ஜூலை 1 : முதல் வாசகம்


நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-19

அந்நாள்களில்

கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் ‘இதோ! அடியேன்’ என்றார். அவர், “உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிட வேண்டும்” என்றார்.

அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு, எரிபலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டியபின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார். உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, “நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்” என்றார்.

பின் ஆபிரகாம் எரிபலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின்மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக்கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து சென்றனர். அப்பொழுது, ஈசாக்கு தன் தந்தையாகிய ஆபிரகாமை நோக்கி, ‘அப்பா!’ என, அவர், ‘என்ன? மகனே!’ என்று கேட்டார். அதற்கு அவன், “இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக் குட்டி எங்கே?” என்று வினவினான். அதற்கு ஆபிரகாம், “எரிபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பொறுத்தமட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே” என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர்.

ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து, அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின்மீது இருந்த விறகுக் கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையில் எடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ‘ஆபிரகாம்! ஆபிரகாம்’ என்று கூப்பிட, அவர் ‘இதோ! அடியேன்’ என்றார். அவர், “பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்” என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்து தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார். எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு ‘யாவேயிரே’ என்று பெயரிட்டார். ஆதலால்தான் ‘மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்’ என்று இன்றுவரை வழங்கி வருகிறது.

ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, “ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து, விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவி கொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்” என்றார்.

பின் ஆபிரகாம் தம் வேலைக்காரரிடம் திரும்பி வந்தார். அவர்கள் ஒன்று சேர்ந்து பெயேர்செபாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கேயே ஆபிரகாம் வாழ்ந்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 1 : பதிலுரைப் பாடல்


திபா 116: 1-2. 3-4. 5-6. 8-9 (பல்லவி: 9)

பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

1 ஆண்டவர்மீது அன்பு கூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்.

2 அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். - பல்லவி

3 சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன. பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன; துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன.

4 நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; ‘ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்’ என்று கெஞ்சினேன். - பல்லவி

5 ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.

6 எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். - பல்லவி

8 என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.

9 உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 5: 19

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

ஜூலை 1 : நற்செய்தி வாசகம்


மக்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-8

அக்காலத்தில்

இயேசு படகேறி மறு கரைக்குச் சென்று தம் சொந்த நகரை அடைந்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், “இவன் கடவுளைப் பழிக்கிறான்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர். அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்? ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா, ‘எழுந்து நட’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ” என்றார். அவரும் எழுந்து தமது வீட்டுக்குப் போனார்.

இதைக் கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 30 அருளாளர் ரேமொன் லல் Blessed Ramon Llull


எழுத்தாளர், கவிஞர், இறையியலாளர், மறைபொருள், கணித அறிஞர், தர்க்கவியலார், மறைசாட்சி: (Writer, Poet, Theologian, Mystic, Mathematician, Logician, Martyr)

பிறப்பு: கி.பி. 1232  பலோர்மா (தற்போது பல்மா), மஜோர்கா அரசு (City of Mallorca (now Palma), Kingdom of Majorca, now Spain)

இறப்பு: கி.பி. 1315-1316 மெடிடெர்ரனியன் கடல் (மஜோர்கா தீவுக்கு கப்பலில் பயணிக்கையில்) (Mediterranean Sea (aboard a ship bound for Majorca))

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: கி.பி. 1847 திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX)

நினைவுத் திருநாள்: ஜூன் 30

அருளாளர் ரேமொன் லல் தத்துவயியலாளரும், தர்க்கவியலாளரும், பிரான்சிஸ்கன் மூன்றாம் நிலை துறவியும், “மேஜர்காகன்” (Majorcan writer) எழுத்தாளருமாவார். “கேடலான்” (Catalan) இலக்கியத்தின் முக்கிய பணிகளையாற்றிய பெருமையும் இவரையே சாரும். கணிப்பு கோட்பாட்டின் முன்னோடியாகவும் இவர் கருதப்படுகிறார், குறிப்பாக “லீப்னிஸில்” (Leibniz) அவரது செல்வாக்கை வழங்கினார். மூன்றாம் நிலை ஃபிரான்சிஸ்கன் சபையினர் (Third Order of St. Francis) இவரை மறைசாட்சியாக கௌரவிக்கின்றனர்.

ஆரம்ப வாழ்க்கை:

ரேமொன் ல்லல் அப்போது புதிதாக ஆரம்பித்திருந்த “மஜார்கா” அரசின் (Kingdom of Majorca) தலைநகரான “பல்மாவில்” (Palma) பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். தற்போதைய ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு பிராந்தியமான அன்றைய “அராகன்” (Aragon ) நாட்டின் அரசனான “முதலாம் ஜேம்ஸால்” (James I of Aragon) சமீபத்தில் ஆக்கிரமித்து வெற்றிகொண்ட “பலேரிக்” தீவுகளின் (Balearic Isalnds) பிராந்தியமான மஜார்காவை தமது “அராகன்” அரசின் ஆட்சியின்கீழ் (Crown of Aragon) கொண்டுவந்தான். ரெமொனின் பெற்றோர் “கேடலோனியா” (Catalonia) பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் ஆவர்.

இவர், கி.பி. 1257ம் ஆண்டு “ப்ளாங்கா பிகானி” (Blanca Picany) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு “டொமேநீ மற்றும் மகதலினா” (Domènec and Magdalena) ஆகிய இரண்டு குழந்தைகளும் பிறந்தனர். அவர் ஒரு குடும்பத்தை உருவாக்கினார் என்றாலும் தாம் வாழ்ந்த வாழ்க்கை துன்பகரமான மற்றும் வீணான ஒரு நாடோடிக் கவிஞரின் வாழ்க்கை என்று பின்னாளில் அவரே வர்ணித்தார்.

ரேமொன் “அராகன்” அரசனான “இரண்டாம் ஜேம்ஸின்” (James II of Aragon) பிரத்தியேக ஆசானாக பணியாற்றினார். பின்னர், அரச குடும்பத்தின் நிர்வாகத் தலைவராகவும் ஆனார்.

மாற்றம்:

கி.பி. 1263ம் ஆண்டு, இவருக்கு “கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்” (Epiphany) தொடர் திருக்காட்சியாக காணக் கிடைத்தன. அவர் கண்ட தொடர் திருக்காட்சிகள், கடவுளின் சேவையில் ஒரு வாழ்க்கையைத் தொடர அவரது குடும்பம், நிலை மற்றும் உடமைகளை விட்டு விலகிச் செல்வதற்கு வழிவகுத்தது. குறிப்பாக, அவர் மூன்று நோக்கங்களை உணர்ந்தார்:

1. முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக மனம் மாற்றும் இறைவனின் சேவையில் தாம் மரிக்க வேண்டும்.

2. வெளிநாட்டு மொழிகளுக்கு கற்பிக்கும் மத நிறுவனங்களை தோற்றுவிக்க வேண்டும்.

3. மன மாற்றம் செய்யப்படவேண்டிய ஒருவரின் ஆட்சேபனைகளை எவ்வாரெல்லாம் சமாளிக்கலாம் என்பனவற்றை ஒரு புத்தகமாக எழுதவேண்டும்.

தனிமை மற்றும் ஆரம்பப் பணியின் ஒன்பதாண்டுகள் :

இறைவனின் திருவெளிப்பாடுகளைத் தொடர்ந்து, புனிதர் அசிசியின் ஃபிரான்ஸிசின் (Saint Francis of Assisi) அகத்தூண்டுதலால், இவர் மூன்றாம் நிலை ஃபிரான்சிஸ்கன் சபையின் உறுப்பினர் (Member of the Third Order of Saint Francis) ஆனார். சிறியதோர் திருயாத்திரை சென்று மஜார்கா திரும்பிய அவர், ஒரு முஸ்லிம் அடிமையை வாங்கினார். அவர் மூலம் அரபு மொழியை கற்க தொடங்கினார். அடுத்த ஒன்பது ஆண்டுகள், கி.பி. 1274ம் ஆண்டு வரை, அவர் படிப்பதிலும், தனிமை சம்பந்தமான ஆழ்ந்த சிந்தனையிலும் கழித்தார். கிரிஸ்தவ மற்றும் இஸ்லாமிய இறையியல் மற்றும் தத்துவ சிந்தனைகளை பரவலாக லத்தீன் மற்றும் அரபி மொழிகளில் படித்தார். முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக மனம் மாற்றுவதற்காக அரபு மற்றும் இன்னபிற ஐரோப்பிய மொழிகளையும் கற்றார். அத்துடன் பிறரையும் கற்க வலியுறுத்தினார். திருத்தந்தையரையும் அரசர்களையும் இளவரசர்களையும் சந்திக்கவும், எதிர்கால மறைப் பணியாளர்களுக்கான விசேஷ கல்லூரிகளை நிறுவுவதற்காகவும் ஐரோப்பா முழுதும் பயணம் செய்தார்.

கி.பி. 1285ம் ஆண்டு அவர் தமது முதல் பணியை வடக்கு ஆபிரிக்காவில் தொடங்கினார். ஆனால் அவர் “துனிஸ்” (Tunis) நகரிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1304ல் இரண்டாம் முறையாக துனிஸ் பயணித்த இவர், துனிஸ் அரசருக்கு பல கடிதங்களை எழுதினர்.

கி.பி. 1314ம் ஆண்டு, தமது 82ம் வயதில் ரெமோன் வட ஆபிரிக்க பயணமானார். அங்கே, கோபமுற்ற இஸ்லாமிய கூட்டமொன்று, “பௌகி” (Bougie ) நகரில் இவரை கல்லால் அடித்தது. ஜெனோஸ் வியாபாரிகள் அவரை மீட்டு “மல்லோர்கா’விற்கு” (Mallorca) அழைத்துச் சென்றனர். ஒரு வருடத்தின் பிறகு, அங்கே “பல்மா’விலுள்ள” (Palma) இல்லத்தில் மரித்தார்.

ஜூன் 30 ரோம் திருச்சபையின் முதல் மறைசாட்சிகள் The First Martyrs of Rome


நினைவுத் திருநாள்: ஜூன் 30

மறைசாட்சி அல்லது இரத்தசாட்சி என்னும் சொல், இயேசு கிறிஸ்து மீது கொண்ட நம்பிக்கைக்காக, துன்புறுத்திக் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது. மேலும் எந்த ஒரு சமய (மறை) நம்பிக்கைக்காக இறந்த ஒரு நபரைக் குறிக்கும் சொல்லாகவும் இதைப் பயன்படுத்தலாம்.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைக்காக அல்லது கொள்கைக்காக உயிர் தியாகம் செய்தவரை குறிக்கும் சொல்லாக விளங்கும் (Martyr) என்ற ஆங்கிலப் பதத்தின் தமிழ் வார்த்தை தியாகி என்பதாகும்.

