ஆகஸ்ட் 1 : முதல் வாசகம்


நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 16: 2-4, 12-15

அந்நாள்களில்

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் சீன் பாலை நிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலை நிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றனர்.

அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக் கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.

இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், ‘மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்’ என்று சொல்” என்றார்.

மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப் படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது. பனிப் படலம் மறைந்தபோது பாலை நிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி ‘மன்னா’ என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

அப்போது மோசே அவர்களை நோக்கி, “ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 1 : பதிலுரைப் பாடல்


திபா 78: 3,4bc. 23-24. 25,54 (பல்லவி: 24b)

பல்லவி: ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்.

3 நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை - இவற்றை உரைப்போம்.

4bc வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம். - பல்லவி

23 ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு அவர் கட்டளையிட்டார்; விண்ணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார்.

24 அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்; அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார். - பல்லவி

25 வானதூதரின் உணவை மானிடர் உண்டனர்; அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்பினார்.

54 அவர் தமது திருநாட்டுக்கு, தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு, அவர்களை அழைத்துச் சென்றார். - பல்லவி

ஆகஸ்ட் 1 : இரண்டாம் வாசகம்


கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 17, 20-24

சகோதரர் சகோதரிகளே,

நான் ஆண்டவர் பெயரால் வற்புறுத்திச் சொல்வது இதுவே: பிற இனத்தவர் வாழ்வதுபோல இனி நீங்கள் வாழக் கூடாது. அவர்கள் தங்கள் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழ்கிறார்கள்.

ஆனால் நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிக் கற்றறிந்தது இதுவல்ல. உண்மையில் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரிடமுள்ள உண்மைக்கேற்பவே இருந்தது. எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட வேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 4b

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.

ஆகஸ்ட் 1 : நற்செய்தி வாசகம்


என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-35

அக்காலத்தில்

இயேசுவும் அவருடைய சீடரும் திபேரியாவில் இல்லை என்பதைக் கண்ட மக்கள்/ கூட்டமாய் படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்குக் கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார்.

அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்” என்றார். அவர்கள், “நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்’ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!” என்றனர்.

இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார்.

அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக் கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

-----------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 01)

பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு

 “அழிந்து போகும் உணவிற்காக அல்ல, நிலைவாழ்வு தரும் உணவிற்காகவே உழையுங்கள்”

 டோனி டிமெல்லோ சொல்லக்கூடிய ஒரு வேடிக்கையான கதை.

 ஓர் ஊரில் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் தனக்குக் கிடைத்த சொற்ப வருமானத்தைக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். ஒருநாள் அவன் பக்கத்து ஊருக்கு வேலை விசயமாகப் போய்க்கொண்டிருந்தான். அப்போது அவன் ஒரு பெரிய ஆலமரத்தருகே நடந்துபோய்க்கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு குரல், “உனக்கு ஏழு பானை தங்கம் வேண்டுமா?” என்று கேட்டது. அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் அங்கு இல்லை. ஏதோ ஒரு மனப்பிரமைதான் என நினைத்துக்கொண்டு, நடையைக் கட்டடத் தொடங்கினான். ஆனால், மீண்டுமாக அதே குரல், “உனக்கு ஏழு பானை தங்கம் வேண்டுமா?” என்று கேட்டதும், ஒருவிதமான ஆசை அவனுக்குள் வர அவன், “ஆமாம், எனக்கு ஏழு பானைத் தங்கம் வேண்டும்” என்றான். “ஏழு பானைத் தங்கம் வேண்டும் என்றால், நீ  உன்னுடைய வீட்டுக்குப் போ, அங்கே உன் வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள புதரில் ஏழு பானைத் தங்கம் இருக்கும், எடுத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு அந்தக் குரல் மறைந்து போனது.

 உடனே அவன் வீட்டுக்கு ஓடிச்சென்று, வீட்டுக்குப் பின்புறத்தில் இருந்த புதரில் தேடித்பார்த்தான் அங்கே ஏழு பானைத் தங்கம் இருந்தது. ஆனால், ஒரே ஒரு பானையில் மட்டும் பாதித் தங்கம்தான் இருந்தது. இதைப் பார்த்ததும் அவனை ஒருவிதமான வருத்தம் கவ்வத் தொடங்கியது. எப்படியாவது அந்தப் பானையை தங்கத்தால் நிரப்பவேண்டும் என்று முடிவு செய்தான். அதற்காக அவன் தன்னுடைய வீட்டில் இருந்த பணத்தை எல்லாம் தங்கமாக மாற்றி, அதில் போட்டான். அப்போதும் அந்தப் பானை நிரம்பவில்லை. இராப்பகலாய் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த செல்வத்தையெல்லாம் கூட தங்கமாக மாற்றி அந்தப் பானையில் போட்டுப் பார்த்தான். அப்போதும் அந்தப் பானை நிரம்புவதாக இல்லை. இறுதியாக தான் வேலைபார்க்கும் அரசனிடம் சென்று, தன்னுடைய ஊதியத்தை உயர்த்துமாறு கேட்டான். அரசனும் அவன்மீது இரக்கப்பட்டு அவனுடைய ஊதியத்தை இருமடங்கு உயர்த்தினார். அவ்வாறு அரசன் கொடுத்த இருமடங்கு ஊதியத்தைத் தங்கமாக மாற்றி, அந்தப் பானையில் போட்டபோதும்கூட, அந்தப் பானை நிரம்பவே இல்லை. இதனால் மன நிம்மதி இழந்தான், உடல் மெலிந்து போனான்.

 அவனுடைய நடவடிக்கைகளைக் கவனித்த அரசன் ஒருநாள் அவனைக் கூப்பிட்டு, “உனக்கு என்ன ஆயிற்று?, குறைவான ஊதியத்தை நீ வாங்கியபோதுகூட நிம்மதியாக இருந்தாயே, இப்போது இருமடங்கு ஊதியம் பெறுகின்றாய், பிறகு எதற்கு இப்படி நிம்மதியின்றி, உடல் மெலிந்து காணப்படுகின்றாய்?, ஒருவேளை நீ ஊருக்கு வெளியே உள்ள ஆலமரத்தடியில் இருக்கும் சாத்தான் கொடுத்த ஏழு பானைத் தங்கத்தைப் பெற்றுக்கொண்டாயோ?” என்று கேட்டான். அதற்கு அந்த முடிதிருத்தும் தொழிலாளி, “ஆம் அரசே! எப்படி சரியாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான். அரசரோ, “ஒரு காலத்தில் நானும் அந்த சாத்தான் கொடுத்த ஏழு பானைத் தங்கத்தைப் வாங்கினான்.  அதன்பின்னர்தான் அந்த ஏழு பானைத் தங்கம் நம்மை மேலும் மேலும் பணத்தைத் தேடியலைய வைக்குமே தவிர,  நிம்மதியாக இருக்க வைக்காது என்னும் உண்மையை உணர்ந்தேன். எனவே, அந்த ஏழு பானைத் தங்கத்தையும் சாத்தானிடம் கொடுத்துவிட்டேன். இப்போது நிம்மதியாக இருக்கின்றேன். நீயும் அந்த ஏழு பானைத் தங்கத்தை சாத்தானிடமே கொடுத்துவிட்டு, நிம்மதியாக இரு” என்று புத்திமதி சொல்லி அவனை அனுப்பி வைத்தார். அரசன் சொன்ன அறிவுரையைக் கேட்டு, அந்த முடிதிருத்தும் தொழிலை தான் வைத்திருந்த ஏழு பானைத் தங்கத்தையும் சாத்தானிடம் கொடுத்துவிட்டு நிம்மதியாக வாழத் தொடங்கினான்.

 பணம், பொருள், செல்வம் இவற்றால்தான் நமக்கு நிம்மதி கிடைக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டு, அதற்காக இராப்பகலாய் பாடுபட்டு உழைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், அவற்றால் நமக்கு நிம்மதி இல்லை என்பதைத்தான் இதை கதையானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள் ‘அழிந்து போகும் உணவிற்காக அல்ல, நிலைவாழ்வு தரும் உணவிற்காகவே உழையுங்கள்’ என்னும் உண்மையை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமையில் ஆண்டவர் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்த நிகழ்வினைக் குறித்து வாசித்து, சிந்தித்துப் பார்த்தோம். இயேசு அப்பங்களைப் பலுகச் செய்ததால், அவருக்குப் பின்னால் சென்றால், எப்படியாவது உணவு கிடைக்கும் என்ற நினைப்பில் மக்கள் அவருக்குப் பின்னால் செல்கின்றார்கள். இன்றைய நற்செய்தியில் மக்கள் அவரிடம் கேட்கக்கூடிய, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்ற வார்த்தைகள்  இயேசுவால் தங்களுக்கு உணவு கிடைக்கும் என்ற நினைப்பில்தான் மக்கள் அவரைத் தேடிவந்திருக்கின்றார்கள். என்பதை நிரூபிப்பதாய் இருக்கின்றன. இயேசு அவர்களுடைய எண்ணங்களைப் புரிந்தவராய், நீங்கள் அருமடையாளங்களைக் கண்டதால் அல்ல, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகின்றீர்கள்” என்கின்றார்.

 தொடர்ந்து அவர் அவர்களிடம் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான் அழிந்து போகும் உணவிற்காக அல்ல, நிலைவாழ்வு தரும் உணவிற்காகவே உழையுங்கள் என்பதாகும். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போன்றுதான் இன்று நாம் நம்முடைய சொந்த தேவைகளைப் பூர்த்திச் செய்துகொள்வதற்கு ஆண்டவரைத் தேடிச் செல்கின்றோம் என்று நினைத்துப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கின்றது. மேலும் சாதாரண உடல் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்வதற்காக இவ்வளவு மதிகெட்டு அலைகின்றோம் என்பது இன்னும் வருத்தத்தைத் தருவதாக இருக்கின்றது.

 இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று சொல்லி, “நாங்கள் எகிப்து நாட்டில் இறைச்சிப் பாத்திரத்தின் அருகே அமர்ந்து வயிறார உண்டாமே, இங்கு நாங்கள் பட்டினி கிடந்தது சாகவா எங்களை அழைத்துக்கொண்டு வந்தீர்கள்?” என்று மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முணுமுணுகிறார்கள், அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிராகக் கலகம் செய்கிறார்கள். உடனே மோசே கடவுளிடம் வேண்ட, கடவுள் அவர்களுக்கு மன்னாவையும் காடையையும் உணவாகத் தருகின்றார்.

 மன்னா என்பது தேனீ போன்ற ஒருவிதமான ஈயின் உடலிலிருந்து கசியும் இனிப்புப் பொருள். அவை சீனாய்ப் பாலைவனப் பகுதியில் மழைக் காலங்களில் அதிகமாகக் கிடைத்தன. இதனை இதுவரை உண்டிராத இஸ்ரயேல் மக்களுக்கு அவ்வுணவு தேனாய் இனித்தது. அது போன்று காடைகள் ஆப்பிரிக்காவிலிருந்து நீண்ட கடல் பயணத்திற்குப் பின் களைப்பினால் இஸ்ரயேல் மக்கள் தங்கியிருந்த கூடாரங்களின் பக்கத்தில் தரை இறங்கின. இவ்வாறு இயற்கையாகவே இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு உணவு கிடைக்கச் செய்தார். கடவுள் நினைத்தால், மக்களுக்கு எப்படியும் உணவு தரமுடியும். ஆனால், மக்களோ உணவுக்காக மோசேக்கு எதிராகவும் கடவுளுக்கு எதிராகவும் கலகம் செய்தார்கள் என்பதுதான்  வேடிக்கையாக இருக்கின்றது. நற்செய்தியில் மக்கள் உணவுக்காக இயேசுவைத் தேடி வந்ததும், இங்கு (முதல் வாசகத்தில்) உணவுக்காக மக்கள் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்வதும், நாம் இன்னும் மேலான காரியங்களை அதாவது நிலைவாழ்வு தருவதை நாடாது, அழிந்து போவதற்காக அடித்துக்கொண்டு சாவதைத்தான் நினைவூட்டுகின்றது.

 மனித வாழ்க்கை என்பது வெறுமனே உணவுக்காக அடித்துக்கொண்டு சாவதும், பொருள் தேடி அலைவதும் கிடையாது. அப்படிப்பட்ட வாழ்க்கை விலங்குகளின் வாழ்க்கையை ஒத்தது. நாம் விலங்குகள் கிடையாது, ஆறறிவு படைத்த மனிதர்கள், ஆகவே, நாம் உணவினை, உடல் இச்சைகளை நிவர்த்திச் செய்கின்ற காரியங்களை நாடாமல், அதை வித உயர்வான காரியங்களை நாடவேண்டும். அதுதான் மனித வாழ்க்கை அர்த்தப்படுத்தும், அப்படிப்பட்ட வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கையாகும்.

