ஏப்ரல் 7: புனிதர் ஜான் பாப்டிஸ்ட் டி லா சால் St. John Baptist De La Salle


குரு (Priest):

லா சால் பள்ளிகளின் நிறுவனர்: (Founder of La Salle Schools)

கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரர்கள் அமைப்பின் நிறுவனர்: (Founder of Brothers of the Christian Schools)

பிறப்பு: ஏப்ரல் 30, 1651 ரெய்ம்ஸ், சம்பக்ன், ஃபிரான்ஸ் அரசு (Reims, Champagne, Kingdom of France)

இறப்பு: ஏப்ரல் 7, 1719 (வயது 67) ரூவென், நோர்மண்டி, ஃபிரான்ஸ் அரசு (Rouen, Normandy, Kingdom of France)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஃபெப்ரவரி 19, 1888 திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII)

புனிதர் பட்டம்: மே 24, 1900  திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 7

பாதுகாவல்:

கல்வியாளர்கள் (Educators) 

பள்ளி முதல்வர்கள் (School Principals) 

ஆசிரியர்கள் (Teachers) 

'லா சால்' பள்ளிகள் (La Salle Schools)

இளைஞர்களின் ஆசிரியர்கள் (Teachers of Youth)

'கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரர்கள்' அமைப்பு (Brothers of the Christian Schools)

புனிதர் ஜான் பாப்டிஸ்ட் டி லா சால், ஒரு ஃபிரெஞ்ச் கத்தோலிக்க குருவும், கல்வி சீர்திருத்தவாதியும் ஆவார். தமது வாழ்நாளின் பெரும் பகுதியை ஃபிரான்ஸ் நாட்டின் ஏழைச் சிறுவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகச் செலவிட்ட இவர், கத்தோலிக்க பள்ளிகளின் முதல் நிறுவனர் என்று கருதப்படுகிறார். இவர், ஏழைக் குழந்தைகள், இளைஞர்கள் பேரில் அக்கறை கொண்டு உதவிகள் பல செய்து வந்தார். 

இவர், பிரான்ஸ் நாட்டிலுள்ள ரெய்ம்ஸ் நகரில் கி.பி. 1651ம் ஆண்டில் பிறந்தவர். மிகவும் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை பெயர் “லூயிஸ் டி லா சால்” (Louis de La Salle) ஆகும். இவரது தாயார் “நிக்கோல் டி மொயேட் டி ப்ரோயில்லெட்” (Nicolle de Moet de Brouillet) ஆவார்.

கி.பி. 1678ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 9ம் நாளன்று, தமது 26ம் வயதில் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்ட இவர், இரண்டே வருடங்களில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

பின்னர், கி.பி. 1679ம் ஆண்டு இளைஞர்களுக்கென்று பள்ளியை நிறுவி, அப்பள்ளியின் ஆசிரியராக தாமே பொறுப்பேற்று நடத்தினார். பின்னர் கி.பி. 1684ம் ஆண்டு தம்முடன் சேர்ந்து உழைத்த நண்பர்களை ஒன்று சேர்த்து ஓர் துறவற சபையை தோற்றுவிக்க எண்ணி, திட்டங்கள் தீட்டி, இதனால் பல துன்பங்களையும் அனுபவித்தார். இருப்பினும் தம் பணியில் இறைவனின் துணையோடு தம்மை முழுவதுமாக அர்ப்பணித்தார். தாழ்ச்சியுடனும், ஏழைகளின் மீது கொண்ட பாசத்திலும் சிறந்து விளங்கிய இவர், தம் வாழ்நாள் முழுவதும் ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தம்மை முழுவதுமாக அர்ப்பணித்தார். 

அப்போது ஜான்சனிசம் (Johnsonism) என்ற நச்சுக் கலந்த கொள்கை ஃபிரான்ஸ் நாட்டை அதிர வைத்தபோது, அண்டை நாடுகளுடன் ஓயாத போரும் ஏற்பட்டது. 

இவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நாட்டில் கடுமையான பஞ்சத்தையும், பல்வேறு இன்னல்களையும் கொண்டு வந்தது. இதனால் கல்வியறிவு முழுவதும் இல்லாமல் போகவே, மீண்டும் ஏழை மாணவர்களுக்கென்று இரு பள்ளிகள் நிறுவி, நாள்தோறும் தவறாமல் ஆசிரியர்களுக்கு கற்று கொடுத்து, தங்குவதற்கென்று இல்லமும், உணவையும் அளித்து, எல்லா வழிகளிலும் ஊக்கமூட்டினார். 

காலத்திற்கேற்ப தொடக்க, மேல்நிலை பள்ளிகளை தொடங்கியதோடு ஆசிரியர் பயிற்சி பெறும் பள்ளிகளையும் தொடங்கி, பல யுத்திகளை கற்றுக் கொடுத்தார்.

குருக்களுக்கு இவரின் நிறுவனத்தில் பணிபுரிய இடமளிக்கவில்லை. இவர் கல்விப்பணியின் மூலம் "நேர்மையான கிறிஸ்தவர்களை உருவாக்குதல்" என்பதனை குறிக்கோளாக முன்வைத்திருந்தார்.

இவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியடைந்து, ஓர் முடிவுக்கு வந்தபோது, இச்சபையை தொடர்ந்து வழிநடத்த, சபை சகோதரர் ஒருவரிடம் தம் முழு பணியையும் ஒப்படைத்தார். 

தமது நெடிய உழைப்பினால் நல்ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் இழந்த ஜான், ஆஸ்துமா மற்றும் கீழ்வாதம் போன்ற பலவித நோய்களால் உடல் வேதனைகளை அனுபவித்தார். கி.பி. 1719ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் நாள், பெரிய வெள்ளிக்கிழமையன்று ஃபிரான்ஸில் ரூவான் என்ற இடத்தில் இவர் மரித்தார்.