மே 11: புனிதர் ஃபிரான்சிஸ் டி கிரோலமோ St. Francis de Girolamo


குரு: (Priest)

பிறப்பு: டிசம்பர் 17, 1642 குரோட்டக்லி, அபுலியா, நேப்பிள்ஸ் அரசு (Grottaglie, Apulia, Kingdom of Naples)

இறப்பு: மே 11, 1716 (வயது 73) நேப்பிள்ஸ், நேப்பிள்ஸ் அரசு (Naples, Kingdom of Naples)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மே 2, 1806 திருத்தந்தை ஏழாம் பயஸ் (Pope Pius VII)

புனிதர் பட்டம்: மே 26, 1839 திருத்தந்தை பதினாறாம் கிரகோரி (Pope Gregory XVI)

நினைவுத் திருநாள்: மே 11

பாதுகாவல்:

நேப்பிள்ஸ் (இணை பாதுகாவலர்)

Naples (co-patron)

புனிதர் ஃபிரான்சிஸ் டி கிரோலமோ, இயேசு சபையைச் சேர்ந்த இத்தாலி நாட்டின் ஒரு ரோமன் கத்தோலிக்க குரு ஆவார்.

புனிதர் ஃபிரான்சிஸ் டி கிரோலமோ, பாவிகளை மனமாற்றுவதற்காகவும், ஏழைகளைச் சென்றடைவதற்கும் அயராது உழைத்தார். அநேக மக்களின் மனதை அதிக நம்பிக்கையுடன் வென்றார். தமது பெரும்பான்மையான காலத்தையும் சக்தியையும் நேபிள்ஸ் நாட்டிலேயே செலவிட்டதால், நேபிள்ஸ் () நாட்டின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகிறார்.

அவர் கி.பி. 1642ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 17ம் தேதியன்று, நேபிள்ஸ் (Kingdom of Naples) இராச்சியத்தின், "க்ரோட்டாக்லி" (Grottaglie) நகரில் வாழ்ந்திருந்த "ஜியோவானி லியோனார்டோ டி ஜெரோனிமோ" (Giovanni Leonardo di Geronimo) எனும் தந்தைக்கும், "ஜென்டிலெஸ்கா கிராவினா" (Gentilesca Gravina) எனும் தாயாருக்கும் பிறந்த பதினொரு குழந்தைகளில் மூத்தவராக பிறந்தார்.

தனது 12 வயதில் புதுநன்மை வாங்கிய பின்னர், அவர் தனது ஊரில் உள்ள "தியேட்டினைன்" சபை (House of the Theatines) குருக்களின் சமூகத்துடன் வாழச் சென்றார். அவர், சிறப்புமிக்க திறன்களை பெற்றவர் என்பதனை குருக்கள் தெளிவாகக் கண்டுகொண்டனர். மேலும் சபையில், மறைக்கல்வி கற்பித்தல் உள்ளிட்ட அநேக பொறுப்புக்களை அவரிடம் ஒப்படைக்கத் தொடங்கினர்.

சிவில் மற்றும் நியதிச் சட்டங்களை கற்பதற்காக நேபிள்ஸ் நகர் சென்ற ஃபிரான்சிஸ், கி.பி. 1666ம் ஆண்டில் அங்கேயே குருத்துவ அருட்பொழிவு பெற்றார். (24 வயதுகூட நிரம்பாத இளைஞராக இருந்த காரணத்தால், குருத்துவ அருட்பொழிவிற்கு அவருக்கு சிறப்பு அனுமதி கிடைக்க வேண்டியிருந்தது). அவர் நேபிள்ஸில் உள்ள இயேசுசபையின் (Jesuit Order) ஒரு பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் கற்பிக்கும் பணியாற்றினார். அங்குள்ள மாணவர்கள் அவரை "தூய குரு" (The Holy Priest) என்று குறிப்பிட்டு அழைக்கத் தொடங்கினர்.