 பவுலடியார் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் (இன்றைய இரண்டாம் வாசகம்) இதைத்தான், “உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுபிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாய் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள்” என்கிறார். ஆம், நாம் ஒவ்வொருவரும் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்வதை விடுத்து, நிலைவாழ்வைத் தரக்கூடிய ஆண்டவர் ஒருவரைத் தேடிவாழ்கின்ற வாழ்க்கையினை வாழவேண்டும். இறைவாக்கினர் ஆமோஸ் ‘ஆண்டவரைத் தேடுங்கள், வாழ்வடைவீர்கள்” என்கிறார் (5:4). ஆண்டவரைத் தேடவேண்டும் அதுவும் நல்ல உள்ளத்தோடு தேடவேண்டும்; அவருடைய போதனைகளை வாழ்வாக்கி, அவர் கண்ட கனவினை நனவாக்குகின்றபோதுதான் நாம் வாழ்வடைய முடியும்.

 எனவே, நாம் நம்மிடம் இருக்கும் பழைய பாவப் பழக்கவழக்கங்களை விட்டொழித்து, புதிய இயல்பை, அதாவது கிறிஸ்துவை அணிந்துகொண்டு அவரைப் போன்று வாழ முயற்சி செய்வோம்.

 காபிஸ்டிரனோ (Capistrano) என்னும் நகரில் ஜான் என்னும் இளைஞன் வாழ்ந்து வந்தான். இவன் வாழ்ந்த தாறுமாறான  வாழ்க்கையைப் பார்த்து மக்கள் எல்லாம், ‘இவனுக்கு ஒரு சாவு வரமாட்டேன் என்கிறதே’ என்றுதான் புலம்பித் தள்ளினார்கள். ஆனால், இவன் யார் சொல்வதைப் பற்றியும் கவலைப்பாடாமல், அடாவடியாக, அதே நேரத்தில் அருவருக்கத்தக்க வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

 ஒரு சமயம் பக்கத்துக்கு ஊருக்கும் ஜான் வாழ்ந்து வந்த காபிஸ்டிரனோ நகருக்கும் இடையே மிகப்பெரிய கலவரம் வெடிக்க, காவல்துறையினர் கலகக்காரர்களைப் பிடித்து சிறையில் போடும்போது தெரியாமல் ஜானையும் பிடித்து சிறையில் போட்டுவிட்டார்கள். சிறையில் இருந்த நாட்களில் ஜான் தன்னுடைய வாழ்க்கையை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தான். அவனுடைய வாழ்க்கை சரியானதாக இல்லை என்பதை உணர்ந்தார். எனவே, தன்னுடைய தவறை உணர்ந்து, திருந்திய மனிதனாக வாழத் தொடங்கினான். இதனால் சிறையில் அவனுடைய நடவடிக்கைகளைக் கவனித்த சிறை அதிகாரிகள் விரைவில் அவனை சிறையிலிருந்து விடுதலை செய்து அனுப்பினார்கள்.

 ஜான் தான் திருந்திய மனிதன் என்பதை உலகுக்குக் காட்ட ஒரு பெரிய தாளில் தொப்பி செய்து, அதில் அவனுடைய பாவங்களை எல்லாம் பட்டியலிட்டு, ‘பாவங்களுக்காக மனம் வருந்துகிறேன்’ என்று எழுதி வைத்துகொண்டு, ஒரு கழுதையில் பின்பக்கம் திரும்பி அமர்ந்துகொண்டு, காபிஸ்டிரனோ நகர்வீதிகளில் சென்றான். மக்கள் எல்லாரும் அவனை வித்தியாசமாகப் பார்த்தார்கள், ஒருசிலர் அவன் மீது கல்லெறிந்தார்கள், இன்னும் ஒருசிலரோ ஜான் உண்மையிலே மனம்மாறிவிட்டான் என்று நம்பினார்கள். சில நாட்கள் இப்படியே திரிந்த ஜான், ஒருநாள் ஊருக்கு வெளியே இருந்த ஒரு துறவறமடத்திற்குச் சென்று, துறவற வாழ்க்கை வாழத் தொடங்கினான். துறவறமடத்தில் அவன் மிகச் சிறந்த போதகராக விளங்கினான். இதனால் மக்கள் அவனுடைய போதனையைக் கேட்க கூட்டம் கூட்டமாய் சென்றார்கள். பலர் அவனுடைய போதனையைக் கேட்டு மனம் மாறினார்கள். இவ்வாறு ஜான் பாவத்திலிருந்து விலகி தூய வாழ்க்கை வாழ்ந்ததனால் பிற்காலத்தின் புனிதராக மாறினார்

 பழைய இயல்பைக் களைந்துவிட்டு, புதிய இயல்பை அணிந்துகொண்டு, மறு கிறிஸ்துவாகவே வாழ்ந்த ஜான் நமக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு. நாம் ஒவ்வொருவரும் அழிந்துபோகும் செல்வத்திற்குப் பின்னால், சிற்றின்ப நாட்டங்களுக்குப் பின்னால், அலைந்து திரியாமல் நிலைவாழ்வைத் தரும் இயேசுவுக்கு பின்னால் செல்லவேண்டும் என்பதைத்தான் ஜானின் வாழ்கை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

 எனவே, நாம் உலக இன்பங்களுக்குப் பின்னால் செல்லாமல், உண்மையான இறைவனை, நல்லுள்ளதோடு தேடிச் செல்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வினைக் கொடையாகப் பெறுவோம்.

 மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

ஆகஸ்ட் 01 அர்ச். இராயப்பருடைய சங்கிலித் திருநாள்.


யூதருடைய இராஜாவான அகிரிப்பா என்பவன் பெரிய யாகப்பரைக் கொலை செய்தபின் யூதருக்குப் பிரியப்படும்படி இராயப்பரை பாஸ்கு பண்டிகைக்குப்பின் கொலை செய்யத் தீர்மானித்து, அவரைச் சிறையில் அடைத்து வைத்தான். 

அவர் சிறையினின்று தப்பித்துக்கொள்ளாதபடிக்கு இரவும் பகலும் இரு சேவகர் அவரைச் சிறையில் காக்கவும், வேறு இருவர் சிறை வாசற்படியிலிருக்கவும் கட்டளையிட்டான். கிறீஸ்தவர்களோவெனில் இடைவிடாமல் இவருக்காக சர்வேசுவரனைப் பார்த்து மன்றாடி வந்தார்கள். 

இராயப்பரைக் கொல்லத் தீர்மானிக்கப்பட்ட நாளுக்கு முந்தின நாள் இரவில் ஒரு சம்மனசானவர் சிறையில் தோன்றி, இராயப்பரைத் தட்டியெழுப்பி, தம்மைப் பின்செல்லும்படி கூறினார். அக்கனமே அவரைக் கட்டியிருந்த சங்கிலிகள் தெறித்து விழ அவர் எழுந்து சம்மனசைப் பின்தொடர்ந்தார். 

சிறைக் கதவுகள் தானாகத் திறந்ததுடன் பட்டணத்தின் பெரிய இரும்புக் கதவும் திறக்கப் படவே, இராயப்பர் அங்கிருந்து கிறீஸ்தவர்கள் வாசஞ்செய்த ஒரு வீட்டில் பிரவேசித்தார். 

அந்தச் சங்கிலியை பூர்வீக கிறீஸ்தவர்கள் பக்தியாய் காப்பாற்றி வந்தார்கள். பிற்காலத்தில் தெயதோஸ் இராஜாவின் மனைவியான இராணி திருத்தலங்களைச் சந்திக்கச் சென்றபோது, ஜெருசலேம் நகரின் மேற்றிராணியார் இராயப்பரைக் கட்டியிருந்த திருச் சங்கிலியைக் அவளுக்குப் பரிசாக ஒப்புக்கொடுத்தார். 

அவள் அதைப் பெற்றுக்கொண்டு, உரோமையில் இருந்த தன் குமாரத்திக்கு அதை அனுப்பி வைத்தாள். அவள் அதைப் பாப்பாண்டவரிடம் கொண்டுபோய் காட்டியபோது, அவர் வேறொரு சங்கிலியைக் கொண்டுவந்து, இது இராயப்பர் உரோமையில் கட்டப்பட்ட சங்கிலியென்று கூறி அதை மேசை மேல் வைத்த மாத்திரத்தில், இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்து ஒரே சங்கிலியாய் மாறியது. 

இந்த அற்புத சம்பவத்தின் ஞாபகமாக இவருடைய சங்கிலித் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

யோசனை 

சர்வேசுரனுக்காக நாம் அனுபவிக்கும் துன்பதுரிதங்கள் நித்திய சம்பாவனையை நமக்குப் பெற்றுத் தரும்.

ஆகஸ்ட் 1 புனிதர் அல்ஃபோன்சஸ் மரிய லிகோரி St. Alphonsus Maria Liguori


உலக இரட்சகர் சபையின் நிறுவனர்/ ஆயர்/ மறைவல்லுநர்: (Founder of Congregation of the Most Holy Redeemer (The Redemptorists)/ Bishop/ Doctor of the Church)

பிறப்பு: செப்டம்பர் 27, 1696  மரியநெல்லா, கம்பானியா, நேப்பிள்ஸ் அரசு (Marianella, Campania, Kingdom of Naples)

இறப்பு: ஆகஸ்ட் 01 , 1787 (அகவை 90)  பாகனி, கம்பானியா, நேப்பிள்ஸ் அரசு  (Pagani, Campania, Kingdom of Naples)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

அருளாளர் பட்டம்: செப்டம்பர் 15, 1816  திருத்தந்தை ஏழாம் பயஸ் (Pope Pius VII)

புனிதர் பட்டம்: மே 26, 1839  திருத்தந்தை பதினாறாம் கிரகோரி (Pope Gregory XVI)

பாதுகாவல்:

பேகனி நகர் (Pagani), கேன்செலோ நகர் (Cancello), நேபிள்ஸ் - இணை பாதுகாவலர் (Naples (co-patron), கீல்வாதம் (Arthritis), ஒப்புரவாளர்கள், தார்மீகவாதிகள்

நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 1

புனிதர் அல்போன்சஸ் மரிய லிகோரி, ஒரு இத்தாலிய கத்தோலிக்க ஆயரும், ஆன்மீக எழுத்தாளரும், இசையமைப்பாளரும், இசைக்கலைஞரும், கலைஞரும், கவிஞரும், வழக்கறிஞரும், இடைக்கால மெய்யியலாளரும், இறையியலாளரும், உலக இரட்சகர் சபையின் நிறுவனரும் ஆவார். ஒரு வழமையான எழுத்தாளரான இவர், தமது வாழ்நாளில், “தார்மீக இறையியல்” (Moral Theology) எனும் புத்தகத்தின் ஒன்பது பதிப்புகளை வெளியிட்டார். “மரியாளின் மகிமைகள்” (The Glories of Mary) மற்றும் “சிலுவைப்பாதை” (The Way of the Cross ) ஆகியவை இவரது சிறப்பான புகழ்பெற்ற படைப்புகளாகும். இவரது படைப்பான சிலுவைப்பாதைகள், இன்றும் கத்தோலிக்க பங்குகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன.

இவருக்கு திருத்தந்தை பதினாறாம் கிரகோரி (Pope Gregory XVI) 1839ம் ஆண்டு புனிதர் பட்டம் அளித்தார். 1871ம் ஆண்டில் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) இவரை திருச்சபையின் மறைவல்லுநர் (Doctor of the Church) என அறிவித்தார்.

வரலாறு:

இத்தாலியின் நேப்பிள்ஸ் நகருக்கு அருகிலுள்ள “மரியனெல்லா” (Marianella) என்ற ஊரில் 1696ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 27ம் தேதி பிறந்தவர் அல்போன்சஸ் மரிய லிகோரி. “டான் ஜோசப் டி லிகோரி” மற்றும் “அன்னா” (Don Joseph de' Liguori and Anna Cavalieri Liguori) தம்பதியரின் எட்டு குழந்தைகளில் மூத்த குழந்தையாக பிறந்த இவருக்கு, இவர் பிறந்த இரண்டு தினங்களின் பின்னர் திருமுழுக்கு அளிக்கப்பட்டது. “அல்ஃபோன்சஸ் மரிய அந்தோனி ஜான் கொஸ்மஸ் டமியான் மைக்கேல் கஸ்பார்ட் டி லிகோரி” (Alphonsus Mary Anthony John Cosmas Damian Michael Gaspard de' Liguori) என்பது இவரது திருமுழுக்கு பெயராகும். இவரது தந்தை ஒரு கடற்படை அதிகாரி ஆவார். தாயார் ஒரு ஸ்பேனிஷ் பெண்மணியாவார்.

16 வயதில் சட்டம் பயின்று வழக்குரைஞரானார். இவர் எடுத்து நடத்திய வழக்குகள் எல்லாமே வெற்றியடைந்தன. ஆனால் தமது 27வது வயதில், 1723ம் ஆண்டில் நடந்த ஒரு சொத்து வழக்கில் அல்போன்சஸ், தனது எட்டு வருட வழக்குரைஞர் வாழ்க்கையில், முதல் முறையாக தோல்வியடைந்தார். இந்தத் தோல்வி அவரை பெரிதும் பாதித்தது. தமது எட்டு வருட வழக்குரைஞர் தொழிலை விட்டுவிட தீர்க்கமாக முடிவெடுத்தார். நீதிமன்றத்தை விட்டுக் கிளம்பினார். இந்தத் தோல்வி, இவர் தனது உலகப் பெருமைகளை உதறி இறைவனைப் பற்றிக்கொள்வதற்கு அவரிடமிருந்து அனுப்பப்பட்ட இகழ்ச்சியாக உணர்ந்தார். மேலும், “இவ்வுலகை விட்டுவிட்டு – உன்னை எமக்கு கையளி” என்ற குரல் அசரீரியாக அவருக்குள் ஒலித்துக்கொண்டேயிருந்தது.

