ஏப்ரல் 16 : நற்செய்தி வாசகம்


அப்பங்களைப் பகிர்ந்தளித்தார். மக்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15

அக்காலத்தில்

இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.

இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, “இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்றார்.

இயேசு, “மக்களை அமரச் செய்யுங்கள்” என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்” என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.

இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

---------------------------------------------

I திருத்தூதர் பணிகள் 5: 34-42

II யோவான் 6: 1-15

கொடுத்தார்; பகிர்ந்தளித்தார்

மகிழ்ச்சியோடு கொடு:

ஒரு பெண்மணி வேலையை முடித்துவிட்டு, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். சட்டென அவர் முன்பு வந்துநின்ற பிச்சைக்காரர் ஒருவர் அவரிடம், “அம்மா! ஏதாவது பிச்சைபோடுங்கள்!” என்று கையை ஏந்தினார். உடனே அவர் தன்னுடைய பையிலிருந்து ஒரு நூறு உரூபாயை எடுத்துப் பிச்சைக்காரரிடம் கொடுத்தார். இதைச் சிறிதும் எதிர்பார்த்திராத பிச்சைக்காரர் தன் கண்களாலேயே அவருக்கு நன்றி சொன்னார். அப்பொழுது அந்தப்பெண்மணி பிச்சைக்காரரிடம், “இதை நான் உங்களுக்குக் கொடுக்கக் காரணம், நீங்கள் தேவையில் இருக்கிறீர்கள் என்பதற்காக மட்டுமல்ல, கொடுப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. அதனாலேயே நான் இந்த நூறு ரூபாயை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வேகமாக நகர்ந்தார்.

ஆம், நம்மிடம் இருப்பதைப் பிறருக்குக் கொடுக்கின்றபொழுது அல்லது பகிர்ந்தளிக்கின்றபொழுது அதைவிட மகிழ்ச்சியான செயல் வேறு எதுவும் இருக்கமுடியாது. அதையே இந்த நிகழ்வும் இன்றைய இறைவார்த்தையும் எடுத்துக்கூறுகின்றன. அதைக்குறித்து நாம சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

நற்செய்தியில், ‘கொடுத்தார்’, ‘பகிர்ந்தளித்தார்’ என்ற இரண்டுசொற்கள் வருவதை வாசிக்கின்றோம். இந்த இரண்டு சொற்களின் முக்கியத்துவம் என்ன என்று பார்ப்போம்.

தன்னிடம் வரும் நோயாளர்களை இயேசு நலப்படுத்துகிறார் என்பதை அறிந்த மக்கள், அவரை நோக்கிப் பெருந்திரளாக வருகிறார்கள். இதைப்பார்த்து இயேசு, “இவர்கள் உண்பதற்கு நான் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பைப் பார்த்துக் கேட்கிறார் இயேசு. பிலிப்பிடம் இக்கேள்வியைக் கேட்கக் காரணம், பிலிப்பின் சொந்த ஊரான பெத்சாய்தா கலிலேயக் கடலிலிருந்து ஒன்பது மைல் தூரம் இருந்தது என்பதாலும் (யோவா 1:44), அவரைச் சோதிக்கவேண்டும் என்பதாலும்தான். பிலிப்பு இயேசு கேட்ட கேள்விக்கு மழுப்பலான பதிலைச் சொல்லி முடித்ததும், அந்திரேயா இயேசுவிடம் சிறுவன் ஒருவன் இருப்பதாகவும், அவனிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருப்பதாகச் சொல்கிறார்.

உடனே இயேசு அவற்றை வாங்கிக் கடவுளுக்குச் நன்றிசெலுத்தி, அவற்றை மக்களிடம் கொடுக்கிறார்; பகிர்ந்தளிக்கின்றார். இதனால் பெண்கள், குழந்தைகள் நீங்கலாக ஐயாயிரம் ஆண்கள் உணவுஉண்கிறார்கள். இயேசு செய்த இந்த வல்லசெயல், நமக்கு முன்பாக எவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தாலும், கடவுள் அதை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார் என்பதை உணர்த்துகின்றது. அதேநேரத்தில் நம்மிடம் இருக்கின்ற சொற்பமானவற்றை இயேசுவிடம் கொடுத்தாலும், அவர் அதைப் பலமடங்கு பெருக்கித்தருவார் என்பதையும் உணர்த்துகிறது.. ஆகவே, நாம் நம்மிடம் இருப்பதைப் பிறருக்குக்கொடுத்து, கடவுளிடமிருந்து நிறைவானதைப் பெறுவோம்.

சிந்தனைக்கு:

 எலிசாவால் இருபது வாற்கோதுமை அப்பங்களை நூறு பேருக்குத்தான் தரமுடிந்தது (2 அர 4: 42-44). இயேசுவால் ஐந்து அப்பங்களைக்கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்க முடிந்தது.

 உனக்கு முன் இருக்கும் பிரச்சனைகளைவிட, உன் ஆண்டவர் பெரியவர்

 அன்பில்லாமல் கொடுக்கலாம்; கொடுக்காமல் அன்பு செய்யமுடியாது

இறைவாக்கு:

‘தக்கவேளையில் நீரே அவற்றுக்கு உணவளிக்கிறீர்’ (திபா 145: 15) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, எல்லாருக்கும் உணவளிக்கும் கடவுள், நம் வழியாய் அதைச்செய்ய, நம்மிடம் இருப்பதைப் பிறருக்குக் கொடுத்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.