ஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்


எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 52-59

அக்காலத்தில்

“நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்ற வாக்குவாதம் யூதர்களிடையே எழுந்தது.

இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.” இயேசு கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில் இவ்வாறு கற்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

--------------------------------------------------------------

பாஸ்கா காலம் மூன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை

I திருத்தூதர் பணிகள் 9: 1-20

II யோவான் 6: 52-59

இயேசுவைத் துன்புறுத்திய பவுல், அவர் இறைமகன் எனச் சான்று பகர்தல்

திருடன் மறைப்போதகராதல்:

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் திருடன் ஒருவன் இருந்தான். இவன் யாரிடம் எப்படித் திருடலாம் என்பதில் கைதேர்ந்தவனாக இருந்தான். இவனுக்குப் பத்தொன்பது வயது நடக்கும்பொழுது ஒருபெரிய திருட்டில் ஈடுபட்டுக் கையும் மெய்யுமாக மாட்டிக்கொண்டான். இதனால் இவனுக்குப் பதினாறு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டான். சிறையிலும் இவன் எந்தவொரு மாற்றமுமில்லாமல், முரடனாகவே இருந்தான். இந்நிலையில் ஒருநாள் சிறைச்சாலைக்குத் திருப்பலி நிறைவேற்ற வந்த அருள்பணியாளர் ஒருவர், ஒருகாலத்தில் தான் ஒரு பெரிய பாவியாக இருந்ததையும், பின்னர் மனமாற்றம் பெற்று அருள்பணியாளராக இருப்பதையும் பகிர்ந்துகொண்டார். இது இளைஞனுடைய உள்ளத்தை வெகுவாகப் பதித்தது. ஆதலால் இவன், ‘நான் ஏன் இந்த அருள்பணியாளரைப் போன்று மனந்திருந்தி, கடவுளின் வார்த்தையை மக்களுக்கு அறிவிக்கக்கூடாது?’ என்று முடிவுசெய்தான்.

இதற்கு இவன் சிறைச்சாலையில் நல்லவிதமாய் நடக்கத் தொடங்கினான். தனக்குப் பணிக்கப்பட்ட பணிகளை மிகுந்த ஈடுபாட்டோடு செய்து, எல்லாரிடத்திலும் அன்பாய் இருந்தான். இதையெல்லாம் பார்த்த சிறையதிகாரி இவனது தண்டனைக்காலத்தைப் ஒன்பது ஆண்டுகளாகக் குறைத்து, விரைவில் இவன் சிறையிலிருந்து விடுதலையாகும் படி செய்தார். சிறையிலிருந்து விடுதலையான பின்பு இவன் முன்பு தான் முடிவுசெய்தது போன்று, மறைப்பணியாளராகமாறிக் கடவுளின் வார்த்தையை எடுத்துரைக்கத் தொடங்கினான். இப்படி ஒருகாலத்தில் திருடனாக இருந்து, மனம்மாறிக் கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்த அந்த இளைஞன்தான் ஜெர்ரி மெக்குலே (Jerry Mcauley 1839-1884).

பெரிய திருடனாக இருந்த ஜெர்ரி மெக்குலே எப்படி மனமாறிக் கடவுளின் வார்த்தையை அறிவித்தாரோ, அப்படிக் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வந்த சவுல், இன்றைய முதல்வாசகத்தில், இயேசுவே இறைமகன் என்ற அறிவிக்கின்றார். அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தவர் சவுல். இவர் தமஸ்கு நகர் நோக்கிப் போகும்பொழுது, ஆண்டவர் இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கக் கடவுளால் தேர்ந்துகொள்ளப்படும் கருவியாகின்றார். ஆம், எந்த மனிதர் கிறிஸ்தவர்களை, அவர்களில் இருக்கும் கிறிஸ்துவைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தாரோ, அவரே இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் நாம் வாசிப்பது போன்று, இயேசுவே இறைமகன் என்று அறிவித்து, அவருக்காகத் தம் உயிரையும் இழக்கத் துணிகின்றார். கடவுள் நினைத்தால் யாரையும் தன்னுடைய கருவியாய்த் தேர்ந்துகொண்டு, அவர்கள் வழியாகத் தன் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கச் செய்யலாம் என்பதற்குப் பவுல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

சிந்தனைக்கு:

 நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன் (எரே 1: 5)

 இயேசுவைப் போன்று, பவுலைப் போன்று பிற இனத்தாருக்கும் – எல்லாருக்கும் - ஒளியாக இருக்கின்றோமா?

 கடவுள் நம் வழியாகச் செயல்பட, நாம் அவரது கைகளில் நம்மையே ஒப்புக்கொடுப்போம்

இறைவாக்கு:

‘இனி வாழ்பவன் நான் அல்ல; என்னுள் கிறிஸ்துவே வாழ்கிறார்’ (கலா 2: 20) என்பார் புனித பவுல். எனவே, கிறிஸ்துவால் ஆள்கொள்ளப்பட்டார்களாய், அவர் பணியைச்செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.