தமது 27 வயதில் வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு செபத்திலும் பிறரன்புப் பணிகளிலும் ஈடுபட்டார். மிகவும் வறிய நிலையிலிருந்த ஏழைகளுக்கு மறைப் பணியாற்றிய நேப்பிள்ஸ் பிரச்சாரம் என்ற அருட்பணியாளர்கள் அமைப்பால் கவரப்பட்டு அவர்களுக்கு உதவினார். 1726ம் ஆண்டில் அல்போன்சஸ் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். “பிறருடைய ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வமாய் இருப்பதே மிகவும் நேர்த்தியான பிறரன்பு” என்று இவர் சொல்வதுண்டு. தமது எளிய மற்றும் எளிமையான பிரசங்கங்களின் காரணமாக அவர் மிகவும் பிரபலமானார். “கூட்டத்திலுள்ள மிக வறி வயோதிக பெண்மணியால் புரிந்துகொள்ள முடியாத ஒரு பிரசங்கத்தை நான் ஒரு போதும் பிரசங்கித்ததில்லை” என்று அவர் அடிக்கடி கூறுவார்.

அவர், இளைஞர்களால் நிர்வகிக்கக்கூடிய மாலைநேர சிற்றாலயங்களை (Evening Chapels) நிறுவினார். இச்சிற்றாலயங்களில், செபம், பயபக்தி, பிரசங்கம், சமூகம், சமூக நடவடிக்கைகள் மற்றும் கல்வி ஆகியவை மையமாக இருந்தன. அவரது மரணத்தின்போது, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை உள்ளடக்கிய 72 சிற்றாலயங்கள் இருந்தன.

அல்ஃபோன்சஸ், கி.பி. 1732ம் ஆண்டு, நவம்பர் மாதம், 9ம் தேதி, “உலக இரட்சகர் சபையைத்” (Congregation of the Most Holy Redeemer) தொடங்கினார். சுமார் 20 வருடங்கள் நேப்பிள்ஸ் மாநிலத்தில் பயணம் செய்து எண்ணற்ற மக்களை மனந்திருப்பினார். கி.பி. 1752ம் ஆண்டுக்குப் பின்னர் எழுதுவதில் தன்னை அர்ப்பணித்தார். இவர் படித்தவை, எழுதியவை அனைத்தும் எளிய மக்களும் எளிதில் புரிந்து கொண்டு ஆன்மீக வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது என்பர்.

அல்போன்சஸ், கி.பி. 1762ம் ஆண்டு நேப்பிள்ஸ் மாநிலத்தில் “புனித அகத்தா டி கோட்டி” (Sant'Agata dei Goti) என்ற மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். இதற்கு இவர் இணங்க மறுத்ததால், திருத்தந்தை இவரை கீழ்ப்படிதல் வாக்குறுதியைக் கொண்டு, கட்டாயப்படுத்தி ஆயராக்கினார். 13 வருடங்கள் பணியாற்றி தமது மறைமாவட்டத்தைச் சீர்படுத்தினார்.

இறப்பு:

இவர் ஆயர் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே கடும் காய்ச்சல் வந்து பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமெண்ட் மற்றும் அவருக்கு பின்வந்த திருத்தந்தை பதினான்காம் கிளமெண்ட் ஆகியோர் இவரை நோயுற்றிருப்பினும் ஆயர் பதவியில் இருக்க கட்டாயப்படுத்தினர். 1775ல் தனது 79வது வயதில் செவித்திறனை இழந்தார். கண்பார்வையையும் இழந்தார். இவருக்கு குழாய் வழியாகவே உணவு கொடுக்க வேண்டியிருந்தது. ஆதனால் கி.பி. 1775ம் ஆண்டு, மே மாதம், திருத்தந்தை ஆறாம் பயஸ், இவர் ஓய்வு பெற அனுமதியளித்தார். இவரின் இறுதி நாட்களில் இவர் துவங்கிய சபையினில் பெரும் சிக்கலும் பிளவும் ஏற்பட்டன. இவரின் இறப்புக்குப் பின்னும் அவை நீடித்தன. இவர் கி.பி. 1787ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், முதல் தேதி, “பகானி” (Pagani) என்ற ஊரில் மரித்தார்.

படைப்புகள்:

அறநெறி இறையியல் பற்றி இவர் எழுதியவை, “அறநெறி இறையியலாளர்களின் இளவரசர்” என்ற பட்டத்தை இவருக்கு தேடித் தந்தது. இன்றும் ரோமில் அறநெறி இறையியல் கல்விக்கு இவரது உலக இரட்சகர் சபை நடத்தும் நிறுவனமே புகழ்பெற்றது.

இவர் நற்கருணை மற்றும் அன்னை மரியாள் மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மரியாளின் பெருமை, திவ்யநற்கருணை சந்திப்பு, கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டி, சிலுவைப்பாதை போன்ற இவரது நூல்கள் புகழ் பெற்றவை. இவர் 111 நூல்களை எழுதியுள்ளார். அவை 60 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு 4000த்துக்கும் மேற்பட்ட பதிப்புக்களும் இடம் பெற்றுள்ளன.

ஜூலை 31 : முதல் வாசகம்


யூபிலி ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 25: 1, 8-17

ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது:

தொடர்ந்து வரும் ஏழு ஓய்வுஆண்டுகளை - ஏழேழு ஆண்டுகளாக - ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்; பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச் செய்யுங்கள். ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கு எல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு - அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும். ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு; அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்; தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம். கிளை நறுக்காத திராட்சைக் கொடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம்; ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு; அது உங்களுக்குத் தூயது. நிலத்தினின்று அவ்வப்போது கிடைக்கும் பலனை உண்ணுங்கள்.

அந்த யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். உங்களுக்குள் ஒருவனுக்கு நிலத்தை விற்கவோ அவனிடத்தில் வாங்கவோ செய்யும்பொழுது ஒருவரை ஒருவர் ஏமாற்றாதிருங்கள். யூபிலி ஆண்டிற்குப் பின், ஆண்டுகளைக் கணக்கிட்டு அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாங்கலாம். பயன்படுத்தும் ஆண்டுகளுக்கு ஏற்ப அவன் அதை உனக்கு விற்கவேண்டும். பலனைப் பயன்படுத்தும் ஆண்டுகள் எண்ணிக்கை மிகுந்திருந்தால் விலையை உயர்த்த வேண்டும்; குறைந்திருந்தால் விலையைக் குறைக்க வேண்டும். ஏனெனில், பயனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அவன் விற்கிறான். உங்களுள் எவரும் தம் இனத்தாரை ஏமாற்றலாகாது. கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 31 : பதிலுரைப் பாடல்


திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.

1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

2 உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். - பல்லவி

4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி

6 நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.

7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

ஜூலை 31 : நற்செய்தி வாசகம்


ஏரோது யோவானின் தலையை வெட்டச் செய்தான். யோவானுடைய சீடர் வந்து இயேசுவிடம் அறிவித்தனர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12

அக்காலத்தில்

குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப் பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான். அவன் தன் ஊழியரிடம், “இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்” என்று கூறினான்.

ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் அவனிடம், “நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல” என்று சொல்லி வந்தார். ஏரோது அவரைக் கொலை செய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.

ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான். அவள் தன் தாய் சொல்லிக் கொடுத்தபடியே, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர்முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்; ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்; அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.

யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

------------------------------------------------------------

“கடவுளுக்கு அஞ்சி நடங்கள்”

பொதுக்காலம் பதினேழாம் வாரம் சனிக்கிழமை

I லேவியர் 25: 1, 8-17

II மத்தேயு 14: 1-12

“கடவுளுக்கு அஞ்சி நடங்கள்”

கடவுளுக்கு அஞ்சிய மன்னர்:

முன்பொரு காலத்தில் அங்கேரி நாட்டில் ஒரு மன்னர் இருந்தார். கிறிஸ்தவரான இவர் ஒருநாள் தன் தம்பியிடம், “நான் மிகப்பெரிய பாவி. அதனால், நான் கடவுளைச் சந்திக்கும்பொழுது, எனக்கு என்ன ஆகுமோ என்று அச்சமாக இருக்கின்றது” என்று வேதனையோடு சொன்னார். இதற்கு இவருடைய தம்பி, ‘இதற்காகவெல்லாமா அஞ்சுவது?’ என்பது போல் கேலிசெய்து சிரித்துவிட்டுத் தன்னுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டார். இது மன்னருக்கு பெரிய அவமானமாய் இருந்தது.

அங்கேரி நாட்டின் வழக்கப்படி, அந்நாட்டில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் ஒருவருடைய வீட்டிற்கு முன்பாக எக்காளத்தை எடுத்து முழங்கிவிட்டால் – அது எந்த நேரமாக இருந்தாலும் - அவர் மன்னரைப் போய்ப்பார்க்க வேண்டும். மன்னரும் தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவர் மூலம், அவருக்குத் தண்டனை வழங்குவார். தன் தம்பி தான் சொன்னதைச் சரியாகக் கேளாமல், தன்னை மிகவும் அவமானப்படுத்திவிட்டுச் சென்றதை நினைத்து வேதனைப்பட்ட மன்னர், தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவரை அழைத்து, அவரிடம் தன்னுடைய தம்பியின் வீட்டிற்கு முன்பு, எக்காளம் முழங்கச் சொல்ல, அவரும் நள்ளிரவில் மன்னரின் தம்பியினுடைய வீட்டிற்கு முன்பாகப் போய் எக்காளம் முழங்கினார். இதனால் பதறிப்போன மன்னரின் தம்பி, ‘நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று என் வீட்டின் முன்பாக எக்காளம் முழங்கப்படுகின்றது?’ என்று அஞ்சியவாறு மன்னருக்கு முன்பு போய் நின்றான்.

அப்பொழுது மன்னர் அவனிடம் “எக்காளம் முழங்கிய சத்தம் கேட்டு, அங்கேரி நாட்டு மன்னரான எனக்கு முன்பாக வந்து நிற்பதற்கே நீ இவ்வளவு அஞ்சுகின்றாயே! மன்னருக்கெல்லாம் மன்னரான ஆண்டவருக்கு முன்பு பாவியாகிய நான் நிற்பதற்கு எவ்வளவு அஞ்சவேண்டும்?’ என்றார். அப்பொழுதுதான் மன்னரின் தம்பிக்குத் தன் தவறு புரிந்தது. இதன்பிறகு மன்னரின் தம்பி ஓர் அருள்பணியாளரை அழைத்து வர, அவரிடம் மன்னர் நல்லதோர் ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொண்டு, அச்சத்தைத் தவிர்த்து, ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்ந்து வந்தார்.

ஆம், இந்த நிகழ்வில் வரும் அங்கேரி நாட்டு மன்னர் ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்தார்; ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, நற்செய்தி வாசகம் ஆண்டவருக்கு அஞ்சி வாழாத ஒரு மன்னனைக் குறித்துக் கூறுகின்றது. அந்த மன்னன் யார், நாம் ஏன் ஆண்டவருக்கு அஞ்சி வாழவேண்டும் என்பன குறித்து நாம் சிந்திப்போம்.

விவிலியப் பின்னணி:

லேவியர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம், “கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!’ என்ற சொற்றொடரோடு முடிகின்றது. நற்செய்தி வாசகமோ, கடவுளுக்கு அஞ்சி வாழாத ஏரோது மன்னனைக் குறித்துக் கூறுகின்றது.

இந்த ஏரோது மன்னன் தன் சகோதரன் பிலிப்பின் மனைவி ஏரோதியாவோடு வாழ்ந்தான். ஏரோதியா வேறு யாரும் கிடையாது. அவள் பெரிய ஏரோதுவின் நான்கு மகன்களில் ஒருவரான அரிஸ்டோபுளுஸ் (Aristobulus) என்பவனின் மகள். அப்படியானால், ஒருவகையில் மகள் என்ற உறவுமுறையில் வரும் ஏரோதியாவோடு வாழ்ந்து வந்த பிலிப்பின் மனைவியைத்தான் தனக்கு மனைவியாக்கிக் கொள்கின்றான் ஏரோது. மேலும் ஏரோதியாவோடு ஏரோது வாழ்ந்ததன் மூலம் ஏரோது தன் மகளோடு ‘வாழ்ந்தவன்’ ஆனான். இது மிகப்பெரிய தவறு (லேவி 18: 16) என்பதால்தான் திருமுழுக்கு யோவான், அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றார். ஆனால், அவனோ அவரைக் கொன்றுபோடுகின்றான். முடிவில், ஆண்டவருக்கு அஞ்சி வாழாத ஏரோதிற்குக் கொடிய சாவு வந்தது என்று வரலாறு கூறுகின்றது. ஆகையால், நாம் ஏரோதைப் போன்று வாழாமல், ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோம்.

