ஜூன் 1 : முதல் வாசகம்


பார்வை இழந்ததைப் பற்றித் தோபித்து முறையிடவில்லை.

தோபித்து நூலிலிருந்து வாசகம் 2: 9-14

தோபித்து கூறியது:

அன்று இரவு குளித்துவிட்டு என் வீட்டு முற்றத்தின் சுவர் அருகில் படுத்து உறங்கினேன். வெப்பமாக இருந்ததால் என் முகத்தை மூடவில்லை. என் தலைக்குமேல் சுவரில் குருவிகள் இருந்தது எனக்குத் தெரியாது. அவற்றின் சூடான எச்சம் என் கண்களில் விழுந்தது. உடனே கண்களில் வெண் புள்ளிகள் தோன்றின. நலம் பெறுமாறு மருத்துவர்களிடம் சென்றேன். அவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும் வெண் புள்ளிகளால் என் பார்வை குன்றிவந்தது. இறுதியாகப் பார்வையை முற்றும் இழந்தேன். நான் பார்வையற்றவனாக நான்கு ஆண்டுகள் வாழ்ந்தேன். என் உறவின் முறையார் அனைவரும் எனக்காக வருந்தினர். எலிமாய் செல்லும்வரை இரண்டு ஆண்டுகளாக அகிக்கார் என்னைப் பேணிவந்தான்.

அக்காலத்தில் என் மனைவி அன்னா பெண்களுக்குரிய கைவேலைகளில் ஈடுபட்டிருந்தாள். தன் கைவேலைப்பாடுகளை அவள் உரிமையாளர்களுக்கு அனுப்பிவைக்க, அவர்கள் அவளுக்குக் கூலி கொடுப்பார்கள். திசித்தர் மாதம் ஏழாம் நாள் தான் நெய்திருந்ததை உரிமையாளர்களுக்கு அவள் அனுப்பிவைத்தாள். அவர்கள் அவளுக்கு முழுக் கூலியுடன், விருந்து சமைக்க ஓர் ஆட்டுக்குட்டியையும் கொடுத்தார்கள். அவள் திரும்பி வந்தபொழுது ஆட்டுக்குட்டி கத்தத் தொடங்கியது. உடனே நான் அவளை அழைத்து, “இந்த ஆட்டுக்குட்டி எங்கிருந்து வந்தது?” என்று கேட்டேன். “ஒரு வேளை இது திருடப்பட்டதோ? அப்படியானால் உரியவரிடம் இதைத் திருப்பிக்கொடுத்துவிடு; ஏனெனில் திருடிய எதையும் உண்ண நமக்கு உரிமை இல்லை” என்றேன். அதற்கு அவள் என்னிடம், “கூலிக்கு மேலாக இது எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது” என்றாள். இருப்பினும் நான் அவளை நம்பவில்லை. உரியவருக்கு அதைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு வற்புறுத்தினேன். அவளது செயலைக் குறித்து நான் நாணினேன். அப்பொழுது அவள் மறுமொழியாக என்னிடம், “உம்முடைய தருமங்கள் எங்கே? நற்செயல்கள் எங்கே? உம்முடைய குணம் இப்பொழுது நன்றாகவே புலப்படுகிறது!” என்றாள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 1 : பதிலுரைப் பாடல்


திபா 112: 1-2. 7-8. 9 (பல்லவி: 7b)

பல்லவி: ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோர் இதயம் உறுதியாய் இருக்கும்.

1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.

2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமை மிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். - பல்லவி

7 தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.

8 அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. - பல்லவி

9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபே 1: 17-18 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் நம் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக. அல்லேலூயா.

ஜூன் 1 : நற்செய்தி வாசகம்


சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-17

அக்காலத்தில்

பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தட்டுமா, வேண்டாமா?” என்று கேட்டார்கள்.

அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொண்டு, “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டு வாருங்கள். நான் பார்க்க வேண்டும்” என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “சீசருடையவை” என்றார்கள்.

அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 31 : தூய கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல் விழா


முதல் வாசகம்

இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-18

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.

அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்ச வேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். அது திருவிழாக் காலம் போல் இருக்கும்.

உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடைய மாட்டாய்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 31 : பதிலுரைப் பாடல்


எசா 12: 2-3. 4bcd. 5-6 (பல்லவி: 6b)

பல்லவி: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்ச மாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.

3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். - பல்லவி

4bcd ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். - பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.

6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 1: 45 

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய மரியே, நீர் பேறுபெற்றவர். அல்லேலூயா.

மே 31 : நற்செய்தி வாசகம்


என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56.

அக்காலத்தில்

மரியாள் புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.

மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில்,

“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.

அதைக் கேட்ட மரியாள் பின்வருமாறு கூறினார்:

“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்."

மரியாள் ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

--------------------------------------------------++++

மறையுரைச் சிந்தனை

தூய கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல் விழா (மே 31)

மறையுரைச் சிந்தனை

இன்று திருச்சபையானது அன்னை மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வை விழாவாகக் கொண்டாடுகின்றது. இவ்விழாவானது கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. 1263 ஆம் ஆண்டில் பிரான்சிஸ்கன் சபையினரால் மட்டும் கொண்டாடப்பட்ட இவ்விழா, அதன்பிறகு திருச்சபை முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் உண்மை என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

வானதூதர் கபிரியேல் தூதர் அன்னை மரியாயிக்குத் தோன்றி, மங்கள வார்த்தை சொன்னபோது எலிசபெத் கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியையும் சொல்லிவிட்டுச் சொல்கிறார். எனவே அன்னை மரியாள் தனது சொந்த ஊரான நாசரேத்திலிருந்து, எலிசபெத்து இருக்கக்கூடிய அயின்கரிம் என்ற மலைநாட்டிற்குச் செல்கிறார். அன்னை மரியாள் எலிசபெத்தைச் சென்று பார்க்கவேண்டும், அவருக்கு உதவவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனாலும் அன்னை மரியாள் விரைந்து சென்று எலிசபெத்துக்கு உதவுகிறார். இதுதான் நாம் அன்னை மரியாளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாக இருக்கின்றது. ஒருவரின் தேவையைக் குறிப்பால் அறிந்து, அவர் கேட்பதற்கு முன்பாகவே உதவிசெய்வதுதான் உண்மையான சேவையாக இருக்கும். அன்னை மரியாள் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

இன்றைக்கு நம்மிடத்தில் யாராவது ஒருவர் உதவி என்று வந்தாலும் அவர்களுக்கு உதவிசெய்ய நமக்கு மனம் வருவதில்லை. ஆனால் அன்னை மரியாவோ கேளாமலே உதவிசெய்ய விரைகின்றார். நாமும் ஒருவரின் தேவையை குறிப்பால் அறிந்து, அவருக்கு உதவிசெய்கின்றபோது நாம் அன்னை மரியாவின் அன்புப் பிள்ளைகள் ஆகின்றோம்; அதேவேளையில் ஆண்டவர் இயேசுவின் சகோதர, சகோதரிகளாக மாறுகின்றோம்.

ஒரு நகரில் இருந்த ஆசிரியர் குடியிருப்பில் ஜோ என்ற இளைஞன் இருந்தான். அவனை அந்தக் குடியிருப்பில் இருந்த அனைவருக்கும் பிடிக்கும். காரணம் அவன் எல்லாருக்கும் ஓடி ஓடி உதவி செய்வான். ஒருநாள் கணவனை இழந்த ஆசிரியை ஒருவர் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். அவருக்கு 10 வயதில் குழந்தை ஒன்று இருந்தது. அன்று அந்த குழந்தைக்கு பள்ளிக்கூடத்தில் ஆண்டு இறுதித்தேர்வு வேறு இருந்தது. தான் இப்படி நோயில் படுத்துக்கிடக்கும் இந்த தருணத்தில், தன்னுடைய குழந்தையை பள்ளிக்கூடத்தில் எப்படிக்கொண்டுபோய் விடுவது என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

அந்நேரத்தில் ஜோ அங்கு வந்தான். ஆசிரியை ஜோவிடம் தன்னுடைய குழந்தையை பள்ளிக்கூடத்தில் கூட்டிக்கொண்டு விட்டுவிடும்படியாக கெஞ்சிக்கேட்டதும், அவன் தனக்கு ஒரு முக்கியமான வேலை இருந்தும், சரி என்று ஒத்துக்கொண்டு குழந்தையை தன்னுடைய வண்டியை வைத்து பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிக்கொண்டு போனான்.

அவன் போகின்ற வழியில் குழந்தை ஜோவிடம், “நீங்கள்தான் கடவுளா?” என்று கேட்டது. அதற்கு அவன், “அப்படியெல்லாம் இல்லை, ஏன் கேட்கிறாய்?” என்று திரும்பக் கேட்டான். அதற்கு குழந்தை, “இல்லை, இன்று காலையில்தான் என்னுடைய அம்மா, நான் நோய்வாய்ப்பட்டு கிடக்கும் இந்த நேரத்தில் உன்னைக் கடவுள்தான் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விடவேண்டும்’ என்றாள். அதான் கேட்டேன்” என்றாள். தொடர்ந்து அந்தக் குழந்தை அவனிடம், “நீங்கள் கடவுள் இல்லையென்றால் அவருடைய வேலைக்காரரா?” என்று அப்பாவியாகக் கேட்டாள். அதற்கு ஜோ, “என்னை கடவுளிடம் பணிபுரியும் வேலைக்காரன் என்றுகூட வைத்துகொள்ளலாம்” என்றான்.

தேவையில் இருக்கும் ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றபோது உண்மையில் நாம் கடவுள்தான்/ கடவுளின் பணியாளர்கள்தான்.

அடுத்ததாக இன்றைய நாள் விழா நமக்கு உணர்த்தும் இரண்டாவது பாடம்: கடவுள் நம் நடுவில் இருக்கிறார் என்பதே ஆகும். இறைவாக்கினர் செப்பானியா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் படிக்கின்றோம், “உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்..” என்று படிக்கின்றோம்.

ஆம், கடவுள் இம்மானுவேலனாய் நம் மத்தியில் குடிகொண்டிருக்கிறார். அதன்வழியாக நமது துன்பங்கள், வேதனைகள், நோய்நொடிகள் அத்தனையும் போக்குகின்றார். இன்றைய நற்செய்தியில்கூட இயேசுவை மடிசுமந்த அன்னை மரியாள், எலிசபெத்தை வாழ்த்துகின்றபோது, எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை அக்களிப்பால் துள்ளுகிறது. அதாவது இயேசுவின் இருப்பு அங்கே மகிழ்ச்யைக் கொண்டுவந்தது என்று சொல்லலாம்.

