ஏப்ரல் 18 : நற்செய்தி வாசகம்


மெசியா துன்புற்று, இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்று எழுதியுள்ளது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48

அக்காலத்தில்

சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார். அவர்கள் வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.

பின்பு அவர் அவர்களைப் பார்த்து, “மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே” என்றார்; அப்போது மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், ‘மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், “பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------

மனம்மாறி ஆண்டவரிடம் திரும்புங்கள்”

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு (ஏப்ரல் 18)

I திருத்தூதர் பணிகள் 3: 13-15, 17-19

II 1 யோவான் 2: 1-5

III லூக்கா 24: 35-48

“மனம்மாறி ஆண்டவரிடம் திரும்புங்கள்”

நிகழ்வு

2001 ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 11 ஆம் நாள், தீவிரவாதிகள் அமெரிக்காவில் நடத்திய இரட்டைக் கோபுரத் தாக்குதலில் ஆயிரக்காண மக்கள் கொல்லப்பட்டார்கள்; பலர் படுகாயமடைந்தார்கள். ஒருசிலர் இடுபாடுகளுக்குள் சிக்கி, உயிருக்குப் போராடினார்கள். இப்படி இடுப்பாடுகளுள் சிக்கி, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களில் கடைசியாக மீட்கப்பட்டவர் ஜெனில்லி குஸ்மேன் மாக்மில்லன் (Genelle Gusman Mcmillan) என்ற பெண்மணி ஆவார்.

இவர் இரட்டைக்கோபுரத்தில் இருந்த ஓர் அலுவலகத்தில் பணியாளராக வேலைசெய்து வந்தார். முப்பது வயது நிறைந்த இவருக்குப் பதினான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.. ஆனாலும், இவர் தனக்கென ஒரு குடும்பம் இருக்கின்றது என்ற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாமல், தன் ஆண் நண்பரோடு சேர்த்துகொண்டு குடிப்பதும், பல இடங்களுக்குச் சுற்றுவதும், தகாத உறவில் ஈடுபடுவதுமாக இருந்தார்.

இந்நிலையில் இரட்டைக் கோபுரம் தாக்கப்படுவதைக் கண்ட இவர், தான் இருந்த இடத்தில் முழந்தாள்படியிட்டு, “இயேசுவே! இத்தனை ஆண்டுகளும் நான் வாழ்ந்து வந்த முறைகேடான வாழ்க்கையை நினைத்து நான் மனம் வருந்துகின்றேன். ஒருவேளை நான் இதிலிருந்து உயிர்பிழைக்க நேர்ந்தால், புதியதொரு வாழ்க்கை வாழ்வேன்” என்று வேண்டினார். இவருடைய நல்ல நேரம், இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட இவர் இறக்கவில்லை; மாறாக உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தார். அப்பொழுது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இவருடைய சத்தத்தைக் கேட்டு, இவரை மீட்டு, மருத்துவனையில் சேர்த்து இவரது உயிரைக் காப்பாற்றினர். இதன்பிறகு இவர் தான் இயேசுவுக்கு வாக்குறுதி அளித்தது போன்றே மனம்மாறி புதியதொரு வாழ்க்கை வாழத் தொடங்கினார்.

ஆம், ஒருகாலத்தில் முறை தவறி வாழ்ந்த ஜெனில்லி, ஆண்டவர் இயேசுவால் ஆபத்திலிருந்து காக்கப்பட்டதும், மனம்மாறி அவரிடம் திரும்பி வந்து புதியதொரு வாழ்க்கை வாழத் தொடங்கினார். பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “மனம்மாறி ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்” என்றோர் அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பாவம் செய்யாதிருங்கள்

மனிதர்களாகிய நாம் வலுக்குறைந்தவர்கள்; சிந்தனையாலும் சொல்லாமலும் செயலாலும் மிக எளிதாகத் தவறு செய்யக்கூடியவர்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் புனித யோவான், “நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்” என்கிறார். புனித யோவான் சொல்வது போன்று நம்மால் பாவம் செய்யாதிருக்க முடியுமா...?

திருத்தூதர் புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “நான் செய்வது என்னவென்று எனக்கே தெரியவில்லை; எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை; எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்.” (உரோ 7: 15). புனித பவுலுக்கு ஏற்பட்ட இந்த உள்மனப் போராட்டத்தைப் போன்றுதான் பலருக்கும் இன்றைக்குப் பாவம் செய்யாதிருக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், வலுவின்மையால் பாவத்தில் விழுந்துவிடுகின்ற உள்மனப் போராட்டம் நடந்துகொண்டே இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் நம்மால் பாவம் செய்யாதிருக்க முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது.