சிந்தனைக்கு:

 நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, உண்மையோடும் நேரிய உள்ளத்தோடும் நடங்கள் (2 குறி 19: 9)

 உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதை வெட்டி விடுங்கள் (மாற் 9: 44)

 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர் (திபா 128: 1)

இறைவாக்கு:

‘ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்’ (நீமொ 19: 23) என்கிறது நீதிமொழிகள் நூல். ஆகையால், நாம் ஆண்டவருக்கு அஞ்சி, அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

ஜுலை 31 அர்ச். இஞ்ஞாசியார் - துதியர் (கி.பி. 1556)


இஞ்ஞாசியார் ஸ்பெயின் தேசத்தில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, அத்தேசத்து அரசனுடைய அரண்மனையில் வளர்ந்து, படையில் சேர்ந்து பம்பலூனாவில் நடந்த யுத்தத்தில் காயமடைந்தார். 

காயத்தால் காய்ச்சல் உண்டாகி வேதனைப்படுகையில் தற்செயலாய் அங்கிருந்த அர்ச்சியசிஷ்டவர்களின் சரித்திரப் புத்தகங்களை வாசித்து வேறு மனிதனாகி, உலகத்தைத் துறந்து சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்யத் தீர்மானித்தார். 

காயம் குணமான பின் தேவமாதா கோவிலுக்குச் சென்று தமது வாளை அங்கு தொங்க விட்டுவிட்டு, ஏழை வஸ்திரம் தரித்துக்கொண்டு பிறரிடம் கேட்டுப் புசித்தார். ஒரு குகையில் வசித்து அடிக்கடி ஒருசந்தியிருந்து, தமது சரீரத்தைக் குரூரமாய் அடித்து உபாதித்து இடைவிடாமல் ஜெபத் தியானஞ் செய்வார். 

இவருக்குத் தேவதாயார் தரிசனையாகி ஞானத் தியானங்களை எழுத உதவி செய்தார்கள். பிறகு கல்விச்சாலையில் வேத சாஸ்திரங்களைப் படித்து, சில துணைவருடன் உரோமாபுரிக்குச் சென்று, அவ்விடத்தில் அவர் குருப்பட்டம் பெற்று, பரிசுத்த பாப்பரசரின் அனுமதியுடன் சேசு சபையை ஸ்தாபித்தார். 

சில காலத்திற்குள் இந்த பெயர்பெற்ற சபை தேசமெங்கும் பரவி திருச்சபைக்கு மட்டற்ற பிரயோசனத்தை உண்டாக்கியது. அக்காலத்தில் சவேரியாரை இஞ்ஞாசியார் நமது தேசத்திற்கு அனுப்பினார். இஞ்ஞாசியார் சேசு சபைக்கு அநேக வருடம் சிரேஷ்டராயிருந்து வியாதியினிமித்தம் அவ்வலுவலை விட்டு விலகினார். 

நமது கர்த்தர் இவருக்குத் தோன்றி உன் சபைக்குத் துன்பதுரிதங்களைக் கொடுப்போமென்றார். அவ்வாறே சேசு சபை எப்போதும் துஷ்டர்களால் வரும் துன்பங்களை அனுபவித்து வருகிறது. 

இஞ்ஞாசியார் திருச்சபைக்காக உழைத்து சகலத்தையும் சர்வேசுரனுடைய மேலான மகிமைக்காகச் செய்து பாக்கியமான மரணமடைந்தார்.

யோசனை 

நாமும் எதைச் செய்தாலும் அதை சர்வேசுரனுடைய மகிமைக்காகச் செய்வோமாக.

ஜூலை 30 அருளாளர் சோலனஸ் கேசே Blessed Solanus Casey


குரு: (Priest)

பிறப்பு: நவம்பர் 25, 1870 ஓக் க்ரோவ்,  விஸ்கோன்சின், ஐக்கிய அமெரிக்க நாடுகள் (Oak Grove, Wisconsin, U.S)

இறப்பு: ஜூலை 31, 1957 (வயது 86) டெட்ரோய்ட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்க நாடுகள் (Detroit, Michigan, U.S.)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: நவம்பர் 18, 2017 கர்தினால் ஏஞ்ஜெலோ அமேட்டோ (Cardinal Angelo Amato)

முக்கிய திருத்தலம்:

தூய பொனவென்ச்சுர் துறவு மடம், டெட்ரோய்ட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்க நாடுகள் (Saint Bonaventure Monastery, Detroit, Michigan, U.S.)

நினைவுத் திருநாள்: ஜூலை 30

அருளாளர் சோலனஸ் கேசே, ஒரு அமெரிக்க ரோமன் கத்தோலிக்க குருவும் (American Roman Catholic priest), ஃபிரான்சிஸ்கன் இளநிலை கப்புச்சின் சபையின் (Order of Friars Minor Capuchin) உறுப்பினருமாவார்.

அவர் தனது வாழ்நாளில், தாம் கொண்ட பெரும் விசுவாசத்திற்காகவும், ஒரு ஆன்மீக ஆலோசகராகவும், தனது திறமைகளுக்காகவும் வியக்கத்தக்க செயல்களை செய்பவராக,அறியப்பட்டார். ஆனால், நோய்வாய்ப்பட்டோர் மீது அவர் செலுத்திய விசேட கவனம் காரணமாக, அவர்களுக்காக அவர் திருப்பலிகளும் நிறைவேற்றினார். இவர் வசித்த டெட்ரோயிட் நகரில், அதிக மக்கள் நாட்டுச் செல்பவராகவும், மதிப்பு மிக்கவராகவும் இருந்தார். வயலின் இசைக்கருவி மீது தீராத காதல் கொண்டிருந்த இவர், தமது முன்னோரான புனிதர் “ஃபிரான்சிஸ் சொலனஸ்” (Saint Francis Solanus) என்பவரின் பெயருடன் தம் பெயரையும் பகிர்ந்து கொண்டார்.

“பெர்னார்ட் ஃபிரான்சிஸ் கேசே” (Bernard Francis Casey) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1870ம் ஆண்டு, நவம்பர் மாதம், 25ம் தேதியன்று, வடமத்திய ஐக்கிய அமெரிக்காவின் “விஸ்கோன்சின்” (Wisconsin) மாநிலத்தின் “பியர்ஸ்” (Pierce County) மாகாணத்தின் “ஓக் க்ரோவ்” (Oak Grove) நகரத்தில் பிறந்த இவரது தந்தையார் “பெர்னார்ட் ஜேம்ஸ் கேசே” (Bernard James Casey) ஆவார். இவரது தாயாரின் பெயர், “எலன் எலிசபெத் மர்ஃபி” (Ellen Elizabeth Murphy) ஆகும். இவர், ஐரிஷ் நாட்டிலிருந்து (Irish immigrants) குடிபெயர்ந்து வந்த இவரது பெற்றோரின் பதினாறு குழந்தைகளில் ஆறாவது குழந்தை ஆவார். அதே வருடம், டிசம்பர் மாதம், 18ம் நாளன்று, இவருக்கு திருமுழுக்கு அளிக்கப்பட்டது.

கி.பி. 1878ம் ஆண்டு, “டிப்தீரியா” (Diphtheria) எனப்படும் தொண்டை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட இவரது குரல் நிரந்தரமாக பாதிக்கப்பட்டது. அந்நோய், அவரது குரலில் பிசிறுதட்டும் குறைபாட்டை விட்டுச் சென்றது. அதே வருடம், இந்நோயால் பாதிக்கப்பட்ட, குழந்தைப் பருவத்திலிருந்த இவரது இரண்டு சகோதரர்கள் மரணமடைந்தனர். பின்னர், இவர்களது குடும்பம், “ஹட்சன்” (Hudson) நகருக்கு குடிபெயர்ந்தது. கி.பி. 1882ம் ஆண்டு, அக்டோபர் மாதம், “செயின்ட் க்ரோய்க்ஸ்” (Saint Croix County) மாகாணத்திலுள்ள “புர்க்கார்ட்” (Burkhardt) நகருக்கு மீண்டும் குடிபெயர்ந்து சென்றது. கி.பி. 1887ம் ஆண்டில், தனது சொந்த மாநிலத்திலும், அருகிலுள்ள “மின்னெசோட்டா” (Minnesota) மாநிலத்திலும், “லும்பெர்க்ஜேக்” (Lumberjack) எனப்படும் (வட அமெரிக்க தொழிலாளர்கள் செய்யும் மரங்களை வெட்டுதல், சறுக்கல், ஸ்தல செயலாக்கம் மற்றும் மரங்களை லாரிகளில் ஏற்றுதல் அல்லது  பதிவு செய்தல் ஆகிய வேலைகள்), “மருத்துவமனை ஒழுங்குப் பணியாள்” (Hospital Orderly), “மின்னசோட்டா மாநில சிறையில் பாதுகாப்பு பணி” (Guard in the Minnesota State Prison) மற்றும் கார் ஓட்டுனர் பணி போன்ற தொடர்ச்சியான வேலைகளுக்காக பண்ணையை விட்டு வெளியேறினார். சிறையில் பாதுகாப்பு பணியிலிருந்தபோது, அமெரிக்க சட்டவிரோத (Outlaw), வங்கி (Bank) மற்றும் ரயில் கொள்ளைக்காரனும் (Train Robber), கெரில்லாவுமான (Guerrilla), “ஜெஸ் ஜேம்ஸ்” (Jesse James) எனும் சம வயதுடைய ஒருவரின் நட்பும் கிடைத்தது. ஆரம்பத்தில், அவர் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால், தாம் பார்த்த பெண்ணின் தாய், அவளை ஒருநாள் திடீரென உண்டுறை பள்ளியில் (Boarding School) சேர்த்துவிட்டார்.

அவர் கடைசியாக செய்த வேலையில் பணியாற்றும் போது ஒருநாள், கொடூரமாக நடைபெற்ற கொலை ஒன்றினை காண நேர்ந்தது. அது, இவரது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் மதிப்பீடு செய்ய இவருக்கு உதவியது. ஒருநாள், போக்கிரிகள் நிறைந்த நகரின் “சுபீரியர்” பகுதியில் கார் ஓட்டிச் செல்கையில், ஒரு குடிகார கடற்படை வீரன், ஒரு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றதைக் கண்டார். அந்த நேரத்தில்தான் தாம் குருத்துவ வாழ்விற்கு அழைக்கப்பட்டதை உணர்ந்தார். ஆனால், கி.பி. 1891ம் ஆண்டு, ஜனவரி மாதம், தமது குறைவான கல்வித் தகுதியின் காரணமாக, “மில்வௌகி உயர்மறைமாவட்டத்தின்” (Archdiocese of Milwaukee) இளநிலை செமினரியான (Minor Seminary), செயின்ட் பிரான்சிஸ் உயர்நிலை பள்ளி செமினரியில் (Saint Francis High School Seminary) மறைமாவட்ட குரு (Diocesan Priest) ஆவதற்கான கல்வி கற்க சேர்ந்தார். அங்கே கற்பிக்கப்பட்ட வகுப்புகள் அனைத்தும் ஜெர்மனி அல்லது இலத்தீன் மொழிகளில் நடத்தப்பட்டன. இம்மொழிகளின் பேச்சுவழக்கினை இவர் அறிந்திருக்கவில்லை. காலப்போக்கில், அவருடைய கல்விக் குறைபாடுகளின் காரணமாக, - ஒரு மதகுருவாக ஆவதற்கு அவர் விரும்பினால் ஒரு மத சபையில் சேர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தப்பட்டார். அங்கே, அவர் ஒரு எளிய குருவாக (Simplex Priest) குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்படுவார் என்றனர். திருப்பலி நிறைவேற்றும் உரிமை மட்டுமுள்ள அதில், பொதுக்கூட்டங்களில் பிரசங்கிக்கவோ, கற்பிக்கும் பணிகளோ, ஒப்புரவு வழங்கும் அதிகாரமோ கூட கிடைக்காது. சபையில் சேர்வதற்கான தமது விண்ணப்பத்தைத் தயாரிப்பதற்கு முன்னர் அவர் வீடு திரும்பினார்.

செய்வதறியாது திகைத்த பெர்னார்ட் ஃபிரான்சிஸ் கேசே, தமது மனநிலையை, அர்ச்சிஷ்ட அன்னை கன்னி மரியாளின் (Blessed Virgin Mary) திருச்சொரூபம் ஒன்றின் முன்பு அறிக்கையிட்டு மன்றாடியபோது, அன்னையின் தெளிவான – ஸ்பஷ்டமான குரல், அவரை “டெட்ரோய்ட்” (Detroit) செல்ல உத்தரவிட்டதை அவரால் கேட்க முடிந்தது. பின்னர் அவர், அந்நகரின் “ஃபிரான்சிஸ்கன் இளநிலை கப்புச்சின்” (Order of Friars Minor Capuchin) சபையில் சேர விண்ணப்பித்தார். கி.பி. 1897ம் ஆண்டு, ஜனவரி மாதம், 14ம் தேதி, அவர் அச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அவருக்கு புனிதர் “ஃபிரான்சிஸ் சோலனஸ்” (Saint Francis Solanus) நினைவாக, “சோலனஸ்” என்ற ஆன்மீகப் பெயர் தரப்பட்டது. இருவருமே வயலின் இசைக்கருவியை காதலித்தனர். 1898ம் ஆண்டு, ஜூலை மாதம், 21ம் நாளன்று, தமது சத்தியப் பிரமாணங்களை ஏற்ற அவர், கல்வியில் கஷ்டப்பட்டாலும், 1904ம் ஆண்டு, ஜூலை மாதம், 24ம் தேதி, “மில்வௌகி” (Milwaukee) நகரிலுள்ள “அசிசியின் புனிதர் ஃபிரான்சிஸ் தேவாலயத்தில்” (Saint Francis of Assisi Church), பேராயர் “செபாஸ்டியன் மெஸ்மர்” (Archbishop Sebastian Messmer) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.

