மே 2 : நற்செய்தி வாசகம்


ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால், அவர் மிகுந்த கனி தருவார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------------------------

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு

இறைவனோடு இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம்!

டைட்டானிக் கப்பலைக் குறித்துச் சொல்லப்படும் மிக முக்கியமான செய்தி.

 அந்தக் கப்பலை வடிவமைத்த பொறியாளர்கள் ‘டைட்டானிக் கப்பலுக்கு இணையான கப்பல் இந்த உலகத்தில் எங்கும் கிடையாது, இதனை இயேசு கிறிஸ்து நினைத்தாலும்கூட மூழ்கடிக்க முடியாது’ என்ற ஒருவிதமான ஆணவத்தில் வடிவமைத்தார்கள். அதனால் அதன் பக்கவாட்டில் ‘NOT EVEN CHRIST COULD MAKE IT SINK, NO GOD, NO POPE, NEITHER EARTH NOR HEAVEN CAN SWALLOW HER UP’ என்றெல்லாம் எழுதி வைத்தார்கள்.

 இதனைப் பார்த்த அந்தக் கப்பலில் பணியாற்றிய ஒருசில இறை நம்பிக்கையாளர்கள், “இப்படியெல்லாம் தயவு செய்து எழுதவேண்டாம், இறைவனுக்கு முன்பாக நாமெல்லாம் ஒன்றுமில்லை” என்றெல்லாம் அவர்களிடம் எடுத்துச் சொன்னார்கள். ஆனால், அவர்களோ, அதையெல்லாம் கேட்காமல், “நாம் யாரென்று இந்த உலகத்திற்குக் காட்டுவோம், அதனால் எழுதியது எழுதியதாகவே இருக்கட்டும்” என்று சொல்லி அப்படியே விட்டுவிட்டார்கள்.

 குறிப்பட்ட நாளில் டைட்டானிக் கப்பல் கடலில் பயணமானது. தொடக்கத்தில் எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.  மக்கள் அனைவரும் உலகத்தில் இருக்கும் மிகப்பிரமாண்டமான கப்பலில் பயணிக்கின்றோம் என்ற ஒருவிதமான மமதையோடு பயணம் செய்தார்கள். திடிரென்று கப்பல் பனிப்பாறையின் மீது மோதி மூழ்கத் தொடங்கியது. கப்பல் பனிப்பாறையில் மோதிய பகுதியில்தான் ‘NO GOD NO POPE’ என்று எழுதப்பட்டிருந்தது. ஆம், ‘கடவுளே வேண்டாம், ஏன் கடவுளைவிட நாங்கள் பெரியவர்கள் என்ற ஆணவத்தோடு செயல்பட்டதால், உலகத்திலே மிகப்பெரிய சொகுசுக் கப்பல் என்று மார்தட்டுக்கொண்டு பயணப்பட்ட டைட்டானிக் கப்பல் கடைசியில் பனிப்பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கும் அவலத்திற்குத் தள்ளப்பட்டது.

 அவரன்றி ஓர் அணுவும் அசையாது என்று சொல்வார்கள். ஆம், ஆண்டவரின் துனையின்று நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘இறைவனோடு இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம் என்னும் சிந்தனையைத் தருகின்றது. நாம் அதனைக் குறித்து ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

 இன்றைய நவீன உலகம் மிகவும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றது. பரபரப்பான இந்த உலகத்தில் ஒருசிலர் கடவுளை நினைப்பதற்கு ‘ஏது நேரம்’ என்று வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இன்னும் ஒருசிலர் கடவுளையே மறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். கடவுளே வேண்டாம், எல்லாம் நாமே செய்துவிடலாம் என்ற ஒருவிதமான செருக்கோடு வாழ்கின்றபோது எத்தகைய அழிவினை நாம் சந்திக்கின்றோம் என்பதற்கு மேலே சொல்லபட்ட நிகழ்வே மிகப்பெரிய சான்றாக இருக்கின்றது. ஆகையால், நாம் இந்த உலகத்தில் இருப்பதற்கும் இயங்குவதற்கும் இறையருளானது, அவருடைய துணையானது தேவையாக இருக்கின்றது. நாம் எப்படி இறைவனோடு இணைந்திருப்பது என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

 நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து கூறுவார், “உண்மையான திராட்சைக் கொடி நானே... நான் உங்களோடு இணைந்திருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திரட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனிதர இயலாது. அது போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது”. ஆம். நாம் மிகுந்த கனிதரவேண்டும் என்றால் இறைவனோடு/ இயேசுவோடு இணைந்திருக்கவேண்டும். இறைவனோடு எந்தெந்த வழிகளில் இணைந்திருக்கலாம் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

