ஏப்ரல் 30 : முதல் வாசகம்


இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து தமது வாக்குறுதியை நிறைவேற்றினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 26-33

அந்நாள்களில்

பவுல் பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவுக்கு வந்தபோது, அவர் தொழுகைக்கூடத்தில் கூறியது: “சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது. எருசலேமில் குடியிருக்கும் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறியவில்லை; ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைப் புரிந்துகொள்ளவில்லை; ஆயினும் அவருக்கு அவர்கள் தீர்ப்பளித்தபோது அவ்வார்த்தைகள் நிறைவேறின. சாவுக்குரிய காரணம் எதுவும் அவரிடம் இல்லாதிருந்தும், அவரைக் கொல்ல அவர்கள் பிலாத்திடம் கேட்டார்கள். மறைநூலில் அவரைப்பற்றி எழுதியுள்ள அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தார்கள். பின்பு அவரைச் சிலுவையிலிருந்து இறக்கிக் கல்லறையில் வைத்தார்கள்.

ஆனால் இறந்த அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார். அவர் கலிலேயாவிலிருந்து தம்முடன் எருசலேம் வந்தவர்களுக்குப் பல நாள்கள் தோன்றினார். அவர்கள் இப்போது அவர்தம் சாட்சிகளாக மக்கள் முன் விளங்குகின்றார்கள். இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளை களாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி. இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில்,

‘நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்’ என்று எழுதப்பட்டுள்ளது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 30 : பதிலுரைப் பாடல்


திபா 2: 6-7. 8-9. 10-11 (பல்லவி: 7)

பல்லவி: நீரே என் மைந்தர்; இன்று நான் உம்மைப் 

பெற்றெடுத்தேன்.

அல்லது: அல்லேலூயா.

6 என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன்.

7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; ‘நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். - பல்லவி

8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.

9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்’. - பல்லவி

10 மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்; பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.

11 அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன் அகமகிழுங்கள்! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம்


வழியும் உண்மையும் வாழ்வும் நானே.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்.”

தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்றார். இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

------------------------------------------------

I திருத்தூதர் பணிகள் 13: 44-52

II யோவான் 14: 7-14

இயேசுவே வழி!

வழியின்படி நடக்காதவர்கள்:

ஒரு குடும்பம் தங்களிடமிருந்த நான்கு சக்கர ஊர்தியில் ஒரு மலைப்பாங்கான பகுதிக்குச் சுற்றுலா சென்றது. வழியில் ஓரிடத்தில், ‘பால வேலை நடந்துகொண்டிருப்பதால், தயவுசெய்து மாற்றுப்பாதையில் செல்லவும்’ என்ற அறிவிப்புப் பலகையானது வைக்கப்பட்டிருந்தது. அதைக்கண்டதும், ஊர்தியை ஓட்டிவந்த கணவர், “சாலை நன்றாக இருந்தாலும், இவர்களை இப்படியோர் அறிவிப்புப் பலகையை வைத்துவிடுவது வாடிக்கையாய்ப் போய்விட்டது! நாம் இந்தப் பாதையிலேயே செல்வோம்” என்று மனைவியைப் பார்த்துச்சொன்னார். அதற்கு அவருடைய மனைவி, “அறிவிப்புப் பலகை வைத்திருக்கின்றார்கள் எனில், அதைப் பொய்யாகவா வைத்திருப்பார்கள்? அதனால் தயவுசெய்து மாற்றுப்பாதையில் செல்லுங்கள்” என்றார்.

மனைவி சொன்னதைக் கேட்காமல் “நீ வேண்டுமானால் பாரேன்... இந்தப்பாதை நன்றாகத்தான் இருக்கும்” என்று சொல்லிவிட்டுத் தடைசெய்யப்பட்ட பாதை வழியாக ஊர்தியை ஓட்டினார் கணவர். அவர்கள் பயணம் செய்த பாதையில் பாலவேலை எதுவும் நடைபெறாமல் நன்றாவே இருந்தது. உடனே கணவர் தன் மனைவியிடம், “இதோ பார்! இந்தப் பாதையில் எந்தவொரு வேலையும் நடைபெறாமல், பாதை எவ்வளவு அருமையாக இருக்கின்றது என்று. என்னுடைய கணிப்பு எப்பொழுதும் சரியாகத்தான் இருக்கும்” என்று சொல்லிப் பெருமையடித்துக் கொண்டுவந்தார். திடீரென்று ஓர் இடத்தில் பாலவேலை முடியாமல், பாலம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டதும், அவர் அதிர்ந்துபோய் வண்டியைத் திருப்பிக்கொண்டு, வந்த வழியிலேயே வந்தார். அங்கு ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது. அதில், “அறிவிப்புப் பலகையில் குறிப்பிட்டிருந்தவாறு மாற்றுப்பாதையில் சென்றிருந்தால், இப்படி நேரத்தை வீணடித்திருக்கத் தேவையில்லையே! முட்டாள்!!’ என்று எழுதப்பட்டிருந்தது’ என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு அவர் அசடுவழிய நின்றார்.

ஆம், பலரும் இந்நிகழ்வில் வருகின்ற மனிதரைப்போன்று குறிக்கப்பட்ட வழிகளில் செல்லாமல் தங்களுக்கு விருப்பமான வழிகளில் சென்று துன்புறுகிறார்கள். இத்தகைய சூழலில், இன்றைய நற்செய்திவாசகம், இயேசுவே வழி என்கிறது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

இயேசு தனது இறுதி இராவுணவின்போது சீடரிடம், “நான் போகுமிடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்” என்றதும், தோமா அவரிடம், “.....நீர் போகுமிடதிற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்று சொல்லும்பொழுதான், இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே.....” என்கிறார்.

இவ்வுலகில் வேறு யாரையும் விடவும் இயேசுவால் மட்டுமே நம்மைத் தந்தையிடம் இட்டுச் செல்லமுடியும். அதனாலேயே அவர். “என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்கிறார். எனவே, வேறு யார்காட்டும் வழியிலும் செல்லாமல், இயேசுவின் வழியில் நடந்து, தந்தையிடம் செல்வோம்.

சிந்தனைக்கு:

 கடவுளின் வார்த்தையே நம் பாதைக்கு ஒளியாயிருக்கின்றது (திபா 109: 105)

 இயேசுவாலன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை (திப 4: 12)

 கடவுளின் வழிகள் அனைத்திலும் இரக்கமும் உண்மையும் விளங்குகின்றன (தோபி 3: 2).

இறைவாக்கு:

‘என் வழிகளைப் பின்பற்றுகின்றோர் நற்பேறு பெற்றோர்’ (நீமொ 8: 32) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் இயேசுவின் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

ஏப்ரல் 30: புனிதர் ஐந்தாம் பயஸ் Saint Pius V


225வது திருத்தந்தை: (225th Pope)

பிறப்பு: ஜனவரி 17, 1504 போஸகோ, மிலன் (Bosco, Duchy of Milan)

இறப்பு: மே 1, 1572 (வயது 68) ரோம், திருத்தந்தையர் மாநிலம் (Rome, Papal States)

முக்திபேறு பட்டம்: மே 1, 1672  திருத்தந்தை 10ம் கிளமென்ட் (Pope Clement X)

புனிதர் பட்டம்: மே 22, 1712  திருத்தந்தை 11ம் கிளமென்ட் (Pope Clement XI)

நினைவுத் திருவிழா: ஏப்ரல் 30 

பாதுகாவல்: 

வல்லெட்டா (Valletta), மால்டா (Malta), போஸ்கோ மரெங்கோ (Bosco Marengo), இத்தாலி (Italy), பியட்ரெல்சினா (Pietrelcina), ரோகாஃபோர்ட் மண்டோவி (Roccaforte Mondovi) , அலெஸ்ஸாண்ட்ரியா மறைமாவட்டம் (Diocese of Alessandria).

புனிதர் திருத்தந்தை ஐந்தாம் பயஸ், கத்தோலிக்க திருச்சபையை ஆட்சி செய்த 225வது திருத்தந்தையும், கத்தோலிக்க புனிதரும் ஆவார். இவரது சீரியப் பணியால், திரெந்து பொதுச்சங்கத்தின் (Council of Trent) தீர்மானங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு, கத்தோலிக்க விசுவாசத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இவரது திருமுழுக்கு பெயர் ஆன்டனியோ கிஸ்லியரி (Antonio Ghislieri) ஆகும். கி.பி. 1518ம் ஆண்டு முதல், இவர் மைக்கேல் கிஸ்லியரி (Michele Ghislieri) என்று அழைக்கப்பட்டார்.

தொடக்க காலம்:

ஆன்டனியோ கிஸ்லியரி என்ற இயற்பெயர் கொண்ட 5ம் பயஸ், இத்தாலியின் மிலான் நகரில் போஸ்கோ என்ற இடத்தில் கி.பி. 1504ம் ஆண்டு, ஜனவரி மாதம், 17ம் தேதி பிறந்தார். சிறு வயது முதலே கிறிஸ்தவ விசுவாசத்திலும், பக்தியிலும் வளர்ந்தார். 14 வயதில் டொமினிக்கன் துறவற சபையில் நுழைந்தபோது, மைக்கேல் கிஸ்லியரி என்ற பெயரைப் பெற்றார். 

கி.பி. 1528ம் ஆண்டு, ஜெனோவா நகரில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். அதன்பின், பவியா நகருக்கு சென்று 16 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணி ஆற்றினார். கி.பி. 1550ம் ஆண்டு, ரோம் திரும்பிய இவர், திருத்தந்தையின் விநியோக அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டார்.

கி.பி. 1556ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 14ம் தேதி, மைக்கேல் கிஸ்லியரி ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார். சிறிது காலத்திலேயே, கி.பி. 1557ம் ஆண்டு, மார்ச் மாதம், 15ம் நாளன்று, திருத்தந்தை நான்காம் பவுல் (கி.பி. 1555-59) இவரை கர்தினால் நிலைக்கு உயர்த்தினார். 

திருத்தந்தையாக:

திருத்தந்தை நான்காம் பயஸ் (கி.பி. 1559-65) மறைந்ததும் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்ட கர்தினால் மைக்கேல் கிஸ்லியரி, ஐந்தாம் பயஸ் என்னும் பெயரை ஏற்றுக்கொண்டார். இவர் தனது 62வது வயதில், திருச்சபையின் 225வது திருத்தந்தையாக கி.பி. 1566ம் ஆண்டு, ஜனவரி மாதம், 7ம் தேதி பொறுப்பேற்றார்.

திருத்தந்தையர் வெள்ளை அங்கி அணியும் வழக்கத்தை இவரே தொடங்கி வைத்தார். அதற்கு முன்பு திருத்தந்தையர் சிவப்பு அங்கியை அணிவதே வழக்கமாய் இருந்தது. அதிக நேரம் செபம் செய்வது இவர் வழக்கமாக இருந்தது. அரசியல் குறுக்கீடுகளால் கத்தோலிக்க திருச்சபையில் நுழைந்திருந்த தவறான வழக்கங்களை ஒழிக்க திருத்தந்தை ஐந்தாம் பயஸ் பெரிதும் விரும்பினார். 

