ஏப்ரல் 11 - புனிதர் ஸ்தனிஸ்லாஸ் St. Stanislaus of Szczepanów


ஆயர், மறைசாட்சி: (Bishop and Martyr)

பிறப்பு: ஜூலை 26, 1030

செபனோவ், போலந்து (Szcepanow, Poland)

இறப்பு: ஏப்ரல் 11, 1079 (வயது 48)

க்ரகோவ், போலந்து (Kraków, Poland)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

புனிதர் பட்டம்: செப்டம்பர் 17, 1253

திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட் (Pope Innocent IV)

முக்கிய திருத்தலங்கள்:

"வாவெல்" பேராலயம் (Wawel Cathedral) 

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 11

பாதுகாவல்:

க்ரகோவ், போலந்து (Kraków, Poland)

புனிதர் ஸ்தனிஸ்லாஸ், "க்ரகோவ்" (Bishop of Kraków) மறை மாவட்டத்தின் ஆயரும், போலந்து நாட்டு அரசன் "இரண்டாம் போலேஸ்லாவ்" (Polish king Bolesław II the Bold) என்பவனால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட மறைசாட்சியுமாவார்.

பாரம்பரியப்படி, புனிதர் ஸ்தனிஸ்லாஸ் போலந்து நாட்டில் செபனோவ்'விலுள்ள (Szcepanow), போச்சினா (Bochina) என்ற ஊரில் 1030ம் ஆண்டு, ஜூலை மாதம், 26ம் நாள், ஓர் பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தார். "வியெலிஸ்லா" (Wielisław) மற்றும் "போக்னா" (Bogna) ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். இவரின் பெற்றோருக்கு பல வருடங்கள் குழந்தைப்பேறு இல்லாமலிருந்தபோது, பல ஜெப, தவ முயற்சிகளை மேற்கொண்டு, இறைவனின் அருளால் இவர் பிறந்தார். இவர் பெற்றோர் இவரை அறிவிலும், ஞானத்திலும், பக்தியிலும் சிறந்த குழந்தையாக வளர்த்தார்கள். அந்நாளைய போலந்து நாட்டின் தலைநகராக இருந்த "க்னியெஸ்னோ" (Gniezno) எனும் நகரின் பேராலய பள்ளியில் கல்வி கற்றார்.

அதன்பின், போலந்து நாட்டிற்கு திரும்பிய அவர், குருத்துவம் பெற்றார். "க்ரகோவ்" (Bishop of Kraków) மறை மாவட்டத்தின் ஆயர் "இரண்டாம் லம்பேர்ட் சுலாவ்" அவருக்கு குருத்துவ அருட்பொழிவு செய்வித்தார்.

பின்பு கி.பி. 1072ம் ஆண்டு க்ரகோவ் (Kraków) மறைமாவட்ட ஆயர் மரித்த பின் ஸ்தனிஸ்லாஸ் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் திருத்தந்தை இரண்டாம் அலெக்சாண்டரின் (Pope Alexander II) வெளிப்படையான கட்டளை வந்ததன் பின்னரே அவர் ஆயராக பொறுப்பேற்றார். ஆயர் ஸ்தனிஸ்லாஸ் அந்நாளைய போலிஷ் குடியுரிமை கொண்ட ஆயர்களுள் ஒருவராவார். இவர் போலந்து நாட்டின் அரசியலிலும் செல்வாக்கு கொண்டவராகவும் அரசுக்கு ஆலோசனைகள் கூறுபவராகவும் இருந்தார். திருத்தந்தையின் பிரதிநிதித்துவத்தை போலந்து நாட்டில் கொண்டுவருவது அவரது முக்கிய சாதனையாக இருந்தது.