 இறைவனோடு எப்போதும் இணைந்திருப்பதற்கான முதன்மையான வழி இறைவேண்டல் அல்லது ஜெபம் செய்வது ஆகும். ஆண்டவர் இயேசு சென்ற இடங்களில் எல்லாம் நன்மைகள் பலபுரிந்து, ஆண்டவருடைய வார்த்தையை மிகத் துணிச்சலோடு எடுத்துரைப்பதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்தது அவர் அனுதினமும் செய்துவந்த ஜெபம்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் நாள்முழுவதும் செய்துவந்த பல்வேறு பணிகளுக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தது அவர் செய்துவந்த ஜெபம்தான். ஆகையால், நாம் இறைவனோடு இணைந்திருப்பதற்கு ஜெபம்தான் முதன்மையான வழி என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

 ஜெபம் இறைவனோடு இணைந்திருப்பதற்கு முதன்மையான வழி என்று சிந்தித்த நாம் இதில் இருக்கின்ற இன்னொரு பிரச்சனையையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில் நிறையப் பேர் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஜெபம் மட்டுமே போதும் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், விசுவாச வாழ்விற்கு ஜெபம் மட்டும் போதுமானது கிடையாது, ஜெபத்தோடு செயலும் இணைந்திருக்கவேண்டும். அதைதான் யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில், “நம்பிக்கை செயல்வடிவம் பெறவில்லை என்றால், அது தன்னிலே உயிரற்றது” என்கின்றார் (யாக் 2:17).

 இறைவனோடு இணைந்திருப்பதற்கான இரண்டாவது வழி இறைவார்த்தையைக் கேட்டு நடப்பது ஆகும். யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “கடவுளுடைய கட்டளையைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கின்றார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கின்றார்” என்கின்றார். இதுதான் உண்மை. யாராரெல்லாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தார்களோ அவர்களோடு கடவுள் இருந்தார் என்பதற்கு நாம் பல உதாரணங்களை/ எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் பார்ப்போம்.

 இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தபோது அவர்களோடு கடவுள் இருந்தார். என்றைக்கு அவர்கள் கடவுளின் கட்டளையை மறந்து, அதாவது யாவே கடவுளை மறந்துவிட்டு பாகாலை வழிபடத் தொடங்கினார்களோ அன்றைக்கே அவர்கள் கடவுளை விட்டுப் பிரிந்து போனார்கள், அது மட்டுமல்லாமல், அவர்கள் வேற்று நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். ஆகவே, இஸ்ரயேல் மக்கள் கடவுளோடு இருந்தபோது, கடவுள் அவர்களோடு இருந்தார் என்பதையும், அவர்கள் கடவுளை விட்டுப் பிரிந்து சென்றபோது, கடவுள் அவர்களை விட்டுப்போனார் என உறுதியாகச் சொல்லலாம்.

 இன்னொரு உதாரணம் மூன்று ஞானிகள். மூன்று ஞானிகள் குழந்தை இயேசுவைக் காணவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு வந்தபோது, விண்மீன் அவர்களுக்கு முன்பாகச் சென்று, அவர்களை வழி நடத்தியது. எப்போது அவர்கள் தீயவனாகிய ஏரோதின் உதவியை நாடினார்களோ, அப்போது விண்மீன் அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்து போனது. அவர்கள் ஏரோதின் அரண்மனையை விட்டு வெளியே வந்தபோதுதான் விண்மீனானது அவர்களுடைய பார்வைக்குத் தெரிந்தது. எனவே, நாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்கின்றபோது கடவுளோடு என்றும் இணைந்திருக்கின்றோம், கடவுள் நம்மோடு இணைந்திருக்கின்றார் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.

 கடவுளோடு ஜெபத்தின் வழியாகவும், அவருடைய கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வதன் வழியாகவும் அவரோடு இணைந்திருக்கலாம் என்று சிந்தித்துப் பார்த்த நாம், கடவுளோடு இணைந்திருப்பதால் என்ன நன்மை கிடைக்கின்றது என்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். நற்செய்தியில் இயேசு கூறுவார், ‘ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்” என்று. ஆம், நாம் கடவுளோடு இணைந்திருக்கின்றபோது நாம் மிகுந்த கனிதருவோம் என்பது ஆழமான உண்மை. நிறையப் புனிதர்கள், இறையடியார்கள் யாவரும் மிகுந்த கனிதரும் வாழ்க்கை வாழ்ந்ததற்குக் காரணம் அவர்கள் கடவுளோடு இணைந்திருந்ததே என்று நாம் உறுதிபடச் சொல்லலாம்.

