ஏப்ரல் 28 : நற்செய்தி வாசகம்


நான் உலகிற்கு ஒளியாக வந்தேன்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 44-50

அக்காலத்தில்

இயேசு உரத்த குரலில் கூறியது: “என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார். என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்.

என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன். நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல. ஏனெனில் நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்.

என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது. இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும். ஏனெனில் நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்லவேண்டும், என்ன பேசவேண்டும் என்பதுபற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார். அவருடைய கட்டளை நிலைவாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------

பாஸ்கா காலம் நான்காம் வாரம் புதன்கிழமை

I திருத்தூதர் பணிகள் 12: 24: 13: 5

II யோவான் 12: 44-50

“அவர்கள் கடவுளின் வார்த்தையை அறிவித்தார்கள்”

கடவுளின் வார்த்தையை அறிவிக்கத் தவறிய மார்டின் நிமொல்லர்:

ஜெர்மனியைச் சார்ந்த இறையியலார் மார்ட்டின் நிமொல்லர் (Martin Niemoller 1892-1984). இவர் கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கைக்காக ஹிட்லரால் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டவர். வதைமுகாமிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக இவருக்கு முப்பது வினாடிகள் ஹில்டரோடு பேசுவதற்கு வாய்ப்புக்கிடைத்தது. அதில் ஹிட்லர் இவரிடம், “கிறிஸ்துவின் போதனைகளை விட்டுவிட்டு நீட்சேயின் தத்துவங்களை ஏற்றுக்கொள்” என்றார். இவரோ கிறிஸ்துவின்மீதுள்ள நம்பிக்கையிலிருந்து ஒருநாளும் நான் பின்வாங்கமாட்டேன் என்று தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் ஹிட்லர் இவரை வதைமுகாமிற்கு அனுப்பிவைத்தார்.

ஒருசில ஆண்டுகள் வதைமுகாமிலிருந்த இவர் விடுதலையாகி வெளியேவந்தார். அப்பொழுது இவர் மக்களிடம், “வதைமுகாமில் இருக்கும்பொழுது நான் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில் ஹிட்லரும் நானும் கடவுளின் நடுவர் இருக்கைக்கு முன்பாக நிறுத்தப்பட்டோம். இயேசு ஹிட்லரிடம் “நீ ஏன் இவ்வளவு பேரைக் கொன்றொழித்தாய்?’ என்று கேட்க, “யாரும் எனக்கு உம்முடைய வார்த்தையை எடுத்துரைக்கவில்லை. இதனால்தான் இப்படியெல்லாம் செய்தேன்’ என்றார். பின்னர் இயேசு என்னிடம், ‘உனக்கு இவரிடம் என்னுடைய வார்த்தையை எடுத்துரைக்க முப்பது வினாடிகள் தரப்பட்டனவே, நீ என்ன செய்தாய்?’ என்று கேட்க, நான், ‘நீட்சேயின் தத்துவங்களைக் குறித்து இவரோடு வாதிட்டேனே ஒழிய, உம்முடைய வார்த்தையை எடுத்துரைக்கவில்லை’ என்றேன். இதற்காக இயேசு என்னைக் கடிந்துகொண்டார். இதனால் நான் கடவுளின் வார்த்தையை முழுமையாக மக்களுக்கு எடுத்துரைக்கப்போகிறேன்” என்றார்.

ஆம், கடவுளின் வார்த்தையை அறிவிக்கவேண்டும் அதைத்தான் இந்த நிகழ்வும் இன்றைய இறைவார்த்தையையும் எடுத்துக்கூறுகின்றன. அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

புனித யாக்கோபு கொல்லப்படட்டது, புனித பேதுரு சிறைப்பிடிக்கப்பட்டது என்று தொடக்கக்காலத் திருஅவை பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானாலும், கடவுளின் வார்த்தை மென்மேலும் பரவிக்கொண்டே வந்தது. இவ்வாறு இறைவார்த்தை பரவியதற்குப் பலர் காரணமாக இருந்தாலும் ‘தனிப்பட்ட பணிக்கென’த் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித பர்னபாவும் புனித பவுல் முக்கியக் காரணமாக இருந்தார்கள். இவர்கள் இருவரும் சாலமி நகருக்கு வந்து அங்குள்ள யூதரின் தொழுகைக்கூடங்களில் கடவுளின் வார்த்தை அறிவித்து வந்தார்கள்..

இப்படிப் புனித பர்னபாவாலும் புனித பவுலாலும் அறிவிக்கப்பட்ட கடவுளின் வார்த்தை எத்தகையது என்பதை இன்றைய நற்செய்திவாசகம் கூறுகின்றது. கடவுளின் கட்டளை அல்லது அவரது வார்த்தை நிலைவாழ்வு தருகின்றது என்கிறது நற்செய்தி வாசகம். எனவே, நாம் புனித பர்னபா, புனித பவுலைப் போன்று நிலைவாழ்வு தரும் கடவுளின் வார்த்தையை மக்களுக்கு அறிவிப்போம்.

சிந்தனைக்கு:

 கடவுளின் வார்த்தைகள் நிலைவாழ்வு அளிக்கக்கூடியவை (யோவா 6: 68)

 எத்தனை இடர்கள் வந்தாலும், பவுல், பர்னபா போன்று இறைவார்த்தையை மக்களுக்குக் அறிவிப்போம்

 படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் (மாற் 16: 15) என்ற இயேசுவின் கட்டளையை மறந்துவிடவேண்டாம்.

இறைவாக்கு:

‘இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக்கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச்செய்வதில் நீ கருத்தாயிரு’ (2 திமொ 4: 2) என்பார் பவுல். எனவே, நாம் வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் கடவுளின் வார்த்தையை அறிவித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.