ஏப்ரல் 21 : நற்செய்தி வாசகம்


மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 35-40

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி: “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன். ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்.

அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச்செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

---------------------------------------------------

I திருத்தூதர் பணிகள் 8: 1b-8

II யோவான் 6: 35-40

இன்னல்கள் நடுவிலும் வளர்ந்த திருஅவை

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட சிற்றூர் மக்கள்

அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். இவர் இயேசுவைப் பற்றி ஊர் ஊராகச் சென்று நற்செய்தியை அறிவித்தார். அவ்வாறு இவர் நற்செய்தி அறிவிக்கச்செல்லும்போது கால்களில் செருப்புகூட அணியாமல் நற்செய்தி அறிவித்தார்.

ஒருநாள் இவர் ஒரு சிற்றூருக்கு நற்செய்தி அறிவிக்கச்சென்றபோது, அவ்வூரிலிருந்த மக்கள் இவரை ஏற்றுக்கொள்ளாமல், துன்புறுத்தி அனுப்பினர். இதனால் இவர் அவ்வூருக்கு வெளியே வந்து, ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கிவிட்டார். இவர் கண்விழித்துப் பார்த்தபொழுது, இவருக்கு முன்பாக ஊரே திரண்டிருந்தது. இவர் காரணம் புரியாமல் திகைத்தார். அப்பொழுது அவ்வூர் தலைவர் இவரிடம் பேசத்தொடங்கினார். “சுவாமி! உண்மையில் நீங்கள் யாரென்று தெரியாமல், உங்களை அடித்துத் துன்புறுத்தி அனுப்பிவிட்டோம். அதன்பிறகு நீங்கள் இங்குவந்து படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கும்பொழுது, எங்கள் ஊரைச்சார்ந்த ஒருவர் தற்செயலாக உங்கள் காலடிகளைப் பார்த்தபொழுது, அவை ஓர் இறைமனிதரின் காலடிகளைப் போன்று இருப்பதைக்கண்டு, செய்தியை ஊர் மக்களிடம் சொல்ல, நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம்; இப்பொழுது நீங்கள் குற்றங்களை மன்னித்துத் திருமுழுக்குக்கொடும்” என்றார்.

இதைக்கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த அருள்பணியாளர், ‘இவ்வூர் மக்கள் அனைவரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்குத்தானோ நான் இவ்வாறு அடித்துத் துன்புறுத்தப்பட்டேன்?’ என்று மனத்தில் நினைத்துக்கொண்டு, அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, கிறிஸ்தவர்களாகினார்.

ஆம், இவ்வருள்பணியாளர் ஒருபக்கம் துன்பப்பட்டாலும், இன்னொரு பக்கம், அவரது துன்பமே மக்கள் அனைவரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளக் காரணமாக இருந்தது. இன்றைய முதல்வாசகத்தில் எருசலேம் திருஅவை இன்னலுற்றாலும், தொடர்ந்து வளர்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

திருத்தொண்டரான புனித ஸ்தேவான் கல்லால் எறிந்து கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, எருசலேம் திருஅவை பெரும் இன்னலுக்குள்ளாகிறது. இதனால் திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப்புறமெங்கும் சிதறுண்டு போகிறார்கள். இவ்வாறு சிதறுண்டுபோன மக்கள் தாங்கள் சென்ற இடங்களில் ஆண்டவர் இயேசுவைப் பற்றி நற்செய்தி அறிவிக்கின்றார்கள். ஒருபக்கம் எருசலேம் திருஅவை இன்னலுற்றாலும் இன்னொரு பக்கம் சிதறுண்டு போன மக்கள் தாங்கள் சென்ற இடங்களில் நற்செய்தியை அறிவித்தது மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கின்றது. இதன்மூலம், “.....யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” (திப 1: 😎 என்ற இயேசுவின் வார்த்தைகள் நிறைவேறுகின்றன. தீமையிலும் ஒரு நன்மை உண்டு என்ற வரிகளுக்கேற்ப நம்முடைய வாழ்வில் வரும் சில துன்பங்களும் நமக்கு நன்மையை கொண்டுவரும் என்பதை மறந்துவிடவேண்டாம்.

சிந்தனைக்கு:

 உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் (யோவா 16: 20)

 புயலுக்குப் பின்னே அமைதி என்பதுபோல், துன்பத்திற்குப் பின்னே இன்பம் வரும்.

 இறுதிவரை மன உறுதியோடு இருப்போரே மீட்புப் பெறுவர் (மத் 24: 13)

இறைவாக்கு:

‘உங்கள் நம்பிக்கை மெய்ப்பிக்கப்படவே நீங்கள் துயருறுகிறீர்கள்’ (1 பேது 1: 7) என்பார் பேதுரு. எனவே, நமது நம்பிக்கை மெய்ப்பிக்கப்படவே நாம் துயருறுகின்றோம் என்பதை உணர்ந்தவர்களாய், இயேசுவின் வழிநடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.