செயல்பாடுகள்:

திருத்தந்தை 5ம் பயஸ் திருச்சபையின் பதவிகளை உறவு முறைப்படி பெறுவதையும், ஆன்மீகக் காரியங்களை விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தையும் ஒழிக்கப் பாடுபட்டார். திரெந்து நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற பொதுச்சங்கத்தின் தீர்மானங்களை செயல்படுத்தி திருச்சபையில் சீர்திருத்தம் ஏற்பட வழிவகுத்தார். 

திருச்சபையின் உண்மையான விசுவாசத்தை நிலை நிறுத்தவும், பிரிவினையாளர்களின் தவறான போதனைகளை முடிவுக்கு கொண்டு வரவும் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு ஒன்றைத் தயாரித்தார். திருப்பலியை முறைப்படுத்தும் வகையில் கி.பி. 1570ம் ஆண்டு, ரோமன் திருப்பலி புத்தகத்தை அறிமுகம் செய்து உலகெங்கும் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் பொது திருப்பலி நூலாக்கினார்.

இவர் நோயாளிகளுக்கென்று பல மருத்துவமனைகளை கட்டினார். உணவின்றி தவித்து, வறுமையில் வாடுவோரின் கண்ணீரைத் துடைத்தார். 

இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத், இத்தாலி அரசன் 2ம் மேக்சிமிலியன் ஆகியோரின் எதிர்ப்புகளை சந்தித்தார். ஃபிரான்ஸ், ஹாலந்து நாடுகளின் கொந்தளிப்பிற்கு இடையே துருக்கியரின் தாக்குதல்களையும் எதிர்கொண்டார். 

துருக்கிய வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்கவும், கிறிஸ்தவ இளவரசர்களுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தவும் உழைத்தார். இதன் விளைவாகவும், கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட தொடர் செபமாலை பக்தி முயற்சியின் பலனாகவும், கி.பி. 1571ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7ம் நாளன்று, லெப்பன்ட்டோ கடற்போரில் துருக்கியருக்கு எதிராக கிறிஸ்தவப் படைகள் வெற்றி பெற்றன. அதே நாளில் இவர் அன்னை மரியாவுக்கு, வெற்றியின் அன்னை விழாவை ஏற்படுத்தினார். இவ்விழா பின்னாளில் செபமாலை அன்னை விழாவாக பெயர்மாற்றப்பட்டு இன்றும் கொண்டாடப் படுகின்றது.

புனிதர் பட்டம்:

6 ஆண்டுகள், 3 மாதங்கள், 24 நாட்கள் திருச்சபையை வழிநடத்திய திருத்தந்தை ஐந்தாம் பயஸ், இறுதியாக கி.பி. 1572ம் ஆண்டு, மே மாதம், 1ம் தேதி தனது 68வது வயதில் மரணம் அடைந்தார். 

கி.பி. 1696ம் ஆண்டு, இவருக்கு புனிதர் பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. கி.பி. 1698ம் ஆண்டு, இவரது அழியாத உடல் புனித மேரி மேஜர் ஆலயத்தில் அமைக்கப்பட்ட கல்லறைப் பேழையில் வைக்கப்பட்டு, இன்றளவும் பாதுகாப்பாக உள்ளது. 

கி.பி. 1672ம் ஆண்டு, மே மாதம், முதல் நாளன்று, திருத்தந்தை 10ம் கிளமென்ட், திருத்தந்தை ஐந்தாம் பயசுக்கு அருளாளர் பட்டம் வழங்கினார். கி.பி. 1712ம் ஆண்டு, மே மாதம், 24ம் தேதி, திருத்தந்தை 11ம் கிளமென்ட் இவரை புனிதர் நிலைக்கு உயர்த்தினார். கி.பி. 1969ம் ஆண்டு முதல், இவரது நினைவுத் திருவிழா ஏப்ரல் 30ம் தேதி நினைவுகூறப்படுகிறது.

ஏப்ரல் 29 : முதல் வாசகம்


கடவுள் தாவீது வழிமரபிலிருந்தே இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 13-25

சகோதரர் சகோதரிகளே,

பவுலும் அவரோடு இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பலேறி, பம்பிலியாவிலுள்ள பெருகை நகருக்கு வந்தார்கள். அங்கே யோவான் அவர்களைவிட்டு அகன்று எருசலேமுக்குத் திரும்பினார். அவர்கள் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தி யோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வுநாளன்று அவர்கள் தொழுகைக் கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள். திருச்சட்டமும் இறைவாக்கினர் நூல்களும் வாசித்து முடிந்தபின் தொழுகைக்கூடத் தலைவர்கள் அவர்களிடம் ஆள் அனுப்பி, “சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

அப்போது பவுல் எழுந்து கையால் சைகை காட்டிவிட்டுக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர் தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்; நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலைநிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார். அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்; அதன்பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம் வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார்.

பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார். பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து ‘ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்’ என்று சான்று பகர்ந்தார்.

தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், ‘மனம் மாறி திருமுழுக்குப் பெறுங்கள்’ என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில், ‘நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதி இல்லை’ என்று கூறினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 29 : பதிலுரைப் பாடல்


திபா 89: 1-2. 20-21. 24,26 (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை என்றென்றும் நான் அறிவிப்பேன்.

அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.

2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. - பல்லவி

20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.

21 என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். - பல்லவி

24 என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.

26 ‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 1: 5ab காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்துவே, நீரே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; நீர் எம்மீது அன்புகூர்ந்து உமது இரத்தத்தினால் பாவங்களிலிருந்து எங்களை விடுவித்தீர். அல்லேலூயா.

ஏப்ரல் 29 : நற்செய்தி வாசகம்


நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 16-20

அக்காலத்தில்

சீடர்களின் பாதங்களைக் கழுவியபின் இயேசு அவர்களுக்குக் கூறியது: “பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப் பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்.

உங்கள் அனைவரையும்பற்றி நான் பேசவில்லை. நான் தேர்ந்து கொண்டவர்கள் யாரென எனக்குத் தெரியும். எனினும், “என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான்” என்னும் மறைநூல் வாக்கு நிறைவேறியாக வேண்டும்.

அது நிறைவேறும்போது, ‘இருக்கிறவர் நானே’ என்று நீங்கள் நம்புமாறு இப்போதே, அது நிறைவேறுமுன்பே, அதுபற்றி உங்களுக்குச் சொல்லி வைக்கிறேன். நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------------------------------------

I திருத்தூதர் பணிகள் 13: 13-25

II யோவான் 13: 16-20

“பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல”

தன்னைக் குறித்து பெருமைப்பட்டுக்கொண்ட அருள்பணியாளர்:

ஒரு பங்கில் அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். கேட்பவரைக் கட்டிப்போட வைக்கும் அளவுக்கு மிக அருமையாக மறையுரை ஆற்றும் இவருக்கு, ‘மறையுரை ஆற்றுவதில் தன்னை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை!’ என்ற கர்வம் இருந்துகொண்டே இருந்தது.

ஒருநாள் இவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் வானதூதர் ஒருவர் தோன்றி, “நீர் மிக அருமையாக மறையுரை ஆற்றுகின்றீர் என்று கர்வம் கொள்ளவேண்டாம். உண்மையில் நீர் இவ்வளவு அருமையாக மறையுரை ஆற்றுவதற்கு, பீடத்திற்கு முன்பாக அமர்ந்துகொண்டு உமக்காக வேண்டிக்கொண்டிருக்கும் ஒரு மூதாட்டிதான் காரணம்” என்று சொல்லிவிட்டு மறைந்து போனார். இதற்குப் பிறகு இவர் தான் மிகவும் அருமையாக மறையுரை ஆற்றுவதைக் குறித்து ஒருபோதும் கர்வம் கொள்வதில்லை.

பலரும் இந்த நிகழ்வில் வரும் அருள்பணியாளரைப் போன்று தங்களைக் குறித்துப் பெருமை பாராட்டிக் கொள்கின்றார்கள் அல்லது கர்வத்தோடு இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய இறைவார்த்தை இயேசுவின் சீடர்கள் அவரைப் போன்று தாழ்ச்சியோடு பணிசெய்யவேண்டும் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியபின் இயேசு அவர்களிடம் பேசும் வார்த்தைகள்தான் இன்றைய நற்செய்தி வாசகம். இதில் இயேசு, “பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல” என்கிறார். இதற்கு முந்தைய பகுதியில் அவர், “ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” (யோவா 13: 14) என்று கூறியிருப்பார். இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியது, அவர் அவர்கள் மீதுகொண்ட அன்பின் வெளிப்பாடு. எனவே, இயேசுவின் சீடர்களும் அவரைப் போன்று பிறர்மீது தாங்கள்கொண்டிருக்கும் அன்பைச் செயலில் வெளிப்படுத்தவேண்டும். அதற்கு அடிப்படையாக இருக்கவேண்டியது தாழ்ச்சி.

இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு, அவரது சீடர்கள்தான் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்று, அதனை வழிநடத்த வேண்டும். எனவே, அவர்கள் தன்னைப் போன்று தாழ்ச்சியோடு இருந்து, தங்களது அன்பைச் செயலில் வெளிப்படுத்தவேண்டும். என்பதாலேயே இயேசு அப்படிச் சொல்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவிற்கு வந்து, ஓய்வுநாளன்று தொழுகைக்கூடத்தில் கற்பிக்கின்றார். இச்செயல்கூட, புனித பவுல் செயலில் தம் அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. எனவே, இயேசுவின் வழியில் நடக்கின்றவர்கள் அவரைப் போன்று தாழ்ச்சியோடும், செயலில் அன்பை வெளிப்படுத்தக்கூடியவர்களாகவும் வாழக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனைக்கு:

 மேன்மை அடையத் தாழ்மையே வழி (நீமொ 18: 12)

 கிறிஸ்துவே என்னும் வாழ்கிறார் (கலா 2: 20) என்று சொன்னதன்மூலம், பவுல் தாழ்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்

 தாழ்ச்சி என்பது நம்மைப் பற்றித் தரக் குறைவாக நினைப்பது அல்ல, மாறாக, நம்மைப் பற்றிக் குறைவாக நினைப்பது

ஆன்றோர் வாக்கு:

‘தாழ்நிலையில் இருப்போரை அவர் உயர்த்துகிறார் (லூக் 1: 53) என்பார் மரியா. எனவே, நாம் தாழ்ச்சியோடு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

ஏப்ரல் 29: சியென்னா நகர் புனிதர் கேதரின் St. Catherine of Siena


கன்னியர், மறைவல்லுநர்: (Virgin, Doctor of Church)

பிறப்பு: மார்ச் 25, 1347 சியென்னா, சியென்னா குடியரசு (Siena, Republic of Siena)

இறப்பு: ஏப்ரல் 29, 1380 (வயது 33) ரோம் நகரம், திருத்தந்தையர் மாநிலம் (Rome, Papal States)

ஏற்கும் சமயம்:  ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)

லூதரனிய திருச்சபை (Lutheranism)

புனிதர் பட்டம்: ஜூன் 29, 1461 திருத்தந்தை இரண்டாம் பயஸ் (Pope Pius II)

முக்கிய திருத்தலம்: புனித மரியா சோப்ரா மினெர்வா, ரோம் மற்றும் புனித கேதரின் பேராலயம், சியென்னா (Santa Maria sopra Minerva, Rome and Shrine of Saint Catherine, Siena)

நினைவுத் திருவிழா: ஏப்ரல் 29

சித்தரிக்கப்படும் வகை: 

டோமினிக்கன் சபையினரின் ஆடை, லில்லி மலர், புத்தகம், சிலுவை, இதயம், முள் முடி, ஐந்து காயம், மோதிரம், புறா, ரோஜா, மண்டை ஓடு

பாதுகாவல்: 

பென்சில்வேனியா (Pennsylvania), ஐக்கிய அமெரிக்கா (USA), ஐரோப்பா (Europe), தீ விபத்துக்கெதிராக, இத்தாலி (Italy), கருச்சிதைவுகள், “அல்லன்டவுன் மறைமாவட்டம்” (Diocese of Allentown), தம் நம்பிக்கைக்காக அவதியுறும் மக்கள், செவிலியர், பாலியல் சோதனையுறுவோர், நோயுற்றவர்களுக்கு.