சொல் பிறப்பு:

மறை என்பது சமயத்தைக் குறிக்கிறது. அதைச் சார்ந்து தோன்றும் மறைசாட்சி என்னும் சொல், சமய நம்பிக்கைக்கு சாட்சியாக உயிரைக் கையளித்தவர் என்ற பொருளில் உருவானது.

இரத்தசாட்சி என்னும் வார்த்தை, தங்கள் நம்பிக்கைக்காக இரத்தம் சிந்தி உயிர் நீத்தவர்கள் என்ற பொருளைத் தரும். பலர் நெருப்பில் எரிக்கப்பட்டும், நீரில் மூழ்கடிக்கப்பட்டும், எண்ணெய் கொப்பரையில் போட்டு பொரிக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதால், இச்சொல்லைப் பொதுவானதாக பயன்படுத்த முடியாது.

கிறிஸ்தவத்தில்:

கிறிஸ்தவ சமயம் தோன்றிய கி.பி. முதல் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டின் தொடக்கம் வரை கிறிஸ்தவர்கள் ரோமப் பேரரசில் அதிகமான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அதன் பின்னரும், உலகின் பல்வேறு இடங்களில் நற்செய்தி அறிவிக்க சென்ற கிறிஸ்தவர்களும், பிற சமய அடிப்படைவாத குழுக்கள் நடுவே வாழும் கிறிஸ்தவர்களும் மறைசாட்சியாக இறக்கும் சம்பவங்கள் இந்நாள் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

சிலுவையில் அறைதல், கல்லால் எறிதல், எண்ணெயில் பொரித்தல், தலையை வெட்டுதல், உயிரோடு தோலுரித்தல், நெருப்பில் எரித்தல், குளிர்ந்த நீரில் உறைய வைத்தல், ஈட்டியால் குத்துதல், கொடிய மிருகங்களுக்கு இரையாக்குதல், நீரில் அமிழ்த்துதல், நஞ்சு கொடுத்தல், துப்பாக்கியால் சுடுதல் போன்ற பல்வேறு முறைகளில் கிறிஸ்தவர்கள் மறைசாட்சியாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவ திருச்சபையின் மறைசாட்சியாக இறந்தவர் திருத்தொண்டர் ஸ்தேவான் ஆவார். ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். இதனால் யூதர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். அவர் முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்" என்று சொல்லி உயிர்விட்டார்.

கிறிஸ்துவுக்காக மறைசாட்சியாக உயிர் துறந்த முதல் திருத்தூதர், யோவானின் சகோதரரான யாக்கோபு ஆவார். அவர் வாளால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். மேலும், திருத்தூதர் யோவானைத் தவிர மற்ற திருத்தூதர்கள் அனைவரும் மறைசாட்சியாக கொல்லப்பட்டே உயிர் துறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 64ம் ஆண்டில் ரோம் நகரில் நிகழ்ந்த பெரும் தீ விபத்தின் அழிவுக்குப்பின், மாமன்னன் நீரோ (Nero) முதன்முறையாக திருச்சபையை வாட்டி வதைத்தபோது, மெய்யடியார்கள் பலரும் மிகக் கொடிய வேதனைகளுக்கு ஆளாகி கொல்லப்பட்டார்கள். 

ஏற்பட்ட தீ விபத்தானது, 6 நாள் பகலும், 7 நாள் இரவும் அதற்கு மேலும் கொழுந்து விட்டெரிந்தது. அப்போது மன்னன் நீரோ வெகுளித்தனமாக உடைகள் அணிந்துகொண்டு, ஒரு கோபுர உச்சிக்கு சென்று தீப்பிழம்புகளை கண்டு களித்தான். அவன் வெகுளித்தனமாக இவ்வாறு கண்டுகளித்ததை பார்த்த பலரும், நீரோவே தீயை வளர்க்க ஆணை பிறப்பித்திருப்பானோ என்று ஐயமுற்றனர். 

எப்படியும் தீயை அணைக்க அவன் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை. இதனால் நீரோவே தீ தொடர்ந்து தீ எரிய வழிவகுத்திருக்கலாம் என்ற ஐயம் வலுப்பட்டது. 

இதையறிந்த நீரோ மன்னன், கிறிஸ்தவர்களே இதற்கு காரணம் என்று திசை திருப்பிவிட்டான். 

டாசிட்டஸ் (Tacitus) என்ற வரலாற்று ஆசிரியர், அப்போது இந்த குற்றச்சாட்டை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிடுகின்றார். இருப்பினும் கிறிஸ்தவர்களை ஒன்றாக சேர்க்க ஆணையிட்டான். தனது பெரிய நந்தவனத்திலேயே அவர்களை கூட்டிக் கிறிஸ்தவர்கள் மீது தார் எண்ணெய் ஊற்றி அவர்களை ஓர் இரவு முழுவதும் சுட்டெரித்தான். இதனை கண்ட மக்கள் ஆத்திரமும், பயமும் கொண்டு வெளியேறினார்கள்.

ஜூன் 30 : முதல் வாசகம்


பணிப்பெண்ணின் மகன், என் மகன் ஈசாக்குடன் பங்காளியாய் இருக்கக்கூடாது.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 21: 5, 8-20

ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தபொழுது அவருடைய வயதோ நூறு. அந்தக் குழந்தை வளர்ந்து பால் குடியும் மறந்தது. அப்படிப் பால் குடிப்பதை நிறுத்திய நாளன்று ஆபிரகாம் பெரியதொரு விருந்து அளித்தார்.

பின்னர் எகிப்தியளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்றெடுத்த மகன் சிரித்து விளையாடுவதைச் சாரா கண்டு, ஆபிரகாமை நோக்கி, “இந்தப் பணிப் பெண்ணையும் அவள் மகனையும் துரத்திவிடும். ஏனென்றால், பணிப் பெண்ணின் மகன் என் மகன் ஈசாக்குடன் பங்காளியாய் இருக்கக்கூடாது” என்றார். தம் மகனுக்கு எதிரான இவ்வார்த்தை ஆபிரகாமுக்கு மிகுந்த வேதனை அளித்தது.

அப்போது கடவுள் ஆபிரகாமை நோக்கி, “பையனையும் பணிப் பெண்ணையும் குறித்து வேதனைப்படாதே. சாரா உனக்குச் சொல்வதை எல்லாம் அப்படியே செய். ஏனெனில் ஈசாக்கின் மூலமே உன் வழி மரபு விளங்கும். உன் பணிப் பெண்ணின் மகனும் உன் வித்தாய் இருப்பதால், அவனிடமிருந்தும் இனம் ஒன்று தோன்றச் செய்வேன்” என்றார்.

எனவே ஆபிரகாம் காலையில் எழுந்து, அப்பத்தையும், தோற்பை நிறையத் தண்ணீரையும் எடுத்து ஆகாரிடம் கொடுத்தார்; அவற்றை அவள் தோள்மேல் வைத்து குழந்தையையும் அவளுடன் அனுப்பி வைத்தார். அவளும் புறப்பட்டுப் போய் பெயேர்செபா என்னும் பாலை நிலத்தில் அலைந்து திரிந்தாள். தோற்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின் அவள் புதர் ஒன்றின் அடியில் குழந்தையைக் கிடத்தினாள். பின்பு அவள் முன்புறம் சென்று அம்புஎறி தூரத்தளவில் உட்கார்ந்து கொண்டாள். ‘குழந்தை சாவதைப் பார்க்கச் சகியேன்’ என்று கூறி, முன்புறமிருந்து கொண்டே கூக்குரலிட்டு அழுதாள்.

அப்போது கடவுள் பையனின் அழுகுரலைக் கேட்டார். ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகார்! உனக்கு நிகழ்ந்தது என்ன? அஞ்சாதே. ஏனெனில், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையனின் அழுகுரலை கடவுள் கேட்டருளினார். நீ எழுந்து பையனைத் தூக்கி விடு. அவனை உன் கையில் பிடித்துக்கொள். ஏனெனில், அவனிடமிருந்து பெரிய இனம் ஒன்று தோன்றச் செய்வேன்” என்றார்.

அப்பொழுது கடவுள் அவள் கண்களைத் திறந்துவிட, அவள் நீருள்ள கிணற்றைக் கண்டாள். அவள் அங்குச் சென்று தோற்பையை நீரால் நிரப்பிப் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். கடவுளும் பையனோடு இருந்தார். அவன் வளர்ந்து பாலை நிலத்தில் குடியிருந்தான். அம்பு எய்வதில் வல்லவன் ஆனான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 30 : பதிலுரைப் பாடல்


திபா 34: 6-7. 9-10. 11-12 (பல்லவி: 6a)

பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். - பல்லவி

9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.

10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. - பல்லவி

11 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.

12 வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யாக் 1: 18

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.

ஜூன் 30 : நற்செய்தி வாசகம்


குறித்த காலம் வருமுன்னே, எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 28-34

அக்காலத்தில்

இயேசு கலிலேயாவின் மறு கரையை அடைந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள். அவர்கள், “இறைமகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வருமுன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?” என்று கத்தினார்கள்.

அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன. பேய்கள் அவரிடம், “நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்” என்று வேண்டின. அவர் அவற்றிடம், “போங்கள்” என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.

பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள். உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர் கொண்டு வந்து, அவரைக் கண்டு, தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------

(ஆபத்திலிருந்து) காக்கும் கடவுள்!

பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம் புதன்கிழமை

I தொடக்க நூல் 21: 5, 8-20

II மத்தேயு 8: 28-34

(ஆபத்திலிருந்து) காக்கும் கடவுள்!

சிறுவனைக் காப்பாற்றிய இளைஞன்:

அந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அவ்வூரில் இருந்த குளங்கள், குட்டைகள், ஏரிகள் பெருகின. ஆற்றில் நீர்வரத்து மிகுதியாக இருந்தது.

ஆற்றில் வரும் வெள்ளத்தைப் பார்ப்பதற்காகப் பலர் ஆற்றுப் பாலத்திற்கு வந்தார்கள். அப்படி வந்த மக்கள்கூட்டத்தில் பத்து வயதுச் சிறுவன் ஒருவனும் இருந்தான். அவன் ஆற்றில் வரும் வெள்ளத்தைப் பார்ப்பதற்காகக் கீழே குனிந்தபொழுது, இடறி ஆற்றுக்குள் விழுந்துவிட்டான். ஆற்றுக்கொள் விழுந்த சிறுவன், “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அலறினான்; யாரும் அவனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

தற்செயலாக அங்கு வந்த இளைஞன் ஒருவன், அங்கிருந்தவர்களிடம், “என்ன நடந்தது?” என்று விசாரித்தபொழுது, அவர்கள் நடந்ததைச் சொல்ல, உடனே அவன் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆற்றில் குதித்து, தத்தளித்துக்கொண்டிருந்த சிறுவனைக் காப்பாற்றினான்.