அவர், நியூ யார்க் (New York) நகரில், அடுத்தடுத்து இரண்டு தசாப்தங்களாக, பலவகைப்பட்ட துறவியரிடையே பணியாற்றினார். அவருக்கு ஒதுக்கப்பட்ட்ட முதல் பணி ஸ்தலம், “யோங்கர்ஸ்” (Yonkers) நகரிலுள்ள “திருஇருதய துறவு மடம்” (Sacred Heart Friary) ஆகும். பின்னர், நியூ யார்க் (New York) நகருக்கு மாற்றப்பட்ட அவர், முதலில் “பென் ஸ்டேஷனுக்கு” (Penn Station) அருகிலுள்ள “தூய யோவான் ஆலயத்தில்” (Saint John's Church) பணிபுரிந்தார். அதன்பின்னர், “ஹார்லெம்” (Harlem) எனும் மாநகரிலுள்ள ‘அன்னை தேவலோகத்தினரின் அரசி” (Our Lady Queen of Angels) ஆலயத்தில் பணிபுரிந்தார்.

ஒரு எழுச்சியூட்டும் பேச்சாளராக அங்கீகரிக்கப்பட்ட தந்தை சோலனஸ், 1924ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், “டெட்ரோய்ட்” (Detroit) நகரிலுள்ள “புனிதர் பொனவென்ச்சர் பள்ளிக்கு” (Saint Bonaventure convent) மாற்றப்பட்டார். 1945ம் ஆண்டுவரை, சுமார் 21 வருடங்கள் அங்கே இருந்த அவர், அங்கிருந்த அதிக காலம் ஒரு சாதாரண சுமை தூக்குபவராகவும் (Porter), வரவேற்பாளராகவும் (Receptionist), வாயிற்காப்போனாகவும் (Doorkeeper) வேலை செய்தார். ஒவ்வொரு புதன்கிழமை பிற்பகலிலும், நோயாளிகளுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட சேவைகளை அவர் நடத்தினார். இந்த சேவைகள் மூலம், அவர் தனது பெரும் கருணை மற்றும் அவரது ஆலோசனைகளின் மூலம், நோயாளிகளுக்கு அற்புதமான முடிவுகள் கிடைத்ததனால் இவர் பரவலாக அறியப்பட்டார். மக்கள் அவரை குணப்படுத்தக்கூடிய கருவியாகவும், பிற ஆசீர்வாதங்களுக்கான கருவியாகவும் கருதினர். இரவின் அமைதியில், நற்கருணை ஆண்டவருக்கு முன்பாக முழந்தாழிட்டு ஆழ்ந்த தியானத்தில் மூழ்க அவர் நேசித்தார். ஒருமுறை, இந்த பள்ளியில் தமது அனுபவத்தை நினைவுகூர்ந்த அருட்தந்தை “பெனடிக்ட் குரோஸ்செலி” (Father Benedict Groeschel), இரவு நேரங்களில், திருப்பலிபீடத்தின் மேல் படியிலே, முழந்தாழிட்டு, தந்தை சோலனஸ் அசைவற்று செபிப்பதை தாம் பல இரவுகள் கண்டிருப்பதாக கூறுகிறார்.

வயலின் இசைக் கருவியை இயக்கும் திறன் கொண்டிருந்த்த சோலனஸ், பொழுதுபோக்கு நேரங்களில், தமது சக துறவியருக்காக, ஐரிஷ் மொழி பாடல்களை பாடி இசைத்தார். அவரது குழந்தை பருவ பேச்சு தடை காரணமாக, அவரது குரல் பயங்கரமாக இருந்தது. அடிக்கடி விரதங்களிருந்த இத்துறவி, போதுமான அளவே உண்டார். தமது எழுபதுகளில் கூட, இளம் துறவியருடன் டென்னிஸ் (Tennis), வாலிபால் (Volleyball) மற்றும் ஓட்டம் (Jogging) போன்ற விளையாட்டுக்களையும் விளையாடுவதுண்டு.

1946ம் ஆண்டுமுதலே பலவீனமடைந்து, நோய்வாய்ப்பட ஆரம்பித்த இவருக்கு “எக்சீமா” (Eczema) எனப்படும் சிரங்கு நோய், உடல் முழுதும் பரவ ஆரம்பித்தது. “இண்டியானா” (Indiana) மாநிலத்தின் “ஹன்டிங்க்டன்” (Huntington) நகரிலுள்ள “புனிதர் ஃபெலிக்ஸ்” கபுச்சின் புகுமுக துறவியர்” (Capuchin novitiate of Saint Felix) பயிற்சியகத்திற்கு மாற்றப்பட்டார். 1956ம் ஆண்டுவரை, அங்கேயே டெட்ரோய்ட் நகரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 1957ம் ஆண்டு, உணவு விஷத் தன்மையாக (Food Poisoning) மாறியதற்காக மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சைகளுக்கு அப்பாலான (Erysipelas) அல்லது (Psoriasis) ஆகிய நோய்கள் இருப்பதகாக மருத்துவர்கள் சொன்னார்கள். புண்கள் குணமடத் துவங்கும் வரை, உறுப்புகள் துண்டிக்கப்படுவது (Amputation) அவசியமாக மருத்துவர்கள் கருதினார்கள்.

சோலனஸ் கேசே, 1957ம் ஆண்டு, ஜூலை மாதம், 31ம் தேதி, டெட்ரோய்ட் (Detroit) நகரிலுள்ள புனிதர் யோவான் மருத்துவமனையில் (Saint John Hospital) மரித்தார்.

ஜூலை 30 புனிதர் பீட்டர் கிறிசோலஜஸ் St. Peter Chrysologus


ஆயர், ஒப்புரவாளர், மறைவல்லுநர்: (Bishop, Confessor, and Doctor of the Church)

பிறப்பு: கி.பி. 380 இமோலா, போலோக்னா பிராந்தியம், எமிலியா-ரோமக்னா, வட-மத்திய இத்தாலி (Imola, Province of Bologna, Emilia-Romagna, North-Central Italy)

இறப்பு: ஜூலை 31, 450 இமோலா, போலோக்னா பிராந்தியம், எமிலியா-ரோமக்னா, வட மத்திய இத்தாலி (Imola, Province of Bologna, Emilia-Romagna, North-Central Italy)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜூலை 30

புனிதர் பீட்டர் கிறிசோலஜஸ், கி.பி. 433ம் ஆண்டு முதல், தமது மரணம் வரையான காலத்தில், “ரவென்னா” நகரின் ஆயராக (Bishop of Ravenna) பணியாற்றியவர் ஆவார். ஒரு ஆயராக, தமது காலத்தில் அவர் ஆற்றிய சுருக்கமான, ஆனால் செழிப்பான மறையுரைகள் வழங்குவதில் வல்லுநர் என்று அறியப்படுகிறவர் ஆவார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகிய திருச்சபைகளால் புனிதராக கௌரவிக்கப்படுகிறார்.

இவர், வட-மத்திய இத்தாலியின் போலோக்னா (Bologna) பிராந்தியத்தின் “இமோலா” (Imola) நகரில் பிறந்தவர் ஆவார். “இமோலா” ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் (Roman Catholic Diocese of Imola) ஆயரான “கோர்னேலியேஸ்” (Cornelius) அவர்களால் திருமுழுக்கு கொடுக்கப்பட்ட பீட்டர், அவராலேயே கல்வி கற்பிக்கப்பட்டார். பின்னர் அவராலேயே “திருத்தொண்டராக” (Deacon) அருட்பொழிவு செய்விக்கப்படார். பேரரசர் மூன்றாம் “வலேண்டினியனின்” (Emperor Valentinian III) செல்வாக்கால் தலைமை குருவின் அடுத்த அதிகாரியாக (Archdeacon) நியமிக்கப்பட்டார். திருத்தந்தை “மூன்றாம் சிக்ஸ்டஸ்” (Pope Sixtus III) இவரை “ரவென்னா சிர்காவின்” (Bishop of Ravenna Circa) ஆயராக கி.பி. 433ம் ஆண்டு நியமித்தார். ரவென்னா நகரின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரை வெளிப்படையாக நிராகரித்தார்.

பாரம்பரிய ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பதிவேடுகளின்படி, (Roman Breviary) திருத்தந்தை மூன்றாம் “சிக்ஸ்டஸ்” (Pope Sixtus III) அவர்களுக்கு அப்போஸ்தலரும், முதல் திருத்தந்தையுமான பேதுரு அவர்கள் காட்சியளித்ததாகவும், ரவென்னாவின் முதல் ஆயரான புனிதர் “அபொல்லினரிஸ்” (Saint Apollinaris of Ravenna) பேதுரு அவர்களுக்கு ரவென்னாவின் இளம் ஆயராக பீட்டரை காண்பித்ததாகவும் கூறப்படுகின்றது. இமோலாவின் ஆயர் “கோர்னேலியேஸ்” மற்றும் திருத்தொண்டர் பீட்டர் உள்ளிட்ட ஒரு கூட்டம் ரவென்னாவிலிருந்து வந்தபோது, தாம் தரிசனத்தில் கண்ட இளம் பீட்டரை “சிக்ஸ்டஸ்” இனம்கண்டார். பின்னர் அவரையே ஆயராக அருட்பொழிவு செய்தார்.

ஆயர் பீட்டர் மறையுரைகளின் வல்லுனராக (Doctor of Homilies) மக்களால் பெரிதும் அறியப்பட்டிருந்தார். அவரது மறையுரைகள், மிகவும் எளிய மற்றும் குறுகிய ஆனால் தூண்டுதலானவைகளானதாக அமைந்திருந்தன. அவரது பக்தி மற்றும் தாழ்ச்சி உலகளாவிய புகழையும் வென்றிருந்தது. ரோம பேரரசரின் அன்னையும், பேரரசியுமான “கல்லா ப்லசிடியா” (Galla Placidia) முதன்முதலாக அவரது மறையுரையின் நாவன்மையை கேட்ட பின்னர், “பொன் வார்த்தைகள்” (Golden-worded) எனும் அர்த்தம் கொள்ளும் “கிறிசோலஜஸ்” (Chrysologus) எனும் உபபெயரை அளித்தார். அத்துடன், ஆயர் பீட்டரின் பல திட்டங்களை பேரரசி “கல்லா ப்லசிடியா” ஆதரித்தார்.

பீட்டர், “ஆரியனிசமும்” (Arianism) “மோனோபிஸிடிசமும்” (Monophysitism) ஆகியவற்றை மதவெறியர்களாக (heresies) கண்டனம் செய்தார். அப்போஸ்தலர்களின் விசுவாசம் (Apostles' Creed) மற்றும் மனித அறிவுக்கு எட்டாத அவதாரம் ஆகியனவற்றை விவரித்தார். புனிதர் ஸ்நாபக அருளப்பர் (Saint John the Baptist) மற்றும் இறைவனின் அன்னை அதிதூய கன்னி மரியாள் (Blessed Virgin Mary) ஆகியோரின் பேரில் தொடர் மறையுரைகளை அர்ப்பணம் செய்தார். இன்றளவும் எஞ்சியுள்ள அவரது இலக்கியங்கள், திருச்சபையின் பாரம்பரிய விசுவாசங்களான அன்னை மரியாளின் மாசற்ற தன்மை, தவக்காலத்தின் சர்வ வல்லமையின் மதிப்பு, நற்கருணையில் கிறிஸ்துவின் இருப்பு மற்றும் புனிதர் பேதுரு மற்றும் அவரது பின்வருவோரின் முதன்மை பற்றின திருச்சபையின் பாரம்பரிய விசுவாசங்களுக்கு சான்றாகும்.

“ரவென்னா” உயர்மறைமாவட்ட பேராயர் “ஃபெலிக்ஸ்” (Archbishop Felix of Ravenna), எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பீட்டரின் 176 மறையுரைகளை சேகரித்து பாதுகாத்து வைத்தார். பல்வேறு எழுத்தாளர்கள் அவற்றை சீர்திருத்தி, எண்ணற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்தனர்.

கி.பி. 450ம் ஆண்டு, தமது சொந்த ஊரான இமோலாவுக்கு சென்றிருந்த பீட்டர் கிறிசோலஜஸ் ஜூலை மாதம் 31ம் தேதி மரித்தார்.

ஜூலை 30 : முதல் வாசகம்


சபையாய்க் கூடி ஓய்வு நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள்.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 23: 1, 4-11, 15-16, 27, 34b-38

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீங்கள் சபையாகக் கூடிக் குறிப்பிட்ட நாள்களில் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவரின் பண்டிகை நாள்களாவன: முதல் மாதம் பதினான்காம் நாள் மாலையில் ஆண்டவருக்கான பாஸ்கா. அந்த மாதம் பதினைந்தாம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற அப்பப் பண்டிகை; ஏழு நாள் புளிப்பற்ற அப்பங்களை உண்பீர்கள். பண்டிகையின் முதல் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. ஏழு நாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். ஏழாம் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது: நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும்போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.

