ஏப்ரல் 15 : நற்செய்தி வாசகம்


தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-36

அக்காலத்தில்

இயேசு நிக்கதேமிடம் கூறியது: மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தரும் சான்றை ஏற்றுக்கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

கடவுளால் அனுப்பப்பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

---------------------------------------------------

பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் 

வியாழக்கிழமை

I திருத்தூதர் பணிகள் 5: 27-35

II யோவான் 3: 31-36

ஆண்டவருக்குக் கீழ்ப்படியவேண்டும்

உண்மையான கிறிஸ்தவர் ஆண்டவருக்குக் கீழ்ப்படிவார்:

ஒரு தந்தையும் அவரது பத்து வயது மகனும் ஒருநாள் கோயிலுக்குச் சென்றார்கள். இருவரும் கோயிலை அடைந்ததும் மகன் தந்தையிடம், “அப்பா கிறிஸ்தவர் என்றால் யார்?” என்றான். உடனே தந்தை தன் மகனிடம், “ எவர் ஒருவர் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, தனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்கின்றாரோ அவரே கிறிஸ்தவர்.”

தன் தந்தை இவ்வாறு சொன்னதும் மகன் அவரிடம், “ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து, தனக்கு அடுத்திருப்பவரை அன்புசெய்கின்ற யாரேனும் ஒருவர் இருக்கிறாரா?” என்றான். “ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, தனக்கு அடுத்திருப்பவரை அன்புசெய்யும் யாரேனும் ஒருவர் இருக்கின்றாரா என்று பதில், நீ ஏன் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, உனக்கு அடுத்திருப்பவரை அன்புசெய்து, உண்மையான கிறிஸ்தவனாக வாழக்கூடாது?” என்றார். தன் தந்தையிடமிருந்து இப்படிப்பட்ட பதில்வந்ததும் யார் கிறிஸ்தவர், கிறிஸ்தவராய் இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்ற தெளிவினைப் பெற்றுக்கொண்டான் மகன்.

ஆம், ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, தனக்கு அடுத்திருப்பவரை அன்புசெய்பவர் உண்மையான கிறிஸ்தவர் என்ற பதில்தான் எத்துணைச் சிறப்பானது. இன்றைய முதல்வாசகத்தில் புனித பேதுரு, “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?” என்கிறார். அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

திருத்தூதர்களான புனித பேதுருவும் யோவானும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவைப் பற்றி மக்கள் நடுவில் அறிவித்துவந்தார்கள். இதனால் மக்களில் பலரும் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டார்கள். இதைப்பார்த்த தலைமைச் சங்கத்தார் திருத்தூதர்களை அழைத்து, “இயேசுவைப் பற்றிப் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” (திப 4: 18) என்று கண்டிப்பாய்க் கட்டளையிட்டு அனுப்பிவைத்தார்கள். ஆனால், அவர்கள் உயிர்த்த இயேசுவைப் பற்றித் தொடர்ந்து மக்கள் நடுவில் அறிவித்தார்கள். இதனால் தலைமைச் சங்கத்தார் அவர்களைச் சிறையிலடைந்தார்கள். ஆனாலும் ஆண்டவரின் தூதர் அவர்களைச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்து, வாழ்வு பற்றிய வார்த்தைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறச் சொல்ல, அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள்.

இதை அறியவரும் தலைமைச் சங்கத்தார் அவர்களிடம், உங்களிடம் இயேசுவைப் பற்றி கற்பிக்கக்கூடாது என்று கட்டளையிட்டும், நீங்கள் ஏன் அவரைப் பற்றிக் கற்பிக்கின்றீர்கள்? என்று கேட்டபொழுதுதான் பேதுரு அவர்களிடம், “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதை விடகடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?” என்கிறார். 

விவிலியம் ஆளும் அதிகாரம் 

உள்ளவர்களுக்குப் பணிந்திருங்கள் (உரோ 13: 1-7; 1பேது 2: 13-17) என்று சொன்னாலும், அவர்கள் தீயவர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குக் பணிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்ற செய்தியையும் உரக்கச்சொல்கின்றது. ஆகையால், நாம் திருத்தூதர்களைப் போன்று கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வாழ முயற்சிசெய்வோம்.

சிந்தனைக்கு:

 கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது (1சாமு 15: 22)

 இயேசு தனக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் மீட்படையக் காரணமாகின்றார் (எபி 5: 9)

 ஆண்டவருக்குக் கீழ்ப்படியோர் இகழ்ச்சியடையார் (சீஞா 24: 22)

ஆன்றோர் வாக்கு

‘ஆண்டவர் தனக்குக் கீழ்ப்படிவோரை அன்புசெய்வது மட்டுமல்லாமல், அவர்களைத் தன் அருளால் நிரம்புகிறார்’ என்பர் ஹென்றி. பி.எயிரிங். எனவே, நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.