மே 8 : நற்செய்தி வாசகம்


நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 18-21

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உலகு உங்களை வெறுக்கிறது என்றால் அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.

பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால்தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------------

பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் சனிக்கிழமை

I திருத்தூதர் பணிகள் 16: 1-10

II யோவான் 15: 18-21

வெறுக்கும் உலகம்

எல்லாரும் வெறுத்ததால் தற்கொலை செய்துகொண்டவர்:

இளைஞன் ஒருவன் மிக உயரமானதொரு பாலத்தில் நின்றுகொண்டு, கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தான். செய்தியறிந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு வந்து, “தயவுசெய்து கீழே நீ இறங்கு. உனக்கு என்ன பிரச்சனை என்று பேசிக் கொள்வோம்” என்றான். அவனோ கீழே இறங்கி வருவதாக இல்லை. இதனால் காவல்துறை அதிகாரியே பாலத்தின்மீது ஏறினார்.

இளைஞனின் அருகில் சென்ற காவல்துறை அதிகாரி, “தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது; எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்வோம்” என்று அவனருகில் சென்று, “உனக்கு என்ன பிரச்சனை, நீ ஏன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றாய்?” என்றதும், அவன், “என் மனைவிக்கு என்னைப் பிடிக்கவில்லை. அதனால் அவள் என்னைவிட்டு ஓடிப்போய்விட்டாள். தொழிலில் எனக்குப் பெரியளவில் இழப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் என் நெருங்கிய நண்பர்கள்கூட என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள். இதனால்தான் நான் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்தேன்” என்றான்.

இளைஞன் சொன்னதெல்லம் காவல்துறை அதிகாரியை வெகுவாகப் பாதிக்க அவர் அவனிடம், “யாருமே நம்மை அன்புசெய்யாத இவ்வுலகில் நாம் எதற்கு இருக்கவேண்டும்! வா நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ளலாம்” என்று இருவரும் பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டனர்.

உலகில் நமக்குத் துன்பம் இருக்கலாம், உலகு நம்மை வெறுக்கலாம். அதற்காகத் தற்கொலை செய்து, உயிரை மாய்த்துக்கொள்வது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல. நற்செய்தி இயேசு, உலகை நம்மை வெறுக்கும்பொழுது என்ன செய்யவேண்டும் என்று கூறுகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

இயேசு கிறிஸ்து பிறந்தது முதல், சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டதுவரை உலகம் அவரை வெறுத்துக் கொண்டுதான் இருந்தது. இயேசு பிறந்தபொழுது ஏரோது அவரைக் கொல்லத் துணிந்தான் (மத் 2: 13-16). இயேசு வளர்ந்து இறையாட்சிப் பணியைச் செய்தபொழுதது பரிசேயர்கள் அவரை வெறுத்தார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டபொழுது யூதர்கள் அவரை வெறுத்தார்கள். இவ்வாறு இயேசு இவ்வுலகில் வாழ்ந்த காலமெல்லாம் அவரை மக்கள் வெறுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடம் உலகு உங்களை வெறுக்கின்றது என்றால், அது உங்களை வெறுக்குமுன்பே என்னை வெறுத்தது என்றும், நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாய் இருந்திருந்தால் உலகு உங்களை அன்பு செய்திருக்கும் என்கிறார்.

இயேசுவின் சீடர்கள் எல்லாரையும் போன்று இவ்வுலகோடு ஒட்டி வாழ்பவர்கள் அல்லர். எனவே அவர்கள் மேலுலகு சார்ந்த வாழ்க்கை வாழவேண்டும்! நாம் மேலுலக வாழ்க்கை வாழ்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனைக்கு:

 பிற இனத்தார் செய்ய விரும்புவதையெல்லாம் நீங்கள் கடந்தகாலத்தில் செய்து வந்தது போதும் (1 பேது 4: 3)

 உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவோடு இருங்கள் (யோவா 16: 33)

 நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை எப்படி நிரூபிக்கப் போகிறோம்?

இறைவாக்கு:

‘கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால், மேலுலகு சார்ந்தவற்றை நாடுகள்’ (கொலோ 3: 1) என்பார் புனித பவுல். எனவே, நாம் மேலுலகு சார்ந்தவற்றை நாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.