ஆரத்திப் பலியாகக் கதிர்க் கட்டினைக் கொண்டு வந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும். ஏழாம் ஓய்வு நாளுக்கு மறு நாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள்.

அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக் கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும்.

ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப் பெருவிழா தொடங்குகின்றது. அது ஏழு நாள்கள் தொடரும். முதல் நாள் திருப்பேரவை கூடும் நாள்; அன்று எத்தகைய வேலையையும் செய்ய வேண்டாம். ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்; அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள். அது நிறைவு நாள். அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது.

ஓய்வு நாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர, அந்தந்த நாள்களுக்கு ஏற்ப எரிபலி, உணவுப் படையல், இரத்தப் பலி, நீர்மப் படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க் கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள். இவையே நீங்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 30 : பதிலுரைப் பாடல்


திபா 81: 2-3. 4-5. 9-10a (பல்லவி: 1a)

பல்லவி: நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்.

2 இன்னிசை எழுப்புங்கள்; மத்தளம் கொட்டுங்கள்; யாழும் சுரமண்டலமும் இசைத்து இனிமையாய்ப் பாடுங்கள்.

3 அமாவாசையில், பௌர்ணமியில், நமது திருவிழா நாளில் எக்காளம் ஊதுங்கள். - பல்லவி

4 இது இஸ்ரயேல் மக்களுக்குரிய விதிமுறை; யாக்கோபின் கடவுள் தந்த நீதிநெறி.

5 அவர் எகிப்துக்கு எதிராகச் சென்றபொழுது யோசேப்புக்கு அளித்த சான்று இதுவே. அப்பொழுது நான் அறியாத மொழியைக் கேட்டேன். - பல்லவி

9 உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது.

10a உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 பேது 1: 25

அல்லேலூயா, அல்லேலூயா! “நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.” இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. அல்லேலூயா.

ஜூலை 30 : நற்செய்தி வாசகம்


இவர் தச்சருடைய மகன் அல்லவா? எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது?

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58

அக்காலத்தில்

இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜுலை 29 அர்ச். மார்த்தம்மாள் - கன்னிகை (1-ம் யுகம்)


மார்த்தம்மாள் தன் கூடப்பிறந்தவர்களான லாசர், மரிய மதலேனாளுடன் பெத்தானிய ஊரில் வசித்தாள். நமது கர்த்தர் 3 வருடம் தமது வேதத்தைப் போதித்த காலத்தில் அடிக்கடி மார்த்தம்மாள் வீட்டில் போய்த் தங்குவார். 

ஒரு நாள் சேசுநாதர் அவ்வீட்டில் விருந்தாளியாய் சென்றபோது, மரிய மதலேனம்மாள் அவர் பாதத்தடியில் உட்கார்ந்து அவருடைய போதகத்தை கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது மார்த்தம்மாள் ஆண்டவரை அணுகி: “சுவாமி! என் தங்கை வீட்டு வேலையை எனக்கு விட்டுவிட்டு உம்மிடத்தில் உட்கார்ந்து இருக்கிறாள்; எனக்கு உதவி செய்யும்படி அவளை வரச்சொல்லும்” என்றாள். 

அதற்கு கர்த்தர்: “மார்த்தாள் நீ பல காரியங்களில் கவலையாயிருக்கிறாய்; மரியா மகதலேனா உத்தமமானதைத் தெரிந்துகொண்டாள்" என்றார். மார்த்தாளுடைய தமயனான லாசர் வியாதியாய் விழுந்தபோது, அவர்கள் கர்த்தரிடம் ஆள் அனுப்பி, தங்கள் தமயனைக் குணப்படுத்தும்படி மன்றாடினார்கள். 

ஆனால் கர்த்தர் சில நாட்களுக்குப்பின் அங்கு சென்று, மரித்து அடக்கஞ் செய்யப்பட்ட லாசரை உயிர்ப்பித்தார். சேசுநாதர் மோட்சத்திற்கு ஆரோகணமானபின் யூதர் புதுக் கிறிஸ்தவர்களை உபாதித்துக் கொல்லும் காலத்தில் மார்த்தாளையும் மரிய மதலேனம்மாளையும் வாசரையும் இன்னும் அநேக கிறீஸ்தவர்களையும் பாய்மரமும் சுக்கானும் இல்லாத ஒரு சிறு கப்பலில் ஏற்றி கடலில் விட்டு விட்டார்கள். 

கப்பல் சிறிதும் சேதமடையாமல் புதுமையாய் மர்சேல்ஸ் பட்டணம் போய்ச் சேர்ந்தது. அவ்விடத்தில் மேற்றிராணியாரான லாசர் வேதம் போதித்தார். மதலேனம்மாள் ஒரு கெபியில் சேர்ந்து ஜெப தபம் புரிந்தாள். 

மார்த்தம்மாள் அநேக கன்னியரை ஒரு மடத்தில் சேர்த்து அவர்களுடன் அநேக வருடம் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து மரணமடைந்து மோட்ச பதவி பெற்றாள்.

யோசனை

நாமும் நமது கர்த்தருடைய புத்திமதிகளைப் பின்பற்றி உலக காரியங்களை விட ஆத்தும் காரியங்களை அதிகமாய்க் கவனிப்போமாக.

ஜூலை 29 அருளாளர் இரண்டாம் அர்பன் Blessed Urban II


159ம் திருத்தந்தை: (159th Pope)

பிறப்பு: கி.பி. 1035 லகேரி, ச்சம்பக்ன், ஃபிரான்ஸ் அரசு (Lagery, County of Champagne, Kingdom of France)

இறப்பு: ஜூலை 29, 1099 (வயது 64) ரோம், திருத்தந்தையர் மாநிலங்கள், தூய ரோம பேரரசு (Rome, Papal States, Holy Roman Empire)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜூலை 14, 1881 திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII)

அருளாளர் திருத்தந்தை இரண்டாம் அர்பன், கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக கி.பி. 1088ம் ஆண்டு, மார்ச் மாதம், 12ம் தேதி முதல், கி.பி. 1099ம் ஆண்டு, ஜூலை மாதம், 29ம் நாளன்று, தனது இறப்பு வரை ஆட்சி செய்தவர் ஆவார். இவர் முதலாம் சிலுவைப் போரை (கி.பி. 1096–1099) துவங்கியதற்காகவும், திருப்பீட ஆட்சித்துறைகளை (Roman Curia) திருச்சபையை செவ்வனே நடத்த ஒரு அரசு அவையைப்போல அமைத்ததற்காகவும் அறியப்படுகின்றார்.

திருத்தந்தை ஏழாம் கிரகோரி (Pope Gregory VII), கி.பி 1080ம் ஆண்டு, இவரை ஓஸ்தியா நகரின் (Cardinal-Bishop of Ostia) கர்தினால் ஆயராக நியமித்தார். இவர் கி.பி. 1084ம் ஆண்டு, ஜெர்மனியில் திருத்தந்தையின் தூதுவராக பணியாற்றிய போது, ஏழாம் கிரகோரியின் மாற்றங்களுக்கு ஆதரவு தந்து அவற்றை முனைப்புடன் செயல் படுத்தினார். ஏழாம் கிரகோரியின் இறப்புக்குப் பின் “மூன்றாம் விக்டர்” (Victor III) திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் சிறிது காலமே திருச்சபையினை ஆண்டார். அவரின் இறப்புக்குப்பின் திருத்தந்தையாக “ஓடோ” (Odo), இரண்டாம் அர்பன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரின் ஆட்சியின் போது எதிர்-திருத்தந்தையாக “மூன்றாம் கிளமண்ட்” (Antipope Clement III) இருந்தார். அர்பன், ஏழாம் கிரகோரியின் (Pope Gregory VII) கொள்கைகளை எடுத்துக்கொண்டார். உறுதியுடன் அவற்றைப் பின்தொடர்ந்த அவர், அதிக நெகிழ்வுத்தன்மையுடனும் இராஜதந்திரத்திடனும் நடந்துகொண்டார். பொதுவாக ரோமில் இருந்து விலகியே இருந்த அவர், வட இத்தாலிக்கும், ஃபிரான்ஸ் நாட்டுக்கும் பயணங்கள் மேற்கொண்டார். “ரோம்” (Rome), “அமல்ஃபி” (Amalfi), “பெனவெண்டோ” (Benevento), மற்றும் “ட்ரோயியா” (Troia) ஆகிய நகரங்களில் தொடர் ஆலோசனை சபைகளை (synods) நடத்தினார். ஆயர்களை நியமிப்பதில் திருத்தந்தைக்கு இருக்கும் அதிகாரம், குருக்களின் கற்பு நிலை, திருச்சபையின் திருவருட்சாதனங்களை காசுக்கு விற்பதை எதிர்த்தும் பல அறிக்கைகளை வெளியிட்டார்.

இவர், டுஸ்கனி (Tuscany) கோமாட்டியான “மெட்டில்டாவுக்கும்” (Matilda), “பவேரியா” (Bavaria) கோமகன் “இரண்டாம் வெல்ஃப்” (Welf II) ஆகியோருக்கு நடந்த திருமணத்தை எளிதாக்கினார். இளவரசர் கான்ராட் (Prince Conrad) அவரது தந்தைக்கு எதிரான கிளர்ச்சிக்கு ஆதரவளித்து, மணமகனின் அலுவலகத்தை “கிரமோனா” (Cremona) நகரில், 1095ம் ஆண்டு, அவரிடமிருந்து பெற்றார். சிசிலியின் கோமகன் “ரோகர்” (Count Roger of Sicily) என்பவரது மகள் “மேக்சிமில்லா” (Maximilla) மற்றும் இளவரசர் “கொன்ராட்” (Prince Conrad) ஆகியோரின் திருமண ஏற்பாடுகளில் உதவி புரிந்தார். இவர்களது திருமணம், அதே வருடம், “பிஸா” (Pisa) நாட்டில் நடந்தது.

அர்பன், தமது முன்னோடிகளின் சீர்திருத்தங்களுக்காக கடுமையான ஆதரவைப் பெற்றார்.

ஜூலை 29 புனிதர் மார்த்தா St. Martha of Bethany


கன்னியர், வெள்ளைப்போளம் கொணர்பவர், தென் கால் நாட்டின் புதுமைகள் புரிபவர்: (Virgin, Myrrhbearer, Wonder Worker of Southern Gaul)

பிறப்பு: யூதேயா எனத் தெரிகிறது. இன்றைய இசுரயேல் அல்லது மேற்குக் கரை (Probably Iudaea Province (Modern-day Israel or West Bank))

இறப்பு: மரபுப்படி லார்னாக்கா, சைப்ரஸ் அல்லது டராஸ்கோன், கால் (தற்போதைய ஃபிரான்ஸ்) (Traditionally Larnaca, Cyprus or Tarascon, Gaul (Modern-day France))

ஏற்கும் சபை/ சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

கிழக்கு கிறிஸ்தவ திருச்சபைகள் (Eastern Christianity)

லூதரன் திருச்சபை (Lutheran Church)

ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)

நினைவுத் திருவிழா: ஜூலை 29 

பாதுகாவல்: 

உதவியாளர்; சமையல் செய்வோர்; உணவுநெறியாளர்; வீட்டுவேலை செய்வோர்; வீட்டுப் பொறுப்பாளர்; விடுதியாளர்; வீட்டில் கூலிவேலை செய்வோர்; இல்லத்தலைவியர்; விடுதிக்காப்பாளர்; சலவைத் தொழிலாளர்; வேலைக்காரர்; 

தனித்த பெண்கள்; பயணம் செய்வோர்; ஸ்பெயின் நாட்டின் “வில்லாஜோயோசா” (Villajoyosa, Spain)

புனிதர் மார்த்தா, புதிய ஏற்பாட்டு நூல்களாகிய லூக்கா நற்செய்தியிலும் யோவான் நற்செய்தியிலும் விவரிக்கப்படுகின்ற புனிதர் ஆவார்.

மார்த்தாவும் அவருடைய உடன்பிறப்புகளான இலாசர் (Lazarus) மற்றும் மரியா (Mary of Bethany) ஆகியோர் எருசலேம் (Jerusalem) அருகே “பெத்தானியா” (Bethany) என்னும் ஊரில் வாழ்ந்துவந்ததாக புதிய ஏற்பாடு தகவல் தருகின்றது. குடும்பத்தில் மரியா முதலிலும், அவருக்கு அடுத்தவராக இலாசரும், இருவருக்கும் இளையவராக மார்த்தாவும் இருந்தனர். இறந்துபோன இலாசருக்கு இயேசு உயிர்கொடுத்த நிகழ்ச்சியைக் கண்டவருள் மார்த்தாவும் ஒருவர்.

மார்த்தா பற்றிய விவிலியக் குறிப்புகள் :

லூக்கா நற்செய்தி :

லூக்கா நற்செய்தி நூலில் இயேசு தம் நண்பர்களான மார்த்தா, மரியா, லாசர் ஆகியோரின் வீடு சென்று அவர்களைச் சந்திக்கிறார். மரியா, மார்த்தா ஆகிய இரு சகோதரிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு அங்கே காட்டப்படுகிறது. அவர்களது வீட்டில் இயேசு விருந்தினராகச் சென்றபோது, மார்த்தா "பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்கிக்கொண்டிருந்தார்", ஆனால் மரியா "இயேசுவின் காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்"; எனவே அவர் "நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்."