இயேசுசபையில் (Jesuit Order) சேர முடிவு செய்த ஃபிரான்சிஸ், அவரது மேலுள்ள உயர் குருக்களால் பல சிரமமான சோதனைகளுக்குள்ளானார். எவ்வாறாயினும், அவர் குருக்கள் அனைவரது மனதையும் கவர்ந்தார். மேலும் ஒரு பிரபலமான போதகருடன் மறைப்பணிகளுக்காக அனுப்பப்பட்டார். பின்னர் அவர் நேபிள்ஸ் நகருக்குத் திரும்பி, தமது கல்வியை முடித்து அங்குள்ள ஒரு தேவாலயத்தில் பணி நியமனம் மேற்றார்.

ஒரு மறைப்பணியாளராக ஜப்பான் நாட்டுக்குச் செல்ல ஃபிரான்சிஸ் தீவிரமாக விரும்பினார். அங்கு சென்று இறங்கிய ஒவ்வொரு மிஷனரியும் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வந்த அறிக்கைகள் தெரிவித்தன. அவர் நேபிள்ஸ் நகரிலேயே இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. எனவே அவர் மற்ற மறைப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.

அவருடைய மறையுரைகளைக் கேட்க ஏராளமான மக்கள் கூடினர். மேலும் பலர் அவரை ஒப்புரவு அருட்சாதனத்திற்காக நாடினர். அவரது பரிந்துரை காரணமாக, அநேக அற்புதங்களும் அதிசயங்களும் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் அவர் 400க்கும் மேற்பட்ட பாவிகளை மனம் மாற்றினார் என்று மதிப்பிடுகின்றனர். மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளையும், சிறையில் அடைக்கப்பட்டிருந்த மரணதண்டனைக்கு காத்திருப்பவர்கள் உள்ளிட்ட கைதிகளையும் அவர் தவறாமல் பார்வையிடச் சென்றார். குற்றச் செயல்களுக்கு மோசமாக பெயர்பெற்ற பல இடங்களுக்கு - அவர்களுடைய சொந்த பிரதேசத்தில் கூட பாவிகளையும் குற்றவாளிகளையும் சந்திப்பதில் அவர் அச்சமின்றி இருந்தார். அவரது இம்முயற்சிகளுக்காக அவர் பல முறை தாக்கப்பட்டார்.

சில நேரங்களில் அவர் தெருவின் நடுவில் பிரசங்கிக்கத் தொடங்குவதற்கான தன்னிச்சையான வேட்கையை உணருவார். ஒரு இரவு, ஒரு புயல் காற்றின் நடுவில், இருண்ட சந்து ஒன்றில், யாருமற்ற  இடத்தில் பிரசங்கிக்க ஆரம்பிக்கும்படி  அழைக்கப்பட்டதாக அவர் உணர்ந்தார். மறுநாள், ஒரு திறந்த ஜன்னல் வழியாக அவரிடம் ஒப்புரவு பெறுவதற்காக ஒருவர் வந்தார்.

அவர் மாற்றிய மாற்றிய குற்றவாளிகளுள் மிகவும் பிரபலமானவர், ஒரு ஃபிரெஞ்சு பெண் ஆவார். தனது தந்தையை கொலை செய்துவிட்டு ஸ்பெயின் நாட்டுக்கு தப்பி ஓடினார். அங்கு அவர் ஒரு ஆணாக உடை அணிந்து இராணுவத்தில் சேர்ந்தார். அவர் ஃபிரான்சிஸிடமிருந்து ஆன்ம வழிநடத்துதலைத் வேண்டினார். மேலும் அவள் செய்த பாவங்களிலிருந்து மனந்திரும்பியது மட்டுமல்லாமல், ஒரு புனிதப் பெண்ணாகவும் பின்னர் அறியப்பட்டார்.

"ப்ளூரிடிஸ்" (Pleuritis) எனும் நோயால் தாக்குண்ட புனித பிரான்சிஸ் டி ஜிரோலாமோ, தனது 74 வயதில் மரித்தார். அவரது நினைவுச் சின்னங்கள் (மிச்சங்கள்) பேராலயத்தில் உள்ள நினைவுச் சின்னங்களை வைக்கும் பேழையில் வைக்கப்பட்டுள்ளன.