சியென்னா நகர புனிதர் கேதரின் ஒரு டோமினிக்கன் மூன்றாம் சபையின் உறுப்பினரும், இறையியலாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் அவிஞ்ஞோன் (Avignon) நகரில் தங்கியிருந்த திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி (Pope Gregory XI) ரோம் நகருக்குத் திரும்பிச் செல்ல மிக முக்கிய காரணியாய் இருந்தார். 1970ம் ஆண்டு, இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநராக அறிவிக்கப்பட்டார். அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ் (St. Francis of Assisi) அவர்களுடன் இணைந்து இவரும் இத்தாலியின் பாதுகாவலராக கருதப்படுகின்றார்.

வாழ்க்கைக் குறிப்பு:

"கேதரீனா டி ஜியாகோமோ டி பெனின்கசா" (Caterina di Giacomo di Benincasa) எனும் இயற்பெயர் கொண்ட இவர், இத்தாலியில் உள்ள சியென்னா என்னும் ஊரில், "கியாகோமோ டி பெனின்கசா" (Giacomo di Benincasa) மற்றும் "லாப்பா பியகென்டி" (Lapa Piagenti) ஆகிய பெற்றோருக்கு பிறந்தவர். இவர் பிறந்த வருடமான கி.பி. 1347ம் ஆண்டு, கறுப்பு மரணங்களால் இத்தாலியின் சியென்னா மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.

கேதரினுடையகு ஐந்து அல்லது ஆறு வயதின்போது கிறிஸ்து இயேசுவின் முதல் திருக்காட்சி கிடைக்கப்பெற்றார். அதில் இயேசு நாதருடன் அப்போஸ்தலர்கள் பேதுரு, பவுல் மற்றும் யோவான் ஆகியோரும் இருந்ததாகவும், இறைவன் தன்னை ஆசிர்வதித்தார் எனவும், இக்காட்சியின் முடிவில் தாம் பரவச நிலையை அடைந்ததாகவும் கூறியுள்ளார். ஏழு வயதில் இவர் கற்பு வார்த்தைப்பாட்டை அளித்தார்.

இவரின் மூத்த சகோதரியின் மறைவுக்கு பின்னர், மூத்த சகோதரியின் கணவரை மணக்க இவரின் பெற்றோர், இவரை கட்டாயப்படுத்தினர். இதனால் தன் பெற்றோர் மனம் மாறும்வரை உண்ணா நோன்பிருந்தார். அப்போது தன் அழகை குறைக்க தன் நீண்ட கூந்தலை வெட்டினார். புனித தோமினிக் அவரின் கனவில் தோன்றி அவரைத் தேற்றினார்.

கேதரின், தொமினிக்கன் சபையில் சேர்ந்தார். இதனை அச்சபை உறுப்பினர்கள் பலர் எதிர்த்தனர். ஏனெனில் அதுவரை விதவைகள் மட்டுமே அச்சபையில் சேர அனுமதி இருந்தது.

கி.பி. 1366ம் ஆண்டு, அவருக்கு கிடைத்த பரவச நிலையில் இயேசு தன்னை ஆன்மீக முறையில் மணந்து கொண்டதாக இவர் நம்பினார். அப்போது கிறிஸ்து இவரை, மறைந்த வாழ்வினை விடுத்து, பொது வாழ்க்கைக்கு போக சொன்னதாக இவர் தன் ஆன்மீக வழிகாட்டியிடம் கூறியுள்ளார். இவர் நோயுற்றோருக்கு உதவினார். இவரின் தொண்டு உள்ளம் சிலரைக் கவர்ந்ததால், மேலும் சிலரும் தொண்டு புரிவதில் இவரோடு இணைந்தனர். இதனால் கி.பி. 1374ம் ஆண்டு, தொமினிக்கன் சபைத் தலைவர்களால் ஃபிளாரன்ஸ் (Florence) நகரில் தப்பறைக் கொள்கைகளுக்காக விசாரிக்கப்பட்டு, குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார். இதன் பின் வடக்கு மற்றும் மத்திய இத்தாலியில் பயணம் செய்து, கடவுளை அன்பு செய்து புரட்சி படைக்க மக்களை ஊக்குவித்தார்.

கி.பி. 1370ம் ஆண்டின் முன் பகுதில் அவர் பலருக்கு கடிதம் எழுதினார். இக்கடிதங்களினால் இத்தாலியின் பெருங்குடியினர் மத்தியில் அமைதி பிறக்க அரும்பாடுபட்டார். இவர் திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியுடன் மிக நீண்ட கடித தொடர்பு வைத்திருந்தார். அதில் அவர் திருத்தந்தை நாடுகளின் மேலாளர்களையும், குருக்களையும் கண்டித்து வழிநடத்த அறிவுறுத்தினார்.

கி.பி. 1376 ம் ஆண்டு, ஜூன் மாதம், இவர் தாமாகவே முன்வந்து திருத்தந்தை நாடுகளில் அமைதி கொணர முயன்றார். அது பயன் அளிக்காததால், திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியை மீண்டும் அவிஞ்ஞோனிலிருந்து ரோமுக்கு கி.பி. 1377ம் ஆண்டு, ஜனவரி மாதம், திரும்பி வரச் செய்தார். இத்திருத்தந்தையின் மறைவுக்குப் பின், யாரைத் திருத்தந்தையாக ஏற்பது என்பது குறித்து மேற்கு திருச்சபையில் பிளவு ஏற்பட்டது ("பெரும் பிளவு" அல்லது Western Schism of 1378). அப்போது இவர் திருத்தந்தை ஆறாம் அர்பனுக்கு (Pope Urban VI) துணை புரிய ரோம் நகரில் சென்று தங்கினார். அங்கேயே சாகும் வரை இருந்தார். இந்தப் பெரும் பிளவினால் ஏற்பட்ட துன்பங்களினால் அவர் சாகும் வரை வாடினார்.

புனித கேதரினின் கடிதங்கள் ஆரம்பகால டஸ்கான் இலக்கியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கடிதங்களுல் 300 கிடைத்துள்ளன. திருத்தந்தைக்கான தனது கடிதங்களில், அவர் அடிக்கடி அவரை 'Papa' (இத்தாலிய மொழியில் "திருத்தந்தை") என்று அன்பாக குறிப்பிடுகின்றார். ஆன்ம குருக்கள், கபுவாவின் ரேமண்ட், ஃபிரான்ஸ் மற்றும் ஹங்கேரி அரசர்கள், கூலிப்படையினனான ஜான் ஹாக்வுட், நேபிள்ஸ் ராணி, மிலனின் விஸ்கோன்தி (Visconti) குடும்ப உறுப்பினர்கள், மற்றும் பலருக்கு இக்கடிதங்கள் எழுதப்பட்டன. அவரது கடிதங்கள் சுமார் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு எழுதப்பட்டது.

இவரின் "The Dialogue of Divine Providence" என்னும் நூல், கி.பி. 1377 - 1378 காலகட்டத்தில் இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டதாகும். பெரும்பாலும் படிப்பறிவில்லாதவராக கருதப்பட்டாலும், லத்தீன் மற்றும் இத்தாலிய மொழிகளை படிக்கும் திறன் இருந்ததாக அவரின் ஆன்ம குரு ரேமண்ட் கூறியுள்ளார், அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் மற்றவரால் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது என்றாலும் அவருக்கு எழுதத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இறப்பு:

புனிதர் கேதரின் முப்பத்திமூன்று வயதில் ரோம் நகரின் வசந்த காலத்தில், கி.பி. 1380ம் ஆண்டு மரித்தார். “தந்தையே, உம் கைகளில் என் உயிரையும் ஆவியையும் ஒப்படைக்கிறேன்” (Father, into Your Hands I commend my soul and my spirit) என்பதே அவருடைய இறுதி வார்த்தைகளாகும்.

கேதரின் உணவு குறைவாகவே உண்டார். அதற்கு பதிலாக அவர் தினசரி நற்கருணை பெற்றார். இதனால் குருக்கள் மற்றும் அவரது சொந்த சபை சகோதரிகள் கண்களிலும் ஆரோக்கியமற்று தோற்றமளித்தார். இவரின் ஆன்ம குரு, ரேமண்டு, இவரை சரியான உணவு உண்ண அறிவுறுத்தியபோது, தன்னால் உண்ண முடியவில்லை எனவும், அவ்வாறு உண்டால் கடுமையான வயிற்று வலியால் அவதியுறுவதாகவும் கூறினார் என்பர்.

மினெர்வா மேல் புனித மரியா கோவிலின் அருகில் உள்ள கல்லறையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். அங்கே பல புதுமைகள் நிகழ்ந்ததாக மக்கள் கூறியதால் இவரின் உடல் கோயிலினுள் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் தலை, உடலிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு சியன்னா நகரில் உள்ள தொமினிக்கன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1940ம் ஆண்டு, மே மாதம், ஐந்தாம் நாளன்று, திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ், புனிதர் அசிசியின் ஃபிரான்சிஸ் அவர்களுடன் சேர்த்து இவரையும் இத்தாலியின் பாதுகாவலராக அறிவித்தார். திருத்தந்தை ஆறாம் பவுல், 1970ம் ஆண்டு, இவரை மறைவல்லுநராக அறிவித்தார். அவிலாவின் புனித தெரேசாவுக்கு அடுத்தபடியாக ஒரு பெண் இப்பட்டத்தை பெறுவது இதுவே முதன் முறை. 1999ம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இவரை ஐரோப்பிய நாடுகளின் பாதுகாவலராக அறிவித்தார்.

கேதரின் பசியற்ற நோயால் (Anorexia mirabilis) அவதிப்பட்டார் என்பர். இருப்பினும் இவர் தனது ஆன்மீக எழுத்துக்களுக்காகவும், அதிகாரம் உடையவர்களிடம் பணிந்து செல்லாமல் உண்மையை பேசியதற்காகவும் பெரிதும் மதிக்கப்படுகின்றார். இவரின் காலத்தில் இத்தகைய துணிச்சலோடு, ஒரு பெண் இருப்பது விதிவிலக்காகும். இதுவே இவர் அரசியல் மற்றும் உலக வரலாறு போன்றவற்றில் செல்வாக்கு செலுத்த முக்கிய காரணமாக இருந்தது.

