ஏப்ரல் 22 : நற்செய்தி வாசகம்


விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 44-51

அக்காலத்தில்

இயேசு யூதர்களைப் பார்த்துக் கூறியது: “என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். ‘கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்’ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது.

தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.

வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

-------------------------------------------------------------

I திருத்தூதர் பணிகள் 8: 26-40

II யோவான் 6: 44-51

“கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவர்”

கல்லாமையினால் நேர்ந்த அவலம்:

சோழநாட்டை வளவர் என்ற மன்னர் ஆண்டுவந்தார். இவருக்கு நள்ளி என்றொரு மகன் இருந்தான். நள்ளி, மன்னருக்கு ஒரே மகன் என்பதால் அவர் இவனுக்கு மிகுந்த செல்லம் கொடுத்து வளர்த்துவந்தார். மேலும் அவர் தன் மகன் கல்வி கற்க அவனைக் குருகுலத்திற்கு அனுப்பாமல், அரண்மனைக்கே ஆசிரியர்களை வரவழைத்துப் கல்விபுகட்டினார். அப்படியிருந்தும் நள்ளிக்கு மண்டையில் எதுவும் ஏறவில்லை. இந்நிலையில் மன்னர் திடீரென இறந்துவிட, அவருக்குப் பின் நள்ளி ஆட்சிப்பொறுப்பை ஏற்றான். அவனுக்கு படிக்கவோ எழுதவோ தெரியாததால் தம் நெருங்கிய நண்பர்களை அமைச்சர்களாக வைத்துக்கொண்டு எல்லாற்றுக்கும் அவர்களுடைய உதவியையே நாடினான். அதே நேரத்தில் படித்தவர்கள், புலவர்கள் யாராவது தன் அரண்மனைக்கு வந்தால், அவர்களைக் கேலிசெய்து அனுப்பி வைத்தான்.

ஒருநாள் அவனுடைய அரண்மனைக்குக் குமரேசனார் என்ற புலவர் வந்து, கவிதை பாடினார். புலவரை அவன் மதிக்காமல், கேலிசெய்து அனுப்பினான். இதனால் அவர் வருத்தத்தோடு திரும்பிச்சென்றார். வழியில் அவரைப் பக்கத்து நாட்டுமன்னரான விக்கிரம சோழன் சந்தித்துக் காரணத்தைக்கேட்க, அவர் எல்லாவற்றையும் எடுத்துச்சொன்னார். இது குறித்து விளக்கமளிக்குமாறு விக்கிரமசோழன் நள்ளிமன்னருக்கு ஓர் ஓலை அனுப்பியபொழுது, அவன் அந்த ஓலையைப் போருக்கான ஓலைக்கான என நினைத்துக்கொண்டு, விக்கரம சோழருடைய நாட்டின்மீது போர்தொடுக்க முயன்றபொழுது, போரில் வீழ்த்தப்பட்டான்.

கல்வியறிவின்மை எவ்வளவு பெரிய அழிவைக் கொண்டுவரும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. அடிப்படைக் கல்வியை மட்டுமல்ல, ஆண்டவர் கற்றுத்தருவதை கற்கவேண்டும். அதை இன்றைய இறைவார்த்தை கூறுகின்றது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

நற்செய்தியில் இயேசு “கடவுள்தானே அனைவருக்கும் கற்றுத்தருவார்” (எசா 54: 3; எரே 31: 31-34) என்ற இறைவார்த்தையை மேற்கோள் காட்டிப்பேசுகிறார். இவ்வார்த்தைக்கு அர்த்தம் தருவதாய் இருக்கின்றது இன்றைய முதல்வாசகம். எருசலேமிலிருந்து திரும்பிவரும் எத்தியோப்பிய நிதியமைச்சரிடம் பிலிப்பை அனுப்பிவைக்கும் தூயஆவியார், அவர்மூலம் எத்தியோப்பிய நிதியமைச்சர் வாசித்துக்கொண்டிருக்கும் துன்புறும் ஊழியரைப்பற்றிய இறைவார்த்தைப் பகுதிக்கு (எசா 53) விளக்கமளிக்குமாறு செய்கிறார். பிலிப்பு கொடுத்த விளக்கத்தினால் தொடப்பட்ட எத்தியோப்பிய நிதியமைச்சர் திருமுழுக்குப்பெற்று மகிழ்ச்சியோடு தம்வழியே செல்கின்றார். திருத்தூதர் பணிகள் நூலில் இடம்பெறும் இந்த இவிறைவார்த்தைப் பகுதி, கடவுள் மக்களுக்குத் தரவிழைகிறார். அதற்கு நாம் ஒவ்வொருவரும் பிலிப்பைப் போன்று கருவியாய் இருந்து செயல்படவேண்டும் என்ற உண்மையைத் தெளிவுபடுத்துகின்றது.

சிந்தனைக்கு:

 இயேசு தம் சீடர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போன்று, எல்லாவற்றையும் நமக்குக் கற்றுத்தருகின்றார்.

 கடவுள் நமக்குக் கற்றுத்தருவதற்கு நாம் திறந்தபுத்தகமாக இருப்பது சிறப்பு.

 கடவுள் நமக்குக் கற்றுத்தருவதை பிறருக்கு நாம் கற்றுத்தரும்போதுதான் கற்பது முழுமைபெறுகின்றது.

இறைவாக்கு:

‘எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல்’ (எரே 1: 7) என்பார் ஆண்டவர். எனவே, நாம் எவற்றையெல்லாம் மக்களிடம் சொல்ல கடவுள் நமக்குக் கற்றுத் தருகின்றாரோ, அவற்றை மக்களிடம் சொல்லி, அதன்படி நாமும் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.