மே 6 : நற்செய்தி வாசகம்


என் அன்பில் நிலைத்திருங்கள். உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறும்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-11

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

------------------------------------------------------------

I திருத்தூதர் பணிகள் 15: 7-21

II யோவான் 15: 9-11

“என் அன்பில் நிலைத்திருங்கள்”

இயேசுவை நம்பாதவர் இயேசு அன்புசெய்யத் தொடங்குதல்:

சிறுமி எமிலி தன் தந்தையிடம், “அப்பா! இயேசுவை நீங்கள் அன்பு செய்கிறீர்களா?” என்றாள். “அவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார். அப்படிப்பட்டவரை நான் எப்படி அன்பு செய்வது?” என்றார் அவளுடைய தந்தை. உடனே எமிலி, “அவர் ஈராயிராம் ஆண்டுகளுக்கு முன்பாகக் கொல்லப்பட்டாலும், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்; அவரால்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அப்படிப்பட்டவரை நீங்கள் ஏன் அன்பு செய்யவில்லை” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் எமிலி.

அதற்கு எமிலியின் தந்தை அவளிடம், “இயேசுவை இதுவரை நான் கண்டதில்லை. காணாத ஒருவரை எப்படி நான் அன்பு செய்வது?” என்றதும், ஒரு வினாடி என்ன பதில் கூறுவது என்று சற்றுக் குழம்பிப்போன எமிலி நன்றாக யோசித்துவிட்டு, “அப்பா! அம்மா இறக்கும்பொழுது, எனக்கு எத்தனை வயது?” என்றார். அவர், “அப்பொழுது நீ வெறும் ஆறு மாதக் கைக்குழந்தை” என்றார். “அம்மா இறக்கும்பொழுது நான் ஆறு மாதக் கைக்குழந்தை என்கிறீர்கள். அப்படியென்றால், நான் அம்மாவைச் சரியாகப் பார்த்திருக்க மாட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் நீங்கள் அவரைப் பற்றி எனக்கு எடுத்துச் சொல்லி, அவர்மீது நான் அன்புகொள்ளச் செய்தீர்கள். நீங்கள் இயேசுவைக் காணாமல் இருக்கலாம். ஆனாலும் அவர் உங்களை அன்பு செய்கின்றார் என்பதை உணர்கிறீர்கள்தானே!” என்றார்.

தன் மகளிடமிருந்து இப்படியொரு பதில் வரும் என்பதைச் சிறிதும் எதிர்பார்த்திராத எமிலியின் தந்தை, “மகளே! இயேசு என்னை அன்பு செய்கின்றார் என்பதை இப்பொழுது உணர்கின்றேன். நான் அவரை அன்பு செய்ய நீ எனக்காக வேண்டிக்கொள்” என்றார். எமிலியும் தன் தந்தைக்காக வேண்டிக்கொள்ள, அவரும் இயேசுவை அன்பு செய்யத் தொடங்கினார்.

ஆம், இயேசு நம்மை அன்பு செய்கின்றார். அவரை நாம் அன்பு செய்யவேண்டும் என்பதுதான் இந்த நிகழ்வும், இன்றைய இறைவார்த்தையும் எடுத்துச்சொல்லும் செய்தியாக இருக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடம், “என் அன்பில் நிலைத்திருங்கள்” என்கிறார். இயேசுவின் அன்பில் எப்படி நிலைத்திருப்பது என்பதற்கு அவரே பதிலையும் தருகின்றார். இயேசு தந்தையின் கட்டளையைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருந்தார். நாமும் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் அவரது அன்பில் நிலைத்திருக்க முடியும். இயேசுவின் கட்டளைகளை நாம் கடைப்பிடித்து வாழ்வதற்குக் கீழ்ப்படிதல் என்ற பண்பு தேவையான ஒன்றாக இருக்கின்றது. ஏனெனில், இயேசு தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்து அவரை அன்புசெய்தார். நாமும் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து, அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்தால் அவரது அன்பில் நிலைத்திருக்க முடியும்.

சிந்தனைக்கு:

 இயேசுவின்மீது அன்பிருந்தால் அவரது கட்டளையைக் கடைப்பிடிப்போம் (யோவா 14: 15).

 ஒருவர்மீது நமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்தப் பல வழிகள் இருந்தாலும், அவரது கட்டளையைக் கடைப்பிடிப்பதே சிறந்த வழி.

 நாம் இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடித்து, அவர்மீது நமக்குள்ள அன்பை வெளிப்படுத்துகின்றோமா?

இறைவாக்கு:

‘...அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக’ (எபே 3: 18) என்பார் புனித பவுல். எனவே, நாம் இயேசுவின் அன்பை உணர்ந்து, அவரது அன்பில் நிலைத்திருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.