(காண்க: லூக்கா 10:38-42).

இப்பகுதியில் மார்த்தா, மரியா, இலாசர் ஆகியோரின் வீடு எந்த நகரில் இருந்தது என்பதும், இயேசு எருசலேமுக்கு அருகில் இருந்தாரா என்பதும் சொல்லப்படவில்லை.

யோவான் நற்செய்தி :

யோவான் நற்செய்தியில் மார்த்தாவும் மரியாவும் இரு நிகழ்வுகளில் வருகின்றனர். ஒன்று, இறந்துபோன இலாசருக்கு இயேசு உயிரளித்தது, மற்றொன்று, மரியா இயேசுவுக்கு உணவு பரிமாறியபோது மார்த்தா இயேசுவுக்கு நறுமணத் தைலம் பூசியது.

இலாசருக்கு இயேசு உயிரளித்த நிகழ்ச்சியில் முதலில் மரியா வருகிறார், அதன்பின் அவருடைய சகோதரி மார்த்தா வருகிறார். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்ட உடனேயே மார்த்தா ஓடோடிச் சென்று அவரை வரவேற்கிறார். மரியாவோ வீட்டிலேயே இருந்தார். இயேசு சொல்லி அனுப்பிய பின்னரே மரியா வருகிறார்.

இங்கே மார்த்தா அங்குமிங்கும் சென்று காரியங்களைச் செய்வதில் முனைப்பாக இருப்பதும், மரியா அமைதியை நாடி சிந்தனையில் இருப்பதும் காட்டப்படுகிறது. இது லூக்கா நற்செய்தியில் வருகின்ற மார்த்தா மரியா ஆகியோரின் குணச்சித்திர விவரிப்புக்கு ஒத்திருக்கிறது (லூக்கா 10:38-42).

இரு சகோதரிகளுமே இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்றுதான் கூறுகிறார்கள். (யோவான் 11:21,32) ஆயினும், இயேசு மரியாவுக்கு அளித்த பதில் உணர்ச்சியையும் உள்ளத்தின் துயரத்தையும் வெளிப்படுத்துகிறது. மார்த்தாவிடம் இயேசு நம்பிக்கை கொள்ளும்படி அறிவுறுத்தி, போதனை வழங்குகிறார்:

இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, மார்த்தா மரியாவிடம் சென்று இயேசு அவரைத் தேடியதாகக் கூறுகிறார். மரியா வந்ததும் இயேசு அவரிடம் இலாசரை எங்கே வைத்தார்கள் என்று கேட்கிறார். மரியா இயேசுவை இலாசரின் கல்லறைக்குக் கூட்டிச் செல்கிறார். கல்லறையின் கல்லை அகற்றும்படி இயேசு கூறியதும் மார்த்தா அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார்: "ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!" என்பது மார்த்தாவின் கூற்று (யோவான் 11:39). இயேசு பதில்மொழியாக, "நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என் நான் உன்னிடம் கூறவில்லையா" என்று கேட்டார் (யோவான் 11:40). அதன்பின் இலாசரின் கல்லறையின் கல் அகற்றப்படுகிறது. இயேசு அண்ணாந்து பார்த்து தம் தந்தையை நோக்கி வேண்டுகிறார். இலாசரும் சாவினின்று விடுபட்டு மீண்டும் உயிர்பெற்று எழுகின்றார்.

யோவான் நற்செய்தியில், மார்த்தா மீண்டும் வருகிறார். யோவான் நற்செய்தியின் பன்னிரண்டாம் அதிகாரத்தில் அந்நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது. இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார் என்றும் அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது என்று மட்டுமே அந்நற்செய்தி கூறுகிறது. அதற்கு இணையான பகுதிகளாக உள்ள மத்தேயு 26:6-3 பகுதியிலும், மாற்கு 14:3-9 பகுதியிலும் விருந்து "தொழுநோயாளரான சீமோன் வீட்டில் நிகழ்ந்தது" என்றுள்ளது.

எனவே, இந்த விருந்து சீமோனின் வீட்டில் நடந்திருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர். ஆயினும், மார்த்தா விருந்து பரிமாறினார் என்று யோவான் கூறுவது கவனிக்கத்தக்கது. மேலும், விலையுயர்ந்த நறுமணத் தைலத்தைக் கொண்டு இயேசுவை மார்த்தாவின் சகோதரியான மரியா பூசினார் என்று யோவான் நற்செய்தி கூறுகிறது.

கத்தோலிக்க மரபில் புனித மார்த்தா :

ரோமன் கத்தோலிக்க மரபில் மார்த்தாவின் சகோதரி மரியா, இயேசுவுக்கு நறுமண எண்ணெய் பூசிய "பாவியான பெண்ணாகிய" மகதலா மரியாவோடு பெரும்பாலும் இணைத்துப் புரிந்துகொள்ளப்பட்டார். அதுபோலவே மார்த்தா பற்றியும் சில மரபுச் செய்திகளும் விளக்கங்களும் உள்ளன.

யோவான் நற்செய்திப்படி, மரியா, மார்த்தா, இலாசர் ஆகியோர் பெத்தானியாவில் வாழ்ந்தனர். லூக்கா நற்செய்திப்படி, அவர்கள் சிறிது காலமாவது கலிலேயாவில் வாழ்ந்திருக்க வேண்டும். லூக்கா அவர்கள் வாழ்ந்த நகரத்தைக் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த இடம் "மகதலா" என்னும் ஊராக இருந்திருக்கலாம். அவ்வாறென்றால் பெத்தானியா மரியாவும் மகதலா மரியாவும் ஒரே ஆளைக் குறிக்கக் கூடும். மார்த்தா பற்றி யோவானும் லூக்காவும் தருகின்ற விவரிப்பு மிகத் துல்லியமாக ஒத்திருக்கின்றன. இயேசு அவர்களோடு கொண்டிருந்த உறவு உண்மையிலேயே ஆழமானது: "மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்" (யோவான் 11:5). மார்த்தா இயேசுவுக்கு உணவு பரிமாறுவது பற்றியே கரிசனையும் கவலையும் கொண்டிருந்தார் (யோவான் 11:20-21,39; லூக்கா 10:40). ஆனால் படிப்படியாக மார்த்தாவின் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அவர் இயேசுவைக் கடவுள் தன்மை கொண்டவராக ஏற்கின்றார். தம் சகோதரியான மரியாவிடம் சென்று அதை அறிவிக்கின்றார் (காண்க: யோவான் 11:20-27).

கீழை மரபுவழிச் சபை மரபு:

கீழை மரபுவழிச் சபையில், மார்த்தாவும் அவருடைய சகோதரி மரியாவும் வெள்ளைப்போளம் ஏந்தியவர்களாகப் போற்றப்படுகிறார்கள். இயேசு கொல்கொதா மலையில் சிலுவையில் உயிர்துறந்து கல்லறையில் அடக்கப்பட்ட பின், அவரைப் பிரமாணிக்கமாகப் பின்சென்ற பெண்கள் அவருடைய கல்லறைக்குச் சென்று அவருடைய உடலுக்கு வெள்ளைப்போளம் கொண்டு பூசப் போனார்கள் என்னும் அடிப்படையில் இக்கருத்து எழுந்தது. கல்லறை வெறுமையாய் இருந்தது. வானதூதர், இயேசு உயிர்பெற்றெழுந்த செய்தியை அறிவித்தார். எனவே, இப்பெண்களே, இயேசு உயிர்த்தெழுந்ததற்கு முதல் சாட்சிகள்.

மரபுவழிச் சபையின் பாரம்பரியப்படி, மார்த்தாவின் சகோதரர் இலாசர் கிறித்துவில் நம்பிக்கை கொண்டதால் யூதர்கள் அவரை எருசலேமிலிருந்து துரத்தினர். அவரும் புனித ஸ்தேவான் மறைச்சாட்சியாக உயிர்துறந்ததைத் தொடர்ந்து, தம் சகோதரி மார்த்தாவோடு யூதேயாவை விட்டுச் சென்று, பல்வேறு பகுதிகளில் கிறித்தவ சமயத்தைப் பரப்பினார். அதே சமயம், மகதலா மரியா எருசலேமில் திருத்தூதர் யோவானோடு சேர்ந்து கிறிஸ்தவத்தைப் பரப்பினார். மூன்று உடன்பிறப்புகளும் அதன்பின்னர் சைப்ரசு தீவுக்கு வந்தனர். அங்கே இலாசர் லார்னாக்கா நகரில் ஆயராகப் பொறுபேற்றுப் பணிபுரிந்தார்.

ஜுலை 29 புனிதர் லாசர் St. Lazarus of Bethany


கிறிஸ்துவின் நண்பர், நான்கு நாட்கள் மரித்திருந்தவர்: (Four-days dead, Friend of Christ)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodox Church)

கிழக்கு கத்தோலிக்க திருச்சபை (Eastern Catholic Churches)

ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)

லூதரன் திருச்சபை (Lutheran Church)

இஸ்லாம் (Islam)

நினைவுத் திருநாள்: ஜுலை 29

“நான்கு நாட்களின் லாசரஸ்” (Lazarus of the Four Days) என்றும், “புனிதர் லாசரஸ்” (Saint Lazarus) என்றும், “பெத்தனியின் லாசரஸ்” (Lazarus of Bethany) என்றும் அழைக்கப்படும் புனிதர் லாசர், நான்கு நாட்கள் மரித்தோருள் இருந்தவரும், கிறிஸ்து இயேசுவின் நண்பரும், புனிதர்கள் “மார்த்தா” (Martha) மற்றும் “மரியா’வின்” (Mary) சகோதரருமாவார். இவரது நண்பரான இயேசு, இவரை தமது கண்முன்னே மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்ததைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இவர் தம் நண்பர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்?” என்றனர்.

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் பின்னர், லாசரின் வாழ்க்கையைப்பற்றி வெவ்வேறு புராணங்கள் உள்ளன. அவர் வாழ்க்கையில் மீண்டும் அழைக்கப்படுவதன் முன்னர், அடுத்த உலகத்தைப் பற்றி அவர் ஏதாவது எழுதி வைத்துவிட்டு சென்றிருக்க வேண்டுமென்று சிலரும், வேறு சிலரோ, அவர் புனிதர் பேதுருவைப் பின்தொடர்ந்து சிரியா (Syria) சென்றிருக்க வேண்டுமென்றும், மற்றொரு கதையானது, இஸ்ரேலின் (Israel) மத்திய தரைக்கடல் கடற்கரையிலுள்ள “ஜாஃபா” கடலில், கசிவுள்ள படகில் யூதர்களால் ஏற்றிவிடப்பட்டும், அவரும், அவரது சகோதரிகளும், மற்றும் பிறரும் “சைப்ரஸில்” (Cyprus) பாதுகாப்பாக கரை இறங்கியுள்ளனர் என்கிறது. அங்கே, 30 ஆண்டுகளாக ஆயராக பணியாற்றிய பின்னர் அவர் அமைதியாக மரித்தார் என்கிறது.

“கான்ஸ்டண்டினோபில்” (Constantinople) நகரில், இவரைக் கௌரவிக்கும் விதமாக, ஒரு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இவரது புகழ்பெற்ற மிச்சங்கள் அனைத்தும் கி.பி. 890ம் ஆண்டு, இங்கே கொண்டுவரப்பட்டன. அங்கே அவர் “மார்ஸிலீஸின்” (Marseilles) ஆயராகப் பணியாற்றினார். எண்ணற்ற மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றியபின்னர், மறைசாட்சியாக மரித்த இவர், ஒரு குகையில் அடக்கம் செய்யப்பட்டார். கிழக்கு ஃபிரான்சிலுள்ள (Eastern France) “ஆடம்ன்” (Autun) நகரில் ஒரு புதிய பேராலயம் கட்டப்பட்டு இவரது மிச்சங்கள் 1146ம் ஆண்டு, இங்கே கொண்டுவரப்பட்டன.

இப்புனிதருக்கு ஆரம்ப காலத்திலேயே பக்தி இருந்தது என்பது நிச்சயம். கி.பி. சுமார் 390ம் ஆண்டுகளில், “எதேரியா” (Etheria) எனும் பெண் திருயாத்திரி, லாசர் மரித்தோர்களிடமிருந்து எழுந்திருந்த கல்லறையில், ஆண்டுதோறும் குருத்து ஞாயிற்றுக் கிழமைக்கு முந்தின சனிக்கிழமையன்று நடக்கும் ஊர்வலம் பற்றி பேசுவதை கேட்க முடிந்தது. மேற்கத்தைய நாடுகளில், தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறை (Passion Sunday) "டொமினிகா டி லாஸரோ" (Dominica de Lazaro) என்பர். மற்றும், ஆபிரிக்காவில் (Africa), லாசர் உயிருடன் எழுப்பப்பட்ட நற்செய்தி, தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறன்று (Passion Sunday) வாசிக்கப்படுவதாக புனிதர் அகுஸ்தினார் (St. Augustine) கூறுகின்றார்.

ஜூலை 29 : முதல் வாசகம்


நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-16.

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும்.

அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் அறிந்து கொள்கிறோம்.

தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கின்றோம்.

இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம்.

கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 29 : பதிலுரைப் பாடல்


திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8. 9-10 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.

