ஏப்ரல் 24 : நற்செய்தி வாசகம்


நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 60-69

அக்காலத்தில்

இயேசு நிலைவாழ்வு அளிக்கும் உணவு பற்றி கற்பித்துக்கொண்டிருந்த பொழுது, சீடர் பலர் இதைக் கேட்டு, “இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” என்று பேசிக்கொண்டனர். இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், “நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை” என்றார்.

நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக்கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது. மேலும் அவர், “இதன் காரணமாகத்தான் ‘என் தந்தை அருள்கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது’ என்று உங்களுக்குக் கூறினேன்” என்றார்.

அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரைவிட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------------------------

பாஸ்கா காலம் மூன்றாம் வாரம் சனிக்கிழமை

I திருத்தூதர் பணிகள் 9: 31-42

II யோவான் 6: 60-69

“இயேசுவின் வாழ்வளிக்கும் வார்த்தைகள்”

புதுவாழ்வு தந்த இறைவார்த்தை:

காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண் தன் கணவருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார். இடையில் இப்பெண்ணும் இவருடைய கணவருக்குமிடையே திடீரென்று கருத்துவேறுபாடு ஏற்பட்டு, விவாகரித்துவரை சென்றது. இதனால் இவர் தற்கொலைவரை சென்றார். அப்பொழுதுதான் இவருக்கு, ‘எதற்கும் நம்முடைய பங்குத்தந்தையைப் பார்த்து, அவரிடம் நடந்தது அனைத்தையும் சொல்லி, ஆலோசனை கேட்போம்!’ என்ற எண்ணமானது ஏற்பட்டது. அதன்படி இவர் பங்குத்தந்தையிடம் சென்று, நடந்தது அனைத்தையும் எடுத்துச் சொன்னார். உடனே பங்குத்தந்தை இவரிடம், “இனிமேல் உனக்கு எப்பொழுதெல்லாம் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றுகின்றதோ, அப்பொழுதெல்லாம் நீ, ‘கடவுளை நோக்கி, உரத்த குரலில் மன்றாடுகின்றேன். கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள வேண்டுமென்று அவரை நோக்கி மன்றாடுகின்றேன்’ எனத் தொடங்கும் திருப்பாடல் 77 ஐ எடுத்து வாசி” என்று அனுப்பிவைத்தார்.

இவரும் தனக்கு எப்பொழுதெல்லாம் தற்கொலை செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதோ, அப்பொழுதெல்லாம் திருப்பாடல் 77 ஐ எடுத்து வாசித்து ஆறுதல் அடைந்தார். மட்டுமல்லாமல், இவர் தன் கணவரை ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடி வந்ததால், அவர் மனம்மாற்றம் அடைந்து, இவரை அன்புசெய்யத் தொடங்கினார்.

ஆம், தற்கொலை செய்துகொள்ளத் துணிந்த பெண்மணி, இறைவார்த்தையால் புது வாழ்வு பெற்றார். இன்றைய இறைவார்த்தை, நிலைவாழ்வளிக்கும் வார்த்தையைப் பற்றிப் பேசுகின்றது. அதைக்குறித்து பேசுகின்றது. அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

நற்செய்தியில் இயேசு, “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” என்று தம் சீடர்களைப் பார்த்துக் கேட்கின்றபொழுது, புனித பேதுரு அவரிடம், “.ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம். நிலைவாழ்வளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன” என்பார். புனித பேதுரு சொல்வதுபோல் இயேசுவின் வார்த்தைகள் நிலைவாழ்வு அளிக்கக்கூடியவை. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு இன்றைய முதல் வாசகம்.

முதல் வாசகத்தில் திருத்தூதர் புனித பேதுரு, முடக்குவாதமுற்ற ஐனேயா என்பவரை எழுந்து நடக்கச் செய்து, இறந்துபோன தபித்தாவை உயிர்த்தெழச் செய்கிறார். அவ்வாறு அவர் செய்கினறபோது, இயேசு பயன்படுத்திய “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” (யோவா 5:8) என்ற வார்த்தைகளையும் “எழுந்திடு” (மாற் 5: 41) என்ற வார்த்தைகளையும் பயன்படுத்துவதை நாம் காணலாம். இயேசு ஒரு வார்த்தைதான் சொன்னார் முடக்குவாதமுற்றவர் எழுந்து நடந்தார்; இறந்தவர் உயிர்த்தெழுந்தார். இயேசுவைப் போன்று புனித பேதுரும் ஒரு வார்த்தை சொல்ல, முடக்குவாதமுற்றவர் எழுந்து நடக்கிறார்; இறந்தவர் உயிர்த்தெழுகிறார். இதன்மூலம் கடவுளின் வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை நாம் புரிந்துகொள்ளலாம்.

சிந்தனைக்கு:

 கடவுளின் வார்த்தை உயிருள்ளது; ஆற்றல் வாய்ந்தது (எபி 4: 12).

 நமது வாழ்வில் இறைவார்த்தையின் வல்லமையை நாம் உணர்ந்திருக்கின்றோமா?

 பெறப்பட்ட இறைவார்த்தை மூடிப்பாதுகாப்பதற்கு அல்ல. நம் சிந்தனையில் நாள்தோறும் பேணி, நம்பிக்கையில் பாதுக்காக்கப்படவே எதிர்பார்க்கப்படுகின்றது – திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவாக்கு:

‘ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்’ (எசா 40:  என்கிறது இறைவார்த்தை. எனவே, என்றென்றும் நிலைத்திருக்கும் இறைவார்த்தையின் வாழ்வாக்கி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.