ஏப்ரல் 14 : நற்செய்தி வாசகம்


தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-21

அக்காலத்தில்

இயேசு நிக்கதேமிடம் கூறியது: தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

-------------------------------------------------------------

I திருத்தூதர் பணிகள் 5: 17-26

II யோவான் 3: 16-21

சிறைச்சாலையிலிருந்து விடுவித்த ஆண்டவரின் தூதர்

ஆபத்திலிருந்து காத்த ஆண்டவரின் தூதர்:

1956 ஆம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்காவில் பெரிய கலகம் வெடித்தது. கலகக்காரர்கள் கண்ணில்பட்ட மக்களையெல்லாம் தங்களிடமிருந்து கொடிய ஆயுதங்களாலும், அம்புகளாலும் கொன்று குவித்தார்கள். ஒருநாள் இரவு லாரி (Lauri) என்ற கிராமத்திற்கு வந்த கலகக்காரர்கள் அந்தக் கிராமத்தில் இருந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை முன்னூறுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தார்கள். இதற்குப்பிறகு அவர்கள் ஊருக்கு வெளியே இருந்த, அருள்பணியாளர்கள் நடத்திவந்த குழந்தைகள் காப்பகத்தைத் தாக்க முன்னோக்கிச் சென்றார்கள். அவர்கள் குழந்தைகள் காப்பகத்தைத் தாக்குவதற்காக அருகில் சென்றபொழுது, அப்படியே தலைதெறிக்கத் திரும்பி ஓடிவந்துவிட்டார்கள்.

அடுத்த நாள் காலையில், கலகக்காரர்களின் தலைவன், லாரி கிராமத்தைத் தாக்கப் போனவர்களிடம், “போன வேலை முடிந்துவிட்டதா?” என்றான். அதற்கு அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவன், “கிராமத்திலிருந்த முன்னூறுக்குக் மேற்பட்டோரைக் கொன்று குவித்துவிட்டோம்; அந்தக் கிராமத்திற்கு வெளியே இருந்த குழந்தைகள் காப்பாகத்தைத்தான் எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை” என்றான். உடனே தலைவன் அவனிடம், “குழந்தைகள் காப்பாகத்தை உங்களால் ஏன் ஒன்றும் செய்யமுடியவில்லை” என்று கேட்டபதற்கு, அவன், “நாங்கள் குழந்தைகள் காப்பாகத்தைத் தாக்குவதற்காக அதனருகில் சென்றபோது, வெண்ணிற ஆடைஅணிந்த ஒரு வானதூதர் கையில் வாளோடு நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்துதான், நாங்கள் ஓடிவந்துவிட்டோம்” என்றான்.

ஆம், கடவுள் தம் பிள்ளைகளை, எந்தவோர் ஆபத்துமின்றிக் காத்திடுவர். அதைத்தான் இந்த நிகழ்வும் இன்றைய இறைவார்த்தையும் எடுத்துக்கூறுகின்றன. நாம் அதைக்குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

விவிலியப் பின்னணி:

புனித பேதுருவும் யோவானும் உயிர்த்த இயேசுவைப்பற்றி மக்கள் நடுவில் போதிப்பதையும், அதனால் மக்களில் பலர் இயேசுவின்மீது நம்பிக்கைகொள்வதைப் பார்த்துப் பொறமைகொண்ட தலைமைக்குருவும், அவரைச்சார்ந்த சதுசேயக் கட்சியினரும் இருவரையும் கைதுசெய்து, சிறையிலடைக்கின்றனர். இந்தச் சதுசேயக் கட்சியினரின் எண்ணமெல்லாம் திருத்தூதர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்துவிட்டால், அவர்கள் இயேசுவைப்பற்றிப் போதிக்கமாட்டார்கள் என்பதாகத்தான் இருந்தது. கடவுளின் வார்த்த்தையைச் சிறையிட முடியாதுதானே! அதனால் ஆண்டவரின் தூதர் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்து, அவர்களை வாழ்வு பற்றிய வார்த்தைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறச் சொல்கின்றார். இயேசுவே வாழ்வு (யோவா 14: 6). அதனால் திருதூதர்கள் வெளியேவந்து, இயேசுவைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறுகின்றார்கள். உயிர்த்த ஆண்டவரைப்பற்றி திருத்தூதர்கள் எடுத்துரைத்தபோது, அவர்களுக்கு எதிர்ப்பு வந்ததுபோன்று, நமக்கும் எதிர்ப்புகள் வரலாம். ஆகவே, இறைவார்த்தைக்குச் சிறையிட முடியாது என்பதையும், ஆண்டவர் தம் அடியார்களைக் கைவிடுவதில்லை என்பதையும் உணர்ந்தவர்களாய் அவரது பணியைத் துணிவோடு செய்வோம்.

சிந்தனைக்கு:

 இறைவார்த்தையை யாரும் சிறையிடமுடியாது.

 நமது கால் கல்லில் மோதாதபடி ஆண்டவரின் தூதர்கள் தாங்கிக் கொள்வார்கள் (மத் 4: 6).

 வாய்ப்புக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இறைவார்த்தையை அறிவிப்பதில் கருத்தை இருப்போம் (2 திமொ 4: 2)

இறைவாக்கு:

‘உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்’ (எரே 1: 19) என்பார் ஆண்டவர். எனவே, ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்ற துணிவோடு, இறைவார்த்தையை எடுத்துரைத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.