ஏப்ரல் 25 : நற்செய்தி வாசகம்


நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18

அக்காலத்தில்

இயேசு கூறியது: “நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக் கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றிக் கவலை இல்லை.

நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.

என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
-------------------------------------------------
பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு (ஏப்ரல் 25)

I திருத்தூதர் பணிகள் 4: 8-12
II 1 யோவான் 3: 1-2
III யோவான் 10: 11-18

தன்னுயிரையே கொடுத்த நல்லாயன் இயேசு

நிகழ்வு

இளைஞர்களின் எழுச்சி நாயகனாம் சுவாமி விவேகானந்தருக்கு நன்கு அறிமுகமானவர் ஆங்கிலேயரான ஜெனரல் ஸ்ட்ராவ். இவரிடம் விவேகானந்தர் மனம்விட்டுப் பேசுவதுண்டு. ஜெனரல் ஸ்ட்ராவும் விவேகானந்தரிடம் பல செய்திகளைப் பகிர்ந்துகொள்வதுண்டு.

ஒருநாள் விவேகானந்தர் இவரிடம், “நடந்து முடிந்த சிப்பாய்க் கலகத்தில் எங்களுடைய சிப்பாய்கள் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாகவும், கையில் தரமான துப்பாக்கிகளோடும், வெடிமருந்துகளோடும், உணவுக் பொருள்களோடும் இருந்தும், அவர்களால் ஏன் வெற்றி பெற முடியவில்லை?” என்றார். அதற்கு ஜெனரல் ஸ்ட்ராவ், “சிப்பாய்க் கலகத்தின்போது உங்களுடைய படைத்தலைவர்கள், சிப்பாய்களுக்கு முன்னால் நின்று போர் புரியாமல், அவர்களுக்குப் பின்னால் மிகவும் பாதுகாப்பாக நின்றுகொண்டு, ‘வீரர்களே! சண்டையிடுங்கள்” என்று கத்திக்கொண்டிருந்தார்கள். தலைமை ஏற்பவர்கள் தாங்கள் முதலில் இறப்பை எதிர்கொள்ள முன்வராவிட்டால், எஞ்சிய வீரர்கள் ஒருபோதும் இறப்பை எதிர்கொள்ள முன்வரமாட்டார்கள். இதுதான் உங்களுடைய தோல்விக் காரணம்” என்றார்.

இதைத் தொடர்ந்து விவேகானந்தர் அவரிடம், “நீங்கள் சொல்வதிலிருந்து ஒன்று எனக்கு நன்றாகப் புரிகிறது. அது என்னவெனில், தலைவன் என்பவன் தன் தலையைப் பலி கொடுக்கக்கூடியவனாய் இருக்கவேண்டும். ஒரு இலட்சியத்திற்காக உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனே உண்மையான தலைவன் என்பதாகும்” என்றான்.

ஆம், தலையைப் பலியாகக் கொடுக்கக்கூடியவனே உண்மையான தலைவன், ஆயன். இன்று நாம் நல்லாயன் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்று நாம் வாசிக்கக்கேட்ட வாசகங்கள், இயேசு கிறிஸ்துவை எத்தகைய ஆயனாக முன்னிலைப்படுத்துகின்றன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஆடுகளுக்காக உயிரையும் தரும் நல்லாயன்

மேய்ச்சல் நிலங்களைத் தேடி, நாடோடிகளாய் அலைந்து திரிந்த இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய கடவுளை ஓர் ஆயனாகப் பார்த்ததில் வியப்பேதும் இல்லை (திபா 23: 1; எசா 40: 11); ஆனால், இஸ்ரயேலை ஆயரென ஆண்டவர்கள் மந்தையைச் சரியாக மேய்க்காமலும், நலிவுற்றதைத் திடப்படுத்தாமலும், நோயுற்றதை நலப்படுத்தாமலும், காயப்பட்டதிற்குக் கட்டுப் போடாமலும், வழிதவறிப்போனவற்றைத் தேடாமலும் இருந்து, கொழுத்ததை உண்டு, மந்தையைச் சிதறடித்து வந்ததால் (எசே 34: 1-6) ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்தார் (யோவா 10: 10) “நல்ல ஆயன்” இயேசு.

“நல்லாயன் நானே” என்றும், “எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே” (யோவா 10:8) என்றும் சொல்வதற்கு இயேசுவுக்கு மிகுந்த துணிச்சல் இருந்திருக்கவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் இயேசு இவ்வார்த்தைகளைப் பேசிய நேரம், எருசலேமில் அர்ப்பண விழாவானது நடந்துகொண்டிருந்தது (யோவா 10: 22). இவ்விழாவானது கி.மு.165 ஆம் ஆண்டு யூதா மக்கபே, அந்தியோக்கு எப்பிபானை வெற்றிகொண்டு, எருசலேம் திருக்கோயிலை மீண்டுமாக ஆண்டவருக்கு அர்ப்பணித்ததன் நினைவாகக் கொண்டாடப்பட்டது. நிச்சயம் இவ்விழாவிற்குத் தங்களை ‘ஆயர்கள்’ என்று அழைத்துக்கொண்ட யூத சமயத்தலைவர்கள் வந்திருக்கவேண்டும். அவர்களுக்கு நடுவில், தனக்கு முன்பாக வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே என்று சொல்லிவிட்டு, நல்லாயன் நானே என்று இயேசு சொல்வதால், அவருக்கு மிகுந்த துணிவு இருந்திருக்கவேண்டும் என்று சொல்லத் தோன்றுகின்றது.