ஆம், இந்த நிகழ்வில் வரும் இளைஞன் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுவனை யாரும் காப்பாற்ற முன்வராதபொழுதும், தானே முன்வந்து காப்பாற்றினான். இன்றைய இறைவார்த்தை ஆபத்தில் அல்லது இக்கட்டில் இருந்தவர்களை ஆண்டவர் காப்பாற்றுவதைப் பற்றிக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

கல்லறையை வாழிடமாகக் கொண்டிருக்கும் ஒருவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? - நினைத்துப் பார்ப்பதற்கே அச்சமாக இருக்கின்றது. நற்செய்தியில், இயேசு கல்லறையை வாழிடமாகக் கொண்ட இருவரை எதிர்கொள்கின்றார் (மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தி நூல்களில் ஒருவர் என வரும். மாற் 5: 2; லூக் 8: 27). அவர்கள் இருவரும் பேய்பிடித்து மிகவும் கொடியவர்களாக இருந்தார்கள். பேய்பிடித்திருந்தவர்கள் ஆபத்தில்தான் இருந்திருப்பார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். அப்படிப்பட்ட இருவரிடமிருந்தும் பேய்களை ஓட்டி, இயேசு அவர்கள் இருவருக்கும் புதுவாழ்வு தருகின்றார்.

இன்றைய முதல்வாசகத்தில், ஆபிரகாமின் மனைவி சாராவால் பாலை நிலத்திற்குத் துரத்தப்படும் ஆகார், தன் குழந்தை சாவதைப் பார்க்கச் சகியாமல் கூக்குரலிட்டு அழுகின்றார். கூடவே அவளுடைய மகனும் அழுகின்றான். அப்பொழுது ஆண்டவர் ஆகாருடைய பையனின் அழுகுரலைக் கேட்டு, சாவிலிருந்து அவனைக் காப்பாற்றுகின்றார். மட்டுமல்லாமல் ஆண்டவர் அவனோடு இருந்தார். நற்செய்தி வாசகத்தில் வருகின்ற நிகழ்வும், முதல் வாசகத்தில் வருகின்ற நிகழ்வும் ஆண்டவர் யாரையும் கைவிடுவதில்லை. மாறாக, அவர் அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுகின்றார் என்ற உண்மையை உணர்த்துவதாக இருக்கின்றது. நாமும் நம்முடைய கண்காணிப்பில் உள்ள மக்களிடம் பாராமுகமாக இல்லாமல், இலாபத்தை மட்டுமே முதன்மையாகக் கருதி வாழாமல், ஆண்டவரைப் போன்று அடுத்தவர் மட்டில் அன்பு கொண்டு வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனைக்கு:

 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார் (திபா 72: 12)

 திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள் (எசா 1: 7)

 ஏழைகள், வறியவர்கள் போன்றோர்மீது நம்முடைய பார்வை எப்படி இருக்கின்றது? சிந்திப்போம்.

இறைவாக்கு:

‘ஆண்டவர் கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார் (சீஞா 35: 14) என்கிறது சீராக்கின் ஞான நூல். எனவே, நம்மைக் கைவிடாத ஆண்டவரிடம் சரணடைந்து, அவர் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

ஜூன் 29 : முதல் வாசகம்


புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழாத் திருப்பலி பெருவிழா

ஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11

அந்நாள்களில்

ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது.

ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, “உடனே எழுந்திடும்” என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன.

வானதூதர் அவரிடம், “இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக்கொள்ளும்” என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், “உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்” என்றார். பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, “ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 29 : பதிலுரைப் பாடல்


திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 4b)

பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.

8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

ஜூன் 29 : இரண்டாம் வாசகம்


இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 17-18.

அன்பிற்குரியவரே,

நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.

நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 16: 18

அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா.

ஜூன் 29 : நற்செய்தி வாசகம்


உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19.

அக்காலத்தில்

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.

அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------

நம்பிக்கை குன்றியவர்களே!”

பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை

I தொடக்க நூல் 19: 15-29

II மத்தேயு 8: 23-27

“நம்பிக்கை குன்றியவர்களே!”

அவ நம்பிக்கையிலிருந்து விலகி, நம்பிக்கை கொள்வோம்:

மழைக்காலம், குளிர்காலம் வந்துவிட்டாலே போதும், தாமஸ் ஒரு மாதிரி ஆகிவிடுவார். தேவையில்லாத நோய்கள் வந்து அவருக்கு மருத்துவச் செலவை எகிற வைத்து வைத்துவிடும். இது பல ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருந்தது. ஒருமுறை அவர் ஒரு புத்தகத்தில், பனிக்காலத்திலும் பனியை உடைத்துக்கொண்டு ஒரு செடியில் பூக்கள் பூப்பதைக் குறித்து வாசித்தார். அப்பொழுது அவருக்குள், ‘சாதாரண ஒரு செடியே பனியை உடைத்துக்கொண்டு பூக்கள் பூக்கும்பொழுது, என்னால் பனியையும் மழையையும் தாங்கிக் கொள்ள முடியாதா?’ என்ற எண்ணமானது ஏற்பட்டது. இதன்பிறகு இவர் தன்னிடம் இருந்த அவநம்பிக்கையைக் களைந்துவிட்டு, நம்பிக்கையோடு மழைக்காலத்தையும் குளிர்காலத்தையும் எதிர்கொண்டார்.

மனித வாழ்விற்கு நம்பிக்கையானது மிகவும் இன்றியமையாத ஒன்று. அது மட்டும் நம்மிடம் இருக்கும்பொழுது, நாம் எவ்வளவு பெரிய சவாலையும் எதிர்கொள்ளலாம். இந்த உண்மையைத்தான் இந்த நிகழ்வும், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

கடல் மட்டத்திலிருந்து 690 அடி ஆழம் என்பதாலும், அருகில் 9200 அடி உயரமான ஹெர்மன் மலை (Mt.Hermon) இருந்ததாலும், கலிலேயாக் கடலில் கொந்தளிப்பிற்குப் பஞ்சமில்லை. அதிலும் மே மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை அதில் கொந்தளிப்பு மிகுதியாகவே இருக்கும். இயேசு தன் சீடர்களோடு இந்தக் கலிலேயாக் கடலில் பயணப்படுகின்றபொழுது, தூங்கிக்கொண்டிருக்கின்றார். உண்மையில் அவர் ஓய்வில்லாமல் பணி செய்தததால், ஏற்பட்ட களைப்பினால் தூங்கிக்கொண்டிருக்க வேண்டும். இத்தனைக்கும் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, அலைகள் மேலே எழுகின்றபோதும்!; ஆனால், சீடர்கள் பெருங் கொந்தளிப்பையும், அலைகள் எழுவதையும் பார்த்துவிட்டு, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி இயேசுவை எழுப்புகின்றார்கள்.

இயேசுவின் சீடர்கள் அவரோடு இருந்து, அவர் செய்த வல்ல செயல்களைப் பார்த்திருப்பார்கள். அப்படியிருந்தும் அவர்கள் இயேசு தங்களோடு இருக்கின்றார்... அவர் இந்த அலைகளையெல்லாம் அடக்கித் தங்களைக் காப்பாற்றுவார்’ என்று நம்பாமல், அவ நம்பிக்கையோடு இருக்கின்றார்கள். அப்பொழுதுதான் இயேசு அவர்களிடம், “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று சொல்லிக் காற்றையும் கடலையும் கடிந்து கொள்கின்றார். உடனே அங்கு அமைதி உண்டாகின்றது. நற்செய்தியில் இயேசு அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘நம்பிக்கை குன்றியவர்களே!’ (மத் 6: 30, 16:8) என்பதாகும். மக்களும் சரி, சீடர்களும் சரி, நம்பிக்கை இல்லாமல் இருந்தார்கள். அதனாலேயே இயேசு அந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். இன்றைய முதல்வாசகத்தில் வானதூதர்கள் சொன்னதை நம்பாமல் திரும்பிப் பார்த்து உப்புத் தூணாகின்றார் லோத்தின் மனைவி. ஆகையால், புயற்காற்றையும் பூந்தென்றலாக மாற்றும் (திபா 107: 29), ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்பதில் நம்பிக்கை கொண்டு, மன உறுதியோடு நாம் வாழ்வோம்.

சிந்தனைக்கு:

 நம்பிக்கையிலான்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது (எபி 11: 6)

 அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும் (உரோ 10: 17)

 நாம் துன்பங்களைக் கண்டு துவண்டு போகின்றவர்களா அல்லது துன்பங்களுக்கு நடுவிலும் ஆண்டவரில் உறுதியான நம்பிக்கை கொண்டு வாழ்கின்றவர்களா?

இறைவாக்கு:

நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்’ (மாற் 9: 23) என்பார் இயேசு. ஆகவே, நாம் நம்மிடம் உள்ள அவநம்பிக்கையைக் களைந்து, ஆண்டவரில் உறுதியான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

ஜூன் 29 புனிதர் பவுல் St. Paul


வேற்று இனத்தவரின் திருத்தூதர்: (Apostle of the Gentiles)

பிறப்பு: கி.பி 5 டார்சஸ், சிசிலியா, ரோம பேரரசு (Tarsus, Cilicia, Roman Empire)

இறப்பு: கி.பி 67 (வயது 62) ரோம், ரோம பேரரசு (Rome, Roman Empire)

ஏற்கும் சமயம்: எல்லா கிறிஸ்தவ பிரிவுகளும்

முக்கிய திருத்தலங்கள்: மதிலுக்கு வெளியான பவுல் பசிலிக்கா ரோம்

நினைவுத் திருவிழா: ஜூன் 29

பாதுகாவல்:

மறைப்பணிகள் (Missions), இறையியலாளர்கள் (Theologians), 

வேற்று இன கிறிஸ்தவர்கள் (Gentile Christians)

கிறிஸ்து இறந்து, உயிர்த்து, விண்ணகம் சென்றபின், புனிதர் இராயப்பர் (St. Peter) தலைமையில் திருச்சபை நிறுவப்பட்டு பன்னிரண்டு அப்போஸ்தலர்களும், மற்ற திருதூதர்களும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று கிறிஸ்துவை பற்றி எடுத்து கூறினர். அதிலும் மிகவும் முக்கியமான பணியை செய்தவர்களில் ஒருவர்தான் பவுல். தமிழில் “லூத்தரன் திருச்சபை” (Lutharan Church) மக்கள் இவரை பவுல் என்றும், கத்தோலிக்க திருச்சபை (Catholic Church) மக்கள் சின்னப்பர் என்றும் அழைப்பார்கள்.

