மே 9 : நற்செய்தி வாசகம்


தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.

நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

-------------------------------------------------------

சிறந்த அன்பு

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு

I திருத்தூதர் பணிகள் 10: 25-26, 34-35, 44-48

II 1 யோவான் 4: 7-10

III யோவான் 15: 9-17

சிறந்த அன்பு

நிகழ்வு

அமெரிக்காவில் சாம், ஜாண்சன் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒருநாள் இவர்கள் இருவரும் பாஸ்டன் நகருக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். வழியில் இருவரும் ஒரு பெரிய விபத்தில் சிக்க, சாம் பலத்த காயமடைந்தான்; ஜாண்சனோ பார்வையை இழந்தான். பின்னர் இருவரும் ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுச் சிகிச்சைக்காகத் தனித்தனிப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டார்கள். சிகிச்சையின்பொழுது சாமிற்கு ஏற்கெனவே இரத்தப் புற்றுநோய் இருந்ததால், அவன் பிழைப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர் கை விரித்தார். இன்னொரு பக்கம் ஜாண்சன் பார்வையின்றியே வாழவேண்டும் என்று மருத்துவர் அவனிடம் கூறினார்.

நாள்கள் நகர்ந்தன. தான் பிழைப்பது மிகவும் கடினம் என்பதை உணர்ந்த சாம், தனக்குச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவரை அழைத்து, “நான் இறந்த பிறகு என்னுடைய கண்களை என் நண்பன் ஜாண்சனுக்குப் பொருத்தி விடுவிடுங்கள்” என்றான். மருத்துவரும் அதற்குச் சரியென்று ஒப்புக்கொண்டார்; ஆனால் ஜாண்சன், ‘தன் நண்பன்தான் விரைவில் சாகப் போகிறானே...! அவனை எதற்குப் பார்க்கவேண்டும்?’ என்று அப்படியே இருந்துவிட்டான். சில நாள்களில் சாம் இறந்தான். அவன் இறந்ததும், அவனுடைய கண்கள் ஜாண்சனுக்குப் பொருத்தப்பட, ஜாண்சன் மீண்டுமாகப் பார்வை பெற்றான். அந்நேரத்தில் அவனுக்கு சாம் இறந்த செய்தியானது சொல்லப்பட்டது. உடனே அவன் சாமின் அடக்கச் சடங்கில் கலந்துகொள்ள அவனுடைய வீட்டிற்குச் சென்றான். அங்கு ஜான்சனிடம் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. அது சாம் இறப்பதற்கு முன்பாகத் தன் கைப்பட எழுதியது. அதில், “என் விழிகளை என் இறப்பிற்குப் பிறகு உனக்குத் தர உள்ளேன். அதற்கான ஒப்புதல்தான் இந்தக் கடிதம்” என்ற வரிகள் எழுதப்பட்டிருந்தன. அதை வாசித்ததும், ஜாண்சன் இப்படியொரு நண்பனை, அவன் இறப்பதற்கு முன்பாகப் பார்ப்பதற்குத் தவிர்த்துவிட்டேனோ’ என்று மனம் வருந்தி அழுதான்.

ஆம், இந்தன் நிகழ்வில் வருகின்ற சாம் தன் கண்களையே தன் நண்பன் ஜாண்சனுக்குக் கொடுத்து, நட்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தான். நற்செய்தியில் இயேசு, “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” என்று சொன்னதோடு அல்லாமல், நமக்காகத் தம் உயிரையும் தந்து, உண்மையான நட்பிற்கு இலக்கணமாகத் திகழ்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

நல்ல நண்பர்கள் அடுத்தவரை உயர்வாக எண்ணுவார்கள்!

இயேசு கிறிஸ்து தன் சீடர்களோடு சேர்ந்து இறுதி இராவுணவை உண்கின்றபொழுது, அவர்களோடு பேசுகின்ற வார்த்தைகளின் ஒரு பகுதிதான் இன்றைய நற்செய்தி வாசகமாகும். இதில் இயேசு தன் சீடர்களிடம், “.....உங்களை நான் நண்பர்கள் என்றேன்” என்கிறார்.

பொதுவாக யூத இரபிகள் தங்களுடைய சீடர்களை அடிமைகள் அல்லது பணியாளர்கள் என்று கருதி, அவர்களை அவ்வாறு நடத்துவார்கள். இயேசுவோ இதற்கு முற்றிலும் மாறாக, தன் சீடர்களை நண்பர்கள் என்கிறார். இயேசு இவ்வாறு சொன்னது மட்டுமல்லாமல், தன் தந்தையிடமிருந்து கேட்டவை அனைத்தையும் அவர்களுக்கு அறிவிக்கின்றார். பழைய ஏற்பாட்டில், ஆபிரகாம் கடவுளின் நண்பர் என அழைக்கப்பட்டார் (2 குறி 20: 7; யாக் 2: 23) அவர் கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்ததாலேயே அவருக்குக் இத்தகைய பேறு அளிக்கப்பட்டது. நற்செய்தியில் இயேசு, “நான் கட்டளையிடுவதை எல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்” என்கிறார். அப்படியெனில், இயேசு கட்டளையிட்டதை நாம் செய்தால், அவரது நண்பர்களாக நாம் இருப்போம் என்பது உறுதி.

