ஏப்ரல் 16: புனிதர் பெர்னதெத் சௌபிரஸ் St. Bernadette Soubirous


அருட்கன்னியர்/ மரியாயின் திருக்காட்சியாளர்: (Virgin/ Marian apparitions)

பிறப்பு: ஜனவரி 7, 1844 லூர்து, ஃபிரான்ஸ் (Lourdes, France)

இறப்பு: ஏப்ரல் 16, 1879 (வயது 35)

நிவேர்ஸ், ஃபிரான்ஸ் (Nevers, France)

ஏற்கும் சமயம்:  ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜூன் 14, 1925

திருத்தந்தை 11ம் பயஸ் (Pope Pius XI)

புனிதர் பட்டம்: டிசம்பர் 8, 1933 

திருத்தந்தை 11ம் பயஸ் (Pope Pius XI)

நினைவுத் திருவிழா: ஏப்ரல் 16

பாதுகாவல்:

உடல் நோய்வாய்ப்படுதல், லூர்து நகர் (Lourdes), ஃபிரான்ஸ், மேய்ப்பர்கள், வறுமைக்கு எதிராக, தங்கள் விசுவாசத்திற்காக ஏளனம் செய்யப்பட்ட மக்கள்

புனிதர் பெர்னதெத் சௌபிரஸ், ஃபிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் 1844ம் ஆண்டு, ஜனவரி மாதம், 7ம் தேதி பிறந்தார். சிறு வயதில் இருந்தே இயேசு கிறிஸ்துவின் மீதும், அன்னை மரியாயின் மேலும் பக்தியுள்ள கிறிஸ்தவராக வளர்ந்தார். இவருடைய தந்தை ஒரு ஆலையில் வேலை செய்து வந்தார். பெர்னதெத் தனது நேரத்தை பெற்றோருக்கு பயனுள்ள விதத்தில் செலவழித்தார்.

மரியாயின் காட்சிகள் :

பெர்னதெத்துக்கு 14 வயது நடந்தபோது, ஒருநாள் தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்க சென்றார். அவர்கள் “மஸ்சபியேல்” (Massabielle) என்ற குகை அருகே சென்று கொண்டிருந்த வேளையில், மாமரியன்னை ஒரு இளம் பெண்ணாக இவருக்கு காட்சி அளித்தார்கள்.

பெர்னதெத் தன்னுடன் வந்த இருவரிடமும், “அதோ பாருங்கள் மிகவும் அழகான ஓர் இளம் பெண்” என்று கூறினார். இவரது சகோதரிக்கும் தோழிக்கும் எதுவும் தெரியவில்லை. ஆனால் மாமரியன்னை, பெர்னதத்தை மீண்டும் அதே இடத்திற்கு வரச் சொன்னார்கள். 1858ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் தேதி முதல் ஜூலை 16ம் தேதி வரை 18 முறை இவர் மாமரியன்னையின் காட்சிகளைக் காணும் பேறுபெற்றார். இவர் பின்னே ஒரு கூட்டம் பக்தியுடனும், மற்றொரு கூட்டம் கேலியுடனும் பின் தொடர்ந்தன.

அந்த இடத்தில் தனது பெயரால் ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டுமென்று மாமரியன்னை பெர்னதெத்திடம் கூறினார்கள். அன்னையின் வேண்டுகோளை பங்குத் தந்தையிடம் பெர்னதெத் சொன்னபோது, அவர் அந்த காட்சியை நம்ப மறுத்தார். காட்சி அளித்த பெண்ணின் பெயரை கேட்டு வருமாறு சொல்லி அனுப்பினார். மாமரி அன்னை  இவரிடம், “நாமே அமல உற்பவம்” என்று  கூறினார்கள். 

அதைத் தொடர்ந்து திருச்சபை அதிகாரிகள் காட்சியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தனர். பெர்னதத் 16வது காட்சியைக் கண்டபோது, இவர் கையில் இருந்த மெழுகுவர்த்தி தலைகீழாக எரிந்தது. சிலர் 15 நிமிட அளவாக, இவரது கையை தீயினால் சுட்டனர். அது இவரை ஒன்றுமே செய்யவில்லை. ஒரு காட்சியின்போது, மரியாயின் கட்டளையை ஏற்று பெர்னதத் தோண்டிய ஊற்று நீர், இக்காலத்தில் அதைப் பருகுபவர்களின் நோயைத் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது.

கத்தோலிக்க திருச்சபை இந்த காட்சிகளை முதலில் ஏற்க தயங்கினாலும், இவற்றை ஆய்வு செய்த நிபுணர் குழு இக்காட்சிகள் நம்பத் தகுந்தவை என சான்றளித்தது. இக்காட்சிகளில் காணப்பட்டவர் இயேசுவின் தாய் மாமரி அன்னை  என்பதை ஏற்று, அவரை லூர்து அன்னை என்று கத்தோலிக்க திருச்சபை அழைக்கிறது.

அருட்சகோதரியாக:

பெர்னதெத் தனது 22ம் வயதில், நெவர்ஸ் நகரில் இருந்த கருணையின் சகோதரிகள் (Sisters of Charity of Nevers) மடத்தில் துறவற வாழ்வைத் தொடங்கினார். அந்த மடத்தில்தான் இவர் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். இயேசுவிடமும் மாமரியன்னையிடமும் மிகுந்த பக்தி கொண்டவராய் வாழ்ந்தார்.

மேலும் அங்கே தையற் கலைஞராகவும், ஆலய பராமரிப்பாளராகவும் பெர்னதெத் சிறப்பாக பணி செய்தார். ஆலயத்தில் பயன்படுத்தப்படும் துணிகளில் இவர் பலவித கைவேலைப்பாடுகள் செய்து அழகுபடுத்தியுள்ளார்.

நோயும் மரணமும்:

இவருக்கு வலது கால் முட்டியின் எலும்பில் காச நோய் வந்தது. நீண்ட நாட்கள் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த பெர்னதெத், 1879ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 16ம் தேதி தனது 35ம் வயதில் இறந்தார்.

புனிதர் பட்டம்:

1927ம் ஆண்டு, ஜூன் மாதம், 14ம் நாளன்று, திருத்தந்தை பதினேராம் பயஸ் இவருக்கு முக்திபேறு பட்டம் வழங்கினார்.

1933ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் நாளன்று, அமல உற்பவ அன்னை திருவிழா அன்று திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.

புனிதர் பெர்னதத் சௌபிரசின் அழியாத உடல், இவர் வாழ்ந்த நெவர்ஸ் நகர மடத்தின் சிற்றாலயத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.