 ஒரு கிறிஸ்தவக் கிராமத்தில் ஷீலா என்னும் கைம்பெண் ஒருத்தி இருந்தாள். கணவனை இழந்த அவள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டாள். தன்னுடைய பிழைப்பிற்காக அவள் செய்துவந்த வேலையும்கூட அவ்வளவு பெரிய வேலையும் கிடையாது, துணி தைக்கும் வேலையைத்தான் செய்துவந்தாள். அதிலிருந்து அவளுக்கு சொற்ப வருமானம்தான் கிடைத்தது. இதில் அவள் வசித்துவந்த வீடு வேறு வாடகைவீடு. வீட்டுக்காரர் வேறு மாதமாத வந்து வாடகைப் பணத்தைக் கொடு என்று நச்சரித்து வந்தார். இதனால் அவளுடைய வாழ்க்கையே மிகவும் திண்டாட்டமாய் போனது. இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் அவள் அனுதினமும் ஆலயத்திற்குச் செல்லத் தவறுவதில்லை, தன்னால் முடிந்த உதவிகளை தன்னைவிட வறியவர்களுக்கு செய்யத் தவறியதில்லை. இதைவிட முக்கியமான விஷயம் என்னவெனில் அவள் ஒவ்வொருநாளும் துணி தைக்கும் வேலையைத் தொடங்குவதற்கு முன்பாக விவிலியத்தை வாசித்து, அதைப் பற்றி சிறுது நேரம் தியானித்துவிட்டுத்தான் தொடங்குவாள்.

 ஒருநாள் அவள் தன்னுடைய வேலையைத் தொடங்குவதற்கு முன்பாக விவிலியத்தை எடுத்து வாசிக்கும்போது அதில் நல்ல சமாரியன் உவமை வந்தது. அந்த உவமையைப் படித்ததும் அவளுக்கு யாராவது ஒருவருக்கு உடனடியாக உதவி செய்யவேண்டும் என்று தோன்றியது. யாருக்கு உதவி செய்வது என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தது பக்கத்துத் தெருவில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில்  கிடந்த தன்னுடைய தோழியின் ஞாபகம்தான் வந்தது. உடனே ஷீலா தன்னுடைய வீட்டிலிருந்த கொஞ்சம் பழங்களை எடுத்துக்கொண்டு தோழியின் வீட்டுக்குப் புறப்பட்டாள். ஷீலாவைப் பார்த்ததும் படுக்கையில் கிடந்த அவளுடைய தோழி மிகவும் சந்தோசப்பட்டாள். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

 பேச்சின் இடையே ஷீலாவின் தோழி அவளிடம், “நீ என்னைப் பார்க்க வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது... சில நாட்களுக்கு முன்பாக பக்கத்தில் புதிதாக ஒரு வீடு வாங்கினேன். ஆனால், நான் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்த பிறகு அந்த வீட்டில் குறியேற முடியாமலே போய்விட்டது. நீ வாடகை வீட்டில்தானே இருக்கின்றாய், எதற்காக நீ உன்னுடைய வாடகைவீட்டைக் காலிசெய்துவிட்டு, நான் வாங்கியிருக்கும் வீட்டில் குடியிருந்துகொண்டு என்னைக் கவனித்துக்கொள்ளக் கூடாது என்றார். இதைக் கேட்ட ஷீலாவிற்கு கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது. அவள் தன்னுடைய தோழி கேட்டதற்கு சரியென்று சொல்லிவிட்டு புது வீட்டில் குடி புகுந்தார். ஷீலா இறைவன் தனக்குச் செய்த இந்த உதவியை நினைத்து அவரை வாயாரப் புகழ்ந்தார்.

 இறைவனோடு இணைந்திருக்கும்போது நம்முடைய வாழ்க்கை கனிதரக்கூடியதாகும், ஆசிர்வாதம் மிக்கதாகும் இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

 ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும்போது நாம் ஜெபத்தின் வழியாகும், இறைவார்த்தையைக் கேட்டு நடப்பதன் வழியாகவும் இறைவனோடு இணைந்திருப்போம், அதன்வழியாக மிகுந்த கணிதருகின்றவர்களாவோம், இறையருளை நிறைவாய் பெறுவோம்.

 மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.