆராய்ந்து பார்ப்பதாலும், அவர்கள் மீது குழந்தைக்குரிய நேசம் கொண்டிருப்பதன் மூலமாகவும், அவர்களுடைய திவ்ய பாலகனின் தெய்வீகத்திற்குள் ஊடுருவிப் பார்க்கும் ஓர் உள்ளொளியை நாம் பெற்றுக் கொள்கிறோம்.

 பக்தியோடும், தாழ்ச்சியோடும் திவ்ய நன்மை உட்கொள்ளும்போது, நாம் சேசுவுடன் ஒன்றாகிறோம். அதன்பின் அவருடைய திரு இருதயத்திடம் போக நமக்கு வழி பிறக்கிறது. நாம் எல்லா வகையான உலக நேசங்களையும், குறிப்பாக சுய நேசத்தையும் விட்டு விலகும்போது, அவருடைய திரு இருதயத்திற்குள் நாம் பிரவேசிக்கிறோம். அவருடைய திவ்ய இருதயத்தில் நாம் இருக்கும்போது, கடவுளுக்கு மிகவும் பிரியமான பலிகளைச் செலுத்த நம்மால் முடியும். இந்தப் பரிசுத்த தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப் படுகிற ஓர் அற்ப பலியானது, கடவுளின் கண்களில் எவ்வளவு அதிகமான மதிப்புள்ளதாக ஆக்கப்படுகிறதென்றால், அது உலகத்திற்கென கடவுளிடமிருந்து பெற்றுக் கொள்கிற ஆசீர்வாதங்களைக் கணக்கிட யாராலும் இயலாது. அர்ச். ஜெர்த்ரூத்தம்மாள் செய்த ஒவ்வொரு சிறு ஜெபத்திற்கும் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து ஒரு ஆத்துமம் விடுவிக்கப்படும் என்று அவளிடம் சொல்லப்பட்டது. ஏன் இத்தகைய சிறு காரியங்கள், சர்வேசுரனுடைய இந்தத் தெய்வீக இல்லத்தில் ஒப்புக்கொடுக்கப்படும்போது இவ்வளவு மதிப்புள்ளவை ஆகின்றன? 

ஏனென்றால் நம் இரட்சகர் தாமே அவற்றை ஒப்புக்கொடுக்கிற குருவாக இருக்கிறார். அவர் ஒப்புக் கொடுக்கிற எதுவும் அவருடைய அளவற்ற மாட்சிமையில் பங்கடைகிறது. இது ஒரு சிறு குழந்தை புல்லைக் கொண்டு ஒரு சிறிய அலங்கார வளையத்தைச் செய்து, அந்த மதிப்பற்ற வளையத்தை சேசுவிடம் கொண்டு வருவது போன்றது. அவர் அதைத் தமது பரிசுத்த கரங்களுக்குள் எடுக்கிறார். உடனே அந்த புல்வளையம் வாக்குக்கெட்டாத மதிப்புள்ள தங்க ரோஜாக்களாக மாறுகிறது. இந்த விலையேறப் பெற்ற பரிசைக் கொண்டு, அந்தக் குழந்தை, நம்முடைய இந்த உலகத்திலுள்ள பசியால் தவிக்கிற ஆத்துமங்களுக்காக பிதாவாகிய சர்வேசுரனிடமிருந்து மிகப் பெரும் காரியங்களை விலைக்கு வாங்கிக் கொள்கிறது. ஓ, அத்தியந்த இரக்கத்தின் தேவனே! எங்கள் தகுதியற்ற காணிக்கைகளை (சேசுவின் திவ்ய இருதயமாகிய) “சர்வேசுரனுடைய இல்லத்தில்” பரிதாபத்திற்குரிய பாவிகளாகிய நாங்கள் ஒப்புக்கொடுப்பதையும், அங்கு எங்கள் அற்பமான காணிக்கைகள் உரைக்கவியலாத மதிப்புள்ளவையாக ஆக்கப்பட்டு, அவற்றைக் கொண்டு, இந்தக் கண்ணீர்க் கணவாயில் நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வதையும் எங்களுக்கு சாத்தியமாக்கியதற்காக நாங்கள் எப்படி உமக்கு நன்றி கூறத் தொடங்குவோம்? கடவுள் இவ்வளவு நல்லவராய் இருக்கிறார் என்பதுபற்றி நாம் அகமகிழ வேண்டும், அதில் நாம் இன்பம் காண வேண்டும்! சிறிய புஷ்பம் செய்தது போல நம் சலுகையை நாம் பயன்படுத்திக் கொள்வோமாக. அவள் தன் அன்றாடத் துன்பங்களின் சிறிய ரோஜா இதழ்களை சேசுவின் திருப் பாதங்களுக்குக் கொண்டு வந்தாள். அவர் அதை எடுத்து, அவற்றைப் பரிசுத்தமும், மதிப்புமுள்ளவையாக்கி, ரோஜாக்களின் மழையாக, அல்லது வரப்பிரசாதங்களின் மழையாக இந்த உலகத்தின் மீது விழச் செய்தார். ஓ, நாம் ஏன் இவ்வளவு குளிர்ந்தவர்களாகவும், சோம்பேறிகளாகவும் இருக்கிறோம்? அது ஏனென்றால், நம்முடைய சிறிய, வாடிப் போன ரோஜா இதழ்கள் சேசுவின் திவ்ய கரத்தால் தொடப்பட்டவுடன் எத்தகைய மதிப்பைப் பெற்றுக் கொள்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான். ஓ, அவரிடம் ஒவ்வொரு நாளும் ஒரு கூடை நிறைய (உங்கள் ரோஜா இதழ்களைக்) கொண்டு வாருங்கள்!

ஆமென்