புனிதர் பவுல் தன்னுடய வாழ் நாள் முழுவதும் புனித வாழ்க்கை வாழ்ந்தவர். தூய ஆவியின் கனிளை கொண்டவர். இயேசு கிறிஸ்து உலகின் மீது மண்டிக்கிடக்கும் பேரிருளை நீக்கிட தனது பல்கதிர்களை பரப்பி, உலகில் உள்ளோர் வியந்து போற்ற ஒளிய செய்து, அதில் மக்களை நல்வழியில் கொண்டு செல்ல இறைவன் கண்டதுதான் பவுல் அடிகளார்.

புனிதர் பவுல் ஒரு கிறிஸ்தவ புனிதராவார். இவரது இயற் பெயர் சவுல் (Saul) என்பதாகும். இவர் கி.பி. 5ம் ஆண்டு முதல், 67ம் ஆண்டு வரை வாழ்ந்தார். சிசிலியாவின் “டார்சஸ்” (Tarsus) பட்டினத்தைச் சேர்ந்த ரோம குடிமகனாவார். இவர் யூத மதத்தை பின்பற்றி வாழ்ந்தார். இவர் ஆரம்பத்தில், அக்காலத்தில் கிறிஸ்தவ மக்களைத் தேடி அழிக்கும் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். “டமாஸ்கசில்” (Damascus) கிறிஸ்தவர் பலர் இருப்பதாக அறிந்து அவர்களைக் கைது செய்து எருசலேமுக்கு கொண்டு வருவதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு “டமாஸ்கஸ்” செல்லும் வழியில் உயிர்த்த இயேசு ஒளி வடிவில் அவர் முன் தோன்றினார்.

பவுலாகிய சவுல் மனம் திரும்புதல்:

பின்னர் பவுல் இயேசுவை விசுவாசித்து மனம் மாறினார். இயேசுவை ஏற்ற பின்னர் மறை பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பவுல் ஆரம்பகால கிறிஸ்தவ மறை பரப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் ஆவார். கிறிஸ்து எல்லோருக்கும் பொதுவானவர்; யூதருக்கு மட்டும் உரியவரல்ல என்ற கருத்தை வலியுறுத்தினார். எனவே இவர் பிற இனத்தவரின் அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார்.

மன மாற்றத்துக்கு முன்:

புனிதர் பவுல் தன்னைப் பற்றி விவிலியத்தில் எழுதியுள்ளபடி, அவர் சிசிலியா நாட்டின் “டார்சஸ்” (Tarsus) பட்டணத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு ரோம குடிமகனாவார். அவரது குடும்பம் மிகவும் செல்வந்தக் குடும்பமாகும். இஸ்ரயேலின் பெஞ்சமின் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பரிசேயராவார். இளமையில் யூத மத சட்டங்களை கற்று தேர்ந்தார்.

அப்போது கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய காலமாகும். பல கிறிஸ்தவர் தமது நம்பிக்கை காரணமாகக் கொலை செய்யப்பட்டனர். பவுல் கிறிஸ்தவரை அழிக்க திடம் கொண்டு ஆட்சியாளரிடம் அதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு கிறிஸ்தவரைத் துன்புறுத்தினார். கிறிஸ்தவர் இவரது பெயரைக் கேட்டாலே அஞ்சினார்கள். இவ்வாறு செய்து கொண்டிருக்கும்போது “டமாஸ்கசில்” கிறிஸ்தவர்கள் இருப்பதாக கேள்விப்பட்டார். அங்கிருக்கும் கிறிஸ்தவரை கைது செய்து எருசலேம் நகருக்கு அழைத்து வருவதற்காக “டமாஸ்கஸ்” புறப்பட்டார். கிறிஸ்தவர்களை கைது செய்ய “டமாஸ்கஸ்” போகும் வழியில் திடீரென்று அவரது கண்பார்வை மங்கிப் போனது. குதிரையில் இருந்து விழுந்த அவருக்கு ஒர் குரல் கேட்டது. திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவரைச் சுற்றிப் பிரகாசித்தது.

"சவுலே, சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகிறாய்?"

சவுல் "ஆண்டவரே நீர் யார்?”

“நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்று குரல் கேட்டது.

கண் பார்வை பறிபோதல்:

“ஆண்டவரே, நீர் யார்” என்று சவுல் கேட்க, அதற்கு, “நீ முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்றார். சவுல் நடுங்கித் திகைத்து, “ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்” என்றார். அதற்கு, “நீ எழுந்து பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார். அவரோடு பிரயாணம் செய்த மனிதர்கள் குரலைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது பார்வையற்று இருந்தார். கூட இருந்தவர்கள் சவுலை கை தாங்கலாக, “டமாஸ்கஸ்” அழைத்துக்கொண்டு போனார்கள்.

“அனனியாஸ்” (Ananias of Damascus) மூலம் பார்வை பெறுதல் :

சவுல் மூன்று நாள் பார்வை இல்லாதவராய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தார். பின்பு கர்த்தர் “அனனியாஸ்” என்பவரை சவுலிடம் அனுப்பினார். அப்பொழுது “அனனியாஸ்” போய், சவுல் இருந்த வீட்டுக்குள் பிரவேசித்து, அவர்மேல் கையை வைத்து, “சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார்” என்றான். உடனே அவர் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவர் பார்வை திரும்பியது.

ஞானஸ்நானம் பெறுதல்:

எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றார். பின்பு உணவுண்டு பலப்பட்டார். சவுல் “டமாஸ்கஸி’லுள்ள” சீடருடனே சிலநாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தார். கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு, “எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடம் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா” என்றார்கள்.

திருவிவிலியத்தில் இவரது பங்கு:

புதிய ஏற்பாட்டில் உள்ள 27 புத்தங்களில் 14 படைப்புக்கள் இவர் எழுதியது என கூறப்படுகிறது. பவுலின் எழுத்துக்களில், கிறிஸ்துவின் தன்மை இருப்பது, கிறிஸ்தவ ஆவிக்குரிய தன்மையை விவரிப்பது பற்றிய முதல் எழுத்து பதிவுகளை அவர் அளிக்கிறார். மத்தேயு மற்றும் யோவானுடைய சுவிசேஷங்களுக்குப் பிறகு புதிய ஏற்பாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க புத்தகங்களாக அவரது எழுத்துக்கள் விவரிக்கப்பட்டு காணப்படுகின்றன.

திருச்சபைகளுக்கு எழுதிய நூல்களின் தொகுப்புகள்:

★ ரோமர்

★ 1 கொரிந்தியர்

★ 2 கொரிந்தியர்

★ கலாத்தியர்

★ எபேசியர்

★ பிலிப்பியர்

★ கொலோசெயர்

★ 1 தெசலோனிக்கேயர்

★ 2 தெசலோனிக்கேயர்

★ 1 தீமோத்தேயு

★ 2 தீமோத்தேயு

★ தீத்து

★ பிலேமோன்

பவுல் தனது நூல்களில் முதலாவதாக கிறிஸ்துவின் வாழ்த்துதல்களை முன்னுரையாகவும், முடிவுரையில் நன்றி கூறுதல் மற்றும் இறுதி வாழ்த்துதல்களையும் எழுதுவது வழக்கமாக கொண்டு இருந்தார்.

கடைசி நாட்கள்:

கைது:

பவுல் எருசலேமில் இருந்தபோது, யூதரல்லாதோரை தேவலயத்துக்குள் கூட்டிவந்ததாக பொய்யுரைத்து யூதர்கள் கூட்டமாய் ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவரைத் தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்துக்கொண்டு போனர்கள். அவர்கள் அவரைக் கொலை செய்ய எத்தனித்தனர். எருசலேம் முழுவதும் கலக்கமாயிருக்கிறது என்று போர்ச் சேவகரின் சேனாபதிக்குச் செய்திவந்தது. உடனே அவன் போர்ச் சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடிவந்தான். சேனாபதியையும் போர்ச்சேவகரையும் மக்கள் கூட்டம் கண்டபோது பவுலை அடிக்கிறதை நிறுத்தினார்கள். சேனாபதி அருகேவந்து பவுலைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான். அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச் சத்தமிட்டார்கள் சந்தடியினாலே உண்மையை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று, இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் பவுலைத் தூக்கிக்கொண்டு போக வேண்டியதாயிருந்தது.

கொலைச் சதி:

அவர்கள் பவுலைக்; கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், பவுல் சேனாபதியிடம் தான் மக்களுடன் பேசும்படி அனுமதியை பெற்று கோட்டை படிகள் மேலிருந்தவாறு மக்களுக்கு இயேசுவைப் போதித்தார். இதனால் மேலும் கோபமடைந்த கூட்டம் மேலும் உக்கிரமாய் பவுலை கொலை செய்யும்படி கூக்குரலிட்டனர். பின்னர் நடந்த விசாரனைகளில் பவுலை குற்றப்படுத்த முடியாமல் போகவே, யூதர் விசாரணையின் போது கொலை செய்யச் சதி செய்தனர். இதை அறிந்த சேனாதிபதி பவுலை மிகுந்த காவலுக்கு மத்தியில் செசரியா பட்டணத்திற்குத் தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்தில் அனுப்பினான்.

சிறைவாசம்:

செசரியா பட்டணத்தில் நடந்த விசாரனைகளிலும் பவுல் வெற்றிகொண்டார். எனினும் அவர் விடுதலைக்காகக் கொடுக்க வேண்டிய பணத்தைச் செலுத்தாத காரணத்தினால் தேசாதிபதியாகிய பேலிக்ஸ் பவுலை இரண்டு வருடம் சிறையிலிட்டார். இதற்குள் புதிய தேசாதிபதியாக பொர்க்கியுபெஸ்து என்பவன் வந்து யூதரை சந்தோசப்படுத்தும் நோக்கில் பவுலின் சிறைக் காலத்தை நீடித்தான்.