ஏப்ரல் 28 : முதல் வாசகம்


பர்னபாவையும் சவுலையும் எனது பணிக்காக ஒதுக்கி வையுங்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 24- 13: 5

அந்நாள்களில்

கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது. பர்னபாவும் சவுலும் தங்கள் திருத்தொண்டை முடித்தபின், மாற்கு எனப்படும் யோவானைக் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து திரும்பிச் சென்றனர்.

அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரேன் ஊரானாகிய லூக்கியு, குறுநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும் போதகராகவும் இருந்தனர். அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்” என்று கூறினார். அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

இவ்வாறு தூய ஆவியாரால் அனுப்பப்பட்டவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றார்கள்; அங்கிருந்து சைப்பிரசுக்குக் கப்பலேறினார்கள். அவர்கள் சாலமி நகருக்கு வந்து அங்குள்ள யூதரின் தொழுகைக் கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்தார்கள்; யோவானைத் தங்கள் உதவியாளராகக் கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 28 : பதிலுரைப் பாடல்


திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!

அல்லது: அல்லேலூயா.

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!

அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!

கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! "உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஏப்ரல் 28 : நற்செய்தி வாசகம்


நான் உலகிற்கு ஒளியாக வந்தேன்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 44-50

அக்காலத்தில்

இயேசு உரத்த குரலில் கூறியது: “என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார். என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்.

என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன். நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல. ஏனெனில் நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்.

என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது. இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும். ஏனெனில் நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்லவேண்டும், என்ன பேசவேண்டும் என்பதுபற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார். அவருடைய கட்டளை நிலைவாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------

பாஸ்கா காலம் நான்காம் வாரம் புதன்கிழமை

I திருத்தூதர் பணிகள் 12: 24: 13: 5

II யோவான் 12: 44-50

“அவர்கள் கடவுளின் வார்த்தையை அறிவித்தார்கள்”

கடவுளின் வார்த்தையை அறிவிக்கத் தவறிய மார்டின் நிமொல்லர்:

ஜெர்மனியைச் சார்ந்த இறையியலார் மார்ட்டின் நிமொல்லர் (Martin Niemoller 1892-1984). இவர் கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கைக்காக ஹிட்லரால் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டவர். வதைமுகாமிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக இவருக்கு முப்பது வினாடிகள் ஹில்டரோடு பேசுவதற்கு வாய்ப்புக்கிடைத்தது. அதில் ஹிட்லர் இவரிடம், “கிறிஸ்துவின் போதனைகளை விட்டுவிட்டு நீட்சேயின் தத்துவங்களை ஏற்றுக்கொள்” என்றார். இவரோ கிறிஸ்துவின்மீதுள்ள நம்பிக்கையிலிருந்து ஒருநாளும் நான் பின்வாங்கமாட்டேன் என்று தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் ஹிட்லர் இவரை வதைமுகாமிற்கு அனுப்பிவைத்தார்.

ஒருசில ஆண்டுகள் வதைமுகாமிலிருந்த இவர் விடுதலையாகி வெளியேவந்தார். அப்பொழுது இவர் மக்களிடம், “வதைமுகாமில் இருக்கும்பொழுது நான் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில் ஹிட்லரும் நானும் கடவுளின் நடுவர் இருக்கைக்கு முன்பாக நிறுத்தப்பட்டோம். இயேசு ஹிட்லரிடம் “நீ ஏன் இவ்வளவு பேரைக் கொன்றொழித்தாய்?’ என்று கேட்க, “யாரும் எனக்கு உம்முடைய வார்த்தையை எடுத்துரைக்கவில்லை. இதனால்தான் இப்படியெல்லாம் செய்தேன்’ என்றார். பின்னர் இயேசு என்னிடம், ‘உனக்கு இவரிடம் என்னுடைய வார்த்தையை எடுத்துரைக்க முப்பது வினாடிகள் தரப்பட்டனவே, நீ என்ன செய்தாய்?’ என்று கேட்க, நான், ‘நீட்சேயின் தத்துவங்களைக் குறித்து இவரோடு வாதிட்டேனே ஒழிய, உம்முடைய வார்த்தையை எடுத்துரைக்கவில்லை’ என்றேன். இதற்காக இயேசு என்னைக் கடிந்துகொண்டார். இதனால் நான் கடவுளின் வார்த்தையை முழுமையாக மக்களுக்கு எடுத்துரைக்கப்போகிறேன்” என்றார்.

ஆம், கடவுளின் வார்த்தையை அறிவிக்கவேண்டும் அதைத்தான் இந்த நிகழ்வும் இன்றைய இறைவார்த்தையையும் எடுத்துக்கூறுகின்றன. அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

புனித யாக்கோபு கொல்லப்படட்டது, புனித பேதுரு சிறைப்பிடிக்கப்பட்டது என்று தொடக்கக்காலத் திருஅவை பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானாலும், கடவுளின் வார்த்தை மென்மேலும் பரவிக்கொண்டே வந்தது. இவ்வாறு இறைவார்த்தை பரவியதற்குப் பலர் காரணமாக இருந்தாலும் ‘தனிப்பட்ட பணிக்கென’த் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித பர்னபாவும் புனித பவுல் முக்கியக் காரணமாக இருந்தார்கள். இவர்கள் இருவரும் சாலமி நகருக்கு வந்து அங்குள்ள யூதரின் தொழுகைக்கூடங்களில் கடவுளின் வார்த்தை அறிவித்து வந்தார்கள்..

இப்படிப் புனித பர்னபாவாலும் புனித பவுலாலும் அறிவிக்கப்பட்ட கடவுளின் வார்த்தை எத்தகையது என்பதை இன்றைய நற்செய்திவாசகம் கூறுகின்றது. கடவுளின் கட்டளை அல்லது அவரது வார்த்தை நிலைவாழ்வு தருகின்றது என்கிறது நற்செய்தி வாசகம். எனவே, நாம் புனித பர்னபா, புனித பவுலைப் போன்று நிலைவாழ்வு தரும் கடவுளின் வார்த்தையை மக்களுக்கு அறிவிப்போம்.

சிந்தனைக்கு:

 கடவுளின் வார்த்தைகள் நிலைவாழ்வு அளிக்கக்கூடியவை (யோவா 6: 68)

 எத்தனை இடர்கள் வந்தாலும், பவுல், பர்னபா போன்று இறைவார்த்தையை மக்களுக்குக் அறிவிப்போம்

 படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் (மாற் 16: 15) என்ற இயேசுவின் கட்டளையை மறந்துவிடவேண்டாம்.

இறைவாக்கு:

‘இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக்கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச்செய்வதில் நீ கருத்தாயிரு’ (2 திமொ 4: 2) என்பார் பவுல். எனவே, நாம் வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் கடவுளின் வார்த்தையை அறிவித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

ஏப்ரல் 28: புனிதர் பீட்டர் சானேல் St. Peter Chanel


குரு, மறைசாட்சி: 
(Priest, Martyr)

பிறப்பு: ஜூலை 12, 1803 மான்ட்ரெவெல்-என்-ப்ரெஸ், எய்ன், ஃபிரான்ஸ் (Montrevel-en-Bresse, Ain, France)

இறப்பு: ஏப்ரல் 28, 1841 (வயது 37) ஃப்யூச்சினா தீவு (Futuna Island)

ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Catholic Church)

அருளாளர் பட்டம்: நவம்பர் 17, 1889 திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII)

புனிதர் பட்டம்: ஜூன் 12, 1954 திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ் (Pope Pius XII)

முக்கிய திருத்தலம்: ஃப்யூச்சினா (Futuna)

பாதுகாவல்: ஓஷியானியா (Oceania)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 28

"பியர்ரே லூயிஸ் மேரி சானேல்" (Pierre Louis Marie Chanel) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் பீட்டர் சானேல் ஒரு கத்தோலிக்க குருவும், மறை பணியாளரும், மறைசாட்சியும் ஆவார்.

கி.பி. 1803ம் ஆண்டு, ஜூலை மாதம், பிறந்த பீட்டர் சானேலின் தந்தை, "கிளாட்-ஃபிரான்காய்ஸ் சானேல்" (Claude-François Chanel) ஆவார். இவரது தாயார் பெயர் "மேரி-ஆன் ஸிபெல்லாஸ்" (Marie-Anne Sibellas) ஆகும். இவர் தமது 7 முதல் 12 வயதுவரை கால்நடை மேய்க்கும் பணி செய்தார். உள்ளூர் ஆலய பங்குத் தந்தை, தாம் தொடங்கி நடத்தும் சிறு பள்ளியில் பீட்டரை சேர்க்குமாறு இவரது பெற்றோரை வற்புறுத்தி பீட்டரை பள்ளியில் சேர்த்தார். உள்ளூர் பள்ளியிலேயே கல்வி பயின்ற பீட்டர், கி.பி. 1817ம் ஆண்டு, மார்ச் மாதம், 23ம் நாளன்று, புதுநன்மை வாங்கினார்.

தன் பிறந்த ஊரில், சிறுவயதிலேயே மறைபரப்புப் பணியில் ஆர்வம் காட்டினார். ஆனால் இவர் தொடர்ந்து கல்வி கற்க வேண்டுமென்பதால் மறைபரப்புப் பணியை விடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மரியன்னையிடம் இடைவிடாமல் செபித்தார். இதன் பயனாக கல்வி கற்றுக்கொண்டே, மறைபரப்புப் பணியில் ஈடுபட்டார்.

கி.பி. 1827ம் ஆண்டு, ஜூலை மாதம், 15ம் நாளன்று, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். அதன் பின்வரும் மூன்று ஆண்டுகளுக்கு "க்ரோசெட்" (Crozet) எனும் பங்கின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். மிகவும் மோசமான நிலையிலிருந்த அந்த பங்கினை புத்துயிரூட்டி, புத்துணர்ச்சியுடன் புது மெருகேற்றினார். அதற்காக அவர் செய்தது, நோயாளிகளிடம் அன்பும் அக்கறையும் காட்டியதாகும்.