ஆம், இயேசு தனக்கு முன்பிருந்தவர்களைப் போன்று மந்தையிலிருந்த கொழுத்ததைத் தின்றவர் அல்ல, மாறாக, அவர் மந்தைக்காக, ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். அதனால் அவர் நல்லாயனாகத் திகழ்கின்றார்.

ஆடுகளை அறிந்த நல்லாயன்

எல்லாராலும் ஆயனாக, அதுவும் நல்லாயனாக முடியாது. காரணம், ஒரு நல்லாயன் ஆடுகளின் பெயரை மட்டுமல்லாது, அவற்றின் தேவையையும் நன்றாக அறிந்து வைத்திருப்பான். “பெயர் சொல்லி உன்னை அழைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே” (எசா 45: 3) என்ற வார்த்தைகளும், “நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார் (மத் 6: 8) என்ற வார்த்தைகளும் கடவுள் நல்லாயனாய் இருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்திப்படுத்துகின்றன.

இப்படி ஆடுகளின் பெயரையும் தேவையையும் அறிய, அவற்றின்மீது அன்புகொண்டிருப்பவரால் மட்டுமே முடியும். கடவுளாகிய ஆண்டவர் நம்மீது பேரன்பு கொண்டுள்ளார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. திருத்தூதர் புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இடம்பெறும், “நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார்!” என்ற வார்த்தைகளே இதற்குச் சான்றாக இருக்கின்றன. நற்செய்தியில் இயேசு, “என் ஆடுகளை நான் அறிந்திருக்கின்றேன்” என்று சொல்கிறார் எனில், அவர் தன் ஆடுகளை – நம்மை – முழுமையான அன்பு செய்வதாலேயே அப்படிச் சொல்கின்றார் என்று புரிந்துகொள்ளலாம்.

இன்றைக்கு மக்கள் தலைவர்கள் என்று இருக்கும் பலர் மக்களுடைய தேவைகளையும், அவர்களுடைய பிரச்சனைகளையும் அறியாமல், மழைக்கு மட்டும் வந்துபோகும் புற்றீசல்கள்போல், தேர்தல் சமயங்களில் மட்டும் வந்து போய்க்கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு நடுவில், தன் ஆடுகளை – மக்களை – முழுமையாக அறிந்துவைத்திருக்கும் இயேசு நல்லாயன்தான்.

ஆடுகளுக்கு மீட்பளிக்கும் நல்லாயன்

திருத்தூதர் புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “எல்லா மனிதரும் மீட்புப்பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்” (1திமொ 2: 4). பவுல் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளை இன்றைய நற்செய்தி வாசகத்தோடும், முதல் வாசகத்தோடும் இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், நல்லாயனாம் இயேசு எல்லா மனிதரும் மீட்பு பெற விரும்புகின்றார் என்பது புரியும்.

நற்செய்தியில் இயேசு, “இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன” என்கின்றார். இங்கு இயேசு குறிப்பிடும் ‘வேறு ஆடுகள்’ என்பன, ஏழைகள் மற்றும் பிறவினத்தார் என்று திருவிவிலிய அறிஞர்கள் சொல்வார்கள். ஆகையால், ஏழைகளும் பிறவினத்து மக்களும் அவருக்கு ஆடுகளாக இருக்கின்றார்கள் அல்லது அவர் எல்லாருக்கும் ஆயராக இருக்கின்றார் என்பது உறுதியாகின்றது. இப்படி எல்லாருக்கும் ஆயராக இருக்கும் நல்லாயன் இயேசு, எல்லாருக்கும் மீட்பு அளிக்கக்கூடியவராக இருக்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் புனித பேதுரு, “இயேசுவாலே அன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை” என்கின்றார்.

இன்றைக்குப் பலர் ‘மக்கள் தலைவர்கள்’ என்று சொல்லிக்கொண்டு அலையலாம். அவர்களால் யாருக்கும் மீட்பளிக்க முடியாது. நல்லாயனாம் இயேசுவாலேயே எல்லாருக்கும் மீட்பளிக்க முடியும். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை! இப்படி நமக்காகத் தன்னுயிர் தந்து, நம்மை முழுவதும் அறிந்து, நமக்கு மீட்பினை வழங்கும் நல்லாயனாகிய இயேசுவின் ஆடுகளாக இருக்க, நாம் அவரது குரல் கேட்டு நடப்பது தேவையான ஒன்று. ஏனெனில், இயேசுவின் ஆடுகள் அவரது குரலுக்குச் செவிமடுக்கும்.

நாம் நல்லாயன் இயேசுவின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரின் ஆடுகளாக முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘மக்களுக்குப் பணிபுரிவது ஒன்றே ஆயர்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள முதன்மையான கடமை’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, மக்களுக்குப் பணிபுரிவது ஆயர்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் மட்டுமல்லாது, எல்லாருக்கும் அளிக்கப்பட்டுள்ள முதன்மையான கடமை என உணர்ந்து, நல்லாயன் இயேசுவைப் போன்று மக்களுக்காக நம்மையே தர முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.