ஆகவே கடவுள் நம்மோடு இருந்து நம்முடைய துன்பங்கள், சோதனைகள் அத்தனையும் போக்கி, சுகம் தருகிறார் என்ற நம்பிக்கையோடு வாழ்வோம்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து நாட்டில் பங்குக் குருவாக இருந்த ஓர் அருட்பணியாளர், மோசே எவ்வாறு சீனாய் மலைமீது ஏறி கடவுளிடம் மன்றாடினாரோ அதுபோன்று, இவர் பங்கு ஆலயத்தின் கோபுரத்தின் உச்சியில் அமர்ந்துகொண்டு, மக்களுக்காக இறைவனிடம் மன்றாடினார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் கடவுள் அவருக்கு செவிசாய்க்கவில்லை. இதனால் கடுங்கோபத்தோடு, “கடவுளே நீர் எங்கு இருக்கிறீர்?” என்று சத்தமாகக் கத்தினார். அப்போது ஒரு குரல் கேட்டது. அது “கடவுளாகிய நான் வேறெங்கும் இல்லை, இதோ கீழே மக்களோடு மக்களாக இருக்கிறேன்” என்றது.

கடவுள் நம்மோடு குடிக்கொண்டிருக்கிறார். நாம்தான் அவரை உணராதவர்களாக இருக்கிறோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது.

எனவே, அன்னை மாமரி எலிசபெத்தைச் சந்தித்த இவ்விழா நாளில் நாம் அன்னை மரியாவைப் போன்று பிறரது தேவைகளைக் குறிப்பால் அறிந்து, அவற்றைப் பூர்த்திசெய்வோம்; ஒருவர் மற்றவரைப் வாழ்த்துவோம்; நம்மோடு வாழும் கடவுளின் பிரசன்னத்தை உணர்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்

மே 31 அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா Visitation of the Blessed Virgin Mary


திருவிழா நாள்: மே 31

தேவமாதா எலிசபெத்தம்மாளை மினவுதல் என்பது லூக்கா நற்செய்தி 1:39–56ல் விவரிக்கப்படும் ஒரு நிகழ்வாகும். இயேசு பிறப்பின் முன்னறிவிப்பின்போது, தனது உறவினராகிய எலிசபெத்து கருவுற்றிருப்பதை கபிரியேல் தூதர் மூலம் அன்னை மாமரி அறிந்தார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட எலிசபெத்து, தம் முதிர்ந்த வயதில் ஒரு மகவைக் கருத்தரித்திருக்கிறார் எனவும் இது அவருக்கு ஆறாம் மாதம் எனவும் கபிரியேல் தூதர் அன்னை மரியாளுக்கு அறிவித்திருந்தார்.

இதனால் அன்னை  மரியாள் புறப்பட்டு யூதேய (Judah) மலைநாட்டில், 100 மைல் தொலைவில் உள்ள எலிசபெத்தின் ஊருக்கு விரைந்து சென்றார். அன்னை மரியாள் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். அன்னை மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து பரிசுத்த ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என மரியாயை வாழ்த்தினார் என விவிலியம் விவரிக்கின்றது.

எலிசபெத்தின் வாழ்த்துதலைக் கேட்ட மாமரி அன்னை  கடவுளை போற்றி ஒரு பாடல் பாடினார். அப்பாடல் மரியாயின் பாடல் என அழைக்கப்படுகின்றது.

இந்நிகழ்வு மேற்கு கிறிஸ்தவத்தில், குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையில் மே 31 அன்றும், கிழக்கு கிறிஸ்தவத்தில் 30 மார்ச் அன்றும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வு நடந்த இடத்தில் இப்போது சந்தித்தல் ஆலயம் உள்ளது.

கத்தோலிக்க திருச்சபையில், மாமரி அன்னை  எலிசபெத்தை சந்தித்த நிகழ்வு, செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் இரண்டாம் மறைபொருள் ஆகும்.

இவ்விழாவில் நான்கு நிகழ்ச்சிகளைக் கொண்டாடுகிறோம்:

1. கபிரியேல் அதிதூதர் கிறிஸ்துவின் மனித அவதாரத்தை அறிவித்த பின் கன்னி மாமரி தன் உறவினரான எலிசபெத்தம்மாளைச் சந்திக்க சென்றது.

2. அவரது உதரத்திலிருந்த ஸ்நாபக அருளப்பர் (John the Baptist) கன்னி மரியாயின் வாழ்த்து மொழிகளைக் கேட்டதும் ஜென்மப் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.

3. பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட எலிசபெத்தம்மாள், "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே" என கன்னி மரியாயைப் பாராட்டியது.

4. "என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது" என்னும் உயரிய பாடலை மாமரி அன்னை  இசைத்தது.

எலிசபெத்தம்மாள் எருசலேமிலிருந்து மேல் திசையில் ஆறு மைல் தொலைவில் மலை நாட்டில் வசித்து வந்தார். அவருக்கு உதவி செய்யும்படி கன்னி மாமரி அன்னை  சென்றார். தன்னைவிட தாழ்ந்த நிலையில் ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போகிறார். அவரை கூப்பிடாமலே தானாகக் செல்கிறார். ஒன்று இரண்டு நாட்களல்ல, மூன்று மாதங்களாக அங்கு தங்கி எல்லா வேலைகளையும் செய்கிறார்.

எலிசபெத்தம்மாள் அவரை வாழ்த்தியதும், தன்னைப்பற்றி பெருமை கொள்ளாமல் கடவுளை வாழ்த்துகிறார் மாமரி அன்னை ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தம்மாளோடு தங்கியிருந்தபின் வீடு திரும்பினார்.

மே 30 : முதல் வாசகம் : மூவொரு கடவுள் பெருவிழா


மேலே விண்ணிலும், கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-34, 39-40

மோசே மக்களை நோக்கிக் கூறியது:

உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள்முதல், வானத்தின் ஒரு முனைமுதல் மறு முனைவரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்ததுண்டோ? அல்லது இதுபோல் கேள்விப்பட்டது உண்டா? நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர் வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல, சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா?

‘மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்’ என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 30 : பதிலுரைப் பாடல்


திபா 33: 4-5. 6,9. 18-19. 20,22 (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.

5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி

6 ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான் கோள்கள் எல்லாம் உருவாயின.

9 அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது. - பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.

19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! - பல்லவி

மே 30 : இரண்டாம் வாசகம்


கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 14-17

சகோதரர் சகோதரிகளே,

கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 1: 8 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.

மே 30 : நற்செய்தி வாசகம்


தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20

அக்காலத்தில்

பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------

“அன்புருவான மூவொரு கடவுள்”

தூய்மைமிகு மூவொரு கடவுள் (மே 30)

I இணைச்சட்டம் 4: 32-34, 39-40

II உரோமையர் 8: 14-17

III மத்தேயு 28: 16-20

“அன்புருவான மூவொரு கடவுள்”

நிகழ்வு

ஒரு பங்குத்தளத்தில் புதிதாக ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். கோயிலில் கண்ணாடி சன்னல்களைப் பொருத்துவதைத் தவிர்த்து, மற்ற எல்லா வேலைகளும் ஏறக்குறைய நிறைவடைந்திருந்தன. கண்ணாடி ஜன்னலில் யாரை வரைவது, என்ன வண்ணத்தில் வரைவது என்ற விவாதம் கோயில் திருப்பணிக் குழுவினரிடம் ஏற்பட்டது. அவர்களில் ஒருவர், “கடவுள் கடலையும் அதிலுள்ள யாவையும், வானத்தையும் அதிலுள்ள யாவையும் படைத்தார் என்பதைக் குறித்துக்காட்டும் வகையில் அவரை நீல நிறப் பின்புலத்தில் வரையலாம்” என்றார். அவரைத் தொடர்ந்து இன்னொருவர், “இயேசுவே இவ்வுலகின் ஒளி என்பதைக் குறித்துக்காட்டும் வகையில் அவரை மஞ்சள் நிறப் பின்புலத்தில் வரையலாம்” என்றார். இறுதியாக ஒருவர், “தூய்மைக்கு இலக்கணமாக இருக்கும் தூய ஆவியாரைக் குறிக்கும் வகையில் அவரை வெள்ளை நிறப் பின்புலத்தில் வரையலாம்” என்றார்.

எல்லாரும் பேசி முடித்ததும், அவர்களோடு இருந்த ஓவியர் அவர்களிடம், “தந்தை, மகன், தூய ஆவியார் என்று தனித்தனியாக, தனிதனி நிறத்தில் வரைவதற்குப் பதிலாக, அவர்கள் மூவொரு கடவுளாக இருப்பதால் நீலம், மஞ்சள், வெள்ளை ஆகிய மூன்று நிறங்களையும் சேர்ப்பதால் வரும் பச்சை நிறைத்துக்கொண்டு அவர்களைப் பச்சை நிறத்தில் வரைந்தால் என்ன?” என்று கேட்க, அவர்கள் அனைவரும், “இந்த யோசனை நன்றாக இருக்கின்றதே!” என்று சம்மதித்தார்கள். இதன்பிறகு ஓவியர் மூன்று நிறங்களையும் சேர்ப்பதால் வரும் பச்சை நிறத்தைக் கொண்டு கண்ணாடி சன்னல்களில் மூவொரு கடவுளின் ஓவியத்தை வரைந்தார். அது பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருந்தது.

ஆம், தந்தை, மகன், தூய ஆவியர் என்று மூன்று ஆள்களாக இருந்தாலும் கடவுள் ஒரே கடவுளாகத்தான் இருக்கின்றார். அதைத்தான் இன்று நாம் மூவொரு கடவுள் விழாவாகக் கொண்டாடுகின்றோம். இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

படைத்துக் காக்கும் கடவுள்

விவிலியத்தில் அதிலும் குறிப்பாகப் பழைய ஏற்பாட்டில் மூவொரு கடவுளுக்கான சான்றுகள் நேரடியாக இல்லாவிட்டாலும், ஒருசில சான்றுகள் இருக்கின்றன. “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்” (தொநூ 1: 26) என்ற வார்த்தைகளும், “வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்” (தொநூ 11: 7) என்ற வார்த்தைகளும், “ஆபிரகாம் கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார்” (தொநூ 18: 2) என்ற வார்த்தைகளும் பழைய ஏற்பாட்டில் இடம்பெறும் மூவொரு கடவுளைக் குறித்த சான்றுகளாக இருக்கின்றன. புதிய ஏற்பாட்டில், இயேசு பிறப்பின் முன்னறிவிப்பும் (லூக் 1: 26- 28), இயேசுவின் திருமுழுக்கும் (லூக் 4: 22), யோவான் நற்செய்தி 15 ஆம் அதிகாரம் முதல் 18 ஆம் அதிகாரம் வரை வரும் பகுதிகளும், இன்றைய நற்செய்தி வாசகமும் மூவொரு கடவுளைக் குறித்த சான்றுகளாக இருக்கின்றன.

இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் மூவொரு கடவுளைப் பற்றிச் சொல்லவில்லை என்றாலும், கடவுள் இஸ்ரயேல் மக்களை எப்படிப் பாதுகாத்தார் என்பதை எடுத்துக்கூறுகின்றது. மோசே இஸ்ரயேல் மக்களிடம் கூறுவதாக வரும் முதல் வாசகம், யூதா நாட்டினர் பாபிலோனில் அடிமைகளாக... கடவுள் தங்களைக் கைநெகிழ்ந்துவிட்டார் என்று நம்பிக்கை இழந்து வாழ்ந்த காலத்தில் (கி.மு. 587- 539), அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், கடவுள் அவர்களைத் தமக்கென உரிமையாக்கிக் கொண்டதையும், அவர்களோடு அவர் பேசியதையும், அவர்களை காத்து வழிநடத்தியதையும் நினைவுபடுத்துவதற்காக எழுதப்படுகின்றன. மேலும் இஸ்ரேல் மக்கள் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் எல்லாம் நலமாகும் என்பதையும், கடவுள் கொடுக்கும் நாட்டில் நெடுநாள் வாழ்வார்கள் என்பதையும், ஆண்டவராகிய கடவுள் தன் மக்களை படைத்துப் பாதுகாக்கின்றார் என்பதையம் எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது.

பலியான இயேசு

தம் மக்களைத் தந்தைக் கடவுள் பாதுகாத்துப் பராமரிக்கின்றார் என்ற செய்தியை இன்றைய முதல்வாசகம் எடுத்துக்கூறும் அதே வேளையில், இன்றைய நற்செய்தி வாசகம் மூவொரு கடவுளில் இரண்டாம் ஆளாகவும், நமக்காகப் பலியானவருமான இயேசு கிறிஸ்து தம் சீடர்களிடம், “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்று அழைப்பு விடுப்பதை எடுத்துக்கூறுகின்றது.

இவ்வுலகிற்கு மீட்பளிக்க விரும்பிய கடவுள், தம் மகனை இவ்வுலகிற்கு அனுப்பினர். அவர் கல்வாரி மலையில் தம்முயிரைப் பலியாகத் தந்து, நம்மை மீட்டர். இப்படிப்பட்டவர் தம் சீடர்களிடம், “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” என்று அன்புக் கட்டளை கொடுக்கின்றார். எல்லா மக்களினத்தாரையும் இயேசுவின் சீடராக்குவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு ஒருவர் இயேசுவைப் பற்றிக் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், கற்பிப்பதன்படி வாழவேண்டும். தேவைப்பட்டால் இயேசுவுக்காகவும், அவரது நற்செய்திக்காகவும் பலியாகத் தரவேண்டும். அப்படிச் செய்வதன் வழியாகவே, நமக்காகப் பலியாக இயேசுவின் கட்டளையான எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் என்ற கட்டளையை நிறைவேற்ற முடியும்.

இயக்கும் தூய ஆவியார்

ஸ்காட்லாந்தைச் சார்ந்த பிரபல மறைப்போதகர் நார்மன் மாக்லியோத் (Narman Macleod). இவர் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள் இவை: “விண்ணகத்தில் நம்மை அன்புச் செய்யத் தந்தையும், நமக்காகப் பலியான இயேசுவும், நாம் நல்வழியில் நடக்க நம்மைத் தூண்டி எழுப்பும் தூய ஆவியாரும் இருக்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இறுதியில் அனைவரும் ஒன்றாகக் கூடிவர ஓர் இல்லமும் இருக்கின்றது.”

நார்மன் மாக்லியோத் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான் எத்துணை ஆழமான! தந்தைக் கடவுள் நம்மை அன்பு செய்கின்றார் எனில், இயேசு கிறிஸ்து நமக்காகப் பலியானார் எனில், தூய ஆவியார் நம்மை நற்செயல்கள் செய்ய நம்மைத் தூண்டி எழுப்புவராக, வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், தூய ஆவியார் நம்மை இயக்குபவராக இருக்கின்றார். புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் வாசகத்தில், “கடவுளின் ஆவியால் இயக்கப்படுகின்றவர்களே கடவுளின் மக்கள்” என்கிறார். அப்படியானால் நமக்குள் இருக்கும் தூய ஆவி (1 கொரி 3: 16) அல்லது கடவுளின் ஆவி நம்மை இயக்குகிறார் என்று உறுதியாகச் சொல்லலாம். திருஅவையின் தொடக்கக் காலம் முதல் இன்றுவரை அது வேகமாக வளர்ந்துகொண்டிருக்கின்றது என்றால், அதற்கு முக்கியமான காரணம், அதை இயக்கும் தூய ஆவியார்தான். இன்று நம்மை அதே தூய ஆவியார்தான் இயக்கிக் கொண்டிருக்கின்றார்.

எனவே, தந்தையின் பேரன்பிலும், இயேசுவின் வழிகாட்டுதலிலும் நாம் என்றும் இருக்கத் தூய ஆவியாரால் தொடர்ந்து இயக்கப்பட அவரிடம் நம்மையே கையளிப்போம்.

சிந்தனை

‘கடவுள் மூவொரு கடவுள் இல்லை எனில், அவர் அன்பானவராக இருக்க முடியாது. ஏனெனில், அன்பிற்கு அன்புசெய்பவர், அன்பு செய்யப்படுபவர், அவர்களுக்கு இடையே இருக்கும் உறவு ஆகிய மூன்றும் தேவைப்படுகின்றன’ என்பார் பீட்டர் கிரிப்ட் என்ற அறிஞர். எனவே, அன்பு வடிவாக இருக்கும் மூவொரு கடவுளைப் போன்று நாமும் ஒருவர் மற்றவரை அன்புசெய்து, ஒன்றித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்

மே 30 புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் St. Joan of Arc


தூய கன்னியர்; மறைசாட்சி: (Holy Virgin and Martyr) 

பிறப்பு: ஜனவரி 6, 1412 டோம்ரேமி, ஃபிரான்ஸ் அரசு (Domrémy, Kingdom of France) 

இறப்பு: மே 30, 1431 (வயது 19) ரோவன், நோர்மண்டி (அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது) (Rouen, Normandy - Then under English rule) 

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

ஆங்கிலிக்கன் ஒன்றியம் (Anglican Communion)

அருளாளர் பட்டம்: ஏப்ரல் 18, 1909 திருத்தந்தை பத்தாம் பயஸ் (Pope Pius X) 

புனிதர் பட்டம்: மே 16, 1920 திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் (Pope Benedict XV) 

நினைவுத் திருவிழா: மே 30 

பாதுகாவல்:

ஃபிரான்ஸ்; இரத்த சாட்சிகள்; கைதிகள்; இராணுவத்தினர்; நம்பிக்கையினால் நிந்திக்கப்படுவோர்; “ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பெண் இராணுப் படையினர்” (Women's Army Corps); “ஐக்கிய அமெரிக்க கடற்படை ரிசர்வ் (மகளிர் ரிசர்வ்) அல்லது, “இரண்டாம் உலகப் போரின்போது தானாகவே முன்வந்து சேவையாற்றிய பெண்கள் படை” (Women Accepted for Volunteer Emergency Service in the World War II)

புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் (St. Joan of Arc), கி.பி. 1412ம் ஆண்டு, ஜனவரி மாதம், 6ம் தேதி, ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள “டாம்ரேமி” (Domrémy) என்ற இடத்தில் பிறந்தார் என நம்பப்படுகிறது. இவர் ஃபிரான்ஸ் நாட்டு வீராங்கனையும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார்.

“ஓர்லியன்ஸ் பணிப்பெண்” (The Maid of Orléans) எனும் செல்லப்பெயர் அல்லது புனைப் பெயர் (Nickname) கொண்ட இவரது தந்தை “ஜாக்குஸ் டி ஆர்க்” (Jacques d'Arc) ஆவார். இவரது தாயார் “இஸபெல்லா ரோமி” (Isabelle Romée) ஆவார். இவர்களுக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில், ஜோன் மூன்றாவது குழந்தை ஆவார். இவரது தந்தை ஒரு விவசாயி. எனவே ஜோன் தனது குழந்தை பருவத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலும் கால்நடை பராமரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் ஜோன் தன் தாயாரிடம் இருந்து தனது மதம் மற்றும் அதன் கோட்பாடுகள் பற்றியும், வீட்டை பராமரிப்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டார். இவரது பெற்றோர்கள் ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவர்களாகத் திகழ்ந்தனர். எனவே ஜோன் ஆழ்ந்த இறை சிந்தனையுடையவராகவே இருந்தார்.

"இறைதூதர் மிக்கேல்" (Archangel Michael), "புனிதர் மார்கரெட்" (Saint Margaret) மற்றும் "புனிதர் கேதரின்" (Saint Catherine of Alexandria) ஆகியோர் தமக்குக் காட்சி தந்ததாகவும், ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பிலிருக்கும் ஃபிரான்ஸ் நாட்டினை மீட்க நூறு வருட கால போரிடும் முடியிழந்த ஃபிரெஞ்ச் மன்னன் ஏழாம் சார்ளசுக்கு (The uncrowned King Charles VII) உதவுமாறு தமக்கு உத்தரவிட்டதாகவும் ஜோன் கூறினார். 

அந்நியரை “ஓர்லியன்ஸ்” (Orléans) பிராந்தியத்தை விட்டு விரட்டுவதற்காகவே கடவுள் தம்மைப் படைத்திருப்பதாக இவர் நம்பினார். மீட்புப் போரின் முதல் கட்டமாக ஓர்லியன்ஸ் (Orléans) முற்றுகைக்கு செல்லுமாறு ஏழாம் சார்ள்ஸ் உத்தரவிட்டார். ஜோன் ஃபிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற ஃபிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர் ஃபிரெஞ்சு படையினர் நூறாண்டுப் போரின் போது பல முக்கிய வெற்றிகள் அடைய காரணமானார். இவையே ஃபிரான்சின் ஏழாம் சார்ளஸின் முடிசூடலுக்கு வழிவகுத்தது. 