அதன்பிறகு, நான்கு ஆண்டுகள் கழித்து கி.பி. 1831ம் ஆண்டு, "மேரிஸ்ட்ஸ்" (Marists) என்றழைக்கப்படும் "மரியாளின் சபை" (Society of Mary) எனும் துறவற சபையில் சேர்ந்தார். கி.பி. 1833ம் ஆண்டு, அருட்தந்தை "ஜீன்-கிளாட் கொலின்" (Fr. Jean-Claude Colin) என்பவருடன் இணைந்து "மரியாளின் சபை" (Society of Mary) திருத்தந்தையின் ஒப்புதல் வாங்குவது தொடர்பாக ரோம் பயணித்தார். இறுதியில் 1836ம் ஆண்டு, "மரியாளின் சபைக்கு" திருத்தந்தை பதினாறாம் கிரகோரியால் (Pope Gregory XVI) ஒப்புதல் அளிக்கப்பட்டது. "தென்மேற்கு பஸிஃபிக்" (South West Pacific) பிராந்தியங்களுக்கு மறைப்பணியாளர்களை அனுப்புமாறு திருத்தந்தை அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ஏழு மரியாளின் சபை மறைப் பணியாளர்களுடன் கி.பி. 1837ம் ஆண்டு ஒஷினியாத் தீவுக்கு மறைபரப்பு பணிக்காக புறப்பட்டுச் சென்றார். அவர்களது குழுவுக்கு "நியுஸிலாந்து" (New Zealand) நாட்டின் முதல் ஆயரான "ஜீன் பேப்டிஸ்ட் பொம்பள்ளியர்" (Bishop Jean Baptiste Pompallier) தலைமை தாங்கினார். அப்போது பசிஃபிக் பெருங்கடலை ஒட்டிய ஃப்யூச்சினா (Futuna) தீவை அடைந்தார். அங்கு தட்பவெப்ப நிலையினால் மிகவும் கஷ்டப்பட்டார். உணவின்றி பட்டினியால் தவித்தார். மறைபரப்பு பணியை முடித்துவிட்டு திரும்பும்போது, தன் உடலில் வலுவிழந்தவராக காணப்பட்டார். இருப்பினும் தன் பணியை மகிழ்ச்சியோடு செய்தார்.

மக்களுக்கு போதிப்பது சிரமமாக இருந்தபோதிலும் ஒரு சிலரையேனும் மனந்திருப்பி கிறிஸ்துவின் பாதையில் சேர்த்தார். இதனால் நம்பிக்கையின் மீது வெறுப்பு கொண்ட கொலைகாரர்களால் மிகவும் மோசமாக வதைக்கப்பட்டார். ஆனால் இவர்களின் மேல் சிறுதுளிகூட வெறுப்பு காட்டாமல் அவர்களையும் அன்பு செய்தார் பீட்டர் ச்சானல். இதனை அறிந்து, இவரின் பாசத்தை சுவைத்த ஃப்யூச்சினா தீவினர் இவரை "உயர்ந்த உள்ளம் கொண்ட பீட்டர்" என்றே அழைத்தனர். மரியன்னை மீது கொண்ட பக்தியில் சிறந்து விளங்கிய இவர், மரியன்னையின் முன் பல மணிநேரம் மண்டியிட்டு செபிப்பார்.

அப்போது ஃப்யூச்சினா தீவை ஆட்சி செய்த அரசனின் மகன், அருட்தந்தையிடம் அதிகம் பாசமாக இருந்தான். இதனால் தானும் ஞானஸ்நானம் பெற விரும்பினான். இதனால் கோபமுற்ற தீவின் அரசன், தன் படையாட்களை அனுப்பி பீட்டரை கொடுமையாக கொல்லக் கூறினான். அதனால் அக்கொடியவர்கள் அருட்தந்தை பீட்டர் சேனலை கி.பி. 1842ம் ஆண்டு தடிகளால் அடித்தே கொன்றனர்.

இவரோடு சேர்ந்து ஃப்யூச்சினா தீவில் கிறிஸ்தவம் அழிந்துவிடும் என்று அரசன் கருதினான். ஆனால் இதற்கு எதிர்மாறாக அருட்தந்தை இறந்த இரண்டே ஆண்டுகளில் ஃப்யூச்சினா தீவு முழுவதும் கிறிஸ்தவ மறை பரவியது. ஒசியானியாத் தீவுகள் (Ozeanien) முழுவதும் இன்றுவரை கிறிஸ்தவ மறை செழித்து வளர்ந்து வருகிறது. இப்புனிதரை இப்பகுதியில் வாழ்பவர்கள் தங்களின் முதல் மறைசாட்சி என்று கூறி வாழ்த்தி மகிழ்கின்றனர்.

ஏப்ரல் 27 : முதல் வாசகம்


ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 19-26

அந்நாள்களில்

ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். அவர்கள் யூதருக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள்; வேறு எவருக்கும் அறிவிக்கவில்லை. அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அவர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கரை அணுகி ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள். ஆண்டவரின் கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். பெருந்தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர்.

இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்றுவர அனுப்பி வைத்தார்கள். அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.

பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்துவந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 27 : பதிலுரைப் பாடல்


திபா 87: 1-3. 4-5. 6-7a (பல்லவி: திபா 117: 1a)

பல்லவி: பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!

அல்லது: அல்லேலூயா.

1 நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.

2 யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும் விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.

3 கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. - பல்லவி

4 எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, ‘இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.

5 ‘இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். - பல்லவி

6 மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, ‘இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார்.

7a ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து ‘எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது’ என்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஏப்ரல் 27 : நற்செய்தி வாசகம்


நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30

அக்காலத்தில்

எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார். யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ளமாட்டார்.

அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

----------------------------------------------------

I திருத்தூதர் பணிகள் 11: 19-26

II யோவான் 10: 22-30

கிறிஸ்தவர்கள் என்ற பெயரைப் பெற்ற சீடர்கள்

இறுதிவரை நாங்கள் கிறிஸ்தவர்களாகவே இருப்போம்:

1993 ஆம் ஆண்டு சூடானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடர்தாக்குதல் நடைபெற்றது. இதுகுறித்து ஆய்வுநடத்தச் சென்ற, அமெரிக்காவைச் சார்ந்த செய்தியாளர் ஒருவர் அங்கிருந்த ஒருசில கிறிஸ்தவச் சிறுவர்களிடம், “நீங்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்காக உங்கள்மீது தொடர்தாக்குதல் நடத்தப்படுகின்றதே! உங்கள் உயிரைக் காத்துக்கொள்ள, நீங்கள் இஸ்லாமியர்களாக மாற ஆசையில்லையா?” என்றார். அதற்கு அந்தக் கிறிஸ்தவச் சிறுவர்கள், “எங்களுக்கு ஒருபோதும் இஸ்லாமியர்களாக மாறவேண்டும் என்ற ஆசை இல்லை. நாங்கள் கடைசிவரைக்கும் கிறிஸ்தவர்களாகவே இருப்போம். ஏனெனில், கிறிஸ்தவம்தான் உண்மையான சமயம்” என்றார்கள். இதைக்கேட்டுச் செய்தியாளர் மிகவும் வியந்துபோனார்.

என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை; இறுதிவரைக்கும் கிறிஸ்தவர்களாகவே இருப்போம் என்று அந்தச் சிறுவர்கள் சொன்ன பதில்தான் எத்துணை உறுதியானவை! இன்றைய இறைவார்த்தை, பலவேறு சவால்களுக்கு நடுவிலும் இயேசுவின் சீடர்கள் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்ததையும், அவர்கள் முதன்முறையாகக் ‘கிறிஸ்தவர்கள்’ என்னும் பெயர் பெற்றதையும் குறித்து எடுத்துச்சொல்கின்றது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

திருத்தொண்டரான ஸ்தேவான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, திருத்தூதர்களைத் தவிர்த்து இயேசுவைப் பின்பற்றி வந்தவர்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போனார்கள். இவ்வாறு சிதறிப்போனவர்கள் அங்கிருந்த யூதர்களுக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள். இந்நிலையில் அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சார்ந்தவர்கள் அந்தியாக்கியாவிற்கு வந்து அங்கிருந்த கிரேக்கர்களை அணுகி, அவர்களை ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவித்தார்கள். அவர்களும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்கிறார்கள். இதனால் யூதர்கள் மட்டுமல்லாமல், பிற இனத்தவரும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கைகொள்ளும் நிலை ஏற்படுகின்றது. இச்செய்தி எருசலேம் திரு அவையில் இருந்தவர்களுக்குத் தெரியவர, அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியாவிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்மூலம் பலர் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்கிறார்கள். இதனால் இயேசுவின் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரைப் பெறுகின்றார்கள்.

இயேசுவின் சீடர்கள் ‘கிறிஸ்தவர்கள்’ என அழைக்கப்பட்டத்தில் பல அர்த்தம் இருக்கின்றது. முதலாவதாக, அவர்கள் இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வதுபோல், அவரது வார்த்தையைக் கேட்டு நடந்தார்கள். இரண்டாவதாக, அவர்கள் தாங்கள் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்ந்தார்கள். மூன்றாவதாக, அவர்கள் யூத மக்களை மட்டுமல்லாது, பிற இனத்து மக்களையும் உள்ளடக்கி, ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள். அதனாலேயே அவர்கள் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டார்கள். நாம் கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கேற்ப வாழ்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனைக்கு:

 அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழட்டும் (மத் 5: 16).

 இயேசு சொன்னதுபோன்று இறுதிவரை மனவுறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர் (மத் 24: 13)

 நாம் பெயருக்குக் கிறிஸ்தவர்களாக? அல்லது பெயர் சொல்லும் கிறிஸ்தவர்களா?

ஆன்றோர் வாக்கு:

‘சிறிய செயல்களுக்காகக் கிறிஸ்தவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. மாறாக, பெரிய கொள்கைகளைக் கட்டியெழுப்பி, அதற்காக வாழவே’ என்பார் திருத்தந்தை பிரான்ஸ். எனவே, பெரிய கொள்கைகளைக் கட்டியெழுப்பி, உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

ஏப்ரல் 27: லூக்கா நகர் புனிதர் ஸிட்டா St. Zita of Lucca


கன்னியர்: 
(Virgin)

பிறப்பு: கி.பி. 1212 லூக்கா நகரின் அருகேயுள்ள மொன்ஸக்ரட்டி, இத்தாலி (Monsagrati, Near Lucca, Italy)

இறப்பு: ஏப்ரல் 27, 1272 (வயது 59-60) லூக்கா, இத்தாலி (Lucca, Italy)

ஏற்கும் சமயம்:  ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

புனிதர் பட்டம்: கி.பி. 1696

முக்கிய திருத்தலம்: சேன் ஃப்ரேடியானோ பேராலயம், லூக்கா (Basilica di San Frediano, Lucca)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 27

பாதுகாவல்:  வீட்டுப் பணியாளர்கள், தொலைந்துபோன சாவி,

பாலியல் வன்முரைக்காளானவர்கள், தமது பக்திக்காக இழிவுபடுத்தப்பட்ட மக்கள், 

திருச்சபையின் திருமணமாகாத பொதுநிலைப் பெண்கள் (Single Laywomen), லூக்கா எனும் இத்தாலிய நகரம் (Italian City of Lucca)

புனிதர் ஸிட்டா ஒரு இத்தாலிய நாட்டு ரோமன் கத்தோலிக்க புனிதரும், அருட்சகோதரியும் ஆவார்.