8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.

10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12b காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஜூலை 29 : நற்செய்தி வாசகம்


நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 19-27

அக்காலத்தில்

சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.

மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.

மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாக மாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.

மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

---------------------------------------------------

தூய மார்த்தா

தூய மார்த்தா (ஜூலை 29)

 நிகழ்வு

 கலாத்தியா என்ற பகுதியில் லேவியத்தான் என்ற உயிரினம் இருந்தது. அதன் பாதி உடல் விலங்கு போலவும், மீதி உடல் மீனைப் போன்றும் இருந்தது. ஒரு குதிரையையும் விடவும் அது பெரியதாக இருந்தது. இவ்வுயிரினம் அவ்வழியாகப் போவோர் வருவோர் எல்லாரையும் பிடித்து சாப்பிட்டு வந்தது. கடல்வழியாகப் போவோரையும் அது அவ்வாறே துன்புறுத்தி வந்தது. இதனால் மக்கள் பெரிதும் இன்னலுக்கு உள்ளானார்கள். எனவே அவர்கள் மார்த்தாவிடம் வந்து, தங்களை அந்தக் கொடிய மிருகத்திடமிருந்து காப்பாற்றுமாறு கெஞ்சிக் கேட்டார்கள். மார்த்தாவும் அவ்வுயிரினம் வாழ்ந்து வந்த டரஸ்கான் (Tarascon) பகுதிக்குச் சென்று, சிலுவையின் துணையுடன் அதனைக் கொன்று வீழ்த்தினார். அதனால் மக்கள் பெருமகிழ்ச்சி  பேரானந்தம் அடைந்தார்கள்.

 வாழ்க்கை வரலாறு

 இன்று நாம் விழாக்கொண்டாடும் மார்த்தா பெத்தானியாவைச் சேர்ந்தவர். இவரோடு உடன் பிறந்தவர்கள்தான் இயேசு அதிகமாக அன்பு செய்த லாசர் (யோவா 11:5), மற்றும் மகதலேன் மரியா. மார்த்தா எப்போதுமே கடின உழைப்பாளியாக, உதவும் நல்ல உள்ளத்தினராக விளங்கினார் என்பதை விவிலியம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. விவிலியத்தில் இவர் சில பகுதிகளில் இடம்பெற்றாலும், அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு பார்க்கும்போது மார்த்தா எப்படிப்பட்டவர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

 விவிலியத்தில் மார்த்தா இடம்பெறும் முதல் பகுதி லூக்கா நற்செய்தி 10: 38-42. இங்கே அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்த இயேசுவுக்கு பணிவிடை செய்யவேண்டும், அவரை நன்றாக உபசரிக்க வேண்டும் என்பதற்காக பரபரப்பாக இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் தனக்கு உதவி செய்ய வராத தன்னுடைய சகோதரியான மதலேன் மரியாவின் மீது குறைபட்டுக் கொள்கிறார். இதைக் கண்ணுற்ற இயேசு மார்த்தாவிடம், “மார்த்தா, மார்த்தா!, நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால், தேவையானது ஒன்றே, மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்கிறார்      (லூக் 10:41- 42). இங்கே மார்த்தா வீட்டில் மூத்தவள் என்பதாலும், தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் இயேசுவுக்கு சிறப்பானதொரு விருந்துகொடுக்கவேண்டும் என்ற ரீதியில் பரபரப்பாக அலைகின்றார்.

 மார்த்தா இடம்பெறும் இரண்டாவது பகுதி யோவான் நற்செய்தி 11: 21 -27 ஆகும். இப்பகுதி மார்த்தா ஆண்டவர் இயேசுவிடத்தில் எத்தகைய நம்பிக்கைக் கொண்டிருந்தார் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றது. லாசர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு அவரைப்  பார்க்க வருகின்ற இயேசுவிடம் மார்த்தா, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்கிறார். இயேசுவிடம் உண்மையான நம்பிக்கை வைத்திருப்பவர்களால் மட்டுமே இப்படியெல்லாம் கேட்கமுடியும் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும். மார்த்தா கேட்டதற்கு இயேசு, “உயிர்த்தெழுதலும் வாழும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” என்று சொல்லி மிகப்பெரிய மறை உண்மையை வெளிப்படுத்துகிறார். அப்போதுதான் மார்த்தா, “நீரே மெசியா! நீரே இறைமகன்!, நீரே உலகிற்கு வரவிருந்தவர்” என்று தன்னுடைய நம்பிக்கை அறிக்கையை வெளிப்படுக்கிறார். ஏறக்குறைய இயேசுவோடு மூன்று ஆண்டுகள் இருந்து, அவரைப்  பற்றி அறிந்துகொண்ட பேதுருவின் அறிக்கையை (மத் 16:16) ஒத்ததாக இருக்கின்றது மார்த்தாவின் அறிக்கை.

 மார்த்தா இடம்பெறும் மூன்றாவது பகுதி யோவான் நற்செய்தி 12:2 ஆகும். இப்பகுதியில் மார்த்தா தன்னுடைய சகோதரன் இலாசரை உயிர்பித்த இயேசுவுக்கும் அவரோடு இருந்த அவருடைய சீடர்களுக்கும் விருந்து படைக்கின்றார். இயேசு இங்கே மார்த்தா தருகின்ற விருந்தை அன்போடு ஏற்றுக்கொள்கிறார், அவரைப்  பற்றி எதுவும் சொல்லவில்லை. மார்த்தா எப்போதும் தன்னுடைய வீட்டை நாடிவோரை வல்லவராக, நல்லவராக விளங்கினார் என்பதைத்தான் இப்பகுதியானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

 விவிலியம் மட்டுமல்லாது திருச்சபையின் மரபுகளும் மார்த்தாவைப் பற்றி ஒருசில செய்திகளை நமக்குச் சொல்கின்றன. ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு, சினம்கொண்ட யூதர்கள் லாசர், மார்த்தா மற்றும் அவருடைய சகோதரி மரியா மகதலேனா ஆகிய மூவரையும் ஒரு படகில் கட்டி வைத்து, அதில் துடுப்பு எதுவும் வைக்காமல், கடலில் அனுப்பி விட்டனர். ஆனால் அவர்கள் மூவரும் இறைவனுடைய அருளால் உயிர்தப்பி, பிரான்சு நாட்டில் உள்ள மர்செல்லஸ் என்ற இடத்தில் தரையிறங்கினார். அங்கே லாசர் ஆயராகவும், அவருடைய சகோதரி மரியா மகதலேனா ஒரு குகைக்குச் சென்று தனியாக இறைவனிடம் வேண்டி தன்னுடைய  வாழ்நாளைக் கழித்ததாகும், மார்த்தா ட்ரஸ்கான் என்ற இடத்தில் பெண்களுக்கான் ஒரு துறவற சபையை நிறுவி, அங்கேயே தன்னுடைய இறுதி நாட்களைச் செலவிட்டதாகும் அறிந்துகொள்கிறோம்.

 கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

 தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

 இறைவனுக்கு மட்டுமே முதலிடம்

 மார்த்தா தன்னுடைய இல்லத்திற்கு வந்த இயேசுவுக்கு சிறப்பாக விருந்து உபசரிக்கவேண்டும் என்பதற்காக பரபரப்பாக அலைகின்றார். அதனால் அவர் இயேசுவின் காலடியில் அமர்ந்து அவருடைய வாழ்வுதரும் வார்த்தைகளைக் கேட்க மறந்துவிடுகின்றார். இன்றைக்கு நாமும் கூட, மார்த்தாவைப் போன்று இறைவனுக்கு முக்கியத்துவம் தராமல், உலக காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து வாழ்ந்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு நம்மிடம் சொல்கிறார், “தேவையானது ஒன்றே, அதுதான் அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுவது” (மத் 6:33).

 நாம் இறைவனுக்கு நம்முடைய வாழ்க்கையில் முக்கியத்துவம் தந்து வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். திருத்தந்தை மூன்றாம் யூஜின் திருத்தந்தையாக இருந்தபோது, அவருக்கு ஆன்ம குருவாக இருந்தவர் பெர்னார்டு என்பவர். ஒருசமயம் திருத்தந்தை மூன்றாம் யூஜின் தன்னுடைய ஆன்ம குருவிடம், “திருச்சபையின் அன்றாட அலுவல்களுக்கு இடையே எனக்கு இறைவனிடம் ஜெபிப்பதற்கு நேரமே இல்லை” என்று அங்கலாய்த்துக் கொண்டார். அதற்கு அவர், “உமது ஞான வாழ்வுக்கு முதலிடம் கொடுத்து, ஜெபத்தில் முழுமையாக கருத்தூன்றி நிற்காவிடில், திருச்சபையில் உம் அலுவல்கள் எல்லாம் நீர் எதிர்பார்ப்பதைவிட மிக விரைவில் உம்மை நரகத்திற்கே இட்டுச் செல்லும். இது எச்சரிக்கை” என்றார்.

 திருத்தந்தை அவர்களைப் போன்றுதான் நாமும் பல நேரங்களில் என்னுடைய அலுவல்களுக்கு மத்தியில் எனக்கு ஜெபிப்பதற்கு நேரமே இல்லை என சாக்குப்போக்குச் சொல்கிறோம். ஆனால் இறைவனோடு இணைந்திராத வாழக்கை அடித்தளமில்லாத வீட்டிற்குச் சமம் என நாம் புரிந்துகொண்ட வாழவேண்டும்.

 இறைவனிடத்தில் நம்பிக்கை கொண்டு வாழ்தல்

 மார்த்தா ஆண்டவர் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் இயேசுவை மெசியா, இறைமகன், உலகிற்கு  வரவிருந்த இறைவாக்கினர் என்ற நம்பிக்கை அறிக்கை செய்கிறார், அதுமட்டுமல்லாமல் அவர் இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்” என்று சொல்லி, இயேசுவிடம் கொண்ட  நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். மார்த்தாவைப் போன்று நாம் (இறைவனிடம்) அசைக்க நம்பிக்கையோடு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நம்புகிறவருக்கு எல்லாம் கூடும்” என்று (மாற் 9:23), ஆகவே, நாம் நம்பிக்கையோடு இருக்கும்போது எல்லாம் நலமாகும் என்பதே உண்மை.

 ஒருசமயம் இளைஞன் ஒருவன் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள் தீர்வதற்கு ஆலோசனை வேண்டி, பக்கத்து ஊரில் இருந்த மகானைச் சந்திக்கச் சென்றான். ஆனால் அவன் அங்கு சென்றபோது, அந்த மகானைச் சந்திப்பதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் இருப்பதைக் கண்டு மலைத்துப் போய் நின்றான். ‘இத்தனை மக்களுக்கு மத்தியில் நான் எப்படி இந்த மகானைச் சந்திப்பது என்று ஏமாற்றத்தோடு நின்றான்.

 அப்போது அந்த இளைஞனுக்கு பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர், “தம்பி! இன்று என்னால் இந்த மகானைச் சந்திக்க முடியும், அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நீ நம்பு. அது நடக்கும்” என்றார். பெரியவரின் வார்த்தைகளைக் கேட்டு அந்த இளைஞன் மகானை எப்படியாவது இன்றைக்கு சந்தித்துவிட முடியும் என நம்பத் தொடங்கினான். அவன் நம்பிய சில மணித்துளிகளிலேயே மகான் அந்த இளைஞன் தன்னிடம் வருமாறு அழைத்தார். அவனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. “இத்தனை ஜனத்திரளுக்கு மத்தியில் அவர் எப்படி என்னை அழைத்தார்?” என்று வியப்பு மேலிட பெரியவரிடம் கேட்டான். அதற்கு அவர், “நீ அவரைச் சந்திக்க முடியாது என நினைத்தாய், அது போன்றே நடந்தது. பிறகு நீ அவரைச் சந்தித்துவிட முடியும் என நம்பத் தொடங்கினாய். நீ நம்பியது போலவே நடந்தேறியது” என்றார். ஆம். நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும். ஆகவே, நாமும் தூய மார்த்தாவைப் போன்று நம்பிக்கையோடு வாழ்வோம்.

 விருந்தோம்பலில் சிறந்து விளங்குதல்

 மார்த்தா எப்போதும் விருந்து உபசரிப்பில் சிறந்து விளங்கினாள். இயேசு தன்னுடைய வீட்டிற்கு வருகிறபோதெல்லாம் அவர்  அவருக்கு சிறப்பாக உணவு வழங்கவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். அதனால்தான் என்னவோ இன்றைக்கு நாம் அவருடைய விழாவைக் கொண்டாடுகின்றோம். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் தன்னுடைய கூடாரத்திற்கு வந்த மூன்று வானதூதர்களுக்கு சிறப்பான ஒரு விருந்து படைத்தார். அதனால் மகிழ்ந்த வானதூதர்கள் மூவரும் ஆபிரகாம் தம்பதியினருக்கு அவர்களுடைய முதிர்ந்த வயதில் குழந்தைப் பேற்றைத் தந்தார்கள்.  நாமும் விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கும்போது இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி.

 ஆகவே, தூய மார்த்தாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாமும் அவரைப் போன்று இறைவன்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம், விருந்தோம்பலில் சிறந்து விளங்குவோம். அதன்வழியாக இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.

 மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.