நாம் பாவம் செய்யாதிருப்பது கடினமான ஒரு செயல் என்றாலும், முடியாத ஒருசெயல் கிடையாது. எப்பொழுது நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழத் தொடங்குகின்றோமோ, அப்பொழுது நாம் பாவம் செய்யாதிருக்க முடியும். நாம் பாவம் செய்யாதிருக்க இயேசு நமக்குக் கொடுக்கும் கட்டளை என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரிடம் திரும்புங்கள்

“பாவம் செய்யாதிருங்கள்” என்ற திருத்தூதர் புனித யோவானின் அறைகூவலுக்கு, ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றபோது, நம்மால் பாவம் செய்யாதிருக்க முடியும் என்று சிந்தித்துப் பார்த்தோம். ஆண்டவரின் எந்தக் கட்டளையைக் கடைப்பிடித்தால், நம்மால் பாவம் செய்யாதிருக்க முடியும் என்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தியில் உயிர்த்த ஆண்டவர் இயேசு தன் சீடர்களுகுக்குத் தோன்றி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று வாழ்த்துகின்றார். அவர்களோ ஓர் ஆவியைக் காண்பதைப் போல் திகிலுற்றதும், இயேசு அவர்களுக்குத் தன் கைகளையும் கால்களையும் காண்பித்து, “நானேதான்” என்று உறுதிப்படுத்துகின்றார். பின்னர் அவர் அவர்களிடம், ‘பாவ மன்னிப்புப் பெற மனம்மாறுங்கள்’ என எழுதியுள்ளது என்கிறார். அப்படியெனில், “மனம்மாறுங்கள்” என்ற இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்கின்றபொழுது நாம் பாவம் செய்யாதிருக்க முடியும் என்பது உறுதி. இயேசுவின் இக்கட்டளைத் திருத்தூதர் புனித பேதுரு நன்றாக உள்வாங்கிக் கொண்டதால்தான், இன்றைய முதல் வாசகத்தில் அவர், “உங்கள் பாங்கள் போக்கப்படும் பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள்” என்கின்றார். உண்மையில் எவர் ஒருவர் மனம்மாறி ஆண்டவரிடம் திரும்பி வருகின்றாரோ அவர் பாவம் செய்வதில்லை. இதன்மூலம் அவர், பாவம் செய்யாதிருங்கள் என்று புனித யோவான் விடுக்கும் கட்டளையை நிறைவேற்றுபவராகின்றார்.

ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த வரலாற்று ஆசிரியரான தாமஸ் கார்லைல் (Thomas Carlyle) ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், “மனிதன் செய்யும் செயலில் மிகவும் புனிதமானது, மனம்மாறுவது. அவன் செய்யும் செயல்களில் மிகவும் மோசமானது, குற்றத்தை உணராதது.” எவ்வளவு அருமையான வார்த்தைகள் இவை! ஆம், ஒரு மனிதர் தான் செய்த பாவத்தை உணர்ந்து, இனிமேல் பாவம் செய்வதில்லை என்று உறுதியேற்று, ஆண்டவரிடம் திரும்பி வருவதை விடவும் புனிதமான உயர்ந்த செயல் வேறு என்ன இருக்க முடியும்?

கடவுளின் அன்பு நிறைவடையச் செய்யுங்கள்

மனம்மாறி ஆண்டவரிம் திரும்பி வரும்போது, பாவம் செய்யாதிருப்போம் என்று சிந்தித்துப் பார்த்தோம். அப்படி ஒருவர் மனம்மாறி ஆண்டவரிடம் திரும்பி வருவதால் அல்லது பாவம் செய்யாதிருப்பால் என்னென்ன பேறுபலன்களைப் பெறுவார் என்பதை இன்றைய இரண்டாவது வாசகத்தின் இறுதிப் பகுதியில் திருத்தூதர் புனித யோவான் அழகாக எடுத்துரைக்கின்றார்.

“அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகின்றது; நாம் அவரோடு இணைந்து இருக்கின்றோம்” என்று கூறும் புனித யோவான், மனம்மாறி ஆண்டவரிடம் திரும்பி வருவோரிடம் கடவுளின் அன்பு நிறைவடைகின்றது என்றும், அவர் கடவுளோடு இணைந்து இருக்கின்றார் என்றும் சொல்லாமல் சொல்கின்றார். ஆகவே, நாம் மனம்மாறி ஆண்டவரிடம் திரும்பி வந்து, கடவுளின் அன்பை நிறைவடையச் செய்து, அவரோடு இணைந்திருக்கும் பேறுபலனைப் பெறுவோம்.

சிந்தனை

‘நன்மையை நாடுங்கள்; தீமையைத் தேடாதீர்கள் அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்’ என்பார் இறைவாக்கினர் ஆமோஸ். எனவே, நாம் தீமை செய்யாது, நன்மையைச் செய்து,ஆண்டவரோடு இணைந்திருந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.