மே-20 புனித பெர்னார்டின்


பிறப்பு:

செப்டம்பர் 8, 1380, மாஸா மரிட்டிமா, இத்தாலி.

இறப்பு:

மே 20, 1444, அக்குலா, இத்தாலி.

புனிதர் பட்டம்:

மே 24, 1450, போப் 5ம் நிக்கோலஸ்.

பாதுகாவல்:

விளம்பரதாரர்கள்; நெஞ்சுப் பிரச்சினைகள்; மக்கள் தொடர்புப் பணியாளர்கள்; மக்கள் தொடர்பு வேலை; சூதாட்ட அடிமைகள்; சான் பெர்னார்டின் மறை மாவட்டம், கலிபோர்னியா; அக்குலா, இத்தாலி; பெர்னால்டா, இத்தாலி; இத்தாலி.

சித்தரிப்பு:

IHS முத்திரையுடன்; திருத்தந்தை பதவியை குறிக்கும் சிறிய வட்ட தொப்பியை மறுப்பதுபோல்.

இத்தாலிய மதகுருவும், பிரான்சிஸ்கன் சபை மறைப்பணியாளருமாகிய புனித பெர்னார்டின், 1380ம் ஆண்டு, இத்தாலி நாட்டின் 'மாஸா மரிட்டிமா' என்ற இடத்தின் அப்போதைய ஆளுநரான 'ஆல்பர்டோலோ டெக்லி அல்பிசெச்சி' என்பவரின் மகனாகப் பிறந்த புனித பெர்னார்டின், தமது ஆறு வயதிலேயே அனாதையாக விடப்பட்டார். பக்தியுள்ள தமது அத்தையின் பராமரிப்பில் வளர்ந்தார்.

1397ம் ஆண்டு, 'சாண்டா மரியா டெல்லா ஸ்கலா ஆலயத்தின்; மருத்துவமனையின் 'அன்னை மரியாயின் தோழமைக் கூட்டுறவு' எனும் அமைப்பில் இணைந்தார். மூன்று வருடங்களின் பிறகு, தமது 20 வயதில் ஏராளமான இளைஞர்களை நண்பர்களாகக் கொண்டிருந்த அவர், பிளேக் நோய்ப் பரவியபோது, தமது நண்பர்களின் ஒத்துழைப்புடன் சமூகசேவைச் செய்யும் முழுப் பொறுப்பையும் ஏற்றார். அங்கு நாள்தோறும் குறைந்தது 20 பேர்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டுப் பலியானார்கள். ஆனால், புனித பெர்னார்டின் இந்நோயைக் கண்டு பயப்படாமல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஈடுபாட்டுடன் தொண்டு புரிந்தார்.

1403ம் ஆண்டு, பிரான்சிஸ்கன் சபையின் இளம் துறவியர் சபையில் இணைந்தார். 1404ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவுப் பெற்றார். பல இடங்களுக்கும், கால்நடையாகவே சென்று, பல மணிநேரம் மறையுரை ஆற்றினார். பிரான்சிஸ்கன் சபையின் தலைமைப் பொறுப்பேற்றார். சில காலங்களுக்குப்பின், திருத்தந்தையின் அனுமதிப் பெற்று இப்பதவியிலிருந்து விலகினார்.

மீண்டும் மக்களிடையே மறையுரையாற்றத் தொடங்கினார். உத்தம மனஸ்தாபம், திருப்பாடுகள், புண்ணியங்கள் மற்றும் அவரது காலத்தில் மேலோங்கிய கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றி மறையுரையாற்றினார். இயேசுவின் திருப்பெயரைச் சொல்லும்போது புண்ணியம் அடைகிறோம் என்றும், அன்னை மரியாயைப் பற்றியும்,  புனித. சூசையப்பரைப் பற்றியும் ஏராளமாக எடுத்துரைத்தும் மறையுரையாற்றினார். சிறந்த நாவன்மை கொண்ட இவர், தமது பேச்சாற்றலால் சிறந்த மறைப் பரப்பாளர் எனப் பெயர் பெற்றார். IHS என்பது இயேசு என்னும் திருப்பெயரின் சுருக்கம் என்றுணர்ந்து, இந்த 3 எழுத்துக்களையும் அழகாக ஓர் ஏட்டில் வரைந்து, அதை மக்கள் மீது வைத்து அவர்களை அர்ச்சித்து ஆசீர்வதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இவரது அர்த்தமுள்ள, உருக்கமான மறையுரையைக் கேட்க, சில வேளைகளில் 50,000 பேருக்கும் மேலாக ஆலயத்திலும், வெளியிலும் காத்திருப்பார்கள். குருக்களைப் பற்றியும், கன்னியர்களைப் பற்றியும் பொதுநிலையினர் எப்போதும் தவறாகப் பேசாமல், மிகவும் கண்ணியமாகப் பேச வேண்டுமென்றும், அவர்களின் குற்றங்களைப் பொதுநிலையினர் பொது இடங்களில் பேசிக்கூடாது என்றும் இவர் எப்போதும் அறிவுரைக் கூறி வந்துள்ளார். இவர் IHS என்ற இயேசுவின் பெயருக்குக் காட்டிய சிறப்புப் பக்தி விளக்கம், விரைவில் மக்களிடையே பரவியது. இச்சின்னம் ஆலயங்களிலும், வீடுகளிலும், பொது இடங்களிலும் வரையப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. இதனால் இவர்மேல் பொறாமை கொண்ட சிலர் இவரைப்பற்றி மூன்று முறைத் திருத்தந்தையிடம் குற்றஞ்சாட்டினர். ஆனால் இவரது புனிதம், இக்குற்றச்சாட்டுகளின் நடுவே, முந்தைய நிலையைவிட மிகவும் அதிகமாகவே கூடியது. இவர் இத்தாலி நாட்டிலேயே மிகச்சிறந்த மறைபோதகப் பேச்சாளராகத் திகழ்ந்தார்.

பதினைந்தாம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் கத்தோலிக்க விசுவாசத்தினைப் புனரமைத்ததில் இவரது ஒப்பற்ற முயற்சிகளுக்காக இவர் இத்தாலியின் அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டார்.

இவர் பிரான்சிஸ்கன் சபைத்தலைவராக இருக்கும்போது வெறும் 300 பேர் மட்டுமே இச்சபையிலிருந்தனர். பல சீர்திருத்தம் பெற்றபின், இச்சபை ஆல்போல் தழைத்து, இவரது இறுதி நாட்களில் ஏறக்குறைய 4000 பேராகப் பொலிவுடன் விளங்கியது. தன் மறைபோதகப் பணியால் பலரை இறைவனின்பால் ஈர்த்தப் புனித பெர்னார்டின், இறைமகன் இயேசு விண்ணேற்பு அடைந்த நாளன்று மரித்தார்.