மே 30 : நற்செய்தி வாசகம்


தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20

அக்காலத்தில்

பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------

“அன்புருவான மூவொரு கடவுள்”

தூய்மைமிகு மூவொரு கடவுள் (மே 30)

I இணைச்சட்டம் 4: 32-34, 39-40

II உரோமையர் 8: 14-17

III மத்தேயு 28: 16-20

“அன்புருவான மூவொரு கடவுள்”

நிகழ்வு

ஒரு பங்குத்தளத்தில் புதிதாக ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். கோயிலில் கண்ணாடி சன்னல்களைப் பொருத்துவதைத் தவிர்த்து, மற்ற எல்லா வேலைகளும் ஏறக்குறைய நிறைவடைந்திருந்தன. கண்ணாடி ஜன்னலில் யாரை வரைவது, என்ன வண்ணத்தில் வரைவது என்ற விவாதம் கோயில் திருப்பணிக் குழுவினரிடம் ஏற்பட்டது. அவர்களில் ஒருவர், “கடவுள் கடலையும் அதிலுள்ள யாவையும், வானத்தையும் அதிலுள்ள யாவையும் படைத்தார் என்பதைக் குறித்துக்காட்டும் வகையில் அவரை நீல நிறப் பின்புலத்தில் வரையலாம்” என்றார். அவரைத் தொடர்ந்து இன்னொருவர், “இயேசுவே இவ்வுலகின் ஒளி என்பதைக் குறித்துக்காட்டும் வகையில் அவரை மஞ்சள் நிறப் பின்புலத்தில் வரையலாம்” என்றார். இறுதியாக ஒருவர், “தூய்மைக்கு இலக்கணமாக இருக்கும் தூய ஆவியாரைக் குறிக்கும் வகையில் அவரை வெள்ளை நிறப் பின்புலத்தில் வரையலாம்” என்றார்.

எல்லாரும் பேசி முடித்ததும், அவர்களோடு இருந்த ஓவியர் அவர்களிடம், “தந்தை, மகன், தூய ஆவியார் என்று தனித்தனியாக, தனிதனி நிறத்தில் வரைவதற்குப் பதிலாக, அவர்கள் மூவொரு கடவுளாக இருப்பதால் நீலம், மஞ்சள், வெள்ளை ஆகிய மூன்று நிறங்களையும் சேர்ப்பதால் வரும் பச்சை நிறைத்துக்கொண்டு அவர்களைப் பச்சை நிறத்தில் வரைந்தால் என்ன?” என்று கேட்க, அவர்கள் அனைவரும், “இந்த யோசனை நன்றாக இருக்கின்றதே!” என்று சம்மதித்தார்கள். இதன்பிறகு ஓவியர் மூன்று நிறங்களையும் சேர்ப்பதால் வரும் பச்சை நிறத்தைக் கொண்டு கண்ணாடி சன்னல்களில் மூவொரு கடவுளின் ஓவியத்தை வரைந்தார். அது பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருந்தது.

ஆம், தந்தை, மகன், தூய ஆவியர் என்று மூன்று ஆள்களாக இருந்தாலும் கடவுள் ஒரே கடவுளாகத்தான் இருக்கின்றார். அதைத்தான் இன்று நாம் மூவொரு கடவுள் விழாவாகக் கொண்டாடுகின்றோம். இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

படைத்துக் காக்கும் கடவுள்

விவிலியத்தில் அதிலும் குறிப்பாகப் பழைய ஏற்பாட்டில் மூவொரு கடவுளுக்கான சான்றுகள் நேரடியாக இல்லாவிட்டாலும், ஒருசில சான்றுகள் இருக்கின்றன. “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்” (தொநூ 1: 26) என்ற வார்த்தைகளும், “வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்” (தொநூ 11: 7) என்ற வார்த்தைகளும், “ஆபிரகாம் கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார்” (தொநூ 18: 2) என்ற வார்த்தைகளும் பழைய ஏற்பாட்டில் இடம்பெறும் மூவொரு கடவுளைக் குறித்த சான்றுகளாக இருக்கின்றன. புதிய ஏற்பாட்டில், இயேசு பிறப்பின் முன்னறிவிப்பும் (லூக் 1: 26- 28), இயேசுவின் திருமுழுக்கும் (லூக் 4: 22), யோவான் நற்செய்தி 15 ஆம் அதிகாரம் முதல் 18 ஆம் அதிகாரம் வரை வரும் பகுதிகளும், இன்றைய நற்செய்தி வாசகமும் மூவொரு கடவுளைக் குறித்த சான்றுகளாக இருக்கின்றன.

இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் மூவொரு கடவுளைப் பற்றிச் சொல்லவில்லை என்றாலும், கடவுள் இஸ்ரயேல் மக்களை எப்படிப் பாதுகாத்தார் என்பதை எடுத்துக்கூறுகின்றது. மோசே இஸ்ரயேல் மக்களிடம் கூறுவதாக வரும் முதல் வாசகம், யூதா நாட்டினர் பாபிலோனில் அடிமைகளாக... கடவுள் தங்களைக் கைநெகிழ்ந்துவிட்டார் என்று நம்பிக்கை இழந்து வாழ்ந்த காலத்தில் (கி.மு. 587- 539), அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், கடவுள் அவர்களைத் தமக்கென உரிமையாக்கிக் கொண்டதையும், அவர்களோடு அவர் பேசியதையும், அவர்களை காத்து வழிநடத்தியதையும் நினைவுபடுத்துவதற்காக எழுதப்படுகின்றன. மேலும் இஸ்ரேல் மக்கள் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் எல்லாம் நலமாகும் என்பதையும், கடவுள் கொடுக்கும் நாட்டில் நெடுநாள் வாழ்வார்கள் என்பதையும், ஆண்டவராகிய கடவுள் தன் மக்களை படைத்துப் பாதுகாக்கின்றார் என்பதையம் எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது.

பலியான இயேசு

தம் மக்களைத் தந்தைக் கடவுள் பாதுகாத்துப் பராமரிக்கின்றார் என்ற செய்தியை இன்றைய முதல்வாசகம் எடுத்துக்கூறும் அதே வேளையில், இன்றைய நற்செய்தி வாசகம் மூவொரு கடவுளில் இரண்டாம் ஆளாகவும், நமக்காகப் பலியானவருமான இயேசு கிறிஸ்து தம் சீடர்களிடம், “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்று அழைப்பு விடுப்பதை எடுத்துக்கூறுகின்றது.

இவ்வுலகிற்கு மீட்பளிக்க விரும்பிய கடவுள், தம் மகனை இவ்வுலகிற்கு அனுப்பினர். அவர் கல்வாரி மலையில் தம்முயிரைப் பலியாகத் தந்து, நம்மை மீட்டர். இப்படிப்பட்டவர் தம் சீடர்களிடம், “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” என்று அன்புக் கட்டளை கொடுக்கின்றார். எல்லா மக்களினத்தாரையும் இயேசுவின் சீடராக்குவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு ஒருவர் இயேசுவைப் பற்றிக் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், கற்பிப்பதன்படி வாழவேண்டும். தேவைப்பட்டால் இயேசுவுக்காகவும், அவரது நற்செய்திக்காகவும் பலியாகத் தரவேண்டும். அப்படிச் செய்வதன் வழியாகவே, நமக்காகப் பலியாக இயேசுவின் கட்டளையான எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் என்ற கட்டளையை நிறைவேற்ற முடியும்.

இயக்கும் தூய ஆவியார்

ஸ்காட்லாந்தைச் சார்ந்த பிரபல மறைப்போதகர் நார்மன் மாக்லியோத் (Narman Macleod). இவர் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள் இவை: “விண்ணகத்தில் நம்மை அன்புச் செய்யத் தந்தையும், நமக்காகப் பலியான இயேசுவும், நாம் நல்வழியில் நடக்க நம்மைத் தூண்டி எழுப்பும் தூய ஆவியாரும் இருக்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இறுதியில் அனைவரும் ஒன்றாகக் கூடிவர ஓர் இல்லமும் இருக்கின்றது.”

நார்மன் மாக்லியோத் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான் எத்துணை ஆழமான! தந்தைக் கடவுள் நம்மை அன்பு செய்கின்றார் எனில், இயேசு கிறிஸ்து நமக்காகப் பலியானார் எனில், தூய ஆவியார் நம்மை நற்செயல்கள் செய்ய நம்மைத் தூண்டி எழுப்புவராக, வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், தூய ஆவியார் நம்மை இயக்குபவராக இருக்கின்றார். புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் வாசகத்தில், “கடவுளின் ஆவியால் இயக்கப்படுகின்றவர்களே கடவுளின் மக்கள்” என்கிறார். அப்படியானால் நமக்குள் இருக்கும் தூய ஆவி (1 கொரி 3: 16) அல்லது கடவுளின் ஆவி நம்மை இயக்குகிறார் என்று உறுதியாகச் சொல்லலாம். திருஅவையின் தொடக்கக் காலம் முதல் இன்றுவரை அது வேகமாக வளர்ந்துகொண்டிருக்கின்றது என்றால், அதற்கு முக்கியமான காரணம், அதை இயக்கும் தூய ஆவியார்தான். இன்று நம்மை அதே தூய ஆவியார்தான் இயக்கிக் கொண்டிருக்கின்றார்.

எனவே, தந்தையின் பேரன்பிலும், இயேசுவின் வழிகாட்டுதலிலும் நாம் என்றும் இருக்கத் தூய ஆவியாரால் தொடர்ந்து இயக்கப்பட அவரிடம் நம்மையே கையளிப்போம்.

சிந்தனை

‘கடவுள் மூவொரு கடவுள் இல்லை எனில், அவர் அன்பானவராக இருக்க முடியாது. ஏனெனில், அன்பிற்கு அன்புசெய்பவர், அன்பு செய்யப்படுபவர், அவர்களுக்கு இடையே இருக்கும் உறவு ஆகிய மூன்றும் தேவைப்படுகின்றன’ என்பார் பீட்டர் கிரிப்ட் என்ற அறிஞர். எனவே, அன்பு வடிவாக இருக்கும் மூவொரு கடவுளைப் போன்று நாமும் ஒருவர் மற்றவரை அன்புசெய்து, ஒன்றித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்