ஏப்ரல் 11 : நற்செய்தி வாசகம்


எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார்.

எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார்.

தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.

வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

------------------------------------------------------------------

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு (ஏப்ரல் 11)

I திருத்தூதர் பணிகள் 4: 32-35

II 1 யோவான் 5: 1-6

III யோவான் 20: 19-31

கடவுளிடம் அன்புகூர்வோர் அவர் பிள்ளைகளிடமும் அன்புகூர்வர்

நிகழ்வு

இரண்டாம் உலகப்போர் மிகத்தீவிரமாக நடந்துகொண்டிருந்த நேரமது. ஒருநாள் யூதப் பெண்மணி ஒருவரைக் கொல்வதற்காக ஹிட்லரின் நாசிப்படையினர் துரத்திக்கொண்டு வந்தனர். இக்காட்சியைத் தன் வீட்டுச் சாளரத்தின் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவக் கைம்பெண், அவரைத் தன் வீட்டிற்குள் வந்து ஒளிந்துகொள்ளுமாறு சொன்னார். அதற்கு அந்த யூதப் பெண்மணி, என்னைத் துரத்திக்கொண்டு வருபவர்களுக்கு நான் உங்களுடைய வீட்டில் ஒளிந்திருப்பது தெரிந்தால், அவர்கள் உங்களையும் சேர்த்துக் கொன்றுவிடுவார்கள்.” என்றார்.

“பரவாயில்லை. அப்படி நடந்தால் பார்த்துக்கொள்ளலாம்” என்று யூதப் பெண்மணியைத் தன்னுடைய வீட்டிற்குள் அழைத்த கிறிஸ்தவக் கைம்பெண், அவர் அணிந்திருத்த உடையை வாங்கித் தான் அணிந்துகொண்டு, “இங்கொரு வழி இருக்கின்றது. இந்த வழியாகச் சென்றால், நீங்கள் மிக எளிதாய்த் தப்பித்து விடலாம்” என்றார். தனக்கு இப்படியெல்லாம் உதவி செய்யும் அந்தக் கிறிஸ்தவக் கைம்பெண்ணை ஒரு வினாடி வியப்போடு பார்த்த யூதப் பெண்மணி, “எனக்காக உங்கள் உயிரையும் தரத் துணிந்திருக்கின்றீர்களே! இதற்குக் காரணமென்ன?” என்றார். “அது வேறொன்றுமில்லை. கிறிஸ்து எனக்காகவும் எல்லாருக்காவும் தன்னையே தந்தார். அந்த அன்புதான் உங்களுக்காக என் உயிரையும் தரக் காரணமாக இருக்கின்றது” என்றார்.

இதற்குப் பின்னர் யூத பெண்மணி, கிறிஸ்தவக் கைம்பெண் சுட்டிக்காட்டிய வழியில் சென்று, தன்னைக் கொல்வதற்காகத் துரத்திக்கொண்டு வந்தவர்களிடமிருந்து தப்பித்தார். மறுபக்கம், யூதப் பெண்மணியைத் துரத்திக்கொண்டு வந்தவர்கள் அவர் அணிந்திருந்த உடையை அணிந்திருந்த கிறிஸ்தவக் கைம்பெண்ணைச் சுட்டுக்கொன்றார்கள். இச்செய்தியை அறிந்த யூதப் பெண்மணி, ‘எனக்காகத் தன் உயிரையும் தந்த இவருடைய அன்புதான் எதுதுணைப் பெரியது! மேலும் இவர் தன் உயிரைத் தரச்செய்த இயேசுவின் அன்புதான் எத்துணை உயர்ந்தது’ என்று எண்ணிப் பார்த்துக் கிறிஸ்தவரானார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற கிறிஸ்தவக் கைம்பெண், இயேசுவின்மீது தான் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடாக தனது உயிரையே தன்னை அண்டி வந்தவருக்குக் கொடுத்தார். இறை இரக்கத்தின் ஞாயிறு என்று அழைக்கப்படும் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை கடவுளிடம் அன்புகூர்வோர் அவரது பிள்ளைகளிடமும் அன்புகூர்கிறார் அல்லது அன்புகூரவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளின் மன்னிக்கும் அன்பு

திருத்தூதர் புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசச்கத்தில், “நாம் கடவுள்மீது அன்புகொண்டு, அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கின்றோம் என்பது நமக்குத் தெரிய வரும்” என்கின்றார். நாம் கடவுள்மீதும், அவரது பிள்ளைகள்மீதும் எத்தகைய அன்பு கொள்ளவேண்டும் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், கடவுள் அல்லது இயேசு நம்மீது எத்தகைய அன்பு கொண்டிருக்கின்றார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தியில் உயிர்த்த ஆண்டவர் இயேசு தன் சீடர்களுக்குத் தோன்றுவதைக் குறித்து வாசிக்கின்றோம். யூதர்கள் தன்னைக் கைதுசெய்தபொழுது, சீடர்களை தன்னை விட்டு ஓடிவிட்டார்கள் என்பதற்காகவோ அல்லது மறுதலித்ததற்காககோ ,காட்டிக் கொடுத்ததற்காகவோ இயேசு அவர்களைக் கடிந்துகொள்ளவில்லை. மாறாக, இயேசு அவர்களிடம், “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்கிறார். “எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவைமன்னிக்கப்படும்...” என்று அவர்களைத் தம் பணியைச் செய்ய அனுப்புகின்றார்.

“தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்” (நீமொ 10: 12) என்ற இறைவார்த்தைக்கேற்ப உயிர்த்த ஆண்டவர் இயேசு, தன் சீடர்கள் தனக்கெதிராகச் செய்த தீமைகளை மன்னித்து, அவர்களை மற்றவர்களையும் மன்னிக்கவும் அன்புசெய்யவும் அழைக்கின்றார்.

அன்பிற்குச் செயல்வடிவம் கொடுத்த தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள்

“ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்” (திபா 34: 6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். உண்மையில் இயேசுவின் சீடர்கள் அவர் எத்துணை இனியவர், இரக்கமிக்கவர், பேரன்பு கொண்டவர், எளியவருக்கு இரங்குகின்றவர் என்பதை நன்றாகவே சுவைத்துப் பார்த்திருக்கவேண்டும். ஆகையால்தான் அவர்கள் இத்தகைய உயிர்த்த இயேசுவை மக்களுக்கு மிகுந்த வல்லமையோடு எடுத்துச் சொல்லிச் சான்று பகர்கின்றார்கள். மக்களும் அவர்களது போதனையை உள்வாங்கியவர்களாய், தங்களோடு வாழ்ந்தவர்களோடு அன்புகொண்டு, தங்களிடம் இருப்பதை அவர்களோடு பகிர்ந்துகொள்கின்றார்கள். இவ்வாறு அவர்கள் ஆண்டவர் இயேசுவின்மீதுகொண்ட அன்பிற்கும் நம்பிக்கைக்கும் செயல்வடிவம் கொடுக்கின்றார்கள். இதனாலேயே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியது.

இதையொட்டி கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா கூறும்பொழுது, இவ்வாறு கூறுவார்: ‘இறைவனிடம் வேண்டுகின்ற நாம், அவரிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும். அந்த நம்பிக்கை நம்மை அடுத்தவரை உண்மையாக அன்புசெய்யத் தூண்டவேண்டும். அடுத்தவரை நாம் உண்மையாக அன்புசெய்யும்போது, அவர்களுக்குச் சேவை செய்யாமல் இருக்க முடியாது. இதுவே ஆண்டவர்மீது நாம் கொள்ளும் நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பதாகும்.” ஆம், தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் ஆண்டவர் இயேசுவிடம் கொண்டிருந்த அன்பை, அடுத்தவரிடம் கொண்டு, நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்தார்கள்.

அடுத்தவரிடம் அன்புசெலுத்துகின்றபொழுது கடவுளின் பிள்ளைகளாகின்றோம்

ஆண்டவர் இயேசு சீடர்களிடம் எத்தகைய அன்பு கொண்டிருந்தார் என்பதையும், தொடக்கக்காலக் கிறித்தவர்கள் தங்களோடு வாழ்ந்தவரிடம் எத்தகைய அன்புகொண்டிருந்தார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்த்த நாம், நாம் நம்மோடு வாழக்கூடியவர்களிடம் எத்தகைய அன்பு கொண்டு வாழவேண்டும் என்பதையும், அதனால் நாம் பேற்றினையும் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றி வந்த அமெரிக்காவைச் சார்ந்த மடலின் முர்ரே ஓ’ ஹேர் (Madalyn Murray O’ Hair) என்பவர் 1995 ஆம் ஆண்டு இறந்தபோது, அவரது நாள்குறிப்பேட்டில், “எங்காவது, யாராவது தயவு செய்து என்னை அன்புசெய்யுங்கள்” என்ற வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு பலரும் அதிர்ந்தார்கள். மடலின் முர்ரே ஓ’ ஹேரின் நாள்குறிப்பேட்டில் இடம்பெற்றிருந்த மேற்கண்ட வார்த்தைகள், மனிதர்கள் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார் என்ற உண்மையை உணர்த்துகின்றது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், “கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது” என்கிறார் யோவான். இறையன்பும் பிறரன்புமே கடவுளின் கட்டளை (மத் 22: 37-39). இக்கட்டளையை நாம் கடைப்பிடிக்கும்பொழுது, கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் ஆகின்றோம் (1யோவா 1:7). மட்டுமல்லாமல், நம்மால் உலகை வெல்ல முடியும். எனவே, நாம் இயேசு நம்மை அன்பு செய்வதுபோன்று, ஒருவர் மற்றவரை அன்புசெய்து, கடவுளின் அன்பு மக்களாகி, உலகை வெல்ல முயல்வோம்.

சிந்தனை

‘இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்துவின் ஒளியாகவேண்டும்’ என்பார் திருத்தந்தை புனித இருபத்து மூன்றாம் யோவான். இயேசு எல்லாரையும் அன்புசெய்து உலகின் ஒளியானார். நாமும் எல்லாரையும் அன்புசெய்து, கிறிஸ்துவின் ஒளியாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.