மே 1 : நற்செய்தி வாசகம்


இவர் தச்சருடைய மகன் அல்லவா?

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58

அக்காலத்தில்

இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவை எல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

--------------------------------------------

தொழிலாளர்களின் பாதுகாவலரான தூய யோசேப்பு (மே 01)

நிகழ்வு

நீயூ மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊர் சான் ஜோஸ் என்பதாகும். இந்த ஊரில் இருந்த பங்குத்தந்தை, “என்ன இந்த மக்கள் கோவிலுக்கும் சரியாக வருவதுமில்லை,  காணிக்கையும் சரியாகச் செலுத்துவதில்லை” என்று சொல்லி தன்னுடைய நிலையை நினைத்து நொந்துகொண்டார். இதனை அந்த ஊரில் இருந்த ஒரு கடைக்காரரிடமும் பகிர்ந்துகொண்டார். அதற்கு அந்த கடைக்காரர், “தந்தையே! நீங்கள் சரியாக மறையுரை ஆற்றுவதில்லையா?” என்று கேட்டார். “தகுந்த தயாரிப்போடு நன்றாகத் தானே ஆற்றுகிறேன்” என்றார் பங்குத்தந்தை. “நன்றாக மறையுரை ஆற்றுவது இருக்கட்டும், அதில் நம் ஊரின் பாதுகாவலர் புனித சூசையப்பரைக் குறித்து மறையுரை ஆற்றுகிறீர்களா?” என்றார் அவர். “இல்லை” என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னார் பங்குத்தந்தை. புனித சூசையப்பரை பாதுகாவலராக வைத்துக்கொண்டு, அவரைக் குறித்து மறையுரை ஆற்றாமல் இருந்தால் எப்படி இருக்கும்?. முதலில்  புனித சூசையப்பரைக் குறித்து மறையுரை ஆற்றுங்கள். அதன்பிறகு மாற்றத்தை உணருங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

 எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட பங்குத்தந்தை அடுத்தவாரம்  வந்தபோது புனித சூசையப்பர் சுரூபத்தை தன்னருகே வைத்துக்கொண்டு மறையுரை ஆற்றத் தொடங்கினார். “அன்பார்ந்த மக்களே! இன்றைக்கு நான் உங்களுக்கு புனித சூசையப்பரைக் குறித்து மறையுரை ஆற்றப்போகின்றேன். இவர் புனித பிரான்சிஸ் அசிசியாரைப் போன்று பறவைகள், உயிரினங்களிடத்தில் பேசவில்லை. மாறாக இவர் தன்னோடு வாழ்ந்தவர்களுக்கு தன்னுடைய உழைப்பால் தன்னாலான உதவிகளை செய்தவர். இவரிடத்தில் நீங்கள் தொடர்ந்து மன்றாடினீர்கள் என்றால், நீங்கள் கேட்டது கிடைக்கும்” என்றார். இவ்வாறு அவர் போதிப்பதைக் கேட்டு ஊரில் இருந்த நிறைய மக்கள் ஆலயத்திற்கு வரத்தொடங்கினார்கள், காணிக்கையும் அதிகமாகவே விழுந்தது. பங்குத்தந்தை இப்படி ஒவ்வொரு வாரமும் புனித சூசையப்பரைக் குறித்து ஏதாவது பேசுவதைப் பார்த்து கோவிலில் கூட்டம் அதிகமாக வரத்தொடங்கியது. இதைப் பார்த்து பங்குத்தந்தை மிகவும் சந்தோசப்பட்டார்.

 ஒருநாள் அவர் தற்செயலாக முன்பு சந்தித்த கடைக்காரரைப் பார்த்து பேச்சுக் கொடுத்தார். அப்போது அந்தக் கடைக்காரர், “போகிற போக்கைப் பார்த்தால், ஊரில் உள்ள மக்களின் பணம் அனைத்தும் ஆலயத்தில் காணிக்கையாக விழுந்துவிடும்போல, இப்படியே போனால் கடை வைத்து பிழைப்பை ஓட்டும் என் போன்றவர்களின் நிலை திண்டாட்டம்தான்” என்று வேடிக்கையாகச் சொன்னார். அவர் இவ்வாறு சொல்வதைக் கேட்டு, சத்தமாகச் சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார் பங்குத்தந்தை.