இத்தாலியின் லூக்கா (Lucca) நகரின் அருகேயுள்ள "மோன்சக்ரட்டி" (Monsagrati) என்னும் கிராமத்தில் பிறந்த இவர், தமது பன்னிரெண்டாம் வயதிலேயே வீட்டுப் பணிப்பெண்ணாக பணியமர்த்தப்பட்டார். நீண்ட காலமாக அவர் ஒரு பணிப்பெண்ணாக கொடுமைப்படுத்தப்பட்டார். கடினமான பணிகள் அவர்மேல் சுமத்தப்பட்டன. நியாயமற்ற முறையில் அவர் துன்புறுத்தப்பட்டார். அவருடைய அன்பான மற்றும் வெளிப்படையான தன்மைக்காக அவர் அவரது முதலாளிகளாலும், சக பணியாளர்களாலும் தாக்கப்பட்டார். இடைவிடாது தவறாகப் பயன்படுத்தப்பட்டார். அவருடைய பணிவும், சாந்த குணமும், அன்பும் அவரைக் கொடுமைப் படுத்திய முதலாளிகளையும், சக பணியாளர்களையும் அவரை விட்டு விலக வைத்தன. அவரது விடாமுயற்சியும், பண்பும் அவரை அவர்களிடமிருந்து மீட்டன. அவரது நிலையான பக்தி படிப்படியாக ஒரு மத எழுச்சியை குடியேற்றியது.

சோம்பேறித்தனமான பக்தி பொய்மையானது என்று அவர் அடிக்கடி பிறருக்கு எடுத்துரைத்தார். அவருக்கு தரப்பட்ட பணி, கடவுளால் அவருக்கு தரப்பட்டது என்று கூறினார். பிறரை இகழ்வதை விட்டு, தமது பணிகளை தாமே செவ்வன செய்தார். உறங்கும் நேரத்தைக் குறைத்து, செபத்தில் ஈடுபட்டார். 

கி.பி. 1272ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 27ம் நாளன்று, அவர் உறக்கத்திலேய சமாதானமாக இறந்தார். அவர் படுத்திருந்த இடத்தின்மேலே ஒரு விண்மீன் தோன்றியதாக சொல்லப்பட்டது.

அடக்கம் செய்யப்பட்ட அவரது உடல், கி.பி. 1580ம் ஆண்டு தோண்டி வெளியில் எடுக்கப்பட்டது. அவரது உடல் கெட்டு விடாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பின்னர் பதப்படுத்தப்பட்டதாக மாறிவிட்டது. புனிதர் ஸிட்டாவின் உடல் தற்போது லுக்காவிலுள்ள 'சேன் ஃப்ரேடியானோ பேராலயத்தில்' (Basilica di San Frediano in Lucca) பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 26 : முதல் வாசகம்


வாழ்வுக்கு வழியான மன மாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 1-18

அந்நாள்களில்

பிற இனத்தவரும் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதைப்பற்றித் திருத்தூதர்களும் யூதேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளும் கேள்விப்பட்டார்கள். பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனம் செய்துகொண்டவர்கள் அவரோடு வாதிட்டனர். ‘‘நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?” என்று குறை கூறினர்.

பேதுரு நடந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக விளக்கிக் கூறத் தொடங்கினார். ‘‘நான் யோப்பா நகரில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது மெய்ம்மறந்த நிலையில் ஒரு காட்சி கண்டேன். பெரிய கப்பற்பாயைப் போன்ற ஒரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டு வானத்திலிருந்து இறக்கப்பட்டு என்னிடம் வந்தது. அதை நான் கவனமாக நோக்கியபோது, தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன, காட்டு விலங்குகள் ஆகியவற்றைக் கண்டேன். ‘பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு’ என்னும் ஒரு குரல் ஒலிப்பதையும் கேட்டேன். அதற்கு நான், ‘வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதுவும் ஒருபோதும் என் வாய்க்குள் சென்றதில்லையே’ என்றேன். இரண்டாம் முறையும் வானிலிருந்து மறுமொழியாக, ‘தூய்மையானது எனக் கடவுள் கருதுவதைத் தீட்டாகக் கருதாதே’ என்று அக்குரல் ஒலித்தது. இப்படி மும்முறை நடந்தபின்பு யாவும் வானத்துக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அந்நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர் நான் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து நின்றனர். தூய ஆவியார் என்னிடம், ‘தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு செல்’ என்று கூறினார். உடனே நானும் இந்த ஆறு சகோதரர்களுமாக அந்த மனிதர் வீட்டுக்குச் சென்றோம். அவர் தம் வீட்டில் வானதூதர் வந்து நின்றதைக் கண்டதாகவும், அத்தூதர் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும்; நீரும் உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உம்மோடு பேசுவார் என்று தமக்குக் கூறியதாகவும் எங்களுக்கு அறிவித்தார். நான் பேசத்தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்ததுபோல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது. அப்போது, ‘யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்; ஆனால் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்’ என்ற ஆண்டவரின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். இப்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?” என்றார்.

இவற்றைக் கேட்டு அவர்கள் அமைதி அடைந்தனர்; வாழ்வுக்கு வழியான மனமாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார் என்று கூறி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 26 : பதிலுரைப் பாடல்


திபா 42: 1-2; 43: 3. 4 (பல்லவி: 42: 2a)

பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.

அல்லது: அல்லேலூயா.

42:1 கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.

என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்? - பல்லவி

43:3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும். அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். - பல்லவி

அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 14-15

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஏப்ரல் 26 : நற்செய்தி வாசகம்


ஆடுகளுக்கு வாயில் நானே.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10

அக்காலத்தில்

இயேசு கூறியது: ‘‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை பின்தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.”

இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

மீண்டும் இயேசு கூறியது: ‘‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
------------------------------------------------
பாஸ்கா காலம் நான்காம் வாரம் திங்கட்கிழமை

I திருத்தூதர் பணிகள் 11: 1-18
II யோவான் 10: 1-10

பிறவினத்தார்மீது தூய ஆவியார் இறங்கிவரல்

தூய ஆவியாரைவிட்டுத் தொலைவில்போன பேச்சாளர்

ஒரு நகரில் பேச்சாளர் ஒருவர் இருந்தார். ஒருநாள் இவருக்கு நகரிலுள்ள ஒரு கிறிஸ்தவக் கல்லூரியியிலிருந்து, குறிப்பிட்ட நாளில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்வில் சொற்பொழிவு ஆற்றவேண்டும் என்ற அழைப்புவந்தது. “ஒருசில நாள்களில் பதில் சொல்கின்றேன்” என்று சொல்லி இவர் அழைப்பைத் துண்டித்தார்.

ஒருநாள், இரண்டுநாள் என்று நான்கு வாரங்கள் ஆயின. ஆனாலும் இவர் கல்லூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பேசுவது குறித்து எந்தவொரு பதிலும் சொல்லாமல் இருந்தார். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடமிருந்தே அழைப்பு வந்தது அவர் இவரிடம், “நிகழ்ச்சிக்கு வருகிறீர்களா?” என்று கேட்டதற்கு இவர், “வழக்கமாக நான் எந்தவொரு நிகழ்ச்சிக்குப் போவதாக இருந்தாலும், தூய ஆவியாரிடம் கேட்டுவிட்டுத்தான் போவேன். இந்த நிகழ்ச்சிக்கு நான் போவது குறித்து தூய ஆவியாரிடம் கேட்டபொழுது, அவர் எனக்கு எதையும் வெளிப்படுத்தாமல் இருக்கிறார்” என்றார். இதைக்கேட்டதும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர், நான்கு வாரங்களாகத் தூய ஆவியார் உங்களுக்கு எதையும் வெளிப்படுத்தவில்லையா...? அப்படியானால் நீங்கள் நான்கு வாரங்கள் தூய ஆவியாரை விட்டுத்தொலைவில் இருக்கிறீர்கள்! அப்படிப்பட்டவர் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியில் பேசுவதில் எங்களுக்கு விருப்பமில்லை” என்று அழைப்பைத் துண்டித்தார்.

ஒருவர் தூய ஆவியாரால் நிரப்பப்படவில்லை எனில், அவரிடமிருந்து ஞானம்நிறைந்த வார்த்தைகள் வருவது கடினமே! இன்றைய முதல்வாசகத்தில் பிறவினத்தவர் தூய ஆவியாரால் நிரப்பப்படுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

யூதர்கள் பிறவினத்தாரோடு உணவுஉண்பது கிடையாது. ஏனெனில் அவர்கள், கடவுள் தங்களுக்குப் பத்துக்கட்டளைகளைக் கொடுத்திருந்தால் (விப 19-20), தாங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று கருதினார்கள். பேதுருவுக்கும் இப்படிப்பட்ட எண்ணமிருந்தது. எப்பொழுது அவர் கொர்னலேயுவின் வீட்டிற்குச்சென்று பேசும்பொழுது தூய ஆவியார் அவர்கள்மீது இறங்கிவரக் கண்டரோ, அப்பொழுதே அவர் தூயஆவியார் எல்லார்மீதும் இறங்கி வருகின்றார், வாழ்வுக்கு வழியான மனமாற்றத்தைப் பிற இனத்தாருக்கும் கடவுள் கொடுத்திருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்தவராய், பிற இனத்தவரோடு சேர்ந்து உண்கிறார். இதுகுறித்து எருசலேமில் இருந்த விருத்தசேதனம் செய்துகொண்டவர்கள் பேதுருவிடம் கேட்டபொழுது, மேலே உள்ள யாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக அவர்களிடம் சொல்கின்றார்.

ஆம், கடவுள் தூய ஆவியாரின் அருள்பொழிவையும் வாழ்விற்கு வழியான மனமாற்றத்தையும் பிற இனத்தாருக்கும் கொடுத்துள்ளார். எனவே, நாம் எல்லாரையும் கடவுளின் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு வாழ்வதே சிறப்பானது.

சிந்தனைக்கு:

 நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன் (யோவே 2: 28)

 மாந்தவர் யாவர்மேலும் தூய ஆவியார் பொழியப்பட்டுள்ளதால், மனிதர்களை வேறுபடுத்திப் பார்ப்பது இழிவான செயல்.

 கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நாம் யாவரும் ஒன்றாய் இருக்கின்றோம் (கலா 3: 28)

இறைவாக்கு:

‘தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்’ (திபா 145: 18) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், கடவுள் யாவருக்குமானவராக இருப்பதால், நம்மிடம் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்துவிட்டு, கிறிஸ்துவில் ஒன்றாய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்

ஏப்ரல் 26: புனிதர் ட்ரூட்பெர்ட் St. Trudpert


மறைப்பணியாளர்: 
(Missionary)

பிறப்பு: அயர்லாந்து அல்லது ஜெர்மனி (Ireland or Germany)

இறப்பு: கி.பி. 607 அல்லது கி.பி. 644

ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 26

ஏழாம் நூற்றாண்டில் பிறந்த புனிதர் ட்ரூட்பெர்ட், ஜெர்மனி நாட்டின் ஒரு மதபோதகர் ஆவார். இவர் அயர்லாந்தின் "செல்டிக்" துறவி (Celtic monk) என்றும் அழைக்கப்பட்டார். இவர் மறைபரப்பு பணியை தொடர்ந்து செய்ய, திருத்தந்தையின் அதிகாரம் பெற ரோம் சென்றார். அங்கிருந்து மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பி வர "ப்ரெய்ஸ்கவ்" (Breisgau) நாட்டிலுள்ள "ஆலமன்னி" (Alamanni) வழியாக பயணித்து நாடு திரும்பினார். அப்போது ரைனி'ல் (Rhine) பயணம் செய்யும்போது, ஃப்ரைபர்க்-ஐ (Freiburg) சேர்ந்த ஒருவர் தன்னிடம் இருந்த நிலத்தில், சுமார் 25 கிலோமீட்டர் நிலத்தை, மறைபரப்பு பணிக்காக கொடுத்தார்.

