ஜூன் 11, 2021 † இயேசுவின் திருஇதயம் †


'நம் இல்லங்களில் திருஇருதய ஆண்டவரின் திருவுருவத்தை படம் அல்லது சுரூபமாக வைத்து, நம் இல்லத்தையும், இல்லத்தில் உள்ளவர்களையும் அவருக்கு அர்ப்பணமாக்குவது ஏன்?' - இந்தக் கேள்வி எனக்கு நெடும் நாள்களாக எழுவதுண்டு. இரண்டு நாள்களுக்கு முன் அதற்கான விடை இதுவாக இருக்குமோ? என்ற எண்ணமும் தோன்றியது.

அது என்ன?

'கிளாடியேட்டர்' திரைப்படத்தில் கொமாதுஸ் (மார்க்கு அவுரேலியுவின் மகன்) தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருப்பான். ஏனெனில், அவனுடைய மனதில் மாக்ஸிமுவை அழிக்க வேண்டும் என்ற வன்மம் நிறைய இருக்கும் இந்த நேரத்தில் கட்டிலில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் தன் அக்காவின் மகன் லூசியுஸ் அருகில் வருவான். அங்கு நிற்கின்ற அக்காவிடம், 'இவன் நன்றாகத் தூங்குகிறான். ஏனெனில், இவன் அன்பு செய்யப்படுகின்றான்' என்பார்.

நாம் நம் இல்லத்தில் நன்றாகத் தூங்குகிறோம். ஏனெனில், நாம் அன்பு செய்யப்படுகிறோம். நாம் கடவுளால் அன்பு செய்யப்படுகின்றோம். நம்மை நோக்கி இறைவனின் இரு கண்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. ஆகையால் நாம் நிம்மதியாக இருக்கிறோம். அந்த இரு கண்கள்தாம் திருஇருதய ஆண்டவரின் கண்கள்.

ஆண்டவராகிய இயேசுவின் திருவுருவம் நம் இல்லத்தில் வீற்றிருந்து நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார். அவரின் பார்வை நாம் கடவுளால் அன்பு செய்யப்படுகிறோம் என்ற உறுதியான நம்பிக்கையைத் தருகின்றது. அந்த நம்பிக்கையில் நம் வாழ்க்கை நகர்கிறது.

பார்வைக்கும் கடவுளுக்கும் நிறையத் தொடர்பு இருக்கின்றது?

தன் தலைவி சாராவிடமிருந்து தப்பி ஓடுகின்ற ஆபிரகாமின் பணிப்பெண் ஆகார் பாலைவனத்தில், 'என்னைக் காண்கின்றவரை நான் இங்கே கண்டேன்' என்று சொல்லி, தன் இறைவனை, 'காண்கின்ற இறைவன்' அல்லது 'காணும் கடவுள்' என அழைக்கின்றார் (காண். தொநூ 16:13). மதுரையை ஆளும் மீனாட்சியைக் கொண்டே நாம் மதுரையை தூங்கா நகரம் என அழைக்கின்றோம். ஏனெனில், மீனின் கண்கள் மூடாமல் இருப்பது போல, அம்மாளின் கண்களும் மூடாமல் மதுரையைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.

மெய்யியல் அறிஞர் ஸ்பினோசா என்பவர் ஒரு புதிய தத்துவத்தைக் கண்டுபிடித்தார் – 'காணியல்வாதம்.' காண்கின்ற ஒன்றுதான் உண்மை இவரைப் பொருத்தவரை. அல்லது நான் காணும் ஒன்றுதான் உயிர்வாழ்கின்றது. நான் கண்டுகொள்ளாதது எனக்கு ஒரு பொருட்டல்ல. எடுத்துக்காட்டாக, எனக்கு முன் ஒரு பேனா இருக்கிறது. எப்படி இருக்கிறது? அதை நான் காண்பதால் இருக்கிறது. ஆனால், நான் உணவறைக்குப் போகிறேன். அந்த நேரத்தில் என் அறையில் இந்தப் பேனா இருக்குமா? இருக்கும். இருக்குமா? எப்படி? நான்தான் அதைப் பார்க்கவில்லையே? இல்லை! ஆனால், கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறாரே!

ஆக, கடவுள் பார்க்கும் எதுவும் வாழ்கிறது. இருக்கிறது. இயங்குகிறது.

கடவுள் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் என்ற இனிய செய்தியைத் தருகின்றது இன்றைய திருநாள்.

'நான் ஒருவரால் அன்பு செய்யப்படுகிறேன்' என்று உணர்வதே நமக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையையும் தன்மதிப்பையும் கொடுக்கிறது என்கிறார் ப்ராய்ட். ஒரு குழந்தை நிம்மதியாக உணரக் காரணம் தாயால் அன்பு செய்யப்படுகின்ற உணர்வே.