மீள்விசாரனை:

புதிய தேசாதிபதியாகிய பேலிக்சை அனுகிய யூதர் வழியில் பவுலை கொலைச் செய்யும் உள்நோக்கத்துடன் விசாரணையின் பொருட்டு பவுலை எருசலேமுக்கு அனுப்பும் படி கேட்டனர். ஆனால் பவுல் தேசாதிபதியாகிய பேலிக்சிடம் உரோமில் அரசன் முன்பாக தனது விசாரணை நடத்தும் படி உத்தரவைப் பெற்று எருசலேம் செல்வதைத் தவிர்த்தார். செசரியா பட்டணத்திலிருந்து உரோம் நகர் வரை பவுலை ஒரு கப்பலில் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் கப்பல் வழியில் புயலை எதிர்கொண்டு பல நாட்களாகக் கடலிலிருந்தது. பின்பு உரோமை வந்தடைந்த பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடம் முழுவதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தார். தேசாதிபதியாகிய பேலிக்ஸ் பவுல் மீது பற்று கொண்டவராகக் காணப்பட்டமையாலும், உரோம் நகரில் யூத மதத்தினர் பெரும்பான்மையாக இல்லாத காரணத்தினாலும் பவுல் மீதான வழக்கை யூதர் கைவிட்டனர்.

மரணம்:

பவுலின் மரணம் பற்றிய தகவல் விவிலியத்தில் காணப்படவில்லை. எனினும் அவர் ரோமில் வேத சாட்சியாக மரித்தார் என்பது மரபு. கி.பி 69ம் ஆண்டு நீரோ மன்னன் ஆட்சி காலத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது. மரண தண்டனை ரோமானியர்கள் சிலுவை மரணத்தை பழித்தலுக்குரிய மரணம் என்று எண்ணியதால், பவுலுக்கு ரோமானியர்கள் அவரது தலையை வெட்டி கொலை செய்தனர்.

ஜூன் 29 புனிதர் பேதுரு St. Peter


திருத்தூதர், கத்தோலிக்க திருச்சபையின் முதல் திருத்தந்தை, மதத்தலைவர், மறைசாட்சி: (Apostle, First Pope of Catholic Church, Patriarch, and Martyr)

பிறப்பு: கி. பி. 1 பெத்சாய்தா, கௌலனிடிஸ், சிரியா, ரோம பேரரசு (Bethsaida, Gaulanitis, Syria, Roman Empire)

இறப்பு: கி.பி. 64 மற்றும் 68 ஆகிய வருடங்களுக்கு இடையில் கிளமன்டைன் சிற்றாலயம், வாட்டிகன் குன்று, ரோம், இத்தாலியா, ரோம பேரரசு (Clementine Chapel, Vatican Hill, Rome, Italia, Roman Empire)

ஏற்கும் சமயம்:

அனைத்து கிறிஸ்தவ பிரிவுகள் மற்றும் இஸ்லாம் (All Christian denominations that venerate Saints, Islam)

முக்கிய திருத்தலங்கள்: 

புனித பேதுரு பேராலயம், வாட்டிக்கன் நகர் (St. Peter’s Basilica, Vatican)

நினைவுத் திருவிழா: ஜூன் 29 

பாதுகாவல்:

ரொட்டி சுடுபவர் (Bakers); பாலம் கட்டும் தொழிலாளி (Bridge Builders); மாமிசம் விற்பவர்கள் (Butchers); மீனவர்கள் (Fishermen); அறுவடை செய்பவர்கள் (Harvesters); புதிய காலணிகள் தயாரிப்பவர்கள் (Cordwainers); கடிகாரம் உற்பத்தியாளர்கள் (Horologists); பூட்டு தொழிலாளிகள் (Locksmiths); காலணிகள் செய்யும் தொழிலாளி (Cobblers); வலை தயாரிப்பாளர்கள் (Net makers); (Shipwrights); எழுதுபொருட்கள் வியாபாரி (Stationers); மூளைக்கோளாறு (Frenzy); கால் பிரச்சினைகள் (Foot problems); ஜூரம் (Fever); நீண்ட ஆயுள் (Longevity);

புனிதர் பேதுரு அல்லது புனிதர் இராயப்பர் (Saint Peter), இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய பன்னிரு திருத்தூதர்களுள் (Twelve Apostles of Jesus Christ) தலைமையானவர் ஆவார். இவரது இயற்பெயர் சீமோன் (Simon) ஆகும். இவரைத் தம் சீடராக அழைத்த இயேசு "பேதுரு" என்னும் சிறப்புப் பெயரை அவருக்கு அளித்தார். இப்பெயரின் தமிழ் வடிவம் இராயப்பர் என்பதாகும்.

பேதுரு கலிலேயாவைச் சேர்ந்த மீனவர் ஆவார். இயேசு இவரைத் தம் சீடராகத் தெரிந்து கொண்டார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். 

கிறிஸ்தவ பாரம்பரியபடி, பேரரசன் “நீரோ அகஸ்டஸ் சீசர்” (Nero Augustus Caesar) ஆட்சிக் காலத்தில், இவர் ரோம் நகரில் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டதைப் போன்றே தாமும் சிலுவையில் அறையப்பட தகுதியற்றவர் என எண்ணியதால், தம்மை தலைகீழாக சிலுவையில் அறையுமாறு இவரே வேண்டிக்கொண்டதாக கிறிஸ்தவ பாரம்பரியம் கூறுகிறது.

தூய பேதுருவின் கல்லறை உள்ளதாகக் கருதப்படும் வத்திக்கான் நகரத்தில் கத்தோலிக்க திருச்சபையின் முக்கியமான வழிபாட்டிடங்களுள் ஒன்றாகிய புனித பேதுரு பெருங்கோவில் அமைந்துள்ளது.

புதிய ஏற்பாட்டு நூல்களில் பேதுரு :

பேதுருவின் வாழ்க்கைக் குறிப்புகள் சில புதிய ஏற்பாட்டு நூல்களாகிய நற்செய்திகளிலும் (Canonical Gospels), திருத்தூதர் பணி நூலிலும் (Acts of the Apostles) உள்ளன. இயேசுவின் பணிக்காலத்தில் அவர் தம் சீடராக அழைத்துக்கொண்ட பன்னிரு திருத்தூதர்களுள் முதலிடம் பெறுபவர் பேதுரு. மீன் பிடித்தல் தொழிலைச் செய்துவந்த பேதுருவை ஒருநாள் இயேசு கலிலேயக் கடலருகில் கண்டார். இயேசு அவரை நோக்கித் தம் சீடராகுமாறு கேட்டார். பேதுருவும் இயேசுவைப் பின் தொடர்ந்தார். பேதுருவின் இயற்பெயர் சீமோன்; அவர்தம் தந்தை பெயர் “ஜான் அல்லது ஜோனா” (John or Jonah) ஆகும். எனவே அவர் "ஜோனாவின் மகன் சீமோன்" என்று அழைக்கப்பட்டார். ஆனால் இயேசு அவருக்கு ஒரு புதிய பெயரைக் கொடுத்தார். விவிலியத்தில் இவ்வாறு புதிய பெயர் கொடுக்கும்போது அப்பெயரைப் பெறும் மனிதர் ஒரு சிறப்புப் பணிக்கு அழைக்கப்படுவதை அப்பெயர் குறிப்பது வழக்கம். இயேசு சீமோனுக்குப் பேதுரு என்னும் பெயரைக் கொடுத்ததும் தனிப்பொருள் கொண்ட நிகழ்வுதான்.

பேதுரு என்னும் சொல் “அரமேய” (Aramaic) மொழியில் "கேபா" (Kepha) என வரும். அதன் பொருள் "பாறை" ஆகும். பேதுரு என்பது அதன் கிரேக்க வடிவம். இலத்தீனில் "Petra" என்றால் பாறை. அதைத் தழுவியே சீமோனுக்கு "Petrus" (ஆங்கிலத்தில் “பீட்டர்” Peter) எனும் பெயர் வந்தது.

பேதுருவை இயேசு "பாறை" என்று அழைத்ததற்கான விளக்கத்தை மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது.

மத்தேயு 16:13-19

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, "மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்" என்றார்கள். "ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார். 

பேதுருவின் குடும்பம் :

பேதுருவின் குடும்பம் பற்றிய சில தகவல்கள் நற்செய்திகளில் உள்ளன. அவர் கப்பர்நாகும் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார் என்றும், திருமணமானவர் என்றும் அவருடைய மாமியார் காய்ச்சலாய் இருந்தபோது இயேசு அவருடைய வீட்டுக்குச் சென்று அப்பெண்மணிக்கு நலமளித்தார் என்றும் நற்செய்திகள் குறிப்பிடுகின்றன.

மாற்கு 1:29-31

பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.

இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். 

பேதுருவின் பெயர் பற்றிய குறிப்பு:

பேதுருவின் இயற்பெயர் எபிரேயத்தில் சீமோன் என்பதாகும். அது கிரேக்கத்தில் Σιμων என்று எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டில் இரு இடங்களில் அப்பெயர் "சிமியோன்" (Συμεων) என்னும் வடிவத்தில் வருகிறது (காண்க: திருத்தூதர் பணிகள் 15:14; 2 பேதுரு 1:1).

இயேசு பேதுருவுக்குக் கொடுத்த சிறப்புப் பெயர் "பாறை" அல்லது "கல்" என்னும் பொருள்கொண்ட அரமேயச் சொல்லாகிய "கேபா" (பண்டைக் கிரேக்கம்: Kephas) என்பதாகும். பேதுரு "கேபா" என்று ஒன்பது முறை புதிய ஏற்பாட்டு நூல்களில் அழைக்கப்படுகிறார். யோவான் நற்செய்தி ஒருமுறையும் தூய பவுல் எழுதிய திருமுகங்கள் எட்டு முறையும் பேதுருவை "கேபா" என்று அழைக்கின்றன.

"கேபா" என்னும் அரமேயச் சொல் கிரேக்கத்தில் “Petros” என்று பெயர்க்கப்பட்டது. அதிலிருந்து தமிழ் "பேதுரு" என்னும் வடிவம் பிறந்தது. பேதுரு என்னும் பெயர் நற்செய்தி நூல்களிலும் திருத்தூதர் பணிகள் நூலிலும் 150 தடவைக்கு மேலாக வருகிறது. "சீமோன் பேதுரு" என்னும் இரட்டைப் பெயர் பெரும்பாலும் யோவான் நற்செய்தியில் சுமார் 20 தடவை வருகிறது.

கிரேக்க மொழி பேசிய கிறிஸ்தவர் நடுவே "பேதுரு" என்னும் சொல் (பாறை, கல்) எளிதில் பொருள் விளங்கும் பெயராக விளங்கியிருக்கும். 

