மே 19 : முதல் வாசகம்


வளர்ச்சியையும் உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்ல கடவுளிடம் ஒப்படைக்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 28-38.

அந்நாள்களில்

பவுல் எபேசு சபையின் மூப்பர்களிடம் கூறியது: “தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக்கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்குத் தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள். உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியும். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்பும் அளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.

எனவே விழிப்பாயிருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள். இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்கும் உரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தர வல்லது.

எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடு இருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்கவேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக்கொள்வதைவிடக் கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவுகூருங்கள் என்றும் கூறினேன்."

இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள்படியிட்டு, அவர்கள் எல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார். பின் எல்லாரும் பவுலைக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கதறி அழுதனர். ‘இனிமேல் நீங்கள் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை’ என்று அவர் கூறியது அவர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. பிறகு அவர்கள் கப்பல்வரைக்கும் சென்று அவரை வழியனுப்பிவைத்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.