என்னைப் பொருத்தவரையில் இரண்டு நிலை அன்பைத் தவிர மற்ற எல்லா அன்பும் நிபந்தனையான அன்பே: ஒன்று, கண்டவுடன் வருகின்ற காதலின் தொடக்கநிலை. எனக்கு யாராவது ஒருவர்மேல் 'க்ரஷ்' வருகிறது என வைத்துக்கொள்வோம். அவரை நான் பின்பற்றத் தொடங்குவேன், பார்ப்பேன், இரசிப்பேன். அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் நான் அவரைக் கண்டுகொள்வேன். அவ்வளவுதான்! அதற்கு அடுத்து வருகின்ற நிலை நிபந்தனைக்கு உட்பட்டது. 'நான் தொடர்ந்து 10 நாள்களுக்கு ஒருவருக்கு குட் மார்னிங் செய்தி அனுப்பவில்லை என்றால் மற்றவர் என்னை மறந்துவிடுவார்' என்பது உண்மை. 'க்ரஷ்' காதலாக கனிந்துவிட்டால் அது நிபந்தனைக்கு உட்பட்டதாகிவிடுகிறது. இரண்டு, தாயன்பு. இது தனிநபரைப் பொருத்தது. தன் குழந்தைகளைக் கொன்றுவிட்டு இன்னொரு கணவரோடு வாழச் செல்லும் மனைவியர் இருக்கின்ற இந்நாள்களில் தாயன்பை நிபந்தனைக்குட்பட்டது என்றும் சொல்லலாம். தாயன்பை மன்னிப்பு என்ற நிலையில் எடுத்துக்கொண்டால் அங்கே நிபந்தனை இல்லை. தன் மகன் எவ்வளவு பெரிய பொய்யனாக, திருடனாக, கொலைகாரனாக இருந்தாலும் தாய் அவனைத் தன் மகன் என்று மட்டுமே பார்ப்பார். இதை நான் கண்கூடாக மத்திய சிறைச்சாலையில் பார்த்ததுண்டு. தூக்குத்தண்டனை பெறக்கூடிய தவற்றை அவன் செய்திருந்தாலும் அத்தாயின் நீதிமன்றத்தில் அவன் என்றும் நிரபராதியே! அல்லது அவன் மன்னிக்கப்பட்டவனே!

நிபந்தனைகளால் மட்டுமே நாம் அன்பு செய்கிறோம், அன்பு செய்யப்படுகின்றோம் - இதை நாம் மறுத்தாலும்!

இன்று, நிபந்தனைகள் இல்லாமல் நம்மை அன்பு செய்ய ஒருவர் இருக்கிறார் என்ற செய்தியை இத்திருநாள் தருகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் (ஓசே 11), 'இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்புகூர்ந்தேன் ... நடைபயிற்றுவித்தேன் ... கையில் ஏந்தினேன் ... பரிவு என்னும் கட்டால் பிணைத்தேன் ... அன்புக் கயிறுகளால் கட்டி வந்தேன் ...' என இஸ்ரயேல் மக்களைப் பார்த்து ஆண்டவராகிய கடவுள் சொல்கின்றார். ஆக, இஸ்ரயேலின் மேன்மையான நிலை அவர்களுடைய தகுதியால் வந்தது அல்ல, மாறாக, ஆண்டவராகிய கடவுளின் இரக்கப் பெருக்கால் வந்தது. நாம் அன்பு செய்யும்போதும் அப்படித்தான்! நம் அன்புக்குரியவரை ஒரு குழந்தைபோல அள்ளிக்கொள்கின்றோம், கையில் ஏந்துகின்றோம், நடை பயிற்றுவிக்கின்றோம், பரிவு காட்டுகின்றோம். அதாவது, நிர்கதியில் இருக்கின்ற இஸ்ரயேலைத் தன் மகன் என்று கொண்டாடுகின்றார் கடவுள்.

இரண்டாம் வாசகத்தில், கடவுளின் இந்த அன்பைப் பற்றி எழுதுகின்ற பவுல், 'கிறிஸ்துவுடைய அன்பின் ஆழம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!' என்கிறார். இங்கே, 'அன்பு' மற்றும் 'அறிவு' என்ற இரண்டு தளங்களில் உரையாடுகின்றார். கிறிஸ்துவின் அன்பை அறிவுக்கு எட்டாதது என்கிறார். அதாவது, 'ஒன்றும் ஒன்றும் இரண்டு' என்ற கணிதம் போல கடவுளின் அன்பைப் புரிந்துகொண்டால் எத்துணை நலம். அப்படி புரிந்துகொள்வதே கடவுளின் முழு நிறைவு என்கிறார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் குத்தப்பட்ட விலாவிலிருந்து இரத்தமும் தண்ணீரும் வெளிவருகின்றன. குத்தப்பட்ட இதயம் நமக்கு அழகான செய்தியைத் தருகின்றது. அதாவது, அந்த இதயம் தன் கண்களைத் திறந்து நம்மைப் பார்க்கிறது. ஆக, காயம் பட்டாலும் அன்பு தன் இதயத்தைத் திறந்து அடுத்தவரைப் பார்க்கத் தொடங்குகிறது.

ஆக, இயேசுவின் திருஇருதயம் நமக்கு மூன்று செய்திகளைத் தருகின்றது:

(அ) அவர் நம்மைக் காண்கின்ற கடவுள். அவரின் கருணைக்கண்கள் நம்மேல் பட, நாம் வாழ்கிறோம். ஆக, ஒரு சிறிய படத்தையாவது நம் முன் வைத்துக்கொள்வோம்.

(ஆ) அவர் நிபந்தனை இல்லாமல் நம்மை அன்பு செய்கிறார்.

(இ) அவரைக் காயப்படுத்தினாலும் அவர் நம்மை அன்பு செய்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ், 'கடவுளை அன்பு செய்வது எளிது. ஆனால், அவர் நம்மை அன்பு செய்ய அனுமதிப்பதுதான் கடினம்' என்கிறார். அவரை அனுமதித்தல் நலம்.

திருநாள் நல்வாழ்த்துகள்!

(அருட்தந்தை: யேசு கருணாநிதி)