 வரலாற்றுப் பின்னணி

 இன்று நாம் தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பர் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இவ்விழாவானது 1955 ஆம் ஆண்டு  மே மாதம் 01 ஆம் தேதி  திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதரால் தொடங்கப்பட்டது.

 இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாக தொழிலாளர்களின் உழைப்பு அதிகமாகவே சுரண்டப்பட்டது. இதனால் அவர்கள் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்படித் தோன்றியதுதான் தொழிலாளர்களின் தினமாகிய மே 1 ஆகும். திருச்சபையும் தன்னுடைய பங்கிற்கு சமூகப் போதனைகள் வழியாக (Social Teachings of the Church) தொழிலார்களின் நலன்மீது அக்கறை காட்டத் தொடங்கியது. அப்படி வந்ததுதான் இந்த விழாவாகும். இதனைத் தொடங்கி வைத்துப் பேசும்போது திருந்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் இவ்வாறு சொன்னார், “தொழிலாளர்களாகிய உங்களுக்கென ஒரு பாதுகாவலர் உண்டு. அவர் வேறு யாருமல்ல, புனித சூசையப்பர். அவரிடத்தில் நீங்கள் பரிந்துபேசினால் உங்கள் மன்றாட்டு கேட்கப்படும்” (You have beside you a Shepherd, a defender and a father in Saint Joseph. the Carpenter whom God in his providence chose to be the the virginal father of Jesus and the head of the the Holy Family. He is silent but has excellent hearing, and his intercession is very powerful over the Heart of the Savior)”      

 விவிலியத்திலிருந்து புனித சூசையப்பரைக் குறித்து நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்திகள் மிகவும் சொற்பமாகும். அவர் நேர்மையாளர் (மத் 1:19), அவர் தன்னுடைய குடும்பத்தை தச்சுவேலை செய்துதான் காப்பாற்றி வந்தார் (மத் 13:55) என்றுதான் அவரைக் குறித்துப் படிக்கின்றோம். அதைக் கடந்து வேறு ஒன்றுமில்லை நாம் வாசிப்பதற்கு. இருந்தாலும் தாவீதின் வம்சாவழியில் பிறந்த புனித சூசையப்பர் வேலை செய்வதை அதிலும் குறிப்பாக தச்சு வேலை செய்வதை இழிவாகப் பார்க்காமல் செய்தார் என்பதுதான் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது. ஆகவே, அவருடைய வாழ்வும், இன்று நாம் கொண்டாடும் தொழிலாளர் தினமும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

 கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

 தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரின் விழாவைக் கொண்டாடும் நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

 எந்த உழைப்பும் இழிவானது அல்ல

 இன்றைக்கு மனிதர்களிடம் இருக்கும் மிகவும் தவறான கருத்துக்களில் ஒன்று (உடல்) உழைப்பு என்பது மிகவும் இழிவானது. உழைக்காமல் எல்லார்மீதும் ஆதிக்கம் செலுத்துவதுதான் உயர்ந்தது என்பதாகும். இத்தகைய எண்ணத்தை நம்முடைய வாழ்விலிருந்து அகற்றவேண்டும்.

