மே 10 : நற்செய்தி வாசகம்


உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26- 16: 4

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.

நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன். உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப் பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது. தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள். இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

--------------------------------------------------------

“துணையாளர் வருவார்”

பாஸ்கா காலம் ஆறாம் வாரம் திங்கட்கிழமை

I திருத்தூதர் பணிகள் 16: 11-15

II யோவான் 15: 26-16: 4

“துணையாளர் வருவார்”

தூய ஆவியாரால் இயக்கப்படும் கிறிஸ்தவர்கள்:

பல ஆண்டுகளுக்கு முன்பாக பாய்மரக் கப்பலில் பயணம் செய்த கிறிஸ்தவர் ஒருவர் அக்கப்பலை ஓட்டிச்சென்ற மாலுமியிடம், “இந்தக் கப்பல் எப்படி இயங்குகின்றது?” என்றார். அதற்கு மாலுமி, “காற்றால்தான் இந்தக் கப்பல் இயங்குகின்றது” என்றார். “இவ்வளவு பெரிய கப்பல் காற்றால் இயங்குகின்றதா, சற்றுப் புரியும்படி சொல்லுங்கள்” என்றார் கிறிஸ்தவர். “இந்த கப்பல் காற்றால்தான் இயங்குகின்றது என்பது உண்மை; ஆனால், அதை நான் உங்களுக்கு எப்படிப் புரியும்படி விளக்குவது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை” என்றார்.

இதைக் கேட்டதும் கிறிஸ்தவர் ஒரு வினாடி யோசித்தார். பின்னர் அவர் மாலுமியிடம், “காற்றால்தான் இந்தக் கப்பல் இயக்கப்படுகின்றது என்பதை எப்படி உங்களால் சரியாக விளக்க முடியவில்லையோ, அப்படித்தான் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் தூய ஆவியாரால் இயக்கப்படுகின்றோம் என்பதை எனக்குச் சரியாக விளக்க முடியவில்லை” என்றார்.

ஆம், கிறிஸ்தவர்கள் யாவரும் தூய ஆவியராம் துணையாளரால் இயக்கப்படுகின்றார்கள். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. நற்செய்தியில் இயேசு துணையாளரைக் குறித்துப் பேசுகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

இயேசு தமது இறுதி இராவுணவின்போது தம் சீடர்களிடம், தாம் அவர்களை விட்டுப் போவது பற்றிப் பேசும்பொழுது அவர்கள், கலக்கமுறுவார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குக்த் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்” (யோவா 14: 16). இவ்வாறு தந்தைக் கடவுள் அருளப் போவதாகச் சொல்லும் தூய ஆவியார் எப்படி இருப்பார் என்று இன்றைய நற்செய்தியில் இன்னும் தெளிவாக விளக்குகின்றார் இயேசு.

இன்றைய நற்செய்தியில் இயேசு தூய ஆவியாரைக் குறித்துப் பேசுகின்றபொழுது இரண்டு முக்கியமான செய்திகளைக் குறிப்பிடுகின்றார். ஒன்று, தூயஆவியார் தன்னைக் குறித்துச் சான்று பகர்வார் என்பதாகும். இரண்டு. தூய ஆவியார் சீடர்கள் சான்று பகர்வதற்கு உறுதுணையாக இருப்பார் என்பதாகும். இயேசு தம் சீடர்களிடம் சொன்னது போன்றே பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவியார் வந்தார். இயேசுவின் சீடர்கள் அவரைப் பற்றிச் சானு பகர்வதற்கு உறுதுணையாக இருந்தார். இன்றும்கூட நாம் இயேசுவைப் பற்றிச் சான்று பகரவும், உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கும் தூண்டுகோலாக இருக்கின்றார்.

சிந்தனைக்கு:

 தூய ஆவியார் அறைக்குள் முடங்கிக் கிடந்த சீடர்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க ஆற்றல் அளித்தார் எனில், நமக்கும் அதே ஆற்றலை அளிப்பார்

 தூய ஆவியார் நமக்குத் துணையாளராக இருக்கின்றார் எனில், நாம் எதற்கு அஞ்சி வாழவேண்டும்?

 தூய ஆவியாரே உண்மையாய் இருப்பதால், அவர் நம்மை முழு உண்மையை வழி நடத்துவார்.

இறைவாக்கு:

‘தூய அவியாரின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்’ (கலா 5: 18) என்பார் புனித பவுல். எனவே, நம்மை முழு உண்மையை நோக்கி வழி நடத்தும் தூய ஆவியாரின் தூண்டுதளுகேற்ப வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.