பேதுரு முதல் திருத்தந்தை என்பது பற்றிய கருத்துகள் :

இயேசுவின் திருத்தூதராகிய பேதுரு முதல் "திருத்தந்தை" (Pope) என்று கத்தோலிக்க திருச்சபை அறிக்கையிடுகிறது. அதற்கு, கீழ்வரும் காரணங்கள் காட்டப்படுகின்றன :

✯ இயேசு தம் நெருங்கிய சீடர்களாகத் தெரிந்துகொண்ட "திருத்தூதர்கள்" (Apostles) பன்னிருவரில் முதன்மை இடம் பேதுருவுக்கு அளிக்கப்பட்டது;

✯ இயேசு பேதுருவுக்கு அளித்த சிறப்புப் பணி;

✯ பன்னிரு திருத்தூதர் குழுவில் பேதுரு ஆற்றிய தனிப்பட்ட பணி.

பேதுரு வகிக்கும் சிறப்பிடத்தைக் கீழ்வருமாறு விளக்கலாம். :

✯ இயேசு தம்மைப் பின்செல்லும்படி முதல்முதலாக அழைத்தது பேதுருவைத்தான் (காண்க: மத்தேயு 4:18-19).

✯ இயேசு திருத்தூதர்களிடம் கேள்விகள் கேட்ட போதெல்லாம் அவர்கள் பெயரால் பதில் கூறுபவர் பேதுருவே (காண்க: மாற்கு 8:29; மத்தேயு 18:21; லூக்கா 12:41; யோவான் 6:67-69).

✯ லூக்கா மற்றும் பவுல் தரும் தகவல்படி, உயிர்த்தெழுந்த இயேசுவை முதன்முறையாகச் சந்தித்தவர் பேதுருவே (காண்க: லூக்கா 24:34; 1 கொரிந்தியர் 15:5). மத்தேயு, யோவான், மாற்கு நற்செய்திகளின்படி, மகதலா மரியா உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் காண்கிறார். ஆனால் அங்குகூட, "நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், 'உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்' எனச் சொல்லுங்கள்" என்று இயேசு கூறுகிறார் (மாற்கு 16:7).

✯ எல்லா நற்செய்தி நூல்களிலும் அதிக முறை பெயர்சொல்லிக் குறிப்பிடப்படும் திருத்தூதர் பேதுரு’தான்.

✯ இயேசு பேதுருவிடம்’தான் பிற திருத்தூதர்களை விட அதிக பொறுப்பு ஒப்படைக்கிறார்.

✯ பன்னிரு திருத்தூதர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தரப்படும் இடங்களில் எல்லாம் நற்செய்தி நூல்கள் பேதுருவைத்’தான் முதன்முதலாகக் குறிப்பிடுகின்றன (காண்க: மாற்கு 3:16-19; மத்தேயு 10:1-4; லூக்கா 6:12-16

✯ பண்டைய இஸ்ரயேல் நாட்டில் முதல் மகன், முதலில் வருபவர், பெயர்ப்பட்டியலில் முதலில் இருப்பவர் என்னும்போது அவருக்குச் சிறப்பிடம், தனிப் பணி உண்டு என்று பொருளாகும். பேதுரு எருசலேம் கிறிஸ்தவ சபையில் மிக முக்கியமான ஒருவராக இருந்தார் என்பதைக் குறிக்க, தூய பவுல் பேதுருவை அச்சபையின் "தூண்" என்று அழைக்கின்றார். (காண்க: கலாத்தியர் 2:9).

ஜுன் 29 அர்ச். இராயப்பர். அப்போஸ்தலர்


அப்போஸ்தலர்களுக்குத் தலைவரான இராயப்பருக்கு இருந்த சீமோன் என்கிற பெயரை நமது கர்த்தர் மாற்றி, கல் என்னும் அர்த்தமுள்ள இராயப்பர் என்னும் பெயரைக் கொடுத்து அவரைத் திருச்சபைக்குத் தலைவராக ஸ்தாபிக்கத் தீர்மானித்தார்.

கர்த்தர் மறு ரூபமானபோதும், இறந்துபோன ஒரு துரை மகளுக்கு உயிர் கொடுத்த போதும், பூங்காவனத்தில் இரத்த வியர்வை வியர்த்த போதும் இராயப்பர் சேசுநாதரோடு கூட இருந்தார்.

சேசுநாதர் யூதரால் பிடிபட்ட போது இராயப்பர் கர்த்தர் மீது வைத்த சிநேகத்தினிமித்தம் வாளை உருவி ஒருவன் செவியற வெட்டினார்.

கர்த்தர் பாடுபடும் போது இவர் பயத்தால் அவரை அறியேனென்று மறுதலித்த பாவத்திற்காக சாகு மட்டும் துக்கப்பட்டு அழுதார்.

சேசுநாதர் உயிர்த்தபின் இராயப்பருக்குத் தரிசனையாகி, விசுவாசிகளும் குருக்களும் அடங்கிய திருச்சபைக்குத் தலைவராக அவரை நியமித்தார்.

அப்போஸ்தலர்களும் அதுமுதல் இராயப்பரைத் தங்கள் தலைவராகப் பாவித்து வந்தார்கள். இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்றபின், இராயப்பர் தமது பிரசங்கத்தால் ஆயிரக்கணக்கான மக்களை மனந்திருப்பினார்.

இவர் எண்ணற்ற வியாதிக்காரர்களை சுகப்படுத்தி பசாசுகளை விரட்டினார். மரித்தவர்களை உயிர்ப்பித்தார். அவருடைய நிழலால் பிணியாளர்கள் சுகமடைந்தார்கள்.

இவர் வேதத்திற்காகப் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது ஒரு சம்மனசின் உதவியால் அங்கிருந்து அற்புதமாய் தப்பித்துக்கொண்டார். இராயப்பர் ஊர் ஊராய்த் திரிந்து பிரசங்கம் செய்து, உரோமையில் தமது சிம்மாசனத்தை ஸ்தாபித்து, அவ்விடத்தில் எண்ணற்ற மக்களைத் திருச்சபையில் சேர்த்துக் கொண்ட காலத்தில் அஞ்ஞானியான இராயனுடைய உத்தரவால் பிடிபட்டு தலை கீழாக சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

யோசனை 

நாம் சத்திய திருச்சபையில் இருப்பதால் ஆறுதல் கொண்டு அதற்குக் கீழ்ப்படிவோமாக.

ஜூன் 28 : முதல் வாசகம்


தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?

தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 16-33

மூன்று மனிதர்களும் எழுந்து, சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமும் உடன்சென்று அவர்களை வழியனுப்பினார்.

அப்பொழுது ஆண்டவர், “நான் செய்ய இருப்பதை ஆபிரகாமிடமிருந்து மறைப்பேனா? ஆபிரகாமிடமிருந்தே வலிமைமிக்க மாபெரும் இனம் தோன்றும். அவன் மூலம் மண்ணுலகின் எல்லா இனத்தாரும் ஆசி பெற்றுக் கொள்வர். ஏனெனில், நீதி, நேர்மை வழி நின்று எனக்குக் கீழ்ப்படியும்படி தன் புதல்வருக்கும், தனக்குப்பின் தன் வழிமரபினருக்கும் கற்றுத்தருமாறு ஆண்டவராகிய நான் ஆபிரகாமுக்கு வாக்களித்ததை அவன் நிறைவேற்றுவான்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

ஆதலால் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெரும் கண்டனக் குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக் குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்” என்றார்.

அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார். ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: “தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?” என்றார்.

அதற்கு ஆண்டவர், “நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார்.

அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, “தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்து விட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?” என்றார். அதற்கு அவர், “நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்” என்றார்.

மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, “ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?” என்று கேட்க, ஆண்டவர், “நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்” என்றார்.

அப்பொழுது ஆபிரகாம்: “என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?” என, அவரும் “முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்” என்று பதிலளித்தார். அவர், “என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத் துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?” என, அதற்கு அவர், “இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்” என்றார்.

அதற்கு அவர், “என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒருவேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?” என, அவர், “அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்” என்றார்.

ஆபிரகாமோடு பேசி முடித்தபின் ஆண்டவர் அவரை விட்டுச் சென்றார். ஆபிரகாமும் தம் இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 28 : பதிலுரைப் பாடல்


திபா 103: 1-2. 3-4. 8-9. 10-11 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!

2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.

4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். - பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.

9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினம் கொள்பவரல்லர். - பல்லவி

10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை.

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b

அல்லேலூயா, அல்லேலூயா! 

இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக, நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

ஜூன் 28 : நற்செய்தி வாசகம்


என்னைப் பின்பற்றி வாரும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 18-22

அக்காலத்தில்

இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார். அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, “போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, “ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு

---------------------------------------------------

உண்மையான துறவறம் என்பது யாது?

இப்ராகிம் ஆடம் என்றொரு பிரபு இருந்தார். அவர் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார். அவரது கூடாரத்தின் கயிறுகளைக் கட்ட அடித்திருக்கும் முளையாணிகள்கூடத் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. அந்தளவுக்கு அவர் மிகவும் செல்வச் செழிப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்படியிருந்தும் அவர் தன்னைத் துறவி என்றே அழைத்து வந்தார்.

ஒருநாள் அவருடைய இல்லத்திற்கு முன்பாக வந்த இஸ்லாமியத் துறவி இப்ராகிம் ஆடமின் ஆடம்பர வாழ்க்கையைக் கண்டு வியந்தார். அது மட்டுமல்லாமல் கையில் பிச்சைக் கோப்பையுடன் உள்ளே நுழைந்தார். துறவியைப் பார்த்ததும் இப்ராகிம் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினார். பின்னர் அவருக்கு உரிய இருக்கையைக் கொடுத்துவிட்டு தானும் அமர்ந்தார். அப்போது துறவி அவரிடம், “இப்ராகிம் இவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறீர்கள்... உங்களைத் துறவி என்றும் சொல்லிக் கொள்வதாக அறிகின்றேன். அது எப்படி?” என்று கேட்டார். இப்ராகிம் அதற்கு ஒன்றும் சொல்லாமல் இருந்தார்.

சிறுது நேரம் கழித்து, இப்ராகிம் துறவியிடம், “நான் மெக்காவுக்கு யாத்திரை செல்கிறேன். நீங்களும் வருகிறீர்களா?” என்று கேட்டார். துறவி அதற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, மகிழ்ச்சியோடு அவரோடு புறப்பட்டார். இப்ராகிம் யாத்திரிகைக்காக புறப்படும்போது தன்னுடைய கூடாரத்தையும் அதில் இருந்த அத்தனை விலையுயர்ந்த பொருட்களையும் அப்படியே விட்டுவிட்டுப் புறப்பட்டார். அவர்கள் இருவரும் அப்படியாக போய்க்கொண்டிருக்கும்போது துறவிக்கு தன்னுடைய பிச்சைப் பாத்திரம் கூடாரத்திலேயே இருப்பது நினைவுக்கு வந்தது. உடனே அவர் அதை எடுத்துவர எத்தனித்தார்.