அப்போது ட்ரூட்பெர்ட், அந்நிலத்திலிருந்த மரம் புதர்களை அழித்துவிட்டு, ஒரு சிறு அறையையும் சிறிய தேவாலயம் ஒன்றையும் கட்டினார். பின்னாளில், "கான்ஸ்டன்ஸ்" மறை மாவட்ட ஆயரான "மார்ட்டினஸ்" (Bishop Martinus of Constance) இந்த தேவாலயத்தை புனிதர்கள் பீட்டர் மற்றும் பவுல் ஆகியோருக்கு அர்ப்பணித்தார்.

அங்கே ஓர் வேலையாள் போலவே, துறவி ட்ரூட்பெர்ட் உழைத்தார். ஒரு நாள் வேலை முடித்துவிட்டு களைப்பாக உறங்கும்போது, முன்பின் தெரியாத, அடிமைகளின் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் வந்து அவரை கொன்றுவிட்டான். பின்னர் ஓட்பெர்க் (Otbert) என்பவர், ட்ரூட்பெர்ட்'டை கௌரவமாக அடக்கம் செய்தார். இவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் குழந்தைப் பருவத்திலிருந்தே எண்ணிலடங்கா, பணிகளைச் செய்துள்ளார். அவர் கி.பி. 640 முதல் கி.பி. 643 வரை ப்ரெய்ஸ்கவ்-இல் வாழ்ந்தார் என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் இவ்வாண்டுகளில் அங்கே வாழ்ந்த பவர் (Baur) என்பவர் ட்ரூட்பெர்ட் 607ம் ஆண்டு, இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு கி.பி. 815ம் ஆண்டு அவரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வாழும்போது எழுதிய அவரின் வாழ்க்கை வரலாற்றை 10 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு, அதை சரிசெய்து பாதுகாக்கப்படுகின்றது. முன்ஸ்டர் (Münster) நகரில் உள்ள ஆசீர்வாதப்பர் மடத்தில் இவரது எலும்புகளும், வரலாற்று ஆவணங்களும் வைக்கப்பட்டது. அங்கு இப்புனிதருக்கென்று பேராலயமும் உள்ளது.

இப்புனிதர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவர் பெயரில் ஒரு "பெனடிக்டைன் மடம்" (Benedictine Abbey of St. Trudpert) கட்டப்பட்டது.

ஏப்ரல் 26: புனிதர் அனக்லேட்டஸ் St. Anacletus


3ம் திருத்தந்தை: 
(3rd Pope)

பிறப்பு: கி. பி. 25 ரோம், இத்தாலி, ரோம பேரரசு (Rome, Italy, Roman Empire)

இறப்பு: ஏப்ரல் 26, 88 ரோம், இத்தாலி, ரோம பேரரசு (Rome, Italy, Roman Empire)

ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 26

புனிதர் அனக்லேட்டஸ் கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாம் திருத்தந்தையாவார். அவருக்கு முன் திருத்தந்தையராக இருந்தவர்கள் முதலில் "பேதுரு" (St. Peter), அதன்பின் "புனிதர் லைனஸ்" (Saint Linus) ஆவர். இவர் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராகக் மதிக்கப்படுகிறார்.

பதவிக் காலம் பற்றிய செய்திகள்:
மரபுச் செய்திகளின்படி, அனக்லேட்டஸ் ரோமைச் சார்ந்தவர் என்றும், பன்னிரு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்றும் கூறப்படுகிறது. வத்திக்கான் வெளியிடுகின்ற "ஆண்டு ஏடு" (Annuario Pontificio), "முதல் இரு நூற்றாண்டுகளைப் பொறுத்தமட்டில், ஒரு குறிப்பிட்ட திருத்தந்தை எப்போது பதவி ஏற்றார், எப்போது அவரது பதவிக்காலம் முடிந்தது என்பது பற்றி உறுதியாகக் கூறுவது கடினம்" என்றுரைக்கிறது. அந்த ஏட்டின்படி, அனக்லேட்டஸ் கி.பி. 80 முதல் கி.பி. 92 வரை பதவியிலிருந்தார். வேறு சில ஏடுகள் அப்பதவிக்காலம் கி.பி. 77 முதல் கி.பி. 88 என்று கூறுகின்றன.

திருத்தந்தை அனக்லேட்டஸ் ரோம் மறைமாவட்டத்தை 25 பங்குத்தளங்களாகப் பிரித்தார் என்றும், ஒரு சிலரைக் குருக்களாகத் திருநிலைப்படுத்தினார் என்றும் சில பண்டைய ஏடுகள் கூறுகின்றன.

வத்திக்கானில் கல்லறை:
திருத்தந்தை அனக்லேட்டஸ் இன்றைய வத்திக்கான் நகரில் அமைந்துள்ள புனித பேதுரு பேராலயத்தில் அவருக்குமுன் பதவியிலிருந்த "திருத்தந்தை லைனஸ்" (Saint Linus) என்பவரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அனக்லேட்டஸ் என்னும் திருத்தந்தையின் பெயர் ரோம் வழிபாட்டு முறைத் திருப்பலியில் உள்ள நற்கருணை வழிபாட்டு வேண்டுதலில் சேர்க்கப்பட்டுள்ளது.

நினைவுத் திருவிழா:
கத்தோலிக்க திருச்சபையின் பழைய நாட்காட்டியாகிய "திரிதெந்தீன் நாட்காட்டியில்" ஏப்ரல் 26ஆம் நாள் புனித அனக்லேட்டஸ் மற்றும் புனித மார்செல்லீனுஸ் ஆகியோரின் விழா கொண்டாடப் பணிக்கப்பட்டது. அந்நாட்காட்டியில் ஜூலை 13ம் நாள் புனித அனக்லேட்டஸ் திருவிழா அமைந்தது.

1960ம் ஆண்டில் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் ஜூலை மாதம், 13ம் நாளில் இருந்த விழாவை அகற்றினார். அதே நேரத்தில், ஏப்ரல் மாதம், 26ம் நாள் புனித அனக்லேட்டஸ் விழாவாக அமையும் என்று பணித்தார். அனக்லேட்டஸ் என்னும் பெயர் ரோம் நற்கருணை வழிபாட்டு வேண்டுதலில் உள்ளது.

1969ம் ஆண்டு முதல் ஏப்ரல் 26 விழா கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இல்லை. திருத்தந்தை அனக்லேட்டஸ் எந்த நாளில் இறந்தார் என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும், "ரோம் மறைச்சாட்சியர் நூல்" (Roman Martyrology) என்னும் ஏடு, அவர் ஏப்ரல் மாதம், 26ம் நாள் இறந்ததாகக் குறிப்பிடுகிறது.

ஏப்ரல் 26: புனிதர் மர்செல்லீனஸ் St. Marcellinus


29ம் திருத்தந்தை: 
(29th Pope)

பிறப்பு: தெரியவில்லை  ரோம், மேற்கு ரோமப் பேரரசு (Rome, Western Roman Empire)

இறப்பு: கி.பி. 304 ரோம், மேற்கு ரோமப் பேரரசு (Rome, Western Roman Empire)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 26

திருத்தந்தை மர்செல்லீனஸ், ரோம் ஆயராகவும், திருத்தந்தையாகவும் 296ம் ஆண்டு, ஜூன் மாதம், 30ம் நாள் முதல், கி.பி. 304ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 25ம் நாள்வரை ஆட்சி செய்தார். இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் “காயுஸ்” (Pope Caius) என்பவர் ஆவார். திருத்தந்தை புனித மர்செல்லீனஸ் கத்தோலிக்க திருச்சபையின் 29ம் திருத்தந்தை ஆவார். மர்செல்லீனஸ் என்பது பண்டைய உரோமைக் குடும்பப் பெயர்களுள் ஒன்றாகும்.

ரோமப் பேரரசன் (Roman Emperor) “டையோக்ளேசியன்” (Diocletian) ஆண்ட காலத்தில் மர்செல்லீனஸ் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். அப்போது கிறிஸ்தவர்கள் தம் மதத்தைச் சுதந்திரமாகக் கடைப்பிடித்தனர். அவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

ஆனால் கி.பி. 302ம் ஆண்டு, மன்னனன் டையோக்ளேசியன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார். கிறிஸ்தவப் போர்வீரர்கள் படையிலிருந்து விலக்கப்பட்டனர். பின்னர் கிறிஸ்தவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டன. அவர்களுடைய நூல்களும் அழிக்கப்பட்டன. மன்னனின் அரண்மனை இரு முறை தீப்பற்றி எரிந்ததும், மன்னனின் செயல்பாடு இன்னும் அதிகக் கொடூரமானது. கிறிஸ்தவத்தைக் கைவிடாவிட்டால் சாவுதான் முடிவு என்றாயிற்று.

இந்த நெருக்கடியின்போது, மர்செல்லீனஸ் விவிலியம் மற்றும் கிறிஸ்தவ சமய நூல்களை மன்னனின் ஆணைக்கு ஏற்ப கையளித்தார் என்றும், கிறிஸ்தவ நம்பிக்கையை விட்டு விலகினார் என்றும், பின்னர் மனம் வருந்தி கிறிஸ்தவத்துக்குத் திரும்பினார் என்றும், அதன் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்றும் திருத்தந்தையர் நூல் (Liber Pontificalis) கூறுகிறது. அச்செய்தி தற்போது கைவசம் கிடைக்காத "புனித மர்செல்லீனசின் சாவு வரலாறு" (Acts of St. Marcellinus) என்னும் பண்டைய ஏட்டிலிருந்து பெறப்பட்டது.

திருத்தந்தை மர்செல்லீனுஸ் கி.பி. 304ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 26ம் நாள், அவர் இறந்து 25 நாள்களுக்குப் பின், ரோம் சலாரியா சாலையில் உள்ள பிரிசில்லா கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இச்செய்தி திருத்தந்தையர் நூலில் உள்ளது.

கி.பி. 13ம் நூற்றாண்டில் மர்செல்லீனஸ் நினைவாக விழாக் கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 26ம் நாள் அவருடைய விழா புனிதர் கிலேட்டஸ் (Saint Cletus) விழாவோடு இணைத்துக் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த இரு திருத்தந்தையரின் மறைச்சாட்சிச் சாவு பற்றியும் வரலாற்றுத் தெளிவு இல்லாமையால் 1969ம் ஆண்டு வெளியான புனிதர் நாள்காட்டியில் அவ்விழா குறிக்கப்படவில்லை.

வழிவந்த திருத்தந்தை:
மர்செல்லீனசின் மரணத்தின் பிறகு, கிறிஸ்தவ சபை துன்புறுத்தப்பட்ட நிலையில் இருந்ததால், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பெயர் முதலாம் மர்செல்லஸ் (Pope Marcellus) ஆகும்.

