மே 9: அவிலா நகர புனிதர் யோவான் St. John of Avila


மதகுரு, மறைவல்லுநர், அண்டலூசியாவின் திருத்தூதர்: (Priest, Doctor of the Church and Apostle of Andalusia)

பிறப்பு: ஜனவரி 6, 1499 அல்மொடோவார் தெல் காம்போ, சியுடட் ரியல், ஸ்பெயின் (Almodóvar del Campo, Ciudad Real, Spain) 

இறப்பு: மே 10, 1569 (வயது 69) மொன்டீல்லா, கொர்டோபா, ஸ்பெயின் (Montilla, Córdoba, Spain)

ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) 

அருளாளர் பட்டம்: நவம்பர் 12, 1893 திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) 

புனிதர் பட்டம்: மே 31, 1970 திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI)

முக்கிய திருத்தலம்:

இன்கார்னேஷன் ஆலயம், மொண்டில்லா, கொர்டோபா, ஸ்பெயின் (Church of the Incarnation, Montilla, Córdoba, Spain) 

நினைவுத் திருவிழா: மே 9

பாதுகாவல்: அண்டலூசியா, ஸ்பெயின், ஸ்பானிஷ் மதச்சார்பற்ற குருமார்கள் (Spanish Secular Clergy)

அவிலா நகர புனிதர் யோவான், ஸ்பேனிஷ் கத்தோலிக்க குருவும், எழுத்தாளரும், இறைக்காட்சியாளரும், புனிதரும் ஆவார். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என 2012ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7ம் நாளன்று, அறிவித்தார்.

இளமை:

அவிலா நகரின் யோவான், ஸ்பெயின் நாட்டின் ஒரு பக்தி உள்ள செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். 14 வயதில் இவர் கல்வி கற்க சலமான்கா பல்கலைக்கழகத்திற்கு (University of Salamanca) அனுப்பப்பட்டார். ஒருவருடம் கழித்து பட்டங்கள் ஏதும் பெறாமலேயே வீடு திரும்பினார்.

ஃபிரான்சிஸ்கன் சபையினரால் ஈர்க்கப்பட்ட இவர், அவர்களின் அறிவுரைப்படி இறையியலும், தத்துவமும் படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே இவரின் பெற்றோர் இறந்தனர். இவர் படித்து குருவான பின்பு, இவரின் பெற்றோர் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தில் இருந்த ஆலயத்தில் தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். பின்னர் தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். பின்னர் மெக்சிக்கோவுக்கு சென்று மறைப்பணியாற்ற தன்னையே தயாரித்து வந்தார். கி.பி 1527ம் ஆண்டு, இவர் நிகழ்த்திய திருப்பலியின்போது துலங்கிய பக்தியைக் கண்ட ஆயர் இவரை அண்டலூசியாவிற்குச் சென்று அங்கு மழுங்கிப்போன பக்தியைப் புதுப்பிக்க இவரைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார். 

அண்டலூசியாவில்:

அவர் தனது முதல் பிரசங்கத்தை அண்டலூசியாவில் கி.பி 1529ம் ஆண்டு, ஜூலை மாதம், 22ம் தேதி, நிகழ்த்தியதும், உடனடியாக இவரது புகழ் அங்கு பரவியது. அவர் அண்டலூசியாவில் பணியாற்றிய ஒன்பது ஆண்டுகளில், அவரது போதனைகளைக் கேட்க தேவாலயங்கள் மக்களால் நிரம்பி வழிந்தது. மக்களும் திருச்சபையும் சீர்திருத்தம் பெறவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், உயர் சமூகத்தின் நடத்தையையும் அவர் கண்டனம் செய்தார். இதனால் யோவான் செவீயா நகருக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு சமய விசாரணை மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். இவர் செல்வத்தால் வரும் ஆபத்துக்களை மிகைப்படுத்திக் கூறினார் என்றும், செல்வந்தர்கள் விண்ணரசில் நுழைய முடியாது என்று போதித்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் யோவான் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை என்று விரைவிலேயே தெரிந்துபோனது. இறுதியாக, அவர் குற்றம் யாதும் புரியவில்லை என்று கி.பி 1533ம் ஆண்டு, அறிவிக்கப்பட்டது.

ஸ்பெயின் நாட்டில்:

குருக்கள் மற்றும் துறவியரின் வாழ்க்கைமுறையில் சீர்திருத்தம் கொண்டுவந்த சிறப்பும் இவருக்கு உண்டு. ஸ்பெயின் நாட்டில் இவர் நிறுவிய பல கல்லூரிகளில் இவரது சீடர்கள், இளைஞர்களுக்குக் கற்பிப்பதில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர்.

இவரது வாழ்க்கை மற்றும் போதனையால் ஈர்க்கப்பட்டோருள் அவிலாவின் புனித தெரேசா, கடவுளின் யோவான், பிரான்சிஸ் போர்ஜியா மற்றும் கிரனாடா நகரின் லூயிஸ் ஆகியோர் உள்ளடங்குவர். 

திருத்தந்தை மூன்றாம் பவுல், கி.பி 1538ல் பயேசா நகரில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு அடித்தளம் இட்டார். அந்த நிறுவனத்தின் முதல் அதிபராக அவிலாவின் யோவான் நியமிக்கப்பட்டார். குருத்துவக் கல்லூரிகளுக்கும் பிற கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அப்பல்கலைக்கழகம் அமைந்தது. இயேசு சபையினர் கல்விக்கூடங்களுக்கும் அது முன்னுதாரணமாயிற்று.

அவிலாவின் யோவான் இயேசு சபையினரால் பெரிதும் மதிக்கப்படுகிறார். இயேசு சபை எசுப்பானியாவில் கண்ட பெரு வளர்ச்சிக்கு இவர் எண்பித்த நட்பும் ஆதரவுமே காரணம் என்று கருதப்படுகிறது. 

இறப்பு:

தமது முப்பதாம் வயதில் அவிலாவின் யோவான் அண்டலூசியாவில் போதகம் நிகழ்த்தச் சென்றார். ஒன்பது ஆண்டுகள் மறைப்பணி ஆற்றிய பின்னர் அவர் செவீயா நகருக்குத் திரும்பினார். தொடர்ந்து, ஸ்பெயினிலேயே கோர்தொபா, கிரனாடா, பயேசா, மொன்டீயா மற்றும் சாஃப்ரா ஆகிய இடங்களில் மறைப்பணி ஆற்றினார். 

நாற்பது ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த கடின உழைப்புக் காரணமாக அவரது வாழ்க்கையின் இறுதி பதினெட்டு ஆண்டுகளும் அவர் நோயுற்றிருந்தார். அவர் மொன்டீயா நகரில், கி.பி 1569ம் ஆண்டு, மே மாதம், 10ம் நாளன்று, தமது 69ம் வயதில் உயிர்துறந்தார்.