அப்போது இப்ராகிம் புன்னைத்தபடி துறவியைப் பார்த்துச் சொன்னார், “நான் என் செல்வமனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு, அதைக் குறித்து சிறிதளவும் கவலைப்படாமல் வந்துகொண்டிருக்கிறேன். ஆனால் உங்களால் ஒரு பிச்சைக் கோப்பையைக்கூட விட முடியவில்லையே! இந்நிலையில் மெக்கா யாத்திரைக்கு நீங்கள் தகுதியானவர் என்று நினைக்கிறீர்களா, நான் தங்க ஆணிகளை அறைந்தது என் கூடாரத்து மண்ணில்தான்; என் நெஞ்சில் அல்ல” என்றார். அவருடைய வார்த்தைகள் துறவியின் செவிகளில் நன்றாக அறைந்தது போன்று இருந்தன. அப்போதுதான் அந்த துறவி, துறவறம் என்றால் எல்லாவற்றையும் துறப்பது என்ற உண்மையை உணர்ந்துகொண்டார்.

நற்செய்தி வாசகத்தில் மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம், “போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்கிறார். அவர் நினைத்திருக்கலாம் இயேசுவைப் பின்பற்றுவது என்பது மிகவும் இலகுவான காரியம் என்று. ஆனால் ஆண்டவர் இயேசுவோ அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்று சீடத்துவ வாழ்வில் – துறவற வாழ்வில் - இருக்கும் சவால்களை அவருக்கு எடுத்துச் சொல்கிறார். இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டபின்பு, அவரைப் பின்தொடர்கின்ற எண்ணத்தை மறைநூல் அறிஞர் அடியோடு விட்டிருப்பார் என்றே தோன்றுகின்றது. காரணம் இயேசுவின் போதனையை வைத்துப் பார்க்கும்போது சீடத்துவ வாழ்க்கை என்பது சவாலானது. அத்தகைய வாழ்க்கை வாழ ஒவ்வொரு நாளும் சிலுவைகளைச் சுமக்கவேண்டும் (மத் 10:38); எல்லா உறவுகளையும் ஏன் எல்லாவற்றையும் இயேசுவுக்காக இழக்கவேண்டும் (லூக் 14:46). அதுதான் உண்மையான சீடத்துவ வாழ்க்கையாக இருக்கும்.

மறைநூல் அறிஞர் சென்றபிறகு இயேசுவின் சீடருள் ஒருவர் அவரிடம், “ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்கிறார். இயேசு அவரிடம், நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்கிறார். இயேசுவின் வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்க்கும்போது சற்று கடினமாகவே தோன்றலாம். ஏன் இறந்த தந்தையைக்கூட இயேசு அடக்கம் செய்ய விடமாட்டாரா?” என்று நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவன்று. யூத சமூகத்தில் இறந்தோரை அடக்கம் செய்வதற்கென்றே ஒருசிலர் இருந்தார்கள் (எசே 39: 15). அதனால்தான் இயேசு அவரிடம் அப்படிச் சொல்கின்றார். அது மட்டுமல்ல, விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி, இயேசுவிடம் இப்படிக் கேட்டவருடைய தந்தை அப்போது உயிரோடுதான் இருந்தார். அவர் இறந்தபிறகு, இயேசுவைப் பின்பற்றுவேன் என்ன எண்ணத்தோடு அவர் பேசியதால்தான் இயேசு அவரிடம், முதலில் நீர் என்னைப் பின்பற்றி வாரும்” என்கிறார்.

இங்கே அவரிடம், என்னைப் பின்பற்றுவதாக இருந்தால் உடனே பின்பற்று” என்கிறார் இயேசு. சீடத்துவ வாழ்க்கையில் பிறகு ஈடுபட்டுக் கொள்ளலாம், நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இருப்போரைப் பார்த்து இயேசு சொல்லக்கூடிய செய்தி, இன்றே, இப்போதே என்னைப் பின்பற்று என்பதுதான்.

ஆகவே, இயேசுவின் சீடராக இருப்பது என்றால் எல்லாவற்றையும், எல்லாரையும் துறந்து வாழ்வது என்பதை உணர்வோம், இயேசுவின் சீடராய் இருப்பதில் உள்ள சவால்களை உணர்ந்து அவருக்கு ஏற்ற சீடர்களாய் வாழ்வோம், அதன்வழியாய் இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj

ஜூன் 28 லியோன்ஸ் நகர புனிதர் இரேனியஸ் St. Irenaeus of Lyons


ஆயர், மறைசாட்சி: (Bishop and Martyr)

பிறப்பு: கி.பி. 130 ஆசியா மைனரிலுள்ள ஸ்மைர்னா (தற்போதய துருக்கி) (Smyrna in Asia Minor (modern-day İzmir, Turkey)

இறப்பு: கி.பி. 202 (வயது 72) லுக்டுனும், கௌல் (தற்போதய லியோன், ஃபிரான்ஸ்) (Lugdunum in Gaul (modern-day Lyon, France)

ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

கிழக்கு கத்தோலிக்கம் (Eastern Catholicism)

கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)

லூதரனிய திருச்சபை (Lutheran Church)

ஆங்கிலிக்கன் ஒன்றியம் (Anglican Communion)

கிழக்கு அசிரியன் திருச்சபை (Assyrian Church of the East)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodox Church)

நினைவுத் திருவிழா: ஜூன் 28

லியோன்ஸ் நகர புனிதர் இரேனியஸ், அந்நாளைய ரோமப் பேரரசின் ஒரு பகுதியாய் விளங்கிய “கௌல்” (Gaul) பிரதேசத்திலுள்ள (தற்போது லியோன், ஃபிரான்ஸ்) “லுக்டுனும்” என்னும் மறைமாவட்டத்தின் ஆயரும் (Bishop of Lugdunum), துவக்க கால திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவரும், கிறிஸ்தவ மறையின் வாத வல்லுனரும் ஆவார். இவரின் எழுத்துகள் ஆரம்ப கால கிறிஸ்தவ இறையியலின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவர் திருத்தூதர் யோவானின் (St. John the Evangelist) சீடரான புனிதர் “பொலிகார்ப்பு’வின்” (St. Polycarp) சீடராவார்.

தொடக்க காலத்தில் "மறை நூல்" (Scriptures) என்னும் பொதுப் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்த விவிலிய நூல்களை கடவுள் மனிதரோடு செய்துகொண்ட "உடன்படிக்கையை" (Covenant) குறிக்கும் விதமாக “ஏற்பாடு” (Testament) என்று முதன்முதலில் அழைத்தவர் இவரே.

கி.பி. 185ம் ஆண்டளவில், இவர் ஞானக் கொள்கை (Gnosticism) என்னும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தி “வாலண்டைன்” (Valentinus) என்பவரின் படிப்பினையை தப்பறை என அடையாளம் காட்டினார். அக்கொள்கையினை சாடி இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.

இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிறந்த இவர், தமது சமகாலத்தவர்களில் பலரைப் போலல்லாமல், ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்.

கி.பி. 161–180ம் ஆண்டுகளினிடையே ரோமப் பேரரசன் (Roman Emperor) “மார்கஸ் ஔரெலியஸ்” (Marcus Aurelius) என்பவனின் ஆட்சி காலத்தில் நடந்த கிறிஸ்தவ துன்புருத்தல்களின்போது, இரேனியஸ் “லியோன்” (Church of Lyon) ஆலயத்தின் குருவாக இருந்தார். இக்காலத்தில், நகரத்தின் பல மறைப்பணியாளர்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பலர் சேர்ந்து இரேனியஸிடம் “எதிர் கிறிஸ்தவம் மற்றும் அதன் கொள்கைகள்” சம்பந்தமான ஒரு கடிதத்தை கொடுத்து, அதனை ரோம் நகர் சென்று, திருத்தந்தை “எலுதேரியஸ்” (Pope Eleutherius) அவர்களிடம் கையளிக்க வேண்டினார்கள். கி.பி. 177ம் ஆண்டு, இப்பணியை நிறைவேற்ற அவர் ரோம் பயணித்தார். இந்த பணியானது, அந்த சந்தர்ப்பத்தில் அவரது தகுதிக்கு உறுதியான சாட்சியமாக விளங்கியது.

இரேனியஸ், ரோம் நகரிலிருந்த காலத்தில் “லியோன்” (Lyon) நகரில் கிறிஸ்தவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இரேனியஸ் “கௌல்” (Gaul) திரும்பினார். “புனிதர் போதினஸ்” (Saint Pothinus) மறை சாட்சியாக கொல்லப்பட, இரேனியஸ் லியோன் நகரின் இரண்டாவது ஆயராக பொறுப்பேற்றார்.

இவர் ஆயராகப் பொறுப்பேற்ற பின்னர்தான் இவருடைய பணிகள் பற்றி வெளியே தெரிய ஆரம்பித்தன என்று சுமார் நூற்றைம்பது ஆண்டுகளின் பிறகு இவரைப் பற்றிய சரித்திரங்களை எழுதிய “யூசேபியஸ்” (Eusebius) கூறுகிறார். கி.பி. 190 அல்லது 191ம் ஆண்டு, நடைமுறையிலுள்ள கொண்டாட்டங்களை விடாமுயற்சியுடன் கொண்டாடும் ஆசியா மைனர் கிறிஸ்தவ சமுதாயங்களை திசை திருப்ப வேண்டாமென்று திருத்தந்தை முதலாம் விக்டர் (Pope Victor I) அவர்களிடம் தமது செல்வாக்கினை செலுத்தியதாக எழுதியிருக்கிறார்.

மரியாளைப் பற்றி விரிவாக எழுதிய முதல் திருச்சபைத் தந்தை இவரே.

"வானதூதர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு இறைவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்ததால், மரியாள் கடவுளைக் கருத்தாங்கும் வல்லமை பெற்றார். மரியாள் தன் கீழ்ப்படிதலால் மனுக்குலம் அனைத்தும் நிறைவாழ்வு பெறக் காரணமானார்." 