ஆயினும் பர்கண்டியர்களால் (Burgundian) கி.பி. 1430ம் ஆண்டு, மே மாதம், 23ம் நாளன்று, போர்க் கைதியாக பிடிக்கப்பட்ட இவர், ஃபிரான்சின் எதிரிகளான ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார். அவர்கள் "பேயுவைஸ்" ஆங்கில சார்பு ஆயரான "பியேர் கெளசொன்" (pro-English Bishop of Beauvais Pierre Cauchon) துணையோடு இவரை சூனியக்காரி எனவும், தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய் குற்றம் சாட்டி, இவரின் 19ம் வயதில் இவரை உயிரோடு தீமூட்டிக் கொன்றனர். இவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை மூன்றாம் கலிக்ஸ்டஸால் (Pope Callixtus III) இவரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, இவர் மீதிருந்த குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் கத்தோலிக்க மறைசாட்சி என அறிவிக்கப்பட்டார்.

பின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான பணி துவங்கப்பட்டு, கி.பி. 1909ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 18ம் நாளன்று, திருத்தந்தை பத்தாம் பயஸ் (Pope Pius X) அவர்களால், “நோட்ரே டேம் டி பாரிஸ்” (Notre Dame de Paris) ஆலயத்தில் அருளாளர் பட்டமும், 1920ம் ஆண்டு, மே மாதம், 16ம் நாளன்று, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் (Pope Benedict XV) அவர்களால் ரோம் நகரின் “தூய பேதுரு பேராலயத்தில்” (St. Peter's Basilica) புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் நினைவுத் திருநாள் மே மாதம் 30ம் நாள் ஆகும்.

மே 29 : முதல் வாசகம்


எனக்கு ஞானம் புகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 51: 12-20b

மன்னராகிய ஆண்டவரே, உமக்கு நன்றி கூறுவேன்; உம்மைப் புகழ்வேன்; உம்முடைய பெயரைப் போற்றுவேன்.

நான் இளைஞனாய் இருந்தபோது, பயணம் மேற்கொள்ளுமுன் என்னுடைய வேண்டுதலில் வெளிப்படையாய் ஞானத்தைத் தேடினேன். கோவில் முன் அதற்காக மன்றாடினேன்; இறுதிவரை அதைத் தேடிக் கொண்டேயிருப்பேன். திராட்சை மலரும் காலத்திலிருந்து கனியும் காலம் வரை என் உள்ளம் ஞானத்தில் இன்புற்றிருந்தது.

என் காலடிகள் நேரிய வழியில் சென்றன. என் இளமையிலிருந்தே ஞானத்தைப் பின்தொடர்ந்தேன். சிறிது நேரமே செவிசாய்த்து அதைப் பெற்றுக் கொண்டேன்; மிகுந்த நற்பயிற்சியை எனக்கெனக் கண்டடைந்தேன். ஞானத்தில் நான் வளர்ச்சி அடைந்தேன்.

எனக்கு ஞானம் புகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன். ஞானத்தைக் கடைப்பிடிக்க முடிவு செய்தேன்; நன்மை மீது பேரார்வம் கொண்டேன்; நான் ஒருபோதும் வெட்கமுறேன்.

நான் ஞானத்தை அடையப் போராடினேன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்புடன் இருந்தேன்; உயர் வானத்தை நோக்கி என் கைகளை உயர்த்தினேன்; ஞானத்தை நான் இதுவரை அறியாதிருந்தது பற்றிப் புலம்பினேன்.

அதன்பால் என் உள்ளத்தைச் செலுத்தினேன்; தூய்மையில் அதைக் கண்டுகொண்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 29 : பதிலுரைப் பாடல்


திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதி நெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி

10 பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 16a, 17c

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அல்லேலூயா.

மே 29 : நற்செய்தி வாசகம்


எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-33

அக்காலத்தில்

இயேசுவும் அவருடைய சீடர்களும் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்துகொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?” என்று கேட்டனர். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார். அவர்கள், “ ‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘பின் ஏன் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார். எனவே ‘மனிதரிடமிருந்து வந்தது’ என்போமா?” என்று தங்களிடையே பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

------------------------------------------------

“ஞானத்தைத் தேடுவோர் யாவரும் கண்டுகொள்வர்”

பொதுக்காலம் எட்டாம் வாரம் சனிக்கிழமை

I சீராக்கின் ஞானம் 51: 12-20b

II மாற்கு 11: 27-33

“ஞானத்தைத் தேடுவோர் யாவரும் கண்டுகொள்வர்”

ஞானத்தோடு செயல்பட்ட துறவி:

மன்னன் ஒருவன் இருந்தான். இவனுக்குச் சதுரங்க விளையாட்டில் தன்னை வெல்ல யாருமே கிடையாது என்ற எண்ணமானது இருந்தது. அதனால் இவன் தன்னிடம் வருவோரிடம், “சதுரங்க விளையாட்டு விளையாடலாமா?” என்று கேட்டு, அவர்களைப் போட்டியில் வெற்றிக்கொண்டு, சதுரங்க விளையாட்டில் தன்னை வெல்ல யாருமே இல்லை என்ற மிதப்பில் இருந்தான். ஒருநாள் இவனைச் சந்திக்கத் துறவி ஒருவர் வந்தார். அவரையும் இவன் விட்டு வைக்கவில்லை. அவர் இவனிடம், “எனக்குச் சதுரங்க விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாது” என்று சொல்லியும், இவன் அவரிடம், “போட்டியில் வென்றால், நீங்கள் எது கேட்டாலும் தருகின்றேன்” என்று சொல்லி, வலுகட்டாயமாக அவரை விளையாட வைத்தான். போட்டியில் துறவி மன்னனை மிக எளிதாக வெற்றிகொண்டார்.

பின்னர் அவன் துறவியிடம், “நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். தருகின்றேன்” என்றான். அப்பொழுது துறவி அவனிடம், “எனக்கு வேறு எதுவும் வேண்டாம், இந்தச் சதுரங்கக் கட்டத்தில், முதல் கட்டத்தில் ஒரு நெல் மணி, இரண்டாவது கட்டத்தில் இரண்டு நெல் மணி, மூன்றாவது கட்டத்தில் நான்கு நெல்மணி, நான்காவது கட்டத்தில் எட்டு நெல் மணி என்ற விகிதம் இந்தச் சதுரங்கக் கட்டத்தில் உள்ள எல்லாக் கட்டங்களுக்கும் நெல்மணி தா” என்றார். “இவ்வளவு தானா?” என்று நினைத்துக்கொண்டு இவன், அவர் சொன்னது கட்டத்தில் நெல்மணிகளை வைத்து வந்தான். இருபத்து ஒன்றாம் கட்டம் வந்ததும், பத்து இலட்சத்திற்கு மேல் நெல் மணிகள் வந்தது. முப்பத்து ஒன்றாம் கட்டம் வந்ததும் நூறு கோடி நெல் மணிகளுக்கு மேல் நெல்மணிகள் தர வேண்டி வந்தது. இதைக்கண்டு அதிர்ந்து போன இவன், துறவியின் காலில் விழுந்து, “ஐயா! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இது என்னுடைய ஆணவத்திற்குக் மிகப்பெரிய தண்டனை” என்றான். துறவி அவனை மன்னித்து, தனக்கு எதுவுமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

ஆம், இந்நிகழ்வில் வரும் துறவி தன்னுடைய ஞானத்தால், சதுரங்க விளையாட்டில் தன்னை வெல்ல யாருமில்லை என்று நினைத்த மன்னனை வெற்றிகொண்டார். நற்செய்தியில் இயேசு, மறைநூல் அறிஞர்கள் கேட்ட கேள்விக்கு ஞானம் நிறைந்த பேச்சால் பதிலளித்து, அவர்களை பேசவிடாமல் செய்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்தியதும், “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?” என்று தலைமைக் குருக்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் கேள்வி கேட்கின்றபொழுது, இயேசு அவர்களிடம், “திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மண்ணகத்திலிருந்து வந்ததா?” எனப் பதில் கேள்வி கேட்டு, அவர்கள் பேசமுடியாதவாறு செய்கின்றார். இயேசு தன்னிடம் கேட்டவர்களிடம் இவ்வாறு பதிலளித்தார் எனில், அவர் ஞானத்தின் ஊற்றாய் இருந்தார். இன்றைய முதல் வாசகம், “ஞானத்தில்பால் என் உள்ளத்தைச் செலுத்தினேன்; தூய்மையில் அதைக் கண்டுகொண்டேன்” என்கிறது. எனவே, இயேசுவைப் போன்று ஞானத்தோடு பேச, அதை நாம் முதன்மையாகத் தேடுவோம்.

சிந்தனைக்கு:

 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் (நீமொ 1: 7).

 விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் இயேசுவுக்கு அருளப்பட்டிருக்கிறது (மத் 28: 18).

 நாம் ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழியில் நடந்தால், எவ்வளவு பெரிய பிரச்சனையையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்

இறைவாக்கு:

‘ஞானம் ஒளிமிக்கது; மங்காது; அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்’ (சாஞா 6: 12) என்கிறது சாலமோனின் ஞான நூல். எனவே, ஞானத்தின் ஊற்றாம் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு, அவர் அளிக்கும் ஞானத்தால் வாழ்வில் வரும் சவால்களைத் துணிவோடு எதிர்கொண்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

மே 29 புனிதர் மாடலின் சோஃபி பாரட் St. Madeleine Sophie Barat


திருஇருதய சபை நிறுவனர்: (Founder of the Society of the Sacred Heart)

பிறப்பு: டிசம்பர் 12, 1779 ஜோய்க்னி, பர்கண்டி ஃபிரான்ஸ் (Joigny, Burgundy, France) 

இறப்பு: மே 25, 1865 (வயது 85) பாரிஸ், ஃபிரான்ஸ் (Paris, France)

ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: மே 24, 1908 திருத்தந்தை பத்தாம் பயஸ்  (Pope Pius X)

புனிதர் பட்டம்: மே 24, 1925 திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (Pope Pius XI)

நினைவுத் திருநாள்: மே 29

புனிதர் மாடலின் சோஃபி பாரட், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஃபிரெஞ்ச் புனிதரும், "திருஇருதய சபை" (Founder of the Society of the Sacred Heart) நிறுவனரும் ஆவார்.

