ஏப்ரல் 20 : நற்செய்தி வாசகம்


வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; என் தந்தையே.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-35

அக்காலத்தில்

மக்கள் இயேசுவிடம், “நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்’ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!” என்றனர்.

இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார்.

அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------

I திருத்தூதர் பணிகள் 7: 51-8: 1a

II யோவான் 6: 30-35

“இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்”

தன் தம்பியைக் கொன்றவனுக்காக இறைவனிடம் மன்றாடிய அண்ணன்:

ஒரு கிறிஸ்தவக் கிராமத்தில் அண்ணன், தம்பி இருவர் இருந்தனர். இவர்கள் இருவரும் சொந்தமாகவும், அதே நேரத்தில் தனித்தனியாகவும் தொழில் செய்துவந்தனர். இருவருடைய தொழிலும் நன்றாக நடைபெற்றன. இதில் தம்பிக்குத் தொழில்ரீதியாக நிறைய எதிரிகள் உருவானார்கள். அதில் ஓர் எதிரி அவரைத் திட்டமிட்டுக் கொலைசெய்தான்.

செய்தியறிந்த அண்ணன் மிகவும் வருந்தினார். அவருக்கு அறிமுகமானவர்கள் எல்லாரும் அவரிடம் வந்து, கொலையாளிக்குத் தக்க தண்டனையை நீதிமன்றத்திலிருந்து வாங்கித் தருமாறு கேட்டுக்கொண்டார்கள்; ஆனால், அவர் அவர்களிடம், “நான் என்னுடைய தம்பியைக் கொலை செய்தவரை நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனையை வாங்கிதரப் போவதில்லை; மாறாக நான் அவருக்காக இறைவனிடம் மன்றாடப் போகிறேன்” என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அவரை வியப்போடு பார்த்தவர்களிடம் அவர், “வழக்கமாக எனக்கு நெருக்கமாக இருப்பவர்களின் பெயர்களை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்து, அவர்களுக்காக நான் இறைவனிடம் வேண்டுவேன். இப்பொழுது என்னுடைய தம்பி இறந்துவிட்டான் அல்லவா! அதனால் நான் அவனுடைய பெயரை நீக்கிவிட்டு, அவனுடைய பெயர் இருந்த இடத்தில், அவனைக் கொலை செய்தவனுடைய பெயரை எழுதி, அவனுக்காக இறைவனிடம் மன்றாடப் போகிறேன்” என்றார்.

தன் தம்பியைக் கொலை செய்தவனுக்காக இறைவனிடம் மன்றாடிய அந்த அண்ணன்தான் உள்ளத்தால் எத்துணை உயர்ந்தவராக இருக்கின்றார்! இன்றைய முதல் வாசகத்தில் ஸ்தேவான் தன்னைக் கல்லால் எறிந்து கொன்றவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

ஸ்தேவன் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் பார்த்து, “இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும், ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே...” என்று சொன்னதும், அவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவர்மீது கல்லெறிகின்றார்கள். அப்பொழுது ஸ்தேவான் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான்: “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்” என்பதாகும்.

“தந்தையே இவர்களை மன்னியும்” (லூக் 23: 34) என்ற இயேசுவின் வார்த்தைகளை ஒத்திருக்கும் ஸ்தேவானின் வார்த்தைகள், அவர் தன்னைக் கல்லால் எறிந்து கொன்றவர்களை மன்னிப்பதை வெளிப்படுத்துவையாக இருக்கின்றன. ஸ்தேவான் தன்னைக் கொன்றவர்களை மன்னித்தன் மூலம் இயேசுவின் உண்மையான சீடராகின்றார். நாமும் நமக்கெதிராகத் தீமை செய்தவர்களை மன்னித்து, அவரது உண்மையான சீடர்களாவோம்.

சிந்தனைக்கு:

 மன்னிப்பே மகிழ்ச்சிக்கான வழி – பழமொழி

 எப்பொழுதும் உங்களுடைய பகைவர்களை மன்னியுங்கள். ஏனெனில், மன்னிப்பை போன்று வேறு எதுவும் உங்களுடைய பகைவர்களுக்கு எரிச்சல் முட்டாது – ஆஸ்கர் வைல்ட்

 ஒருவர் செய்த குற்றங்களை மன்னித்து, இந்த மண்ணில் அன்பும் அமைதியும் தழைக்கச் செய்வோம்.

இறைவாக்கு:

‘ஆண்டவர் மன்னித்தது போல, நீங்களும் மன்னிக்க வேண்டும்’ (கொலோ 3: 13) என்பார் புனித பவுல். எனவே, ஆண்டவர் நம்மை மன்னித்தது போல், ஒருவர் மற்றவரை மன்னித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.