~ புனித இரேனியஸ்

இவரது மரணம் பற்றின தகவல்கள் ஏதுமில்லை. ஆனால், ரோமன் கத்தோலிக்க திருச்சபையும், சில மரபுவழி திருச்சபைகளும் இவரை மறைசாட்சியாக ஏற்கின்றன. கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் நினைவுத் திருவிழா நாள் ஜூன் 28 ஆகும். லூதரனியமும், அதே நாளில் இவரின் விழாவினைச் சிறப்பிக்கின்றது. மரபுவழி திருச்சபைகளில் இவரின் விழா நாள், ஆகஸ்ட் 23 ஆகும்.

ஜூன் 27 : முதல் வாசகம்


அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 23-24.

சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை.

கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 27 : பதிலுரைப் பாடல்


திபா 30: 1,3. 4-5. 10,11a,12b (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.

1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.

3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி

4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.

5 அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி

10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.

11a நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;

12b என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். - பல்லவி

ஜூன் 27 : இரண்டாம் வாசகம்


இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 7, 9, 13-15.

சகோதரர் சகோதரிகளே,

நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபடவேண்டும்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.

மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்கவேண்டும் என்றே சொல்கிறோம். இப்பொழுது உங்களிடம் மிகுதியாய் இருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும். “மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை” என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா

ஜூன் 27 : நற்செய்தி வாசகம்


சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43

அக்காலத்தில்

இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்.

அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.

உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், “இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!” என்றார்கள்.

ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.

அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.

ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றிய பின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, ‘சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு’ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------

நம்பிக்கையை மட்டும் விடாதீர்”

பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு

I சாலமோனின் ஞானம் 1: 13-15; 2: 23-24

II 2 கொரிந்தியர் 8: 9, 13-15

III மாற்கு 5: 21-43

“நம்பிக்கையை மட்டும் விடாதீர்”

நிகழ்வு

எதிர்பாராத திருப்பங்களுடன் முடியும் கதைகளை எழுதுவதில் வல்லவரான ஓ. ஹென்றியின் பிரபலமான சிறுகதைகளில் ஒன்று “கடைசி இலை” (Last Leaf). 1907 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தச் சிறுகதை மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தச் சிறுகதையில் வரும் கதாநாயகன் உடல் நலம்குன்றி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பான். மருத்துவமனையில் இவனுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்படும்; ஆனாலும் இவன் ‘இன்னும் ஒருசில நாள்களில் நான் இறந்துவிடுவேன்!’ என்ற அவ ம்பிக்கையோடு இருப்பான். இதனால் இவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பலனில்லாமல் போகும்.

இந்த நேரத்தில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய செவிலிப்பெண் ஒருவர் இவனிடம், நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைச் சொல்லி, “நீ விரைவில் நலமடைவாய்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இதற்கு நடுவில் இவன் படுத்திருந்த படுக்கைக்கு அருகிலிருந்த சன்னல் வழியாக இவன் வெளியே பார்த்தபொழுது, ஒரு செடி இருக்கக் கண்டான். நன்றாக இருந்த அந்தச்செடி ஏனோ திடீரெனப் பட்டுப்போய், ஓர் இலையைத் தவிர்த்து மற்ற எல்லா இலைகளும் அதிலிருந்து உதிர்ந்தன. இதை இவன் தன்னிடம் அடிக்கடி பேசவரும் செவிலிப்பெண்ணிடம் சுட்டிக்காட்டி, “இந்தச் செடியைப் போன்றவன்தான் நான். இச்செடியில் ஓர் இலையைத் தவிர்த்து, மற்ற எல்லா இலைகளும் உதிர்ந்துவிட்டன. நாளைக்கு, எஞ்சியிருக்கும் இந்த இலையும் உதிர்ந்துவிடும். இந்த இலையைப் போன்று நானும் உதிர்ந்துவிடுவேன்” என்றான்.

இதைப் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த செவிலிப்பெண், “அப்படியெல்லாம் இந்த இலை உதிராது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். மறுநாள் காலையில் இவன் சன்னல்வழியாகச் செடியைப் பார்த்தபொழுது, அந்த செடியில் இருந்த எஞ்சிய இலை உதிராமல் அடிப்படியே இருந்தது. இவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ‘இந்த இலையைப் போன்று நானும் உயிரோடு இருப்பேன்’ என்று இவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். இதற்குப் பிறகு இவன் தனக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சையை நம்பிக்கையோடு பெற்று, விரையில் நலமடைந்தான். மருத்துவமனையில் இவனுக்குச் சிகிச்சை முடிந்ததும், இவனிடம் அடிக்கடி பேசிவந்த செவிலிப்பெண் இவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டுபோனார். போகும்வழியில் செடியில் உதிராமலிருந்த இலைக்கு அருகில் இவனைக் கொண்டுசென்று, அதை உற்றுப்பார்க்கச் சொன்னார். இவன் அதை உற்றுப்பார்த்தபொழுதுதான் தெரிந்தது, அது உண்மையான இலை அல்ல, துணியால் செய்யப்பட்ட இல்லை என்று. அப்பொழுது செவிலிப்பெண் இவனிடம், “உனக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காகவே, நான் ஓர் ஓவியரைக் கொண்டு துணியால் இந்த இலையை செய்து பொருத்தினேன்” என்றார்.

ஆம், நமக்கு நம்பிக்கை இருந்தால், உயிரோடு பல ஆண்டுகள் வாழலாம். அதைத்தான் இந்த நிகழ்வும், இன்றைய இறைவார்த்தையும் உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.

நம்பிக்கையினால் நலம்பெற்ற இருவர்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இருவருக்கு நலமளிக்கின்றார் அல்லது ஒருவரை நலமாக்கி இன்னொருவரை உயிர்த்தெழச் செய்கின்றார். ஒருவர் இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி; இன்னொருவர் தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் மகள்.

இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒருசில ஒற்றுமைகள் இருக்கின்றன. முதலாவதாக, இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தொடுதலாலேயே வல்ல செயல் நடக்கின்றது. இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி, “நான் ஆண்டவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று தொட்டு நலம்பெறுகின்றார். தொழுகைக்கூடத் தலைவரான யாயிர் இயேசுவிடம், “நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்கிறார். இயேசுவும் அவருடைய மகளை கைகளைப் பிடித்துத் தொட்டு உயிர்த்தெழச் செய்கின்றார். இரண்டாவதாக, இரண்டு நிகழ்வுகளிலும் பன்னிரண்டு என்ற எண்ணானது இடம்பெறுகின்றது. இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி பன்னிரண்டு ஆண்டுகளாய்த் துன்புறுகின்றார். யாயிரின் மகளுக்குப் பன்னிரண்டு வயது. மூன்றாவதாக, இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இடம்பெறுகின்றவர்களும் நம்பிக்கையாலேயே நலம் பெறுகின்றார்கள். நான் இயேசுவின் ஆடையைத் தொட்டால் போதும், நலம் பெறுவேன் என்று இரத்தப்போக்கினால் பதிக்கப்பட்ட பெண்மணி நம்பிக்கையோடு தொட்டு நலம்பெறுகின்றார். யாயிரோ இயேசுவின்மீது இறுதிவரை நம்பிக்கையோடு இருந்து, இறந்த தன் மகளை உயிரோடு பெறுகின்றார்.

இவ்வாறு நாம் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழும்பொழுது நலமான வாழ்வினைப் பெறுவோம் என்பதை நற்செய்தி வாசகம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

அழியாமைக்கென்றே கடவுள் மனிதர்களைப் படைத்தார் என்பதை நம்புவோம்

ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்கள் இவ்வுலகில் போர்களும் இயற்கைப் பேரிடர்களும் ஏற்படும்பொழுது, கடவுள் மனிதர்களை அழிப்பதற்காகவே இவற்றையெல்லாம் அனுப்புகின்றார் என்று சொல்வார்கள். நாமும் இக்கூற்றைப் பலமுறை சொல்லியிருக்கலாம். உண்மை அதுவல்ல,

சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம் மேலே உள்ள கூற்றிற்குப் பதில் தருவதாக இருக்கின்றது. ஆம், “இருக்கவேண்டும் என்பதற்காகவே கடவுள் அனைத்தையும் படைத்தார்”. மேலும் “கடவுள் மனிதர்களை அழியாமைக்கேன்றே படைத்தார்”. அப்படியானால், இவ்வுலகில் சாவும் அழிவும் நேரிடுகின்றன என்றால், அவை மனிதன் செய்த பாவத்தின் விளைவே ஆகும். எனவே, கடவுளின் ஒரே மகனாம் இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, அழியாமல் நிலைவாழ்வு பெறுவோம் (யோவா 3: 16).

நம்பிக்கை என்பது சொல்லல்ல, செயல்

ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டால் நலமான வாழ்வு கிடைக்கும்; அழியாமைக்கென்றே கடவுள் மனிதரைப் படைத்திருக்கின்றார் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் நிலைவாழ்வைப் பெறுவோம் என்பன குறித்து மேலே நாம் சிந்திப்போம். இப்பொழுது நம்பிக்கையின் அடுத்த பரிமாணத்தைக் குறித்துப் புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவதைப் பற்றி சிந்திப்போம்.

இன்றைய இரண்டாம்வாசகத்தில் புனித பவுல் கொரிந்து நகர் மக்களிடம் நம்பிக்கை, நாவன்மை ஆகியவற்றை மிகுதியாகக் கொண்டிருக்கும் நீங்கள், “அறப்பணியிலும் முழுமையாய் ஈடுபட வேண்டும்” என்கிறார். புனித பவுலின் இவ்வார்த்தைகளை புனித யாக்கோபின் வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், “நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால், தன்னிலேயே அது உயிரற்றது’ (யாக் 2: 17) என்று சொல்லலாம். கொரிந்து நகர் மக்கள் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவையில் உள்ள அல்லது வறியநிலையில் உள்ள மக்களுக்கு அறப்பணிகளைச் செய்து, அவர்களது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுக்கச் சொல்கின்றார் புனித பவுல். இதற்கு அவர், செல்வராயிருந்தும் நமக்காக ஏழையான இயேசுவை (பிலி 2: 5-8) எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். ஆகவே, நம்மை அழியாமைக்கென்று படைத்திருக்கும் ஆண்டவரில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.

சிந்தனை

‘நம்பிக்கையானது புதிய மற்றும் கற்பனை செய்யமுடியாத சாத்தியங்களைத் திறக்கிறது’ என்பார் இராபர்ட் சி. சாலமோன் என்ற அறிஞர். எனவே, நாம் இறைவனிடம் ஆழமான நம்பிக்கைகொண்டு வாழ்வோம். அந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.