 தொடக்கநூலில், ஆண்டவராகிய கடவுள் ஆறுநாட்கள் வேலைசெய்துவிட்டு, ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார் என்று படிக்கின்றோம் (தொநூ 2:2). அப்படியானால் கடவுளே ஓர் உழைப்பாளி, தொழிலாளி என்று நாம் புரிந்துகொள்ளலாம். தமதிருத்துவத்தில் இரண்டாம் ஆளாகிய இயேசு கிறிஸ்து மக்களால் “இவர் தச்சருடைய மகன்” என அழைக்கப்படுகின்றார் (மத் 13:55). இயேசுவும் தன்னுடைய வளர்ப்புத் தந்தை புனித சூசையப்பர் செய்த தச்சுத் தொழிலையே செய்திருப்பார் என இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டும். புறவினத்தாரின் திருத்தூதர் என அன்போடு அழைக்கப்படும் புனித பவுல், “நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல, ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள். அதற்குக் கைமாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருள்வார்” என்பார் ( கொலோ 3: 23- 24). இங்கே புனித பவுல் உழைப்பை உளமாரச் செய்யவேண்டும் என்று சொல்லி, உழைப்பை உயர்வாகப் பேசுகின்றார்.

 ஆகவே, நாம் செய்வது எந்த வேலையாக இருந்தாலும் அது சரித்திரம் எழுதுவதிலிருந்து சாக்கடை அள்ளுவது வரை உழைப்பை உயர்வாகப் பார்க்கக்கூடிய மனநிலையை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதே நேரத்தில் உழைப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பாராட்டுவதை நம்முடைய வாழ்விலிருந்து தவிர்க்க வேண்டும்.

 வேலைக்கேற்ற கூலி கிடைக்கச் செய்யவேண்டும்

 நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே” என்பார் (மத் 10:10). உழைக்கின்ற ஒவ்வொருவரும் அதற்கேற்ற ஊதியம் பெறவேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆழமான போதனையாக இருக்கின்றது. ஆனால் இன்றைக்கு நிறைய இடங்களில் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை. “சூரியனை நாள்தோறும் முதுகில் சுமந்தோம். வியர்வையால் பூமியை நனைத்தோம். ஆனால் எங்களுக்கு மிஞ்சியது என்னவோ ஓர் உழக்கு நெல்தான்” என்று சாதாரண விவசாயிகள் படும் வேதனைச் சுட்டிக்காட்டுவார் கவிஞர் இன்குலாப். இத்தகைய நிலை விவசாயத் துறையில் மட்டும் இல்லை. எல்லா நிலைகளில் இருக்கின்றது. ஆகவே இத்தகைய ஒரு நிலை மாறவேண்டும். எல்லா மக்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெறவேண்டும்.

 உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவேண்டும் என்று சொல்லும் விவிலியம் உழைக்காமல் சோம்பித் திரியும் நிலையையும் வன்மையாகக் கண்டிக்கிறது. புனித பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய திருமுகத்தில் “ உழைக்க மனமில்லாதவர் உண்ணலாகாது” என்பார் (2 தெச 3:8). ஆகவே நம்முடைய வாழ்வில் இந்த இரண்டு நிலைகளையும் உணர்ந்து வாழவேண்டும்.

 உழைப்பால் உயர்வு

 இந்த நாள் விழா நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான பாடம் உழைப்பால் உயர்வு என்பதாகும். இன்றைக்கு சமுதாயத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் எல்லாரும் திடிரென்று அந்த நிலையை அடைந்த்துவிடவில்லை. தங்களுடைய கடின உழைப்பால்தான் அத்தகைய ஒரு நிலை அடைந்தார்கள். ஆண்டவர் இயேசு சொல்லும் தாலந்து உவமை இதற்கு மிகச் சிறந்த உதாரணம். ஆகவே, நாம் நம்முடைய வாழ்க்கையில் உழைப்பால் உண்டாகும் மகத்துவத்தை நாம் உணர்ந்துகொண்டு, அதற்கேற்ப வாழவேண்டும்.

 ஆகவே, தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பர் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், நாம் அவரிடம் விளங்கிய நற்பண்புகளை நமதாக்குவோம். உழைப்பை உயர்வாகப் பார்ப்போம். உழைப்பால் உயர்வு பெறுவோம்.

 மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.