புனிதர் மாடலின் சோஃபி பாரட், அவரது பெற்றோருக்கு மூன்றாம் குழந்தையாவார். இவரது தந்தையார், திராட்சை வளர்க்கும் தொழில் புரியும் "ஜாக்குவெஸ் பாராட்" (Jacques Barat) என்பவராவார். இவரது தாயாரின் பெயர், "மேடம் மடலின் ஃபௌஃப் பாரட்" (Madame Madeleine Fouffé Barat) ஆகும். கி.பி. 1779ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 12ம் தேதி நள்ளிவு, அவர்களது அண்டை வீடு தீ பிடித்து எரிந்தது. தீ விபத்தின் காரணமாக பதற்றமடைந்த அவரது தாயார் எட்டு மாத கர்ப்பத்திலேயே மாடலின் சோஃபியை குறை மாத குழந்தையாக பிரசவித்தார். பிறந்தவுடன் ஆரோக்கியமற்று மிகவும் நலிவடைந்திருந்த மாடலின் சோஃபி'க்கு, மறுநாளே திருமுழுக்கு அளிக்கப்பட்டது. அவரது வீட்டின் அருகாமையிலேயே உள்ள புனித "திபௌல்ட்" (St. Thibault Church) ஆலயத்தில் விடியற்காலை ஐந்து மணிக்கே திருமுழுக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது பெற்றோர் அவருக்காக ஞானப்பெற்றோரை ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அவசரம் காரணமாக அவர்களை அழைக்க இயலவில்லை. ஆலயத்திற்கு தற்செயலாக வந்த "சோஃபி செடோர்" (Sophie Cédor) என்ற உள்ளூர் பெண் ஒருவரும், அவரது மூத்த சகோதரர் லூயிசும் அவரது ஞானப்பெற்றோராக நிறுத்தப்பட்டனர்.

பதினாறு வயதினிலே, கத்தோலிக்க குருவாக வேண்டி கல்வி கற்ற அவரது தமையன் லூயிஸ், இருபத்தொரு வயதுக்கு முன் குருத்துவம் பெற இயலாத காரணத்தால் வீட்டுக்கு திரும்பினார். அவர் தமது தங்கை மாடலின் சோஃபி பாரட்'டின் கல்வியில் கவனம் செலுத்தினார். அக்காலத்தில் இளம்பெண்களுக்கு கல்வி கற்பதில் பல இன்னல்கள் இருந்தன. ஆனாலும் அவர் தமது தங்கைக்கு இலத்தீன், கிரேக்கம், ஸ்பேனிஷ், இத்தாலியன் ஆகிய மொழிகளையும், இயற்கை அறிவியல் மற்றும் சரித்திரம் ஆகிய பாடங்களையும் கற்பித்தார்.

கி.பி. 1789ம் ஆண்டு, ஃபிரெஞ்ச் புரட்சியின்போது, மதகுருமார்களின் சிவில் அரசியலமைப்பு சம்பந்தமான விவாதங்களில் ஈடுபட்டு, கைது செய்யப்படும் நிலை வந்தபோது, பாரிஸ் நகருக்கு தப்பிச் சென்றார். கி.பி. 1793ம் ஆண்டு, மே மாதம், பாரிஸ் நகரில் கைது செய்யப்பட்ட லூயிஸ் இரண்டு வருடம் சிறையிலிருந்தார். கி.பி. 1795ம் ஆண்டு, விடுதலை பெற்று வீடு வந்து, தமது தங்கையையும் அழைத்துக்கொண்டு மீண்டும் பாரிஸ் நகர் வந்தார். அங்கே மாடலின் சோஃபி பாரட் ஐந்து வருடங்கள் வரை செப வாழ்க்கை வாழ்வதிலும், கல்வி கற்பதிலும், ரகசியமாக சிறார்களுக்கு மறைக் கல்வி கற்பிப்பதிலும் கழித்தார்.

பாரிஸ் நகரில் இவருக்கு “ஜோசப் வேரின்” (Joseph Varin) என்ற கத்தோலிக்க குரு அறிமுகமானார். ஜோசப் வேரின், இளம்பெண்களின் கல்வியில் ஈடுபாடு கொண்ட, இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணிப்பு கொண்ட பெண்களுக்கான ஒரு சமூகத்தை நிறுவ விரும்பினார். கார்மேல் சபையில் சேரும் கனவுடனிருந்த மாடலின் சோஃபி பாரட், தமது கனவைக் கைவிட்டு, பாரிஸ் நகரில் மூன்று இளம்பெண்களுடன் இணைந்து புதிய "திருஇருதய சமூகத்தை" நிறுவினார். ஆரம்பத்தில், ஃபிரெஞ்ச் அதிகார வர்க்கம் இயேசுவின் திருஇருதயத்தை பூஜிப்பதை தடை செய்திருந்த காரணத்தால் இந்த புதிய சமூகம் "விசுவாசமுள்ள பெண்கள்" (Women of Faith) என்ற பெயரில் இயங்கியது.

ஃபிரான்சின் வட பிராந்தியத்தில் கி.பி. 1801ம் ஆண்டு, இச்சமூகத்தினரால் முதல் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. "திருஇருதய சமூகமும்" பள்ளியும் வேகமாக வளர்ந்தன. தமது 23 வயதில் "திருஇருதய சமூகத்தின்" தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

ஜோசப் வேரின் துணையுடன் இவரது பள்ளிகள் வளர ஆரம்பித்தன. ஃபிரான்ஸில் பல பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவை, வட அமெரிக்கா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், அல்ஜியர்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், ஹாலந்து, ஜெர்மனி, தென் அமெரிக்கா, ஆஸ்திரியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளிலும் தோற்றுவிக்கப்பட்டன.

கி.பி. 1832ம் ஆண்டு, “லியோன்ஸ்” (Lyons) நகரில், "மரியாளின் குழந்தைகள்" (Congregation of the Children of Mary) எனும் சபையை தோற்றுவித்தார்.

கி.பி. 1840ம் ஆண்டு, சோஃபியின் முயற்சியால் வத்திக்கான் (Vatican) மற்றும் பாரிசின் பேராயர் (Archbishop of Paris) ஆகியோருக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் தவிர்க்கப்பட்டன. வத்திக்கான் அல்லது பாரிஸ் பேராயர் பக்கங்களைத் தேர்வு செய்யும்படி அவருடைய எல்லா சகோதரிகளும் அழுத்தம் கொடுத்திருந்தாலும், சோஃபி அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். அவரால் மீறுதலைக் குணப்படுத்த முடிந்தது. 65 வருடங்களுக்கும் மேலாக சோஃபியின் தலைமையில் அவரது சமூகம் நெப்போலியனின் ஆட்சி பிழைத்திருந்தது. பிரான்ஸ் இன்னும் இரண்டு புரட்சிகளை சந்தித்ததோடு, இத்தாலியின் போராட்டம் காரணமாக, முழுக்க முழுக்க தனி தேசமாக மாறியது.

திருஇருதய பள்ளிகள் விரைவில் ஒரு சிறந்த நற்பெயரைப் பெற்றன. குழந்தைகளின் பெற்றோரின் நிதி வசதிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லா குழந்தைகளையும் கல்வி கற்பிக்கும் கனவு கண்டார். அவர் நிறுவிய ஒவ்வொரு பள்ளிக்கும் ஈடாக ஒரு இலவச பள்ளியும் நிறுவப்பட்டது. ஒவ்வொரு ஏழைக் குழந்தைக்கும் உயர்தர கல்வி கிடைக்க உறுதிகொண்டிருந்தார்.

இவரது அறுபத்தைந்து வருடகால தலைமையில், இவரது சபை பெண்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் 3500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன், ஐரோப்பா (Europe), வட ஆபிரிக்கா (North Africa), வடக்கு மற்றும் தென் அமெரிக்க (North and South America) நாடுகளில் பரவியது.

85 வயதான மாடலின் சோஃபி பாரட், கி.பி. 1865ம் ஆண்டு, பாரிஸ் நகரிலுள்ள தலைமை இல்லத்தில், இயேசுவின் விண்ணேற்ற தினத்தன்று மரித்தார்.

மே 28 : முதல் வாசகம்


நம் மூதாதையர் இரக்கமுள்ள மனிதர்கள்; தங்களது வழிமரபில் அவர்கள் நிலைத்திருக்கிறார்கள்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 44: 1, 9-12

மேன்மை பொருந்திய மனிதரையும் நம் மூதாதையரையும் அவர்களது தலைமுறை வரிசைப்படி புகழ்வோம்.

நினைவுகூரப்படாத சிலரும் உண்டு; வாழ்ந்திராதவர்கள் போன்று அவர்கள் அழிந்தார்கள்; பிறவாதவர்கள்போல் ஆனார்கள். அவர்களுக்குப் பின் அவர்கள் பிள்ளைகளும் அவ்வாறே ஆனார்கள். ஆனால் அவர்களும் இரக்கமுள்ள மனிதர்களே. அவர்களுடைய நேர்மையான செயல்கள் மறக்கப்படுவதில்லை. தங்களது வழிமரபில் அவர்கள் நிலைத்திருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைச் சொத்து அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் கிடைக்கும்.

அவர்களின் வழிமரபினர் உடன்படிக்கைகளின்படி நடக்கின்றனர்; அவர்கள் பொருட்டு அவர்களின் பிள்ளைகளும் அவ்வாறே நடப்பார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 28 : பதிலுரைப் பாடல்


திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)

பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.

2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! - பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!

4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ் நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப்படுத்துவார். - பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!

6a அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்;

9b இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 16

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.

மே 28 : நற்செய்தி வாசகம்


என் இல்லம் மக்கள் அனைவர்க்கும் உரிய இறைவேண்டலின் வீடு.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-26

அக்காலத்தில்

இயேசு எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பியபொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. இலையடர்ந்த ஓர் அத்தி மரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, “இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது” என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை. “ ‘என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அவர்களுக்குக் கற்பித்தார்; “ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்” என்றார்.

தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்து விடலாம் என்று வழி தேடினார்கள். எனினும் கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள்.

மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள். காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள். அப்போது பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து அவரை நோக்கி, “ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று” என்றார்.

அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: எவராவது இந்த மலையைப் பார்த்து, ‘பெயர்ந்து கடலில் விழு’ எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும். ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும். நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார். நீங்கள் மன்னிக்காவிட்டால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

------------------------------------------------------------

பொதுக்காலம் எட்டாம் வாரம் வெள்ளிக்கிழமை

I சீராக்கின் ஞானம் 44: 1, 9-12

II மாற்கு 11: 11-26

காய்க்காத அத்தி மரம்

தடம் பதிப்பவர்கள் மாமனிதர்கள்:

துறவி ஒருவர் இருந்தார். இவரிடம் பலர் சீடர்களாக இருந்து பயிற்சி பெற்றார்கள். ஒருநாள் இவர் தன் சீடர்களிடம், “ஒருசில கிராமங்களில் மனிதர்கள் இறக்கின்ற பொழுது, அவர்களைத் தென்னை மட்டையில் பாடைகட்டித் தூக்கிக்கொண்டுபோய், அடக்கம் செய்கிறார்களே, அது ஏன்?” என்றார். இதற்கு ஒவ்வொரு சீடரும் ஒவ்வொரு மாதிரியான பதிலைச் சொன்னார்கள். இறுதியில் ஒரு சீடர் எழுந்து, “தென்னை மரத்திலிருந்து விழும் தென்னைமட்டை, மரத்தில் தனக்கென ஒரு தடத்தைப் பதித்துவிட்டுத்தான் விழுகின்றது. மனிதரும் இந்த மண்ணை விட்டுப் பிரிகின்றபொழுது, தனக்கென ஒரு தடத்தைப் பதித்துவிட்டுச் செல்லவேண்டும் என்பதற்காகத்தான், அவ்வாறு செய்கின்றார்கள்” என்றார்.

ஆம், மனிதர்களாகிய நாம் இந்த மண்ணுலகில் வாழ்ந்ததற்கான தடம் இருக்கவேண்டும். அதற்கு நாம் கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள விதமாய் வாழவேண்டும். அதைத்தான் இந்த நிகழ்வும் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

இன்றைய நற்செய்தி வாசகம், இயேசு கிறிஸ்து காய்க்காத அத்திமரத்தைச் சபித்தல், எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்துதல், நம்பிக்கை, இறைவேண்டல் ஆகியவற்றைக் குறித்துப் பேசுதல் ஆகிய பல நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கின்றது. இவையெல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கின்றது என்பதுதான் இதிலுள்ள சிறப்பாகும்.

இயேசு அத்திமரத்தில் கனிகளைத் தேடிய காலம், கனிகொடுக்கின்ற பருவகாலம் கிடையாது. அது கனி கொடுப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆக வேண்டியிருந்தது. அப்படியிருந்தும் இயேசு அதைச் சபித்தார் என்பதை ஓர் அடையாளமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அடுத்ததாக இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்தியதைக் காரணம், அதை நிர்வாகம் செய்த தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்கள் முறைகேடாக நடந்து கொண்டார்கள் என்பதால்தான். எனவே, அத்திமரம் சபிக்கப்படுதல், எருசலேம் திருக்கோயில் தூய்மையாக்கப்படல் ஆகிய நிகழ்வுகள், ஒருவர் உரிய பலன் கொடுக்கவில்லை என்றால், அவர் அதற்கான தண்டனை பெறுவது உறுதி என்ற உண்மையை நமக்கு உணர்த்துகின்றன.

இதற்கு முற்றிலும் மாறாக, இன்றைய முதல் வாசகம் இரக்கமுள்ள மனிதர்களாக இருந்தும், நினைவுகூரப்படாத சிலர் இருக்கின்றனர் என்கிறது. எனவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்வில் இரக்கம், அன்பு, போன்ற கனிகளைக் கொடுத்து, இறைவனுக்குச் சான்று பகர்வோம்.

சிந்தனைக்கு:

 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கின்றது (யோவா 15: 😎.

 ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார் (உரோ 2: 6)

 கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்வைப் பயனுள்ள விதமாய் வாழ்கின்றோமா? சிந்திப்போம்.

ஆன்றோர் வாக்கு:

‘உங்களுடைய வாழ்க்கையின் இலட்சியம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதை விடவும், பயனுள்ளவிதமாய் இருக்க வேண்டும் என்றிருந்தால், உண்மையில் நீங்கள் மாமனிதர்கள்’ என்பார் எமர்சன். ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்வை எல்லாருக்கும் பயன்தரும்படி வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

மே 28 பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் St. Germain of Paris


பாரிஸ் மறைமாவட்ட ஆயர்/ ஏழைகளின் தந்தை: (Bishop of Paris/ Father of the Poor)

பிறப்பு: கி.பி. 496 அவுடன், ஃபிரான்ஸ் (Autun, France) 

இறப்பு: மே 28, 576 பாரிஸ், ஃபிரான்ஸ் (Paris, France)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)

புனிதர் பட்டம்: கி.பி. 754 திருத்தந்தை இரண்டாம் ஸ்டீஃபன் (Pope Stephen II)

நினைவுத் திருநாள்: மே 28

புனிதர் ஜெர்மாய்ன், பாரிஸ் மறை மாவட்ட ஆயரும் (Bishop of Paris) "ஏழைகளின் தந்தை" (Father of the Poor) என அறியப்படுபவரும் ஆவார்.

ஃபிரான்ஸ் நாட்டின் "அவுடன்" (Autun) என்ற இடத்தினருகே வசதியுள்ள "கல்லோ-ரோமன்" (Gallo-Roman) இன பெற்றோருக்குப் பிறந்த ஜெர்மாய்ன், "பர்கண்டியிலுள்ள" "அவல்லான்" (Avallon in Burgundy) என்ற இடத்தில் கல்வி கற்றார்.

தமது 35 வயதில் புனிதர் "அக்ரிப்பினா" (Saint Agrippina of Autun) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். பின்னர், அருகாமையிலுள்ள "புனிதர் சிம்போரியன்" (Abbey of St. Symphorian) துறவு மடத்தின் மடாதிபதியானார். 

கி.பி. 555ம் ஆண்டு, பாரிஸ் நகரின் ஆயர் "சிபெலியஸ்" (Sibelius, the Bishop of Paris) இறந்துவிடவே, அரசர் "முதலாம் சில்டேபர்ட்" (Childebert I) ஜெர்மாய்னை ஆயராக தேர்ந்தெடுத்து அருட்பொழிவு செய்வித்தார்.

ஆயர் ஜெர்மாய்ன் அவர்களின் ஆலோசனைகளாலும், செல்வாக்கினாலும் அரச குடும்பமே ஒரு சிறப்பான சீர்திருத்த வாழ்க்கை வாழ்ந்தது. அரசவையில் பணியாற்றியபோதும், எளிமையையும், துறவு வாழ்வையும் ஒருபோதும் எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடவில்லை. தன்னுடைய ஒறுத்தல் வாழ்வினாலும், அருமையான, எளிமையான மறையுரையாலும் மக்களை இறைவன்பால் ஈர்த்தார். இவரது மறையுரையைக் கேட்கவே மக்கள் கூடி வந்து, காத்திருந்தனர்.

566ம் ஆண்டு, "டூர்ஸ்" நகரில் நடந்த கிறிஸ்தவ மாநாட்டில் (Second Council of Tours) பங்குபெற்றார். கி.பி. 557ம் ஆண்டு முதல் கி.பி. 573ம் ஆண்டு வரை பாரிஸ் நகரில் நடந்த மூன்றாம் மற்றும் நான்காம் மாநாடுகளிலும் (Third and Fourth Councils of Paris) கலந்துகொண்டார். "கௌல்" (Gaul) மாநிலத்தில் வழக்கத்திலிருந்த பாகனிய பழக்கங்களை முறித்துக் கொள்ளும்படி அரசனை அவர் தூண்டினார். பெரும்பாலான கிறிஸ்தவ திருவிழாக்களுடன் பாகன் கொண்டாட்டங்களைச் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் தடைசெய்யப்பட்டது.

ஆயர் ஜெர்மாய்ன் கி.பி. 576ம் ஆண்டு, பாரிஸ் நகரில் மரித்தார்.

மே 27 : முதல் வாசகம்


ஆண்டவருடைய செயல் அவருடைய மாட்சியால் நிறைந்துள்ளது.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 42: 15-25.

ஆண்டவருடைய செயல்களை நினைவுபடுத்துவேன்; நான் கண்டவற்றை எடுத்துரைப்பேன். ஆண்டவருடைய சொல்லால் அவருடைய செயல்கள் உண்டாகின்றன. ஒளிரும் கதிரவன் அனைத்தையும் காண்கின்றான். ஆண்டவருடைய செயல் அவருடைய மாட்சியால் நிறைந்துள்ளது.

அனைத்தையும் தமது மாட்சியில் நிலை நிறுத்திய எல்லாம் வல்ல ஆண்டவர், தம் வியத்தகு செயல்கள் எல்லாவற்றையும் எடுத்துரைக்கும்படி தம் தூயவர்களுக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை. படுகுழியையும் மனித உள்ளத்தையும் அவர் ஊடுருவி நோக்குகிறார்; மனிதர்களுடைய சூழ்ச்சி நிறை எண்ணங்களை ஆராய்கிறார்.

அறியக்கூடியவற்றை எல்லாம் உன்னத இறைவன் அறிவார்; காலத்தின் குறிகளை உற்றுநோக்குகிறார். நிகழ்ந்தவற்றையும் இனி நிகழ இருப்பவற்றையும் அவர் தெரியப்படுத்துகிறார்; மறைந்திருப்பவற்றின் தடயத்தை வெளிப்படுத்துகிறார். எவ்வகை எண்ணமும் அவருக்குத் தெரியாமல் இருப்பதில்லை; ஒரு சொல்கூட அவருக்கு மறைந்திருப்பதில்லை.

அவர் தமது ஞானத்தின் அரும்பெரும் செயல்களை ஒழுங்குபடுத்தியுள்ளார்; அவரே என்றென்றும் இருக்கின்றவர். யாதொன்றும் கூட்டப்படுவதில்லை, குறைக்கப்படுவதுமில்லை; எவருடைய அறிவுரையும் அவருக்குத் தேவையில்லை.

அவருடைய செயல்கள் அனைத்தும் எத்துணை விரும்பத்தக்கவை! பார்ப்பதற்கு எத்துணைப் பளபளப்பானவை! இவையெல்லாம் உயிரோடு இருக்கின்றன; எல்லாத் தேவைகளுக்காகவும் என்றும் நிலைத்திருக்கின்றன; எல்லாம் அடிபணிகின்றன.

எல்லாம் இரட்டையாய் உள்ளன; ஒன்று மற்றொன்றுக்கு எதிராய் இருக்கிறது. யாதொன்றையும் அவர் குறைபடச் செய்யவில்லை. ஒன்று மற்றொன்றின் நன்மையை நிறைவு செய்கிறது. அவருடைய மாட்சியை நிறைவாகக் காண்பவர் எவர்?