ஏப்ரல் 25 : முதல் வாசகம்


இயேசுவினாலே அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 8-12

அந்நாள்களில்

பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு கூறியது: “மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல்நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, ‘கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.’ இவராலே அன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 25 : பதிலுரைப் பாடல்


திபா 118: 1,8-9. 21-23. 26,28,29 (பல்லவி: 22)

பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!

அல்லது: அல்லேலூயா.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!

உயர்குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! - பல்லவி

21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.

22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!

23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! - பல்லவி

26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.

28 என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.

29 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. - பல்லவி

ஏப்ரல் 25 : இரண்டாம் வாசகம்


கடவுள் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-2

அன்பிற்குரியவர்களே,

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 15

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஏப்ரல் 25 : நற்செய்தி வாசகம்


நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18

அக்காலத்தில்

இயேசு கூறியது: “நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக் கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றிக் கவலை இல்லை.

நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.

என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
-------------------------------------------------
பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு (ஏப்ரல் 25)

I திருத்தூதர் பணிகள் 4: 8-12
II 1 யோவான் 3: 1-2
III யோவான் 10: 11-18

தன்னுயிரையே கொடுத்த நல்லாயன் இயேசு

நிகழ்வு

இளைஞர்களின் எழுச்சி நாயகனாம் சுவாமி விவேகானந்தருக்கு நன்கு அறிமுகமானவர் ஆங்கிலேயரான ஜெனரல் ஸ்ட்ராவ். இவரிடம் விவேகானந்தர் மனம்விட்டுப் பேசுவதுண்டு. ஜெனரல் ஸ்ட்ராவும் விவேகானந்தரிடம் பல செய்திகளைப் பகிர்ந்துகொள்வதுண்டு.

ஒருநாள் விவேகானந்தர் இவரிடம், “நடந்து முடிந்த சிப்பாய்க் கலகத்தில் எங்களுடைய சிப்பாய்கள் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாகவும், கையில் தரமான துப்பாக்கிகளோடும், வெடிமருந்துகளோடும், உணவுக் பொருள்களோடும் இருந்தும், அவர்களால் ஏன் வெற்றி பெற முடியவில்லை?” என்றார். அதற்கு ஜெனரல் ஸ்ட்ராவ், “சிப்பாய்க் கலகத்தின்போது உங்களுடைய படைத்தலைவர்கள், சிப்பாய்களுக்கு முன்னால் நின்று போர் புரியாமல், அவர்களுக்குப் பின்னால் மிகவும் பாதுகாப்பாக நின்றுகொண்டு, ‘வீரர்களே! சண்டையிடுங்கள்” என்று கத்திக்கொண்டிருந்தார்கள். தலைமை ஏற்பவர்கள் தாங்கள் முதலில் இறப்பை எதிர்கொள்ள முன்வராவிட்டால், எஞ்சிய வீரர்கள் ஒருபோதும் இறப்பை எதிர்கொள்ள முன்வரமாட்டார்கள். இதுதான் உங்களுடைய தோல்விக் காரணம்” என்றார்.

இதைத் தொடர்ந்து விவேகானந்தர் அவரிடம், “நீங்கள் சொல்வதிலிருந்து ஒன்று எனக்கு நன்றாகப் புரிகிறது. அது என்னவெனில், தலைவன் என்பவன் தன் தலையைப் பலி கொடுக்கக்கூடியவனாய் இருக்கவேண்டும். ஒரு இலட்சியத்திற்காக உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனே உண்மையான தலைவன் என்பதாகும்” என்றான்.

ஆம், தலையைப் பலியாகக் கொடுக்கக்கூடியவனே உண்மையான தலைவன், ஆயன். இன்று நாம் நல்லாயன் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்று நாம் வாசிக்கக்கேட்ட வாசகங்கள், இயேசு கிறிஸ்துவை எத்தகைய ஆயனாக முன்னிலைப்படுத்துகின்றன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஆடுகளுக்காக உயிரையும் தரும் நல்லாயன்

மேய்ச்சல் நிலங்களைத் தேடி, நாடோடிகளாய் அலைந்து திரிந்த இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய கடவுளை ஓர் ஆயனாகப் பார்த்ததில் வியப்பேதும் இல்லை (திபா 23: 1; எசா 40: 11); ஆனால், இஸ்ரயேலை ஆயரென ஆண்டவர்கள் மந்தையைச் சரியாக மேய்க்காமலும், நலிவுற்றதைத் திடப்படுத்தாமலும், நோயுற்றதை நலப்படுத்தாமலும், காயப்பட்டதிற்குக் கட்டுப் போடாமலும், வழிதவறிப்போனவற்றைத் தேடாமலும் இருந்து, கொழுத்ததை உண்டு, மந்தையைச் சிதறடித்து வந்ததால் (எசே 34: 1-6) ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்தார் (யோவா 10: 10) “நல்ல ஆயன்” இயேசு.

“நல்லாயன் நானே” என்றும், “எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே” (யோவா 10:8) என்றும் சொல்வதற்கு இயேசுவுக்கு மிகுந்த துணிச்சல் இருந்திருக்கவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் இயேசு இவ்வார்த்தைகளைப் பேசிய நேரம், எருசலேமில் அர்ப்பண விழாவானது நடந்துகொண்டிருந்தது (யோவா 10: 22). இவ்விழாவானது கி.மு.165 ஆம் ஆண்டு யூதா மக்கபே, அந்தியோக்கு எப்பிபானை வெற்றிகொண்டு, எருசலேம் திருக்கோயிலை மீண்டுமாக ஆண்டவருக்கு அர்ப்பணித்ததன் நினைவாகக் கொண்டாடப்பட்டது. நிச்சயம் இவ்விழாவிற்குத் தங்களை ‘ஆயர்கள்’ என்று அழைத்துக்கொண்ட யூத சமயத்தலைவர்கள் வந்திருக்கவேண்டும். அவர்களுக்கு நடுவில், தனக்கு முன்பாக வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே என்று சொல்லிவிட்டு, நல்லாயன் நானே என்று இயேசு சொல்வதால், அவருக்கு மிகுந்த துணிவு இருந்திருக்கவேண்டும் என்று சொல்லத் தோன்றுகின்றது.

ஆம், இயேசு தனக்கு முன்பிருந்தவர்களைப் போன்று மந்தையிலிருந்த கொழுத்ததைத் தின்றவர் அல்ல, மாறாக, அவர் மந்தைக்காக, ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். அதனால் அவர் நல்லாயனாகத் திகழ்கின்றார்.

ஆடுகளை அறிந்த நல்லாயன்

எல்லாராலும் ஆயனாக, அதுவும் நல்லாயனாக முடியாது. காரணம், ஒரு நல்லாயன் ஆடுகளின் பெயரை மட்டுமல்லாது, அவற்றின் தேவையையும் நன்றாக அறிந்து வைத்திருப்பான். “பெயர் சொல்லி உன்னை அழைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே” (எசா 45: 3) என்ற வார்த்தைகளும், “நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார் (மத் 6: 8) என்ற வார்த்தைகளும் கடவுள் நல்லாயனாய் இருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்திப்படுத்துகின்றன.

இப்படி ஆடுகளின் பெயரையும் தேவையையும் அறிய, அவற்றின்மீது அன்புகொண்டிருப்பவரால் மட்டுமே முடியும். கடவுளாகிய ஆண்டவர் நம்மீது பேரன்பு கொண்டுள்ளார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. திருத்தூதர் புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இடம்பெறும், “நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார்!” என்ற வார்த்தைகளே இதற்குச் சான்றாக இருக்கின்றன. நற்செய்தியில் இயேசு, “என் ஆடுகளை நான் அறிந்திருக்கின்றேன்” என்று சொல்கிறார் எனில், அவர் தன் ஆடுகளை – நம்மை – முழுமையான அன்பு செய்வதாலேயே அப்படிச் சொல்கின்றார் என்று புரிந்துகொள்ளலாம்.

இன்றைக்கு மக்கள் தலைவர்கள் என்று இருக்கும் பலர் மக்களுடைய தேவைகளையும், அவர்களுடைய பிரச்சனைகளையும் அறியாமல், மழைக்கு மட்டும் வந்துபோகும் புற்றீசல்கள்போல், தேர்தல் சமயங்களில் மட்டும் வந்து போய்க்கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு நடுவில், தன் ஆடுகளை – மக்களை – முழுமையாக அறிந்துவைத்திருக்கும் இயேசு நல்லாயன்தான்.

ஆடுகளுக்கு மீட்பளிக்கும் நல்லாயன்

திருத்தூதர் புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “எல்லா மனிதரும் மீட்புப்பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்” (1திமொ 2: 4). பவுல் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளை இன்றைய நற்செய்தி வாசகத்தோடும், முதல் வாசகத்தோடும் இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், நல்லாயனாம் இயேசு எல்லா மனிதரும் மீட்பு பெற விரும்புகின்றார் என்பது புரியும்.

நற்செய்தியில் இயேசு, “இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன” என்கின்றார். இங்கு இயேசு குறிப்பிடும் ‘வேறு ஆடுகள்’ என்பன, ஏழைகள் மற்றும் பிறவினத்தார் என்று திருவிவிலிய அறிஞர்கள் சொல்வார்கள். ஆகையால், ஏழைகளும் பிறவினத்து மக்களும் அவருக்கு ஆடுகளாக இருக்கின்றார்கள் அல்லது அவர் எல்லாருக்கும் ஆயராக இருக்கின்றார் என்பது உறுதியாகின்றது. இப்படி எல்லாருக்கும் ஆயராக இருக்கும் நல்லாயன் இயேசு, எல்லாருக்கும் மீட்பு அளிக்கக்கூடியவராக இருக்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் புனித பேதுரு, “இயேசுவாலே அன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை” என்கின்றார்.

இன்றைக்குப் பலர் ‘மக்கள் தலைவர்கள்’ என்று சொல்லிக்கொண்டு அலையலாம். அவர்களால் யாருக்கும் மீட்பளிக்க முடியாது. நல்லாயனாம் இயேசுவாலேயே எல்லாருக்கும் மீட்பளிக்க முடியும். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை! இப்படி நமக்காகத் தன்னுயிர் தந்து, நம்மை முழுவதும் அறிந்து, நமக்கு மீட்பினை வழங்கும் நல்லாயனாகிய இயேசுவின் ஆடுகளாக இருக்க, நாம் அவரது குரல் கேட்டு நடப்பது தேவையான ஒன்று. ஏனெனில், இயேசுவின் ஆடுகள் அவரது குரலுக்குச் செவிமடுக்கும்.

நாம் நல்லாயன் இயேசுவின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரின் ஆடுகளாக முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘மக்களுக்குப் பணிபுரிவது ஒன்றே ஆயர்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள முதன்மையான கடமை’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, மக்களுக்குப் பணிபுரிவது ஆயர்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் மட்டுமல்லாது, எல்லாருக்கும் அளிக்கப்பட்டுள்ள முதன்மையான கடமை என உணர்ந்து, நல்லாயன் இயேசுவைப் போன்று மக்களுக்காக நம்மையே தர முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.