நட்பிற்கு அழகே யாரையும் தாழ்வாகக் கருதாததுதான். ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிலும் சரி, மக்களிலும் சரி யாரையும் தாழ்வாக கருதவில்லை. மாறாக எல்லாரையும் தனது அன்பிற்குரியவர்களாகவே கருதினார். இன்றைய முதல் வாசகத்தில் தூய ஆவியார் பிற இனத்தைச் சார்ந்த கொர்னேலியுவின்மீது இறங்கி வருகின்றார். இது கடவுள் யாரையும் தாழ்வாகக் கருவதுவதில்லை. மாறாக, தமது அன்பிற்குரியவராக, உயர்வாகக் கருதுகின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. ஆகவே, இயேசுவின் நண்பர்களாக இருக்கும் நாம் யாரையும் தாழ்வாகக் கருதாமல், உயர்வாகக் கருத முயற்சி செய்வோம்.

நல்ல நண்பர்கள் அடுத்தவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென விரும்புவார்கள்

ஆண்டவர் இயேசு தன் சீடர்களைப் பணியாளர்களாகக் கருதாமல், நண்பர்களாகக் கருதி, அவர்களை உயர்வாக நடத்தினார் என்று பார்த்தோம். இயேசு தம் சீடர்களை உயர்வாக நடத்தியது மட்டுமல்லாமல், அவர்கள் மகிழ்வோடு இருக்கவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அன்புக் கட்டளை கொடுக்கின்றார். “என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை நான் உங்களிடம் சொன்னேன்” என்ற இயேசுவின் வார்த்தைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றான.

இன்றைக்கு எத்தனை பேர் தங்களுடைய நண்பர்கள் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார்கள் என்று தெரியவில்லை! ஆனால், இயேசு தம் நண்பர்கள் அதாவது, சீடர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார். அதற்காக அவர்களுக்கு அன்புக் கட்டளையைக் கொடுக்கின்றார். எமர்சன் என்ற அறிஞர் இவ்வாறு கூறுவார்: “நாமே நண்பராக இருப்பதுதான் நண்பரைச் சம்பாதிக்க ஒரே வழி.” இயேசு நல்ல நண்பராக இருந்தார்; மட்டுமல்லாது தன் நண்பர்கள் மகிழ்ந்திருந்த அன்புக் கட்டளை கொடுத்தார். நாமும் இயேசுவைப் போன்று நல்ல நண்பர்களாக இருப்போம்.

நல்ல நண்பர்கள் அடுத்தவருக்காக உயிரையும் தருவார்கள்

ஒருமுறை சீன ஞானியான மாவோபி என்பவர் மாதுளம்பழத்தைக் கத்தியால் வெட்டிக்கொண்டிருக்க, அவரருகே வந்த ஒருவர், “இந்த மாதுளம்பழத்தின் விதைகளைப் போல எது மிகுதியாக இருக்கவேண்டும்?” என்று கேட்டதற்கு அவர், “நம்பிக்கையான நண்பர்கள்”என்று பதிலளித்தார். ஆம், நமக்கு நம்பிக்கையான நண்பர்கள் மிகுதியாக இருக்கவேண்டும். ஏனெனில், அவர்களே நம்முடைய வாழ்க்கையை முழுமையானதாக மாற்றுவார்கள்.

ஆண்டவர் இயேசு நல்ல, நம்பிக்கையான நண்பராக விளங்கினார். எப்படியெனில், “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்து அன்பு யாரிடமும் இல்லை” என்று சொன்னது மட்டுமல்லாமல், அதைச் செய்தும் காட்டினார். இவ்வுலகில் நேர்மையாளர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கலாம்; ஆனால், நாம் பாவிகளாக இருந்தபொழுது கிறிஸ்து – அவருடைய நண்பர்களாகிய – நமக்காகத் தம் உயிரையும் கொடுத்தார். (உரோ 5: 7-8). இவ்வாறு இயேசு உண்மையான அன்பிற்கும் நட்பிற்கும் இலக்கணமாகத் திகழ்கின்றார்.

நண்பர்களுக்கு உயிரைக் கொடுக்கும் அளவுக்கு ஒருவர் கிடைப்பது அரிது. இயேசு நமக்காகத் தம் உயிரைக் கொடுத்து நல்ல நண்பராகத் திகழ்வதால், அவரது நண்பர்களாக நாம் இருக்க, இன்றைய முதல் வாசகத்தில் யோவான் சொல்வது போல், ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம். அதன்மூலம் அவரது உண்மையான நண்பர்களாவோம்.

சிந்தனை

‘நண்பனோடு இருளில் செல்வது, தனியாக வெளிச்சத்தில் செல்வதைக் காட்டிலும் மேன்மையானது’ என்பார் ஹெலன் கெல்லர். எனவே, நமக்கு நல்ல நண்பராக இருக்கும் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது உண்மையான நண்பர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.