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 27 : பதிலுரைப் பாடல்


திபா 33: 2,3. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 6a)

பல்லவி: ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின.

2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.

3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். - பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.

5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி

6 ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான் கோள்கள் எல்லாம் உருவாயின.

7 அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்து வைத்தார்; அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்து வைத்தார். - பல்லவி

8 அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக! உலகில் வாழ்வோர் அனைவரும் அவருக்கு அஞ்சி நடுங்குவராக!

9 அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார். அல்லேலூயா.

மே 27. : நற்செய்தி வாசகம்


ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52.

அக்காலத்தில்

இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

இயேசு நின்று, “அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார்.

இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------------

உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று”

பொதுக்காலம் எட்டாம் வாரம் வியாழக்கிழமை

I சீராக்கின் ஞானம் 42: 15-25

II மாற்கு 10: 46-52

“உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று”

பார்வையின்றியும் சாதிக்கும் மனிதர்:

அமெரிக்காவைச் சார்ந்தவர் எரிக் வேஹன்மேயர் (Erik Weihenmeyer). பார்வையில்லாமல் பிறந்த இவர் செய்திருக்கும் சாதனைகள் பல. 2001 ஆம் ஆண்டு இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். இதன் மூலம் இவர், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பார்வையற்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார். 2008 ஆம் ஆண்டு இவர் ஒவ்வொரு கண்டத்திலுமுள்ள மிக உயரமான மலையிலும் ஏறி சாதனை படைத்தார். இப்படி இவர் செய்த சாதனைகள் பல.

இவர் மலை ஏறுபவர் மட்டுமில்லை; சிறந்ததோர் எழுத்தாளரும் கூட. இவருடைய எழுத்தில் வந்த நூல்தான், “Farther Than the Eye Can See” என்பதாகும். பார்வையில்லாத இவரால் எப்படி மலையேற முடிகின்றது என்ற கேள்வி எழலாம். இவருடைய நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் இவர் மலை ஏறுகின்றார்; ஆனாலும் இவரிடம் உள்ள அசாதாரண நம்பிக்கை இவர் பார்வையின்றி இருந்தாலும், பல சாதனைகளைச் செய்யக் காரணமாக இருக்கின்றது.

ஆம், எரிக் வேஹன்மேயர் கொண்டிருக்கும் நம்பிக்கை, அவர் பல துறைகளிலும் சாதனைகள் செய்யக் காரணமாக இருக்கின்றது. நற்செய்தியில் வரும் பர்த்திமேயு ஆண்டவர் இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையினால் பார்வை பெறுகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

நற்செய்தியில் பார்வையற்ற பர்த்திமேயுவைக் குறித்துப் படிக்கின்றோம். பர்த்திமேயு என்றால் ‘மரியாதையின் மகன்’ (Son of Honour) என்று பொருள். இப்படி மரியாதையின் மகனாக இருந்த பர்த்திமேயு, எல்லாரும் ஏளனம் செய்யும்வகையில் வழியோரம் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததுதான் இதில் உள்ள வேடிக்கை. இப்படிப்பட்டவர் இயேசு அவ்வழியாக வருகின்றார் என்பதை அறிந்து, “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று நம்பிக்கையோடு, தொடர்ந்து கத்தி இயேசுவின் கவனத்தை ஈர்த்துப் பார்வை பெறுகின்றார். இதன்மூலம் அவர் மீண்டுமாகத் தன்னுடைய பெயருக்கேற்றாற்போல் மரியாதையின் மகனாகின்றார்.

பர்த்திமேயுவின் வாழ்வில் நடந்த இம்மாற்றத்திற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது, அவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கைதான். இந்த பர்த்திமேயு இயேசுவிடமிருந்து நலம் பெற்றதும், அதை அப்படியே மறந்துவிடாமல் அவரைப் பின்தொடர்கின்றார் என்பது நமது கவனத்திற்கு உரியது. மேலும் இயேசு பர்த்திமேயுவுக்குப் பார்வை அளித்ததன் மூலம், இன்றைய முதல் வாகத்தில் வரும், “அவருடைய செயல்கள் அனைத்தும் எத்துணை விரும்பத்தக்கவை” என்பதற்கு அர்த்தம் தருகின்றார்.

சிந்தனைக்கு:

 நம்பிக்கையிலான்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது (எபி 11: 6)

 பார்வை பெற்றதும் பர்த்திமேயு இயேசுவைப் பின்தொடர்ந்தார். கடவுளிடமிருந்து நலம்பெறும் நாம் அவரைப் பின் தொடர்கின்றோமா?

 கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கண்களால் வறியவர்களை இரக்கத்தோடு பாரிக்கின்றோமா? சிந்திப்போம்.

இறைவாக்கு:

‘அப்போது பார்வையற்றவரின் கண்கள் பார்க்கும்’ (எசா 35: 5) என்பார் இறைவாக்கினர் எசாயா. எனவே, நம்பிக்கையோடு இருந்த பர்த்திமேயுவுக்கு இயேசு பார்வையளித்தது போல, இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு, அகப்பார்வை பெற்று, இயேசுவைப் பின்தொடர்வோம்; இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

மே 27 காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் St. Augustine of Canterbury


காண்டர்பரி பேராயர்: (Archbishop of Canterbury)

பிறப்பு: ஆறாம் நூற்றாண்டு 

இத்தாலி (Italy)

இறப்பு: மே 26, 604

காண்டர்பரி, கென்ட், இங்கிலாந்து  (Canterbury, Kent, England)

ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

ஆங்கிலிக்கன் திருச்சபை (Anglican Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: மே 27

புனிதர் அகஸ்டின் ஒரு “பெனடிக்டைன்” சபைத் (Benedictine monk) துறவி ஆவார். இவர், கி.பி. 597ம் ஆண்டு, காண்டர்பரி உயர்மறை மாவட்டத்தின் முதல் பேராயர் (Archbishop of Canterbury) ஆனார். இவர் ஆங்கிலேயர்களின் அப்போஸ்தலர் (Apostle to the English) என்றும், ஆங்கிலத் திருச்சபையை தோற்றுவித்தவர் (Founder of the English Church) என்றும் கருதப்படுகின்றார்.

அகஸ்டின் இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர் ஆவார். 596ம் ஆண்டு, ரோம் நகரின் துறவு மடத்திலிருந்து, இவரது தலைமையில் திருத்தந்தை பெரிய கிரகோரியார் (Pope Gregory the Great) 40 துறவிகளை இங்கிலாந்து நாட்டின் "ஆங்கிலோ-சாக்ஸன்" (Anglo-Saxons) பிரஜைகளை கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்றுவதற்காக மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைத்தார்.

மிகவும் கடினமாகப் பயணித்து "கௌல்" (Gaul) சென்றடைந்த அவர்கள், "ஆங்கிலோ-சாக்ஸன்" (Anglo-Saxons) மக்களின் முரட்டுத்தனம் பற்றிய கதைகள் அவர்களை பயமுறுத்தின. "ஆங்கிலேய கால்வாயை" (English Channel) தாண்டிச் செல்வதும் அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. திருத்தந்தையின் அறிவுறுத்தல்களை அறிந்துகொள்வதற்காக, அகஸ்டின் ரோம் நகருக்கு திரும்பிச் சென்றார். தங்களுக்கு மறைபோதக பணியை ஆற்றுவதற்கு 'சாக்சென்' மொழி தெரியாதென்பதையும் சுட்டிக்காட்டினர். இதனால் இங்கிலாந்தில் மறைபரப்பு பணி செய்ய வேண்டாமென்றும் தெளிவுப்படுத்தி சொன்னார்கள்.

வதந்திகளையும் பயமுறுத்தல்களையும் கண்டு அஞ்சவேண்டாம் என அறிவுறுத்திய திருத்தந்தை, இறைவனில் முழு நம்பிக்கைகொள்ளுமாறும், தியாகங்கள் செய்யுமாறும், என்ன நடந்தாலும் அவற்றை இறைவன் கொடுத்த கொடை என்று ஏற்றுக் கொள்ளுமாறும் அறிவுரை கூறி அனுப்பினார். திருத்தந்தை கொடுத்த அறிவுரையின்படி, அவர்கள் தைரியம் கொண்டு, மறைபோதக பணியை செய்யத் தயாரானார்கள். 

இம்முறை "ஆங்கிலேய கால்வாயை" (English Channel) கடந்த அவர்கள், கென்ட் பிரதேசத்தில் (Territory of Kent) இறங்கினார்கள். கென்ட் (Kent) பிரதேசம், "பாகனிய" (Pagan) மதத்தைச் சேர்ந்த அரசன் "ஈதல்பெர்ட்" (King Ethelbert) என்பவனின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவனது மனைவி, கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த பெண்ணாவார். அவரது பெயர், "பெர்தா" (Bertha) ஆகும். அவர்களை அன்புடன் வரவேற்ற அரசன் "ஈதல்பெர்ட்" (King Ethelbert) காண்டர்பரி (Canterbury) நகரில் அவர்கள் தங்குவதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தான்.

ஒரு வருட காலத்திலேயே, (597ம் ஆண்டு) தூய ஆவியின் திருநாளன்று (Pentecost Sunday) அரசன் "ஈதல்பெர்ட்" திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவனாக மெய்மறையில் மனம் மாறினான். அங்கிருந்தோரும், அரசனுடன் இருந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்து பிறப்பு விழாவன்று மனம்திரும்பி புதிதாய் திருமுழுக்கு பெற்றனர். 

ஃபிரான்ஸ் (France) நாட்டில் ஆயர் ஒருவருக்கு அருட்பொழிவு செய்வித்துவிட்டு காண்டர்பரி (Canterbury) திரும்பிய அகஸ்டின், 1070ம் ஆண்டு, புதிதாய் தொடங்கப்பட்ட பேராலயத்தின் அருகே, அப்போதைய ஆலயம் ஒன்றையும், துறவு மடம் ஒன்றினையும் கட்டினார்.