கி.பி. 1076ல் போலந்தின் அரசனாக "இரண்டாம் போலேஸ்லாவ்" (Polish king Bolesław II the Bold) முடிசூடினான். போலந்து நாட்டை கிறிஸ்தவமயமாக்குவதில் உதவி புரியும் பொருட்டு, "பெனடிக்டைன்" துறவு மடங்களை (Benedictine monasteries) நிறுவ ஆயர் அரசனை ஊக்குவித்தார்

ஒரு நிலத்தின் மேலுள்ள சர்ச்சையே ஆயருக்கும் அரசனுக்கும் இடையே பிரச்சினைகளும் பூசல்களும் தொடங்க காரணமானது. ஒருமுறை, "விஸ்டுலா" (Vistula river) நதியின் படுக்கையருகே ஒரு துண்டு நிலத்தை மறை மாவட்டத்திற்காக "ப்யோட்ர்" (Piotr) என்பவரிடமிருந்து வாங்கியிருந்தார். ஆனால், "ப்யோட்ர்" (Piotr) இறந்ததும் அவரது குடும்பத்தினர் அந்த நிலத்திற்கு உரிமை கோரினர். அரசனும் அந்த குடும்பத்தினருக்கு சாதகமாக தீர்ப்பளித்தான். தமது தரப்பு நியாயத்தை நிரூபிப்பதற்காக, ஆயர் இறந்துபோன "ப்யோட்ர்" (Piotr) என்பவரை உயிருடன் எழுப்பினார். உயிர்த்தெழுந்த "ப்யோட்ர்" (Piotr) உண்மையாகவே தாமும் தமது மூன்று மகன்களும் சர்ச்சைக்குரிய நிலத்தை ஆயருக்கு விற்று பணம் பெற்றதாக அரசவையில் ஒப்புக்கொண்டார். வேறு வழியற்ற அரசன், ஆயருக்கேதிரான வழக்கை ரத்து செய்தான். உயிர்த்தெழுந்த "ப்யோட்ர்" (Piotr) மீண்டும் கல்லறையில் புதைக்கப்பட்டார்.

இதனால் அரசன் கோபம் கொண்டு திருச்சபைக்கு எதிராகச் செயல்பட்டான். ஆயர் திருப்பலியாற்றிக் கொண்டிருந்த போது, அவரைக் கொல்ல தமது வீரர்களை அனுப்பினான். ஆனால் ஆயரிடமிருந்து பேரொளி ஒன்று வெளிப்பட்டதால், படையாட்கள் அவரைக் கொல்லாமல் விட்டுச் சென்றார்கள். இதனால் அரசன் தாமே நேரடியாக வந்து ஆயரை வெட்டிக் கொன்றான். இப்பெரும் பாவத்தை செய்ததால் அரசன் அரசாட்சியிழந்து போலந்து நாட்டை விட்டு விரட்டப்பட்டான். பின்னர் ஹங்கேரி நாடு சென்று, தஞ்சமடைந்தான்.

ஆயர் ஸ்தனிஸ்லாஸ் ஓர் நல்ல ஆயராக இருந்து திருச்சபையை வழிநடத்தினார். ஏழைகளுக்கு உதவிகள் பல செய்தார். தம் மறைமாவட்டதிலிருந்த மறைபரப்பு பணியாளர்களை ஆண்டுதோறும் சந்தித்து இறைப்பணியை திறம்பட செய்ய ஊக்கமூட்டினார்.

† ஜெபம்:

மறைசாட்சியாய் மரித்த ஆயர் ஸ்தனிஸ்லாஸே! ஏழைகளுக்கு உதவிகள் புரிந்த நல் ஆயரே! இறை நற்செய்தி பரவ மறைபரப்பு பணியாளர்களை ஊக்கமூட்டியவரே! சர்ச்சைக்குரிய நிலம் சம்பந்தமான தமது திருச்சபையின் நியாயத்தை நிருபிக்க அரவையில் இறந்தவரை உயிருடன் எழுப்பி அவர் மூலம் உண்மையை உலகறியச் செய்தவரே! இன்று திருச்சபைக்கு எதிரான அனைத்து வழக்குகளிலும் உண்மையான நீதி கிடைக்கவும், அவற்றில் சம்பந்தப்பட்ட அனைத்து அருட்தந்தைகள் மற்றும்அருட் கன்னியர்களுக்கும் நல்ல ஞானத்தையும், பரிசுத்த ஆவியின் வல்லமையும் கிடைத்தருள இறைவனிடம் பரிந்து பேசுவீராக! ஆமென்!