ஜூன்-10 மெயின்ஸ் நகர் புனித பார்டோ


பிறப்பு:

சுமார்.982, ஓப்பர்ஷோஃபென், ஹெஸன், ஜெர்மனி.

இறப்பு:

10  ஜூன் 1051, பேடர்பார்ன், ஜெர்மனி. இயற்கை மரணம்.

மெயின்ஸ் மேற்றாசன ஆலயம், மெயின்ஸ், ஜெர்மனியில் அடக்கம் செய்யப்பட்டது.

புனித பார்டோ மிகவும் அமைதியானவராகவும் பக்தியானவராகவும் தன் வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தார். சிறுவயதிலிருந்தே தான் பிறந்த ஊரிலிருந்த ஆலயத்திற்குச் சென்று, ஆலயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

புனித பார்டோ, ஃபுல்டா நகரிலிருந்த ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்துக் குருவானார். குருவானபிறகு ஹெர்ஸ்பீல்ட் என்ற ஊரிலிருந்த துறவற மடத்தில் பணிபுரிய அனுப்பப்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அத் துறவற இல்லத் தலைவர் இறந்துவிடவே, பார்டோ தலைவர் பொறுப்பேற்று, ஆலயப்பணிகளிலும் ஈடுபட்டார். அப்போதுதான் அவர் மைன்ஸ் என்ற மறைமாநிலத்திற்கு 1031ம் ஆண்டு ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் மற்றவர்களின் நல்வாழ்விற்காகத் தன் வாழ்வையே தியாகமாக்கினார். போதுமான அளவு உணவுகூட உண்ணாமல் வாழ்ந்தார். தன்னுடைய உணவையும், தனக்குச் சொந்தமான அனைத்தையுமே ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார். இதனால் திருத்தந்தை 9ம் லியோ அவர்களால் கண்டிக்கப்பட்டார். பணியாற்ற உடலுக்கு சக்தி வேண்டுமென்று திருத்தந்தை அறிவுரைக் கூறினார்.

திருத்தந்தையின் ஆசீரையும், அறிவுரையும் பெற்ற புனித பார்டோ, பேடர்பார்ன் என்ற ஊருக்கு இறைப்பணிக்காகப் பயணம் செய்யும்போது காலமானார். அவரது கல்லறை மெயின்ஸ் மேற்றாசன ஆலயம், ஜெர்மனியில் வைக்கப்பட்டுள்ளது. இவரது கல்லறையை ஏராளமானோர்ப் பார்வையிடச் சென்று மன்றாடும்போது, கேட்டவை அனைத்தையும் பெற்றுக் கொண்டனர். இன்றுவரை இவரின் கல்லறையில் ஏராளமான புதுமைகள் நடந்த வண்ணமாக உள்ளது.