மக்களிடையே கிறிஸ்தவ விசுவாசம் அதிசயிக்கத்தக்க வகையில் பரவியது. ஆகவே, "லண்டன் மற்றும் ரோச்செஸ்டர்" (London and Rochester) ஆகிய இடங்களிலும் புதிய மறை மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

அதேபோல, அகஸ்டினின் பணிகள் சில நேரம் மெதுவாக ஊர்ந்தன. அதேபோல, அவர் எப்போதுமே வெற்றியையே சந்திக்கவுமில்லை. ஒரு காலத்தில், ஆங்கிலோ-சாக்சன் படையெடுப்பாளர்களால் மேற்கத்திய இங்கிலாந்து (Western England) நோக்கி விரட்டப்பட்ட அசல் பிரிட்டன் கிறிஸ்தவர்கள் (Original Briton Christians) ஆகிய இரு பிரிவினரையும் சமாதானப்படுத்த முயன்ற இவரது பிரயத்தனங்கள் மோசமான தோல்வியைச் சந்தித்தன.

சில செல்டிக் பழக்கங்களை (Celtic customs) கைவிடுமாறும், ரோம் நகருடனான வேறுபாடுகளை களையவும், பழைய கசப்பான அனுபவங்களை மறக்கவும், பிரிட்டன் கிறிஸ்தவர்களை சமாதானப்படுத்த முயன்ற அவரது முயற்சிகள் அனைத்தும் வீணாயின.

பொறுமையாக போராடியதாலும், கடின உழைப்பாலும், மிஷனரி கொள்கைகளை ஞானமுடன் செவிமடுத்ததாலும், திருத்தந்தை கிரகோரி அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சில மாற்று நடவடிக்கைகளாலும், குறிப்பாக - பாகன் ஆலயங்களையும் அவர்களது சடங்குகளையும் இடிப்பதைத் தவிர்த்து அவற்றை கிறிஸ்தவ ஆலயங்களாக மாற்றவும், பாகனிய விழாக்களை நிறுத்துவதை விடுத்து, அவற்றை கிறிஸ்தவ விழாக்களாக கொண்டாடவும் ஆரம்பித்தனர். இதன் காரணங்களால், இங்கிலாந்து வந்து குறுகிய எட்டு வருடங்களிலேயே சிறிதளவேயானாலும் பெரும் வெற்றியை அடைந்தார். ஆகவே, அவரை இங்கிலாந்தின் அப்போஸ்தலர் என அழைப்பது சாலச் சிறந்ததுவேயாகும்.

கி.பி. 604ம் ஆண்டு மரித்த அகஸ்டின், “காண்டர்பரியிலுள்ள” புனித அகஸ்டின் துறவு மடத்தில் (St Augustine's Abbey, Canterbury) அடக்கம் செய்யப்பட்டார்.

மே 26 : முதல் வாசகம்


உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என எல்லாரும் அறிந்துகொள்ளட்டும்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 36: 1-2a, 4-5a, 9-17

எல்லாவற்றிற்கும் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள் மீது இரக்கமாயிரும்; எங்களைக் கண்ணோக்கும்; உம்மைப் பற்றிய அச்சம் எல்லா நாடுகள்மீதும் நிலவச் செய்யும். அயல்நாடுகளுக்கு எதிராக உம் கையை உயர்த்தும்.

ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என நாங்கள் அறிந்துள்ளதுபோல் அவர்களும் உம்மை அறிந்துகொள்ளட்டும். புதிய அடையாளங்களை வழங்கும். வியத்தகு செயல்களை நிகழ்த்தும்; ‘எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை’ எனக் கூறும் பகை வேந்தர்களின் தலைகளை நசுக்கும். யாக்கோபின் குலங்களை ஒன்றுகூட்டும்; தொடக்கத்தில் போன்று அவர்களை உமது உரிமைச் சொத்தாக்கும்.

ஆண்டவரே, உம் பெயரால் அழைக்கப்பெற்ற மக்களுக்கு இரக்கம் காட்டும்; உம் தலைப்பேறாகப் பெயரிட்டு அழைத்த இஸ்ரயேலுக்குப் பரிவுகாட்டும்; உமது திருவிடம் இருக்கும் நகரின்மீது, நீர் ஓய்வுகொள்ளும் இடமாகிய எருசலேம் மீது கனிவு காட்டும். உமது புகழ்ச்சியால் சீயோனை நிரப்பும்; உமது மாட்சியால் உம் மக்களை நிரப்பும்.

தொடக்கத்தில் நீர் படைத்தவற்றுக்குச் சான்று பகரும்; உம் பெயரால் உரைக்கப்பட்ட இறைவாக்குகளை நிறைவேற்றும். உமக்காகப் பொறுமையுடன் காத்திருப்போருக்குப் பரிசு அளியும்; உம் இறைவாக்கினர்கள் நம்பத்தகுந்தவர்கள் என மெய்ப்பித்துக் காட்டும்.

ஆண்டவரே, உம் மக்களுக்கு ஆரோன் வழங்கிய ஆசிக்கு ஏற்ப உம்மிடம் மன்றாடுவோரின் வேண்டுதலுக்குச் செவிசாயும். அப்போது, நீரே ஆண்டவர், என்றுமுள கடவுள் என்பதை மண்ணுலகில் உள்ள எல்லாரும் அறிந்துகொள்வர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 26 : பதிலுரைப் பாடல்


திபா 79: 8. 9. 11. 13 (பல்லவி: சீஞா 36: 1b)

பல்லவி: எம்மீது இரக்கம் வைத்து, ஆண்டவரே எம்மைக் கண்ணோக்கும்.

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். - பல்லவி

9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். - பல்லவி

11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. - பல்லவி

13 அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

மே 26 : நற்செய்தி வாசகம்


எருசலேமில் மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 32-45

அக்காலத்தில்

சீடர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழ இருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார்.

அவர், “இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; அவர்கள் ஏளனம் செய்து, அவர்மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர்களிடம் கூறினார்.

செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள். அவர் அவர்களிடம், “நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, “நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டினர்.

இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்டார்.

அவர்கள் அவரிடம், “இயலும்” என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப் புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், “பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

-------------------------------------------------------

“எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை”

பொதுக்காலம் எட்டாம் வாரம் புதன்கிழமை

I சீராக்கின் ஞானம் 36: 1-2a, 4-5a, 9-17

II மாற்கு 10: 32-45

“எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை”

தன்னைப் பெரியவரெனக் காட்டிக்கொள்ள விழைந்த பணக்காரர்:

பணக்காரர் ஒருவர் இருந்தார். ஒருநாள் இவர் ஒரு பெரிய செருப்புக் கடைக்குச் சென்று, கடை உரிமையாளரிடம், விலை உயர்ந்த செருப்பைக் கேட்டு வாங்கிக்கொண்டு போனார். போனவர் ஒருசில நாள்களிலேயே திரும்பி வந்தார். “வாங்கிக் கொண்டு போன செருப்பு என்னவாயிற்று, அறுந்துவிட்டதா?” என்றார் கடை உரிமையாளர். பணக்காரர், “இல்லை” என்று சொன்னதும், “அப்படியானால் செருப்பு காணாமல் போய்விட்டதா?” என்றார் கடை உரியாளர். அதற்கும், “இல்லை!” என்றே பதில் சொன்னார் பணக்காரர். “அப்படியானால் செருப்புக்கு என்னதான் ஆயிற்று?” என்று கடை உரிமையாளர் தன் குரலைச் சற்று உயர்த்திக் கேட்டபொழுது பணக்காரர் அவரிடம், “நீங்கள் எனக்குக் கொடுத்த நெருப்பு நான் நடந்து செல்கின்றபொழுது ‘கீச் கீச்’ என்று சத்தம் எழுப்பமாட்டேன் என்கிறது. இதனால் யாருமே என்னைத் திரும்பிப் பார்ப்பதில்லை. அதற்காகத்தான் எனக்கு இந்தச் செருப்பு வேண்டாம் என்று கொண்டு வந்திருக்கின்றேன்” என்றார்.

இதைக் கேட்டுச் செருப்புக்கடை உரிமையாளர், பதிலுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றார்.

வேடிக்கையாகச் சொல்லப்பட்ட கதையாக இருந்தாலும், இன்றைக்குப் பலர் தாங்கள் எவ்வளவு பெரிய ஆள் என்பதைக் காட்டவதற்கு எப்படியெல்லாமோ முயற்சி செய்கின்றார்கள் என்பதை எடுத்துக் கூறுவதாக இருகின்றது. இன்றைய இறைவார்த்தையில் வரும் மனிதர்களும் தங்களைப் பெரியவர்கள் எனக் காட்டிக் கொள்ள விழைகின்றார்கள். இவர்களுக்கு இயேசுவின் பதில் என்னவாக இருக்கின்றது என்று நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம், ஆண்டவராகிய கடவுள் தங்கள்மீது இரக்கம் காட்டவேண்டும் என்றும், ‘எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை’ எனக் கூறிக்கொண்டிருந்த தங்களுடைய பகைவர்களின் தலைகளை நசுக்க வேண்டும் என்றும் இஸ்ரயேல் மக்கள் கடவுளை நோக்கி எழுப்பும் இறைவேண்டலாக இருக்கின்றது. இந்த இறைவேண்டல் கி.மு. 190 ஆம் ஆண்டு மக்கபேயர்களின் எழுச்சி முன்பு எழுப்பப்பட்டதாக இருக்கின்றது.

அசீரியர்களும் பாபிலோனியர்களும் இஸ்ரயேல் மக்களைத் தண்டிக்க கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட கருவிகள்தானே அன்றி, அவர்கள் ஒன்றும் பெரியவர்கள் இல்லை. இது புரியாமல் அவர்கள், எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்று ஆணவத்தில் ஆடினார்கள். முடிவில் அவர்கள் அழிவைச் சந்தித்தார்கள். நற்செய்தியில் சீடர்கள், தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபட்டபொழுது, இயேசு அவர்களிடம், உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும் என்கிறார். ஆகவே, நாம்தான் பெரியவர்க்ள என்று ஆடாமல், இயேசுவைப் போன்று தாழ்ச்சியோடு இருந்து, எல்லாருக்கும் பணிசெய்வோம்.

சிந்தனைக்கு:

 மேன்மை அடையத் தாழ்மையே வழி (நீமொ 15: 33)

 தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர் (லூக் 18: 14)

 அதிகாரம் என்பது ஒருவரை அடக்கியாள அல்ல, அன்புப் பணி செய்யவே என்பதை உணர்வது எப்போது?

ஆன்றோர் வாக்கு:

‘தாழ்ச்சியோடு இல்லாத எவரும் மற்றவரை ஒருபோதும் மதிப்பதில்லை’ என்பார் ஹென்றி பிரடெரிக் அமில். எனவே, நாம் ஆணவத்தோடு அல்ல, தாழ்ச்சியோடு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.