மே 25 : நற்செய்தி வாசகம்


இம்மையில் சொத்தை நூறுமடங்கும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10 : 28-31

அக்காலத்தில்

பேதுரு இயேசுவிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார்.

அதற்கு இயேசு, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

--------------------------------------------------------------

“பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு கடவுளுக்கு உரித்தாக்கு”

பொதுக்காலம் எட்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை

I சீராக்கின் ஞானம் 35: 1-2

Ii மாற்கு 10: 28-31

“பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு கடவுளுக்கு உரித்தாக்கு”

கடவுளுக்குக் கொடுப்போருக்குக் கடவுள் கொடுக்கும் ஆசி:

சார்லி பேஜ் என்றோர் இளைஞன் இருந்தான். இவன் வேலைதேடிப் பல இடங்களுக்கு அலைந்து திரிந்தும் வேலை கிடைக்காததால், மிகவும் நொந்துபோய்த் தன் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தான். வழியில் ஒரு கோயில் இருந்தது. அக்கோயிலில் திருப்பலி நடந்துகொண்டிருந்தது. ஆறுதலுக்காக இவன் கோயிலுக்குள்ளே சென்றான்.

திருப்பலியில் மறையுரை முடிந்ததும் காணிக்கைப் பாடல் பாடப்பட்டது. அப்பொழுது பெண்ணொருவர் காணிக்கை எடுப்பதற்காகப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு ஒவ்வொருவர் முன்பாக வந்துகொண்டிருந்தார். இவனிடம் காணிக்கை செலுத்துவதற்குக் கையில் பணமேதும் இல்லை. அதனால் இவன் காணிக்கைப் பாத்திரத்தை ஏந்திவந்த பெண்ணிடம், “எனக்குக் காணிக்கை செலுத்த விரும்பமிருந்தாலும், கையில் பணமேதுமில்லை. அதனால் நான் என்ன செய்ய?” என்றான். உடனே அவர் தன்னிடமிருந்த ஒரு டாலரை எடுத்து இவனிடம் கொடுத்து, “இதில் பத்து செண்டைக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, மீதமுள்ளதை உன்னுடைய செலவுவுக்கு வைத்துக்கொள். மேலும் நீ உன் வாழ்நாள் முழுவதும் உன் வருவாயில் பத்து சதவீதக் காணிக்கை செலுத்து, அப்படிச்செய்தால் கடவுள் உனக்குத் தொடர்ந்து ஆசி வழங்குவார்” என்றார். இவனும் சரியென்று சொல்லிவிட்டு, அவர் கொடுத்த ஒரு டாலரில் பத்து செண்டைக் காணிக்கையாகச் செலுத்துவிட்டு, மீதமுள்ளதைத் தன் செலவுக்கு வைத்துக்கொண்டான்.

இது நடந்து ஒருசில நாள்களிலேயே இவனுக்கு நல்லதொரு வேலை கிடைத்துக் கைநிறையச் சம்பளம் கிடைத்தது. இதனால் இவன் தன் வருவாயில் பத்திலொரு பங்கைக் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தினான். இவன் கடவுளுக்குப் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகக் கொடுக்கக் கொடுக்க, கடவுளும் இவனுக்கு அபரிமிதமாய் ஆசி வழங்கினார். இதனால் இவன் மில்லியனர், பில்லியனர் என வாழ்க்கையில் உயர்ந்துகொண்டே போனான்.

ஆம், கடவுளுக்குப் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகக் கொடுக்கும்பொழுது, கடவுளும் அதற்கேற்ற கைம்மாறு செய்வார். அதைத்தான் இந்த நிகழ்வும், இன்றைய இறைவார்த்தையும் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

சீராக்கின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய கடவுளுக்குக் காணிக்கை கொடுப்பதன் முக்கியத்தைக் குறித்துப்பேசுகின்றது. முதற்கனியைக் கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே; முகமலர்ச்சியோடு கொடு; பத்திலொரு பங்கைக் கடவுளுக்கு உரித்தாக்கு என்று சொல்லும் சீராக்கின் ஞானநூல் ஆசிரியர், ஆண்டவர் அதற்குக் கைம்மாறு செய்வார் என்கிறார். எனவே, நாம் கடவுளுக்கு முகமலர்ச்சியோடு கொடுக்க முன்வரவேண்டும். இன்றைய நற்செய்திவாசகம், கடவுளுடைய பணிக்காகத் தங்களையே கொடுப்பவருக்குக் கடவுள் எத்தகைய கைம்மாறு கொடுக்கின்றார் என்பதை எடுத்துக்கூறுகின்றது. ஆகவே, நாம் கடவுளுக்கு முகமலர்ச்சியோடு கொடுப்போம், அதைவிடவும் நம்மையே காணிக்கையாகக் கொடுப்போம்.

சிந்தனைக்கு:

 கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும் (லூக் 6: 38).

 திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது பல காணிக்கைகளைக் கொடுப்பதற்கு ஈடாகும் (சீஞா 35: 1).

 கடவுளுக்குக் கொடுக்கும்போது கடமைக்காகக் கொடுக்கின்றோமா? முகமலர்ச்சியோடு கொடுக்கின்றோமா?

ஆன்றோர் வாக்கு:

‘கொடுப்பதன் மூலமே மிகுதியாக கொடைகளைப் பெறமுடியும்’ என்பார் ஜிம்ரோன். எனவே, நாம் முகமலர்ச்சியோடு கொடுப்போம், இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.